நீ வந்து தங்கிய நெஞ்சில் 1.1

அத்தியாயம் 1

கொழும்பின் புறநகர் பகுதியில் அமைந்திருந்தது அந்த மரங்களின் சோலை. அந்த இடத்தின் தரை முழுவதும் சீராக வெட்டி விடப்பட்ட புற்களால் பச்சைப் பசேல் என்று இருக்க, சூரிய வெப்பத்தை அளவாக உள்ளே விட்டபடி ஓங்கி வளர்ந்த மரங்கள் மட்டுமே அந்த இடத்தைச் சூழ்ந்திருந்தன.

இருள் காவிய ஆரம்பித்துவிட்ட பொழுது. திரும்புகிற பக்கம் எல்லாம் கேம்பிங் வந்தவர்களின் கூடாரங்கள். கூடவே சலசல சத்தங்கள், உணவு வாசனை, அங்குமிங்குமாக ஓடித்திருந்த சின்னவர்களின் சிரிப்பு என்று வெளி உலகத்தின் எந்தப் பரபரப்பும் அங்கே இல்லை. சிரிப்பும் விளையாட்டும் மட்டுமே குடிகொண்டிருந்தன.

அதில் ஒரு கும்பல் கூத்தும் கும்மாளமுமாக அமர்க்களப்பட்டது. நடுவில் இருந்த அலெக்சாவிலிருந்து, ‘நான் ஆளான தாமரை’ பாடல் சத்தமாக ஒலித்துக்கொண்டிருக்க, போர்த்திப் படுக்க என்று கொண்டுவந்திருந்த பெட்சீட்டை மடிசார் போன்று கட்டிக்கொண்டு, இடுப்பை வெட்டி வெட்டி ஆடிக்கொண்டிருந்தான் நிரோஜன்.

பாக்கியராஜின் இடத்தை நிரப்ப முயன்றுகொண்டிருந்தான் அசோகன்.

அம்மி மிதிச்சும் நேக்கு எதுவும் இல்ல
அந்த கவலை நோக்கு புரியவில்ல
நான் தொட்டா என்ன சுட்டா விடும் வாங்கோ
அட கிட்டே வந்து முத்தம் ஒன்னு தாங்கோ

முத்தம் ஒன்று தாங்கோ என்று கேட்டபடி நிரோஜன் நெருங்கிய வேகத்தில் உண்மையாகவே முத்தமிட்டுவிடப்போகிறானோ என்று அசோகன் பயந்துபோனான். அந்தளவில் உதட்டைக் குவித்துக்கொண்டு அசோகனின் முகத்தை நெருங்கியிருந்தான் நிரோஜன்.

அங்கிருந்த ஒரு மரத்தை ஒட்டிப் பெரிய விரிப்பு ஒன்றை விரித்துவிட்டு, அதிலே அமர்ந்திருந்து, மிக்ஸர், பிஸ்கட்ஸ், நட்ஸ் என்று கொரித்துக்கொண்டிருந்த பெண்களால் சிரிப்பை அடக்கவே முடியாமல் போயிற்று.

இன்னும் என்ன தள்ளி வெச்சா
என் உடம்பு தாங்காது
உங்களத்தான் எண்ணி இந்த
கண்ணு ரெண்டும் தூங்காது
உங்க மார்மேல சாயணும்
மடிமேல ஆளணும்
தடுப்பேளா
இடம் கொடுப்பேளா என்று ஆடிக்கொண்டிருந்தான் அவன்.

நான் ஆளான தாமரை முடிந்ததும் ‘நேத்து ராத்திரி யம்மா’ ஆரம்பித்திருந்தது.

“இவேக்கு ஒழுங்கான குத்துப்பாட்டு எதுவுமே தெரியாதாடி?” என்று அஜந்தா கேட்டாள். உதட்டில் அரும்பிய சிரிப்புடன் நிரோஜனையே பார்த்திருந்தாள் யாமினி.

26 வயது. ஆனாலும் விளையாட்டுப்பிள்ளை என்பதன் மொத்தப் பொருளும் அவன்தான். அவனுக்கு இப்படியான கில்மா பாட்டுகளுக்கு ஆடுவதென்றால் மிகவும் பிடிக்கும். “வெக்கமா இருக்காதா உங்களுக்கு?”என்று பலமுறை அவளே கேட்டிருக்கிறாள்.

அவனுக்கு மட்டுமில்லை அவன் நண்பர்கள் அசோகன், மித்ரன், நவீன் யாருக்குமே இல்லை. அந்தளவில் அனுபவித்து ஆடிக்கொண்டிருந்தார்கள்.

அதுவரையில் பெண்களோடு சேர்ந்து கை தட்டி ஆரவாரம் செய்துகொண்டிருந்த திலினியும் இப்போது அவர்களோடு சேர்ந்துகொண்டாள்.

திரும்பி அஜந்தாவைக் கேள்வியாகப் பார்த்தாள் யாமினி.

“அவள் கொஞ்சம் அப்பிடித்தான். சிங்களப் பெட்டைதானே? அவளுக்கு எங்களோட திரியிறத விட பெடியலோட திரியத்தான் பிடிக்கும் போல.” என்று மற்றவர்களுக்குக் கேட்காத குரலில் சொன்னாள் அஜந்தா.

கொழும்பின் நகரப்பகுதியில் ஒரே வளாகத்துக்குள் நான்கைந்து ஐடி நிறுவனங்கள் இயங்கி வந்தன. அதில் ஆண்கள் நால்வரும் ஒரு நிறுவனத்திலும், யாமினியும் அஜந்தாவும் இன்னொரு நிறுவனத்திலும் பணிபுரிகிறார்கள். இந்தத் திலினி ஆண்களின் நிறுவனத்தில் புதிதாக இணைந்திருக்கிறாள்.

யாமினி பல்கலையில் படித்த காலத்தில் செமினார் ஒன்றுக்காக திருகோணமலைக்குச் சென்றபோது, அதே செமினாருக்கு திருகோணமலையைச் சேர்ந்த நிரோஜனும் வந்திருந்தான்.

எதையும் இலகுவாக எடுத்து, சிரித்துப் பேசி, அந்த செமினாருக்கு வந்த மாணவர்களைத் தனக்கு ஏற்றாற்போல் வளைத்து, வேலை வாங்கியவனை யாமினிக்கு மிகவுமே பிடித்துப்போயிற்று.

அதுவும் தனித்தனியாகச் சுருண்டுவிழும் அடர்ந்த அவனுடைய கருங்குழல்களின் மீது அவளுக்குப் பெரும் காதலே வந்திருந்தது.

அவனின் துள்ளல் நடைக்கும், உற்சாக உடல்மொழிக்கும் ஏற்றதாக அதுவும் சேர்ந்து அவன் நெற்றியில் புரண்டு விளையாடுவதைப் பார்க்க பார்க்கத் தெவிட்டாது அவளுக்கு.

அடிக்கடி அவள் அவனைக் கவனிப்பதைக் கண்டுவிட்டு என்னவென்று புருவங்களை உயர்த்திக் கேட்டான் அவன். அப்படித் திடீரென்று திரும்பிப் பார்த்துக் கேட்பான் என்று எதிர்பாராதவளுக்கு அந்த வயதில் அவளுக்கு வெட்கமாயிற்று. அவன் தன்னைத் தவறாக நினைத்துவிடுவானோ என்கிற பதற்றத்தில், “இல்ல… உங்கட முடி நல்ல வடிவு.” என்றிருந்தாள் கூச்சமும் படபடப்புமாக.

“வேணுமா? இந்தாங்க எடுத்துக்கொள்ளுங்க.” என்று அமர்ந்திருந்தவளின் முன்னே அவன் தலையைக் கொண்டுவந்து நீட்டவும் பயந்துபோனாள்.

“என்ன நீங்க? இதுதான் சான்ஸ் எண்டு என்ர முடிய பிடுங்கி எடுக்கிறதை விட்டுப்போட்டு பயப்பிடுறீங்க?” என்று கேட்டுவிட்டு, “நான் நிரோஜன்!” என்று கையை நீட்டியிருந்தான் அவன்.

தயக்கம் அவளைப் பிடித்துத் பின்னுக்கிழுத்தாலும், “நான் யாமினி.” என்று அன்று கை கொடுத்து அறிமுகமானவர்கள் கைப்பேசி இலக்கங்களைப் பரிமாறி, நண்பர்களாக இருந்து, தினமும் கைப்பேசியில் மணிக்கணக்கில் பேச ஆரம்பித்திருந்தார்கள்.

ஒரு நாள் திடீரென்று யாமினியின் சொந்த ஊரான கிளிநொச்சிக்கே அவளைத் தேடி வந்து காதலைச் சொல்லியிருந்தான் நிரோஜன்.

ஆனால், இருவருக்கும் கொழும்பிலேயே வேலை கிடைத்ததும், அதுவும் ஒரே வளாகத்தில் இருக்கும் வெவேறு நிறுவனங்களில் பணிபுரிவதுபோல் அமைந்ததும் அவர்களே எதிர்பாராதது

அவர்கள் இருவரும் காதலர்கள் என்பதால் அவன் நண்பர்களும் இவள் நண்பியும் என்று சேர்ந்து சுற்றுவார்கள். முடிந்தவரையில் மாதத்தில் ஒரு முறையாவது இப்படி வெளியே வருவது வழக்கம்.

யாமினியின் தந்தை மூன்று வாரங்களுக்கு முதல் மாரடைப்பால் இறந்திருந்தார். ஊருக்குப் போனவள் இரண்டு நாள்களுக்கு முதல்தான் வேலைக்குத் திரும்பியிருந்தாள்.
இறப்பு வீட்டுக்கு நண்பர்கள் எல்லோரும் போய் வந்திருந்தார்கள். இன்னுமே அவள் சரியாகாமல் இருக்கவும்தான் அவசரமாக இந்த கேம்பிக்கு ஒழுங்கு செய்திருந்தான் நிரோஜன்.

திலினி புதிதாக வேலைக்குச் சேர்ந்திருக்கிறாள் என்றும், அவளும் நிரோஜனின் டீம் என்றும் அஜந்தா சொல்லியிருந்தாள்தான். இன்று மதியம்போல் புறப்படுகையில் பார்த்து அறிமுகமாகியிருந்தார்கள்.

ஆனால் இப்படி திடீரென்று எழுந்து வந்து ஆடுவாள் என்று ஆண்களுமே எதிர்பார்க்கவில்லை என்று, முதலில் அவர்கள் அதிர்ந்து, பின் அவளையும் சேர்த்துக்கொண்டு ஆடியதிலேயே தெரிந்தது.

யாமினிக்கு இதைத் தவறாக எடுக்க முடியவில்லை. இவர்களும் ஆண்களோடு சேர்ந்து ஆடுவார்கள்தான். அது வேறு. மற்றவர்களை எல்லாம் ஒதுக்கிக்கொண்டு சென்று, நிரோஜனோடு சேர்ந்து அவள் ஆடியதுதான் அவள் கவனத்தைப் பெற்றது. என்றாலும் பெரிதாக எடுக்கவில்லை.

இதற்குள் ‘ஏய் ஆத்தா ஆத்தோரமா வாறியா’ பாடல் ஆரம்பித்திருந்தது. இதை அடிக்கடி நிரோஜன் யாமினியிடம் பாடி ஆடுவான். அந்த நினைவு தந்த குறுஞ்சிரிப்புடன் திரும்பி இவளைப் பார்த்தான். அவள் முகத்திலும் முறுவல்.

ஆடியபடியே வந்தவன் அவள் கரம் பற்றி இழுத்தான். “நிரோ ப்ளீஸ்!” அவள் மறுத்தும் கேட்கவில்லை. வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு போனான். அஜந்தாவை வந்து நவீன் இழுத்தான். அவளும் சேர்ந்துவிட ஆடலும் பாடலுமாக அந்த இடமே களை கட்டிற்று.

ஆவாரம் பூவாக அள்ளாம துள்ளாம
அணைக்கத் துடிச்சிருக்கேன் …
அச்சாரம் போட்டாச்சு அஞ்சாறு நாளாச்சு
தனிச்சு தவிச்சிருக்கேன் …
தவிச்ச மனசுக்குத் தண்ணி தர வேண்டாமா
தளும்பும் நெனப்புக்கு
அள்ளிக்கிறேன் நீ வாம்மா

அவளால் அவர்களைப் போன்ற உற்சாகத்தோடு ஆடமுடியவில்லை. ஆனாலும் நிரோஜனின் குறையாத துள்ளலும் ஆட்டமும் அவளையும் தொற்றியதில் நன்றாகவே ஆடினாள்.

error: Alert: Content selection is disabled!!