அத்தியாயம் 3
காரை எங்கு என்றில்லாமல் விரட்டிக்கொண்டிருந்தான் பிரதீபன். முகம் கல்லாகி, தாடை இறுகி, கண்கள் சிவந்து என்று வெளியே கொட்டிவிட முடியாத கோபம் அவனுக்குள்ளிருந்து தகித்துக்கொண்டிருந்தது. எவ்வளவு சாதாரணமாக அவனை எதிர்கொண்டாள். ‘டச் விட்டுப்போச்சாம் டச். விட்டுப்போற டச்சாடி அது? என்னை தூக்கிப்போட்டுட்டு இன்னொருத்தனை கட்டிப் பிள்ளையும் பெத்துப்போட்டு பிரதீபனாம் பிரதீபன்!’
‘அவன் என்னட்டத்தானே கேள்வி கேட்டவன். அதென்ன நீ முந்திக்கொண்டு பதில் சொல்லுறது? அப்படி என்னத்தை சொல்லிப்போடுவன் எண்டு அவசரம்?’ தனியாக அகப்பட்டாள் என்றால் கேள்வி கேட்டே அவளை ஒருவழியாக்கிவிடுவான். அந்தளவில் மனம் புகைந்தது. கொந்தளித்தது.
‘முதல் ஆர் அவளின்ர புருசன்? அந்தக் கொம்பனை ஒருக்கா நான் பாக்கவேணுமே?’ மனம் கொதிக்க ஜெய்க்கு ஃபோனைப்போட்டு விசாரித்தான்.
“விவரமா எனக்குத் தெரியா மச்சி. இவள் மனுசனோட அவுஸ்திரேலியாலதான் இருந்தவள். என்னவோ குடும்பப் பிரச்சனை போல. இப்ப இங்க தனியாத்தான் வந்து இருக்கிறாள். ரெண்டு வருஷமாத்தான் பழக்கம். மித்ராவோட நல்ல குளோஸ். நாங்களா எதுவும் கேக்கிறேல்ல. அவளா சொன்னவரைக்கும் இவ்வளவுதான் தெரியும்.” என்றான் அவன்.
‘என்னாலதானோ? என்னைப்பற்றித் தெரிய வந்திருக்குமோ அவனுக்கு?’ அதுவரை இருந்த கோபம் அடங்க நெஞ்சு சுட்டது பிரதீபனுக்கு.
“அவளின்ர அப்பா..?” கேள்வியாக இழுத்தான்.
“மோசம் போய்ட்டார். அவருக்கு சீரியஸ் எண்டுதான் இங்க வந்தவள். மூண்டு மாதமா அவரோட அலைஞ்சதுல அவனுக்கு கோவம் போல. ஹொஸ்ப்பிட்டலையே பாக்கச் சொல்லிப்போட்டு இவளை வரச்சொல்லிக் கூப்பிட்டு இருக்கிறான். வேலை போய்டும், என்னால தனியா சமாளிக்க ஏலாது எண்டு. அது இவளுக்கு கோவம் போல. அவர் போனதுக்குப் பிறகு திரும்பப் போக இல்ல. இப்ப ஒரு தொடர்பும் இல்லப்போல.” தனக்கு மனைவிமூலம் தெரிந்ததைச் சொன்னான் ஜெய்.
“ஓ…” என்று கேட்டுக்கொண்டவனுக்கு, அவன் தேடியும் அவள் கிடைக்காமல் இருந்த காரணம் இப்போதுதான் விளங்கியது. அதுமட்டுமல்ல பலதும்!
“அடேய்! இதெல்லாம் மித்ரா ஒருத்தருக்கும் சொல்லவேணாம் எண்டு எனக்குச் சொன்னது. நீ உனக்குத் தெரியும் மாதிரி அவளிட்ட காட்டிக்கொள்ளாத. பிறகு என்ர மனுசியே என்னைச் சாத்துவாள்.” என்றுவிட்டு, “என்ன மச்சி? ஏதாவது பிரச்சனையாடா? சும்மா ஆரோ ஒருத்தியைப் பற்றி இவ்வளவு கேக்கமாட்டியே நீ?” யோசனையாக இழுத்தான் ஜெய்.
“அது.. ஒருமுறை ரோட் மாறும்போது அவளை பைக்கால இடிச்சிட்டன்டா. அப்ப இருந்துதான் பழக்கம். பிறகு திடீரென்று பாத்தா மறைஞ்சிட்டாள். அதுதான் விசாரிச்சனான்.” என்று சமாளித்துவிட்டு, பேச்சோடு பேச்சாக சும்மா விசாரிப்பதுபோல அவள் இருக்கும் ஏரியாவைக் கேட்டுக்கொண்டு வைத்தான்.
அதன்பிறகுதான் கவனித்தான்; அவனுடைய கார் ஜெய் சொன்ன மயூரியின் ஏரியாவுக்குச் சென்றுகொண்டிருக்கிறது என்பதை. சுயத்தில் இல்லாதபோதுகூட அவனின் தேடல் அவளாகத்தான் இருக்கிறது. வருத்தமா விரக்தியா என்று அறியாத ஒரு வறண்ட சிரிப்பு அவன் உதட்டினில் வந்து போயிற்று! எதற்காக அவளுக்குப் பின்னால் போகிறான் என்று தெரியாமலேயே போனான். அப்படி, அவனைத் தன் பின்னால் ஆட்டுவிக்கும் சக்தி அவளுக்கு இருந்தது. அன்றைக்குத்தான் என்று பார்த்தால் இன்றைக்கும்.
திரும்பிப் போய்விடுவோமா என்று நினைத்தான். வாழ்க்கை அவளை ஒரு பக்கமும் அவனை ஒரு பக்கமும் என்று அழைத்து வந்துவிட்ட பிறகும் எதற்கு இந்த அலைதல் என்று தெரியவில்லை. ஆனால், அவளைக் கண்டபிறகும் அப்படியே கடந்து போகமுடியவில்லை.
அவளை ஒதுக்கிவிட்டுத்தான் திருமணத்துக்கு தயாரானான். இப்போதோ அவள் பற்றிய அனைத்தும் தெரியாமல் அவனால் அடுத்த வேலையே பாக்க முடியாது என்றாயிற்று.
‘அவள் வீடு இங்கு எங்கோ என்றுதானே சொன்னான்..’ என்று விழிகளைச் சுழற்றியவனின் பார்வையில் ஒரு சுப்பர் மார்கெட்டுக்குள் இருந்து வெளியே வந்துகொண்டிருந்த அவளின் கார் பட்டுவிட, வேகத்தைக் குறைத்து அவளுக்கு வழிவிட்டான். அது அவனது கார் என்று அறியாதவள் முன்னே செல்ல பின்தொடர்ந்தான் பிரதீபன்.
ஒரு வீட்டின் முன்னே நின்றது அவளின் கார். அவள் இறங்கினாள். அவனும் நின்றால் சந்தேகம் வரும் என்பதில் வெட்டி எடுத்து அவளின் காரைக் கடந்து சென்றபடி கண்ணாடி வழியே பின்னால் பார்த்தான். கேட்டைத் திறந்து வைத்துவிட்டு மீண்டும் காருக்குள் ஏறி உள்ளே கொண்டுசென்று நிறுத்துவது தெரிய, இப்போதே போய்க் கதைப்போமா என்றுதான் இருந்தது.
ஆனாலும், அடக்கிக்கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தான். புஸ்பவதியிடம் உணவை மறுத்துவிட்டுக் கட்டிலில் விழுந்தவனுக்கு மனதெங்கும் மயூரியின் நினைவுகளே!
பிரதீபன் பட்டப்படிப்பை முடித்த கையோடு தலைநகரில் ஐடி நிறுவனம் ஒன்றில் வேலையில் அமர்ந்த காலம் அது. உயர்தரத்தில் நல்ல பெறுபேறு, சிரமமே இல்லாமல் கிடைத்த பல்கலைக்கழகம், அது முடிந்த கையுடனேயே அமைந்த வேலை என்று அவன் வாழ்க்கை வண்ணமயமாகத்தான் போய்க்கொண்டிருந்தது.
திருகோணமலையில் இருந்த பெற்றவர்களை விட்டு, வேலைக்காகக் கொழும்பு வந்து புறநகர் பகுதியில் தனி அறை எடுத்துத் தங்கியிருந்தது கூட நன்றாகத்தான் இருந்தது.
அந்த இருபத்திநான்கு வயது அதை விரும்பியது என்றுதான் சொல்லவேண்டும். நான், என் வாழ்க்கை, என் வேலை, என் சம்பளம் என்று தன்னை ஒரு முழுமையான மனிதனாக அவனே உணர்ந்து அவனை அவனே நேசித்த நாட்கள் அவை.
அன்று வெள்ளிக்கிழமை. சனி ஞாயிறு விடுமுறையாக இருந்ததில், நண்பர்களோடு அரட்டை அடித்துவிட்டு உற்சாகம் துள்ள, வீடு திரும்பிக் கொண்டிருந்தான்.
அது, ஒரு சிங்களக் கிராமம். மாலையானால் ஊரே அடங்கிவிடும். அந்தத் தைரியத்தில் முன்னே வந்த வளைவில் வேகத்தைக் குறைக்காமலேயே திருப்பிய கணத்தில் தான், ஒரு பெண் வீதியைக் கடந்துகொண்டிருப்பதைக் கண்டான் பிரதீபன்.
பதறி வேகத்தைக் குறைத்து விலக்குவதற்குள் அவளை உரசிவிட்டிருந்தது பைக். அவளும் அவனைப்போலவே இந்த நேரத்தில் யார் வருவார்கள் என்று அசட்டையாக எண்ணியிருக்க வேண்டும். எதிர்பாராமல் கண்முன்னே வண்டியைக் கண்டதும் திகைத்து நின்றவள், உரசியதும், “அம்மா..” என்று அலறிக்கொண்டே தரையில் விழுந்திருந்தாள்.
பதறிப்போய் பைக்கை நிறுத்திவிட்டு வேகமாக இறங்கி ஓடிப்போனான் பிரதீபன். எழுந்துகொள்ள முடியாமல் தரையில் கிடந்தவளின் தோள்பட்டையில் ஆடை கிழிந்திருக்க, அந்த இடத்திலிருந்து இரத்தம் கசியத் தொடங்கியிருந்தது. அதைப் பார்த்ததும் ஒருமாதிரி ஆயிப்போயிற்று அவனுக்கு.
“நீங்க வந்தத கவனிக்கவே இல்ல. சொரி.” முகத்தில் சங்கடத்தோடு அவளை மெல்லப் பற்றி எழுப்பினான்.
சுடிதார் முழுவதுமாக மறைத்திருந்த உடலில் வேறு எங்கெல்லாம் அடிபட்டது என்று தெரியவில்லை. ஆனால், நன்றாக நொந்திருக்கிறது என்பதற்கு அடையாளமாக எழுந்து நின்றபிறகும் அவனை இறுக்கமாகப் பற்றியிருந்த அவளின் கை இன்னும் நடுங்கிக்கொண்டிருந்தது.
கன்றிச் சிவந்த முகத்தோடு, அந்நியனின் முன்னால் அழக்கூடாது என்று அடக்கியும் முடியாமல் இரண்டு துளிகள் கன்னத்தில் உருண்டுவிட, பார்த்தவனுக்கு மனதுக்கு மிகவுமே துன்பமாய் போயிற்று!
“உண்மையா சொறி. நான் காண இல்ல. அதைவிட இந்த நேரத்தில யார் வரப்போயினம் எண்டு நினைச்சு…”
“பரவாயில்ல. நானும் வடிவா பாக்கேல்லை..” என்றவள், சுயமாக நிற்கமுயன்று எங்கோ வலித்ததில் முகத்தைச் சுளித்தாள்.
அதைக் கவனித்ததும், “வாங்கோ, பக்கத்தில தான் ஒரு கிளினிக் இருக்கு. காட்டிக்கொண்டு வருவம்.” என்று அழைத்தான்.
அவளாலும் மறுக்க முடியவில்லை. அந்தளவில் உடலில் எங்கு என்று தெரியாமல் வலித்தது. கிராமத்துச் சாலை. கற்கள் குத்தியதா, இல்லை, எங்கேனும் நன்றாக அடிபட்டுக் கன்றிவிட்டதா என்ன ஏது என்று தெரியவும் இல்லை. அவனுக்கு முன்னால் அவற்றை ஆராயவும் ஒருமாதிரி இருந்தது.
அதோடு, தனியாகத்தான் அவளும் தங்கியிருந்தாள். மான அவமானம் பார்த்து, ஒன்றுமில்லை வீட்டுக்கே போகிறேன் என்று சென்று வலியை அதிகரித்துக்கொள்ள அவளும் தயாராயில்லை.
“ஒரு ஆட்டோ பிடிச்சு விட்டாலே போதும், நான் போவன்.” என்றாள் தயங்கி.
“இப்ப.. அதுவும் இந்த நேரம் இங்க ஆட்டோ கிடைக்குமா தெரியாது. அதைவிட என்னோட வாங்கோ. கிட்டத்தானே. டக்கென்று காட்டிக்கொண்டு வரலாம்.” என்றவன், வேகமாக பைக்கைத் திருப்பிக்கொண்டு வந்து அவளருகில் நிறுத்தினான்.
அவனைத் தொடாமல் மெல்ல ஏறி அமர்ந்துகொண்டாள் அவள்.
பின்னுக்குத் திரும்பி, “பிளீஸ்.. பிழையா நினைக்காதீங்க. ஏற்கனவே நல்லா அடிபட்டிருக்கு போல இருக்கு. இப்ப போகேக்க எங்க விழுந்திடுவீங்களோ எண்டு பயமா இருக்கு. அதால என்ர தோளை பிடிச்சுக்கொள்ளுங்கோ.” என்றான், தன்மையான குரலில்.
அவளும் மெல்லப் பற்றிக்கொள்ளப் புறப்பட்டான்.
எதிரில் வாகனம் ஒன்று வந்தது. இயல்பான பழக்கத்தில் அவன் வெட்டி எடுத்துவிட, நடுக்கத்துடன் அவளின் விரல்கள் கொடுத்த அழுத்தத்திலேயே அவளுக்கு எங்கோ வலித்துவிட்டது என்று விளங்கிப்போயிற்று. “நிப்பாட்டவா..” என்றான் அவள் பக்கமாக முகத்தைத் திருப்பி.
“இல்ல. கொஞ்சம் மெதுவா போங்கோ போதும்.” என்றாள் மெல்லிய குரலில்.
“ஒவ்வொரு நாளும் இந்த ரோட்டுல தான் வருவன். எப்பவுமே ஆருமே இல்லாம வெறிச்சோடிப்போய் இருக்கும். அந்த நினைப்பில வேகத்த குறைக்கவே இல்ல.” அவன் விளக்கம் சொன்னபோது, “பரவாயில்ல விடுங்கோ. தெரியாமத்தான. அதைவிட, நானும் பாத்து வரேல்லத்தான்.” என்றாள், அவளும் சமாதானமாக.
அதற்குள் கிளினிக் வந்திருந்தது. மாலை வேளை என்பதில் பெரிதாக ஆட்கள் இல்லை

