மலருமோ உந்தன் இதயம் 14.2

“என்ன அண்ணனா?! யார் நானா? உனக்கா?” ஒருபோதும் இல்லாது அவன் ஒருமையில் அழைத்துச் சிடுசிடுத்த விதத்தில் இவளும் அதிர்ந்தாள்.
“இப்போ நான் என்ன சொல்லிவிட்டேன்?!” விருட்டென்று வெளியேறியவனைப் பார்த்து அதிர்வோடு முணுமுணுத்தாள்.
‘என் மனதில் ஏற்பட்டவை தேவையற்ற கலக்கம் இல்லையோ!?’ சட்டென்று இந்த எண்ணம்தான் தோன்றியது.
வெளியேறிய வேகத்தில் திரும்பி வந்தவனின் முகம், இதுவரை அவள் காணாத வகையில் இறுக்கமாகவே இருந்தது. அதே இறுக்கத்தோடு, “வீட்டுக்குப் போகலாமாம்; போவோமா?” என்றதும், மெல்ல எழுந்து கட்டிலை விட்டிறங்க முயன்று, தன்னையே தன்னால் சுமக்க முடியாது தடுமாறி, கட்டிலைப் பற்றிச் சுதாகரிக்க முயன்றவள், “பார்த்து..பார்த்து..” அவள் தோள் பற்றியவனை நிமிர்ந்து ஏறிட்டாள்.
சற்றுமுன், சிடுசிடுப்பில் சுருங்கியிருந்தவன் முகம் பதற்றத்தைப் பூசிக் கொண்டிருப்பதைக் கண்டதும், அவள் உள்ளத்தில் ஏனோ குளிர்தான் பரவியது.
‘கடைசியில், இவர்கள் வீட்டில் வந்திருந்து என் பரிதாப நிலையைக் காட்டி இவர்களைத் தேவையில்லாது பிரச்சனைகளில் தள்ளி விடப் போகிறேனா? இவரும் நித்தியும் என் மீது காட்டிய அக்கறையை இதுவரை அமைதியாக இருந்து ஏற்றுக் கொண்டதெல்லாம் தவறோ!’ நைந்த மனம், அப்போதுதான் அவனை உன்னிப்பாக கவனிக்க முயன்றது.
“என்ன செய்யிது மதுரா? எதுவுவென்றாலும் சொல்லுங்க. டாக்டரிடம் சொல்லி இன்றைக்கு இங்கேயே இருந்துவிட்டுப் போகலாம்.” என்றவனிடம் இருந்து மெல்ல விலகிக் கொண்டவள்,
“எனக்கு ஒன்றுமில்லை; இவ்வளவு நேரமும் படுத்திருந்து எழும்பியதால் அப்படி இருந்திருக்கும்; வீட்டுக்கே போவோம்!” நடக்கத் தொடங்க, எட்டி அவள் கரத்தைப் பற்றியவாறே சேர்ந்து நடக்க முயன்றான் அவன்.
சுறுசுறுவென்று உள்ளே பரவிய சினத்தோடு அவனை நேராகப் பார்த்தாள் மதுரா.
“அதுதான் எனக்கு ஒன்றுமில்லை என்றேனே! நானாக நடந்து வருவேன்; கையை விடுங்க.” அவள் குரலிலிருந்த இறுக்கம் பார்த்து காரத்திகேயன் உதடுகள் சிறுமுறுவலில் நெளிந்தன!
“பரவாயில்லை; எதுவும் இல்லையென்றால் அதைவிட வேறென்ன சந்தோஷம். ஆனாலும் என் கையைப் பிடித்துக்கொண்டே கார்வரை வாங்க. அதனால், இப்போ என்ன கஷ்ட நஷ்டம் வந்துவிடப் போகுது?” கேலியாகக் கேட்டவனை கூர்பார்வையால் துளைத்தபடி, அடுத்த அடியை எடுத்து வைக்காது நின்றுவிட்டாள் அவள்.
“இங்க பாருங்க, கல்யாணமாகிய இந்த இரண்டு வருடங்களில் நான் சந்தித்த பிரச்சனைகளே என் ஆயுளுக்கும் போதும்!” என்றவளின் முகம் பாறையாகிவிட்டது.
“புதிதாக வரும் எந்த பிரச்சனைகளையும் சந்திக்கும் தெம்பு என்னிடமில்லை. தயவு செய்து கொஞ்சம் புரிந்து கொள்ளுங்க. என்னிடத்தில் நித்தி இருந்தால் இப்படியா நடந்து கொள்வீங்க?” கம்பீரமாகச் சொல்லத் தொடங்கி, குரல் கமற முடித்தவளை, விழிகள் சுருங்கி இடுங்க கூர்ந்து பார்த்தவன், அடுத்த நொடி, விறுவிறுவென்று முன்னால் நடக்கத் தொடங்க, மெதுவாகப் பின்தொடர்ந்தாள் அவள்.
கார் நிறுத்துமிடம் சென்று முன்கதவைத் திறந்துவிட்டு மறுபக்கம் பார்த்துக்கொண்டு நின்றான் அவன். ‘கடந்த சில மணித்தியாலங்களாக இவளுக்காகப் பட்ட பாடென்ன? இவள் என்னவென்றால், நான் இவளுக்குப் பிரச்சனை என்கின்ற மாதிரி சொல்கிறாளே!’ அவள் சொன்ன வார்த்தைகளில் மிகுந்த மனஸ்தாபம் கொண்டான்.
‘அதுமட்டும்மா? அவளிடத்தில் நித்தியை வைத்துப் பார்க்க நினைக்கிறாள்! நித்தி என் தங்கச்சி; இவள் தன்னை என் தங்கச்சி ஆக்கப் பார்க்கிறாளே!’ முன்னிருக்கையில் ஏறியமர்ந்தவளை சிடுசிடுப்பு மறையாது நோக்கியவாறே காரின் அவள் பக்கக்கதவை அறைந்து சாத்த, அவன் கோபத்தில் திடுக்கிட்டாள் மதுரா.

‘அப்போ, இவர்கள் வீட்டில் இவர்கள் தயவில் இருந்தால் எது செய்தாலும், சொன்னாலும் பார்த்துக்கொண்டு பல்லைக் காட்டிக்கொண்டிருக்க வேண்டுமா?’ மனதுள் எழுந்த கேள்வியோடு ஓட்டுனர் இருக்கையில் ஏறியமர்ந்தவனை தன் பங்குக்கு நன்றாகவே முறைத்தாள்.
சர்ரென்று காரைக் கிளப்பியவன், நெளிந்து வளைந்து வெளியேறி பாதையில் சீராகச் செல்லத் தொடஙகிய பின் அவளைத் திரும்பிப் பார்த்தான். அதுவரை முன்னால் பார்த்திருந்தவள் அவன் பார்வையுணர்ந்து அவனைப் பார்க்க,
“இப்போதைக்கு இந்தப்பேச்சு தேவையில்லை என்றே நினைத்திருந்தேன்; என்றாலும், ஒரு விடயத்தை இப்போதே தெளிவாக்கிக் கொள்வதே நல்லதென்று தோன்றுது மதுரா!” இறுக்கமாகவே ஆரம்பித்தான்.
ஏற்கனவே வேதனைகளின் கனம் பொறுக்காது தொய்ந்து துவண்டிருந்த மதுராவின் மனம், இயக்கம் மறந்து நிற்க, வெறுமையான விழிகளால் அவனை ஏறிட்டாள்.
“இங்க பாருங்க மதுரா, நித்தி என் தங்கச்சி; உங்களை ஒருகணமும் நான் அப்படி நினைத்துப் பார்க்கவில்லை!” தொடர்ந்தவன், அவளின் வெறுமையான விழிகளில் மின்னிய அதிர்வில் பேச்சை நிறுத்தினான்.
‘போதும்; இதோடு நிறுத்திவிடு!’ கலங்கும் நயனங்களால் கெஞ்சியவளின் உடல் நடுக்கம் எடுத்தது.
“உங்களுக்கு வரும் பிரச்சனைகளைத் தனியாளாக நின்று எதிர்கொள்ளத் தேவையில்லை; நானும் துணை நிற்கிறேன் மதுரா.” அவன் ஒரு பிடிவாதத்தோடு தொடர, இவள் தலை ஆயாசத்தோடு பின்புறம் சாய்ந்து கொண்டது.
விசுக் விசுகென்று நகரும் மின்விளக்குக் கம்பங்களை பொருளற்று வெறித்தவள், கனத்த இமைகளை அழுந்த மூடிக்கொண்டாள்.
‘என் மனதின் சங்கடத்துக்கு உயிர் இருந்திருக்கு!’ என நினைத்தவளால் அவன் சொன்னதை சற்றும் ஜீரணிக்க முடியவில்லை.
‘இவர்களை நான் சந்திக்காது இருந்திருக்கலாமே!’ உடலும் உள்ளமும் தளர்ந்திருக்க, மூடிய நேத்திரங்கள் மனதின் அதிருப்தியை வெளியேற்ற முனைந்தன!
அவள் கண்ணீரில் மனம் சுணங்கினான் அவன்.
“இப்படி ஒருநிலையில் நிச்சயம் என் பேச்சு உனக்கு கோபத்தைத் தரலாம். ஆனால், மனதிலுள்ளதை இன்று சொல்லி விடுகிறேன்; அதை மறைத்து வைத்து அவஸ்தைப்பட நான் தயாராக இல்லை.” பிடிவாதமாகத் தொடர்ந்தான் அவன்.
“நிறையப் பேசத் தேவையே இல்லை; உனக்குப் பிறக்கப் போகின்ற குழந்தைகள் என் சொந்தக் குழந்தைகள் என்கின்ற எண்ணம் மட்டும் தான் என் மனதில். குழந்தைகள் என்னது என்றால் அதன் தாய் எனக்கு நிச்சயம் தங்கை இல்லைத்தானே?” அவள் தலையில் இடியை இறக்கிவிட்டு, மனதின் பாரத்தை இறக்கிய மகிழ்வோடு கேள்வியும் கேட்டான்.
உடலில் பாய்ந்த குருதி மொத்தமும் வதனத்தை ஆக்கிரமித்தது போல், இரத்தமெனச் சிவந்த முகத்தோடு அவனை வெறித்தாள் மதுரா.
“போதும்; இனி ஒருவார்த்தை பேசத் தேவையில்லை. அதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஒருபோதும் வராது.” கிட்டத்தட்ட கிரீச்சிட்டாள்.
நிதானமாக பாதையோரத்தில் காரை நிறுத்திவிட்டு அவள் புறம் திரும்பினான் கார்த்திகேயன். “இப்படி, கோபம் வரும் படி நான் என்ன சொல்லிவிட்டேன் மதுரா! உன்னை விரும்புகிறேன் என்றேன். இதை இப்போது சொல்ல நினைத்திருக்கவில்லை; உன் நடத்தை சொல்ல வைத்து விட்டது.
அதனால், இனிமேல் அண்ணன் தம்பி என்று மட்டும் அசட்டுப் பேச்சுக்கள் பேச வேண்டாம்.” என்றுவிட்டு, காரைக் கிளப்பியவனை, உள்ளமும் உதடுகளும் நடுங்க பேச்சற்று வெறித்தாள் அவள்.
“இப்படி என்னோடு கதைக்க கொஞ்சமும் வெட்கமாக இல்லையா? உங்க வீட்டிலும் ஒன்றுக்கு இரண்டாக பெண்பிள்ளைகள் இருக்கிறார்கள் தானே? அநாதரவாக ஒருத்தி கிடைத்தால் இப்படித்தான் ஆளாளுக்கு பந்தாட நினைப்பீங்களா?” விடாது தொடர்ந்தவளை, இலகுப் பார்வையால் கொதிநிலையைத் தொட்டுப் பார்க்க வைத்தான் அவன்.
அதோடு நிறுத்தாது, “ப்ளீஸ் மதுரா, ரிலாக்ஸ்! நான் சொன்னதில் எந்தக் காலத்திலும் யாரால் மாற்றம் வரப் போவதில்லை.” தீர்மானமாகச் சொல்லவும் செய்தான்.
“இங்க பாருங்க, நீங்க என்னைப் பற்றி, என் வாழ்க்கை பற்றி, என் குழந்தைகள் பற்றிக் கதைக்கிறீங்க என்பது சரி நினைவிருக்கா?” அவள் குரலும் காட்டத்தைக் குறைவின்றிப் பூசிக் கொண்டது.
“அது நினைவில்லாமல் போகுமா மதுரா! நாம் இனி இதைப் பற்றிக் கதைக்க வேண்டாம்; காலநேரம் நிறையவே இருக்கு, ரிலாக்ஸ். நான் சொல்வதை உன் மனம் நிச்சயம் புரிந்து கொள்ளும். எனக்கு அந்த நம்பிக்கை மலையளவு இருக்கு!” இலகுவாகச் சொன்னவாறே வீட்டின் முன்னால் காரை நிறுத்தினான்.
அடுத்தநொடி, விசுக்கென்று இறங்கி விறுவிறுவென்று சென்று வாயில் கதவு திறபடுவதற்காகக் காத்திருந்தவள் உள்ளம், திகுதிகுவென்று எரிந்து கொண்டிருந்தது. வாய்க்கு வாய் அவனோடு தர்க்கம் செய்வதில் பலனில்லை எனப் புரிந்ததும் அடுத்து என்ன செய்வது என்கின்ற எண்ணம் அவள் மனதில் தோன்றியது.
அமைதியாக வந்து வாயிலைத் திறந்தவனை, மறந்தும் நிமிர்ந்து நோக்காது, விடுவிடுவென்று படிகளில் ஏறியவளை அமைதியாகப் பார்த்திருந்தான் கார்த்திகேயன்.

error: Alert: Content selection is disabled!!