19
“அம்மாவின் வயிற்றினுள் இருந்தது போதுமென்று கொஞ்சம் அவசரப்பட்டு வந்திருந்தாலும், இருவருமே நிறைமாதக் குழந்தைகள் போலவே இருக்கிறார்கள். ஆனாலும், இலேசான Jaundice இருக்கும் போலிருக்கு!” என்ற வைத்தியர், “என்ன?” என்று பதறிய கார்த்திகேயனை சமாதானம் செய்தார்.
“அது மிகவும் சாதாரணம் கார்த்திகேயன்; சிலநாட்களில் போய்விடும். என்றாலும் இங்கே குழந்தைகள் பிரிவில் எங்க கண்காணிப்பில் இருக்கட்டும். மதுராவுக்கும் இன்றைக்கு கொஞ்சம் ஓய்வு கொடுப்போம்.” முறுவலித்தவர், தாதி இரு குழந்தைகளையும் பக்கத்துப் பக்கத்து தொட்டில்களில் படுக்க வைப்பதைப் பார்த்துவிட்டு, கார்த்திகேயனின் தோளில் தட்டிவிட்டு அப்பால் நகர்ந்தார்.
அவ்விஸ்தாரணமான அறையில் இவர்கள் இருவரைப் போல இன்னும் ஏழெட்டுக் குழந்தைகள் தம்மை மறந்த சயனத்தில் கிடந்தனர். அப்படியே விழிகளை ஒரு சுழற்றுச் சுழற்றியவன், மெல்ல, குழந்தைகளை நெருங்கினான். இருவரையும் ஒரு புறமாகச் சரித்துப் படுக்க வைத்திருந்தார்கள்.
ஒரேமாதிரியான ரோஸ்வண்ண உடை இருவரையும் இளரோஜா மொட்டாக பளிச்சிட வைத்தது. உள்ளங்கைக்குள் அடக்கிவிடக் கூடியளவு தலை; அடர்ந்த கருஞ்சிகை; மெல்லிய நீளக் கோடாய் விழிகள்; யார் கையும் எங்கள் மேல் படக் கூடாது என்று வீராப்பாகச் சொல்லும் கூரிய மூக்கு; சின்னச் செப்பு இதழ்கள்! அணுவணுவாக இரசித்தவனுள் இருவரையும் ஒன்றாகக் கரத்தில் ஏந்தி நெஞ்சோடு அணைத்துக்கொள்ளும் பரவசம் எழுந்தது.
இருவருக்கும் இடைப்பட்ட பகுதியால் நெருங்கி ஒருவர் மாற்றி ஒருவரை ஆராய்ந்து கொண்டிருந்தவனையே முறுவலோடு பார்த்து நின்றாள் தாதி!
குழந்தைகளுக்கு ஏற்கனவே தெரிவு செய்திருந்த பெயர்களை வழங்கி இருந்தான் இவன்.
“அவன் பெயரை என் குழந்தைகளுக்கு பின்னால் போட மாட்டேன்” அடித்துச் சொல்லி இருந்தாள் மதுரா.
“இங்கு தகப்பன் பெயர் தான் கொடுக்க வேண்டும் என்று இல்லை. தாயின் குடும்பப் பெயரையும் விரும்பினால் கொடுக்கலாம்.” விசாரித்து அறிந்திருந்தவள், “என் அப்பா பெயரையே குடும்பப் பெயர் என்று கொடுக்கப் போகிறேன்.” என்று சொல்லி இருந்தாள்.
“ஆரணி…ஆரபி..” மெல்ல முணுமுணுத்தவாறே முகம் கனியக் குனிந்து இருவர் கன்னங்களையும் பட்டும் படாமலும் தொட்டுப் பார்த்தவன் மெல்ல அவர்களின் பட்டுச் சிகையில் வருடிவிட்டு நிமிர்ந்தான்.
இப்போது தாதியின் முறுவல் விரிந்திருந்தது! சிறு வெட்கம் அவனுள் ஓடி ஒழிய முறுவலித்தவன், “பார்த்துக் கொள்ளுங்க; பிறகு வருகிறேன்.” திரும்பித் திரும்பிப் பார்த்தபடி வெளியேறி, மதுரா இருக்கும் அறை நோக்கி நடந்தான்.
அதிகாலை வைத்தியசாலைக்கு வந்து காலை ஆறுமணிக்கு குழந்தைகள் பிறந்திருந்ததால் கொஞ்சநேரம் உறங்கட்டும் என்ற நோக்கில் யன்னல் திரைகளை மூடிச் சென்றிருந்தாள் தாதி.
திரையை மீறிய மெல்லிய வெளிச்சம் அறையில் கசிய முயன்றுகொண்டிருக்க மதுராவின் கட்டிலை நெருங்கிய கார்த்திகேயன், இமைகள் இரண்டும் அழுத்தமாக உறவாட, கழுத்துவரை இழுத்து மூடிய போர்வையுமாக படுத்திருந்தவளையே பார்த்து நின்றான்.
கலைந்த சிகை அக்கறையில்லாது ஒதுக்கிவிடப் பட்டிருக்க, களைப்பில் வெளுத்திருந்த வதனம் கடந்த சில மணித்தியாலங்கள் அவள் அடைந்த திகிலையும் பட்டபாட்டையும் தெள்ளத் தெளிவாகச் சொல்லியது.
அவள் வதனத்தில் படிந்த விழிகளை அகற்றாது மெல்ல நெருங்கி, அவள் வதனத்தை நோக்கி கரத்தை உயர்த்தியவன் சட்டென்று இழுத்துக் கொண்டான்.
சற்றுமுன், தன் உள்ளத்தில் நேச மலரை மலரச் செய்தவளை நெஞ்சோடு அணைத்திருந்ததையும், தன் ஆறுதல் வார்த்தைகளாலும் ஸ்பரிசத்தாலும் அவள் அமைதியானதையும் நினைத்துக் கொண்டவன் முகம் கனியத்தான் செய்தது. அதேநேரம், அதையும் மீறி ஒரு வகைப் பரபரப்பு அவனை ஆட்கொள்ளவும் செய்தது.
‘நான் உன்னை விரும்புகிறேன் என்று சொன்னதற்கு என்ன பாடுபட்டாள்! வீட்டை விட்டுப் போகும் திட்டத்தில் வேறு இருக்கிறாள். இப்போதோ என்னையும் அறியாது என் மனதை வெளிச்சம் போட்டுக் காட்டியாச்சு. இனி எந்தவித சமாதானமும் சாட்டுக்களும் சொல்ல முடியாது. அப்படிச் சொல்லவும் விருப்பமும் இல்லை.’ நினைத்தவன் உதடுகளில் கம்பீரமாய் முறுவலே பூத்தது.
‘நிச்சயம் என்னை சும்மா விடமாட்டாள். அவ்வளவு சுலபத்தில் உன்மனம் மாறாது என்பதும் எனக்குத் தெரியும்டி! ஆனாலும் உன் மனதில் எங்கோ ஓரிடத்தில் நான் அழுத்தமாக இருக்கிறேன். அதை நீ இன்னும் உணரவில்லை. அப்படி இருந்ததால் தான் என்னை உன்னோடு குழந்தை பிறக்கும் இடம் வரை அழைத்துப் போனாய்.’ நேசம் கொண்டவன் இதயம் நிச்சயம் இறுமாந்தது.
மதுராவின் அந்த செயலை அவனே நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை.
அவளை ஆட்கொண்டிருந்த திகிலும் பயமும் தான் தன்னை அவளருகில் இருக்க செய்தது என்பதில் அவனுக்குச் சிறிதும் ஐயமில்லைதான். ஆனாலும், ‘அந்த இடத்தில் இன்னொரு அந்நியன் இருந்திருந்தால் அப்படி நடந்து கொண்டிருப்பாளா?’ மனதில் சத்தமாகவே கேட்டுக்கொண்டவனுக்கு, ‘இல்லை; நிச்சயம் இல்லை.’ என்றே விடை கிடைத்தது.
‘அவளுக்கு நான் விஷேசம் தான். என்னை, என் அன்பை அவ்வளவு சுலபத்தில் உதறுவது அவளால் முடியாத காரியம்.’ சர்வ நிச்சயமாக உணர்ந்தான் அவன்.
‘பார்ப்போம் என்ன சொல்வாள் என்று.’ தன் நேசத்தில் கொண்ட நம்பிக்கை அவனுக்கு அந்தளவு துணிவு கொடுத்தது.
அவள் ஏற்கனவே மணமுடித்தவள்; மணவாழ்வில் சுழன்றடித்த கொடும் புயலில் சிக்கி தட்டுத்தடுமாறி மீண்டு விவாகரத்து வாங்கியவள்; இப்போ பிறந்த குழந்தைகள் முதல் கணவனுடையது; இதை எல்லாம் அறிந்திருந்தாலும் அவன் நினைவில் அது கலகம் செய்யவில்லை. ‘இவள் என் மனைவி. அவர்கள் என் மகள்கள்!’ அதிவிசித்திரமாக மலர்ந்தது அவன் உள்ளம்.
விழிகள் மூடிக் கிடந்தவளை ‘நித்திரையா?’ சிறிது நேரம் நின்று பார்த்தவன், அந்த நேரம் பார்த்து கைபேசி அழைக்கவே சட்டென்று அறையை விட்டு வெளியில் வந்தான்.
நித்திதான் அழைத்திருந்தாள்.
“மோர்னிங்டா, சொல்லும்மா.” என்றவன், “ஒரு சந்தோஷ செய்தி..” என, ஆரம்பித்து “இன்று காலை ஆறு மணிக்கு குழந்தைகள் பிறந்து விட்டார்கள்!” என்றதும் அதிர்ந்து விட்டாள் நித்தி.
“என்னண்ணா?! ஆறுமணி என்றால் இப்போ அங்கு ஒன்பது ஆகப் போகுதே! பிரச்சனைகள் ஒன்றும் இல்லையே! மதுராவும் குழந்தைகளும் சுகமாக இருக்கிறார்களா? குழந்தைகள் எப்படிண்ணா இருக்கிறார்கள்? மதுரா போலவா? ஐயோண்ணா உடனே பார்க்க வேண்டும் போலிருக்கே! இந்த நேரம் பார்த்து நான் இல்லையே! இங்குபேட்டரில் வைத்திருக்கிறார்களா?” தங்கை ஒரே மூச்சில் படபடக்க, கேட்டவன் களைத்துப் போனான்.
“முதல் மூச்சுவிடும்மா நித்தி!” உள்ளத்தில் துள்ளிய உவகையை நகைப்புக் குரலில் உணர்த்தினான்.
“ஏஞ்சல்ஸ் இருவரும் ஏஞ்சல்ஸ் போலவே அழகாக இருக்கிறார்கள்; அப்படியே உன் அண்…” சந்தோஷத்தில் சொல்லிக்கொண்டு வந்தவன் சட்டென்று நிதானித்தான். தமையன் பேச்சை நிறுத்தியதும் இலேசாக பயந்துவிட்டாள் நித்தி.
“உண்மையைச் சொல்லுங்கண்ணா குழந்தைகள் சுகமாக இருக்கிறார்களா? மதுரா?” அவசரமும் கவலையுமாகக் கேட்க,
“இதில பொய் சொல்ல என்னம்மா இருக்கு!?” சமாளிப்பாகச் சொன்னவன், ‘அவள் வந்ததும் விளக்கமாகச் சொன்னால் நிச்சயம் என்னைப் புரிந்து கொள்வாள். மதுரா, குழந்தைகளிலும் அவளுக்கு அன்புண்டு. உன்அண்ணி என்று கைகாட்டினாள் மகிழ்வோடு ஏற்றுக் கொள்வாள்.” மனதைச் சமாதானம் செய்தவாறே, “இங்குபேட்டர் தேவையில்லை என்றார்கள்.” என்றவன்,
“எல்லாம் ஒ.கேயாம். என்றாலும் ஒப்சர்வேஸனில் வைத்திருக்கிறார்கள். எப்படியும் மூன்று நாட்களில் வீட்டுக்கு விட்டுவிட்டுவார்கள் என்று நினைக்கிறேன்.” மகிழ்வோடு தொடர்ந்தான்.
“மதுரா எப்படிண்ணா இருக்கிறார்?” குழந்தைகள் பிறக்கையில் தான் இல்லையே என்கின்ற கவலை நித்திக்கு!
“ம்ம்…ராதுவும் நன்றாக இருக்கிறாள். கொஞ்சம் பயந்துவிட்டாள்; மற்றும்படி ஒ.கேவாக இருக்கிறாள்.”
“ராதுவா!?” யோசனையாக இடையிட்ட நித்தியின் விழிகளில் புரியாத ஆச்சரியம். ‘மதுராவையா ராது என்றார்! ஒருநாளும் அப்படி கூப்பிட்டதில்லையே!’
தான் மீண்டும் வாய்விட்டுவிட்டதை உணர்ந்த கார்த்திகேயன் அமைதிகாத்தான்.
தமையனின் அமைதி நித்தியின் யோசனையை அதிகரிக்க, “அநேகம் நீ வரும் அன்று வீட்டுக்கு வந்து விடுவார்கள் நித்தி.” பேச்சை மாற்றினான் தமையன்.
தொடர்ந்து, விடாது தானே கதைத்துக் கொண்டிருந்தவன், “இப்போ மதுராவிடம் கொடுங்கண்ணா; அவர் குரலைக் கேட்க வேண்டும் போலிருக்கு!” என்றதும், “நித்திரை போலிருக்கு நித்தி; மதியம் போல எடுத்துக் கதைடா.” என்றுவிட்டு, அவள் தொடர்ந்து கேட்டவைகளுக்குப் பதில் சொல்லத் தொடங்கினான்.
அழைப்பு வந்ததும் அவன் அறையை விட்டு வெளியில் நகர்ந்திருந்தாலும், வாயிலருகில் நின்று கதைத்தவை அனைத்தும் திறந்திருந்த கதவால் உள்ளே கசிந்து மதுராவின் செவிகளைத் தழுவிச் சென்றது.
அவள் ஒன்றும் ஆழ்ந்த உறக்கம் கொள்ளவில்லையே! உலைக்களமாகக் கொதிக்கும் மனதோடு போராடிக் களைத்துக் கண்ணயர முயன்றவள், கார்த்திகேயனின் கைபேசி கிணுகிணுப்பில் திடுக்கிட்டு முழித்து விட்டாள்.
குரலைச் செவிமடுக்கவில்லை என்றாலும் நித்தியோடு பேசுகிறான் என்பதையும் இவன் பதிலில் இருந்தே அவள் மகிழ்வையும் உணர்ந்தவள், மிகையான உவகையில் துள்ளிய கார்த்திகேயனின் குரலில் நடப்பதை நம்ப முடியாது திண்டாடினாள்.
‘இப்போ, அவள் வந்ததும் இந்தாளின் அலட்டலைக் கேட்டால் என்னைப் பற்றி என்ன நினைப்பாள்?” என்ற எண்ணத்தோடு கார்த்திகேயன் மீதான கோபம் அதிகரிக்கவே செய்தது.
அவளுக்கு கார்த்திகேயனின் முகத்தைப் பார்க்கவும் பிடிக்கவில்லை. ‘என்னதான் எனக்காக பார்த்துப் பார்த்து நடந்து கொண்டாலும் அதற்குப் பின்னால் இப்படி ஒரு எண்ணமும் எதிர்பார்ப்பும் இருந்திருக்கின்றதே!’ இந்த எண்ணம் அவன் புரிந்த உதவிகளை, பரிவான செயல்களை வெகுவாகவே கேலி செய்தது!
‘விவாகரத்துப் பெற்றவள், இன்னொருவன் குழந்தைகளைப் பெற இருப்பவள் மீது யாருக்கும் காதல் வருமா? அப்படி ஒரு எண்ணம் தான் தோன்றுமா? அதுவும் ஒரு இளைஞனுக்கு!’ அவளால் சிறிதும் நம்பவோ, ஏற்கவோ முடியவில்லை.
‘என்ன ஒரு அசட்டுப் பேச்சு! எவனோ ஒருவனுடைய குழந்தைகளை தன் குழந்தையாக அரவணைப்பேன் என்பது வெறும் வார்த்தைகளால் பகட்டாகப் பகிர உகந்தவையே! நடைமுறையில் அதன் சாத்தியம் எவ்வளவு தூரம்?
ஏதோ ஒரு மனவேகத்தில் பரிதாபத்தில் உளறுவதை, அதுவும் எனக்கு இதில் சிறிதும் உடன்பாடு இல்லை என்று சொன்ன பின்னரும்..’ சுழன்றடித்தது, களைத்துக் கிடந்த மனம்!
“எவ்வளவு துணிச்சல் இவருக்கு!” வாய்விட்டு முனகியவள், கொந்தளித்துப் போனாள்.
“ஹ்ம்ம்…நீதானே இதற்கு வழி அமைத்துக் கொடுத்தாய்! எவ்வித உறவுமின்றி அவர்கள் செய்த உதவிகளையெல்லாம் பல்லைக் காட்டிக் கொண்டு பெறத் தெரிந்ததல்லவா?
சரி வந்தாய், நான்கு நாட்கள் இருந்துவிட்டு உன் வழியில் போயிருக்க வேண்டுமா இல்லையா?

