அத்தியாயம் 2
அடுத்த நாளும் மாலை வரை எங்கென்றில்லாமல் ஊர் சுற்றினார்கள். கிடைத்த இடத்தில் சாப்பிட்டு, மர நிழலைக் கண்டால் ஓய்வெடுத்து, நீர் நிலையில் விளையாடி என்று மகிழ்ச்சிக்குக் குறைவில்லை. பைக்கில் புறப்பட்டு வந்திருந்ததால் அத்தனைக்கும் வசதியாயிருந்தது.
அவர்களில் அசோகன் பெரியவன். மணமாகி இரண்டு குழந்தைகள். அவன்தான் இவர்களின் ப்ரஜெக்ட் மனேஜர். வயது, தோற்றம் அத்தனையிலும் தானும் அவர்களுக்குச் சமன் என்று காட்டுவதற்காக மிகவும் மல்லுக்கட்டுவான்.
நிரோஜன் அவர்களின் குழுவுக்கு டீம் லீடர். அவன் குழுவில்தான் திலினியும் வந்து சேர்ந்திருந்தாள். நாளையிலிருந்து புது ப்ரஜெக்ட் ஒன்றினை ஆரம்பிக்கப்போகிறார்கள். அடுத்த இரண்டு வாரங்கள் மடிக்கணணிக்குள்ளேயே தலையைப் புதைக்கும் நிலை வரும் என்பதும் சேர்ந்துதான் அவர்களை இப்படிப் புறப்பட வைத்திருந்தது.
மாலைப் பொழுதில் வீடு திரும்பினார்கள். கொழும்பிலேயே சற்றுத் தள்ளி இருந்த வீட்டின் மாடி வீட்டில் மூன்று நண்பர்களும் வாடகைக்குத் தங்கியிருந்தார்கள். அசோகன் குடும்பத்தோடு தனியாக இருக்கிறான்.
அஜந்தா அவள் சித்தி வீட்டில் இருக்க, யாமினி தனியாக ஒரு அறை எடுத்துத் தங்கியிருக்கிறாள். திலினியை அவள் அம்மம்மா வீட்டில் இறங்கிவிடும் பொறுப்பை மித்ரன் எடுத்துக்கொண்டிருந்தான். நவீன் அஜந்தாவை கொண்டுபோய் இறக்கிவிட்டான். யாமினியோடு அவள் அறைக்கு வந்தான் நிரோஜன்.
அதை அறை என்று சொன்னாலும் வீட்டின் அமைப்பில் படுக்கையறை, குளியலறை தனியாக இருக்க, முன் துண்டின் ஒரு பக்கம் குட்டி ஹோலாகவும் இன்னொரு பக்கம் சமையல் கட்டாகப் பயன்படுத்துவது போலவும் அமைக்கப்பட்டிருந்தது.
உள்ளே வந்ததுமே கொண்டுவந்திருந்த டிராவலிங் பேக்குகளை அப்படியே போட்டான். விறாந்தையில் இருந்த சீலிங் ஃபேனை தட்டிவிட்டு, அணிந்திருந்த ஷேர்ட் பட்டன்களை ஒவ்வொன்றாக விடுவித்தபடி சென்று சோபாவில் விழுந்தான்.
நண்பர்களோடு கூத்தும் கும்மாளமுமாக இருக்கையில் தெரியவில்லை. இப்போது தொடர்ந்து பைக் ஓடியதும் சேர முதுகெல்லாம் வலித்தது. தானே தன் உடலுக்கு வைத்தியம் செய்கிறவனாகத் தோள்களை, கைகளை, தலையை எல்லாம் அப்படியும் இப்படியுமாக அசைத்துப்பார்த்தான்.
அப்போதும் உடல் வலி ஈடுபடுவதாக இல்லை என்றதும் சேர்ட்டை கழற்றிவிட்டுத் தரையில் குப்புறச் சரிந்துகொண்டு, “யம்மு! வந்து முதுகை நாலு மிதி மதிச்சுவிடு!” என்று யாமினியை அழைத்தான்.
இது அவ்வப்போது நடப்பதுதான் என்பதில், “ஆடுற வரைக்கும் ஆடுறது. பிறகு வந்து கைக்க நோகுது, காலுக்கு நோகுது எண்டுறது!” என்று அவனைத் திட்டியபடியே வந்து, ஏறி மிதித்தாள் அவள்.
“அப்பிடித்தான்… வலப்பக்கம்… கொஞ்சம் கீழ. இப்ப மேல.” என்று உடல் வலிக்கு இதமாய் அவள் மிதித்ததை நன்றாக அனுபவித்துவிட்டு, “ஏய் என்னடி, வெய்ட் குறஞ்சிட்டியா?” என்று கேட்டான்.
யாமினிக்குச் சிரிப்பும் கோபமும் சேர்ந்து வந்தன. தந்தையின் பிறப்பினால் அவள் எடை குறைந்துபோனதும் உண்மைதான். என்றாலும் அதைச் சொல்லாமல், “இப்ப உங்களுக்கு அதா முக்கியம்?” என்று கேட்டு, நடு முதுகில் அவள் மிதித்த மிதியில், “ஐயோ அம்மா!” என்று அலறித் திரும்பினான்.
அதில் தடுமாறி அவன் மீதே விழப்போனவள் சமாளித்து, “பாவம் பாத்து மிதிக்க வந்த என்னையே விழுத்தப் பாக்கிறீங்க என்ன?” என்றுகொண்டு அவன் கழுத்திலேயே காலை வைக்கக் கொண்டுபோனவளைக் கண்டு அலறியடித்துக்கொண்டு எழுந்து ஓடியிருந்தான் அவன்.
யாமினியால் சிரிப்பை அடக்கவே முடியாமல் போயிற்று. “இனியும் வாயை வச்சுக்கொண்டு இருக்காம எதையாவது கதைச்சுக்கொண்டு வந்தீங்க, ஒரே மிதித்தான்!” என்றுவிட்டு அவள் குளிக்கப்போனாள்.
“கொலைகாரி! கொடுமைக்காரி நல்லாருப்பியாடி நீ? இப்பிடி நீ மிதிக்கத்தான் அம்மா என்னைப் பெத்துவிட்டாவா?” என்று அவன் திட்டுவது கேட்டு அவள் முகத்தில் முறுவல் அரும்பிற்று.
அவள் குளித்து முடித்து வெளியே வந்தபோது, காற்றாடிக்குக் கீழே மல்லாந்து படுத்துக்கிடந்து, எடுத்த புகைப்படங்களை இன்ஸடாவில் ஏற்றிக்கொண்டிருந்தான் அவன்.
“போய்க் குளிச்சிட்டு வாங்க நிரோ. அப்பதான் அலுப்புப் போகும்.” வாங்கி வந்த பொருள்களோடு சமையற்கட்டுக்கு நடந்தபடி சொன்னாள் அவள்.
அவனும் அவளின் அலமாரியில் இருந்து அவனுடைய மாற்றுடைகளை எடுத்துக்கொண்டு குளிக்கப் போனான்.
அவளுக்கு விதம் விதமாகவெல்லாம் சமைக்க வராது. என்றாலும் தெரிந்ததைச் சுவையாகச் செய்யக் கற்றிருந்தாள். இப்போதும் இடியப்பமும் கறியும் கடையில் வாங்கி வந்திருந்தார்கள்.
அவனுக்கு அதை அப்படியே சாப்பிடுவதை விடவும், சின்ன வெங்காயம் போட்டு வதக்கி, இரண்டு முட்டையும் போட்டுப் பிரட்டி, அதனுள் இடியப்பத்தைப் பிய்த்துப் போட்டுப் பிரட்டி, கறியும் சேர்த்து இடியப்பக் கொத்துப் போன்று செய்து கொடுத்தால் பிடிக்கும் என்பதில் அந்த வேலையில் இறங்கினாள்.
சற்று நேரத்திலேயே ஒரு ஷோர்ட்ஸும் ஆர்ம் கட் பெனியனுமாக வந்தவன் அவளைப் பின்னிருந்து அணைத்தான். திரும்பிப் பார்த்தாள் யாமினி. தலைக்குக் குளித்ததன் பயனாக அவன் கருங்குழல்கள் நெற்றியில் வந்து புரண்டிருந்தன. அவள் பார்வை ரசனையோடு அதில் படிவதைக் கண்டு, “உனக்கு என்னை விட அதைத்தான் பிடிக்கும் என்ன?” என்று அவள் கன்னத்தில் உதடுகளை ஒற்றி எடுத்துவிட்டு, “பசிக்குது யமி!” என்றான் சலுகைக்குரலில்.
“எனக்கு மட்டும் பசிக்காதா? இண்டைக்காவது வாங்கிக்கொண்டு வந்தத அப்பிடியே சாப்பிட்டிருக்கலாம்தானே?” கைகள் வேலைகளைப் பார்த்தாலும் அவனைக் கடிந்துகொண்டாள் அவள்.
“மூண்டு கிழமையா உன்ர கையால சாப்பிடாம ஏங்கிப்போயிருக்கிறன். நீ வந்த பிறகும் கடைல சாப்பிடு எண்டா என்ன நியாயம்?” என்று புது நியாயம் பேசினான் அவன்.
“சரி, சிங்குக்க இருக்கிற பாத்திரங்களக் கழுவுங்க. அஞ்சு நிமிசத்தில கொத்து ரெடியாகிடும்.”
அவனும் அவற்றைக் கழுவ ஆரம்பித்தான். அப்போது அவளின் அன்னை அழைத்தார். அவன் புறம் திரும்பி, வாயில் விரலை வைத்துக் காட்டிவிட்டு, அழைப்பை ஏற்றாள்.
“என்ன பிள்ளை செய்றீங்க?”
“சமைக்கிறன் அம்மா. நீங்க சாப்பிட்டீங்களா?”
“ஓம் பிள்ளை. பிரஷர் குளுசை போடோணுமே. இருக்கிற செலவுகள் போதாது எண்டு நானும் வீண் செலவை இழுத்து வைக்கேலுமா?” என்றார் அவர் மனம் விட்டுவிட்ட குரலில்.
“என்னம்மா கதை இது? உங்களுக்குச் செய்றது வீண் செலவாம்மா?” என்றாள் அவள் மனத்தாங்கலுடன்.
“போற போக்கப் பாத்தா அப்பிடித்தான் பிள்ளை இருக்கு.” உடைந்த குரலில் மெல்லச் சொன்னார் அவர். இன்னுமே கணவரின் இறப்பிலிருந்து முழுமையாக அவரால் மீள முடியவில்லை. அப்படியிருக்க அதன் பிறகு நடப்பவை எல்லாம் அதிர்ச்சியைத் தந்து, வாயடைக்க வைத்துக்கொண்டிருந்தன.
பார்வை ஒருமுறை நிரோஜனைத் தொட்டு வர, “அப்பிடி ஆர் என்ன சொன்னவே எண்டு சொல்லுங்கோ?” என்று விடயம் அறிய முயன்றாள் அவள்.
“ஆர் என்ன சொல்ல இருக்கம்மா? உங்கட அக்காதான்…” என்று இழுத்து நிறுத்தினார் அவர்.
அவள் தமக்கை மாதங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் நல்ல வேலையில் இருக்கிறாள். அவளின் அத்தான் மாதவனும் அப்படித்தான். இவள் வீட்டினர் தற்போது இருக்கும் வீடு, காணி, போதுமான நகைகள் எல்லாம் அவளுக்குச் சீதனமாகக் கொடுத்தவை.
அதைவிட இத்தனை காலமும் அவர்களின் மகனையும் பார்த்துக்கொண்டு, சமையல், வீட்டு வேலைகள் என்று அனைத்தையும் கவனித்துக்கொண்டதும் அவள் அம்மாவும் அப்பாவும்தான்.
என்ன ஏது என்று இவளுக்கு முறையான விபரம் தெரியாதபோதும் கணிசமான சேமிப்பு அவர்களிடம் இருக்கும் என்பதுதான் யாமினியின் கணிப்பு.
ஆக, குறை என்று சொல்வதற்கு எதுவுமில்லை.
அப்படித்தான் இவ்வளவு காலமும் இவளும் இவள் அன்னையும் நினைத்திருந்தார்கள். அப்படி இல்லையாம் என்றாள் மாதங்கி.

