பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் முக்கிய அதிகாரிகளில் ஒருவர், சுகாதார அமைச்சர், காவல்துறை மற்றும் இராணுவ முக்கிய புள்ளிகள் என, நான்கு நயவஞ்சகக் குள்ளநரிகளும் நெஞ்சை நிமிர்த்தியபடி உள்ளே நடந்தார்கள்.
“நாட்டுப்பற்று என்ற தோல் போர்த்திய மாவீரர்கள்!” ஒரு சோடிக் கண்களுக்குரியவன், வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான், சிங்களத்தில்!
“அடி முட்டாள்கள்!” தமிழில் பதில் சொன்ன மற்றவன், விசமச் சிரிப்போடு, உன்னிப்பாக ஐபொட் – இல் பார்வை பதித்திருந்தான். அந்த, சுகாதாரத்துறை அமைச்சர் வீட்டு வேலையாள் முகம், அவன் மனக்கண்ணில்.
நிமிர்வாக நடந்த அமைச்சருக்குக் கம்பீரம் சேர்ப்பது அவர் அணிந்திருந்த வெள்ளை முழுக்கை சேட், விலைமிக்க கோட் சூட் மட்டுமா? கோட்டின் நெஞ்சுப்பகுதியில் இருந்த சிறு பொத்தானில், வாகாகப் பொருந்தியிருந்த மிக மிக நுண்ணிய நவீன கமராவும் தான்!
படகில் இருந்தவர்கள் உதடுகளில் விசமச் சிரிப்பு!
ஐவரும், தாம் செல்லவுள்ள ஒவ்வொரு நாட்டிலும் தங்குமிடங்கள் பதிவு செய்திருந்தார்கள். அந்தந்த இடங்களில், பார்க்க வேண்டிய முக்கிய சில இடங்களையும் குறித்து வைத்து விட்டார்கள். அங்கு, என்ன என்ன உணவுகள் பிரசித்தமோ, அதை ருசிப்பதும் அந்தச் சுற்றத்தை ரசிப்பதும் வசதிப்பட்டால், கடைகளில் புகுந்து வருவதும் அவர்கள் பிரதான திட்டமாக இருந்தது.
இத்திட்டமிடலை, ஒரு டொக்கியூமென்ட்டில் போட்டுத் தம் குடும்ப வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்திருந்தாள், பைரவி. எந்த நேரத்தில் எங்கு நிற்பார்கள், எதில் பயணம் செய்வார்கள் என்றெல்லாம் துல்லியமாகத் திட்டமிருந்தார்கள்.
விமான நிலையத்திலிருந்து, பரபரப்போடு அம்ஸ்டர்டாம் மையத்தில் இருக்கும் தங்குமிடம் வந்தவர்கள், நின்று நிதானிக்கவில்லை; அடுத்த முக்கால் மணி நேரத்தில், ப்ரெஷ் அப் செய்த கையோடு வெளிக்கிட்டு விட்டார்கள்.
சுற்றிப் பார்த்தபடி நடந்து கொண்டே, காலையுணவை உள்ளே அனுப்பியிருந்தார்கள். அன்று, வார நாளாக இருந்தாலும் கோடை காலமாச்சே! உல்லாசப் பயணிகளின் பலத்த நெருக்கடியில், ஒல்லாந்து தேசத்தின் அழகிய தலைநகர், ‘ஆம்ஸ்டர்டாம்’ கலகலத்துக் கொண்டிருந்தது.
இங்கத்தையான் மொழி டச்சு; ஆனாலும் திரும்பும் பக்கமெல்லாம் ஆங்கிலம் கதைக்க முடிந்தது. தலைநகர் என்பதால் அப்படி இருக்குமோ என்றான், சேயோன். சந்தேகத்தைத் தீர்த்து விடுவோமே என்று, அருகில் சென்ற ஒரு நெதர்லாந்து நாட்டவனைப் பிடித்து, பேட்டியே எடுக்க ஆரம்பித்து விட்டாள், பைரவி.
அவசரமாகச் சென்று கொண்டிருந்தவன், சில நிமிடங்கள் தான் கதைத்தான்; ஆரம்பப் பாடசாலையிலிருந்தே ஆங்கிலம் கற்பிக்கப் படுகிறதாம்; நாட்டின், எந்த மூலைக்குப் போனாலும் ஆங்கிலம் கைவசம் இருந்தால் சமாளித்து விடலாமாம் என்றவன், ரயிலுக்கு நேரமாகி விட்டது என்று விட்டு ஓடினான்.
“உண்மையாவே ட்ரெயினுக்கு நேரமாகிற்றா, இல்லாட்டி, உன்னைப் பார்த்துப் பயந்து போயிட்டானா?”
சேயோன் கடித்தான். நறுக்கென்று குட்டி விட்டாள், பைரவி. திருப்பி அவன் அடிக்க முனைய, பிடிபடாது முன்னால் ஓடியவள் கையில், கூகிள் மேப்; இன்றையான் திட்டத்தில் முதலாவதாகப் பார்க்கவுள்ள இடத்துக்கு வழிகாட்டியது, அது.
நகரத்தின் சின்னமாகவும் மகத்தான கலாச்சார மற்றும் வரலாற்று மதிப்பைக் கொண்டுள்ளதுமான, ‘Canals of Amsterdam’ போட் டூர் டிக்கெட் பூத் அருகில் வந்து தான் அவள் ஓட்டம் நின்றது.
பின்னால் வந்த நண்பர்களும், “இது கூட நல்லாத்தான் இருக்கு” என்றபடி, அவளோடு இணைந்து கொண்டார்கள். ஐவருமே, அந்தச் சுற்றத்தில், நாலு சக்கர வாகனங்களோடு போட்டியாகச் செல்லும் சைக்கிள்களைப் பார்த்தபடி சிறிது நேரம் நின்றுவிட்டே, டிக்கெட் எடுக்கும் வரிசையில் இணைந்து கொண்டார்கள்.
“சைக்கிள் வாடகைக்கு எடுக்கலாம். பின்னேரமா நாமளும் ஓடலாம்.” ஆசையாகச் சொன்னாள், பைரவி. பிறகென்ன?
“என்ன நெரிசலா இருந்தாலும் பயமில்ல. சைக்கிளுக்கு எண்டு தனியா லேன் இருக்கு.” என்ற நண்பர்கள், வாடகைச் சைக்கிள் எடுக்கும் இடத்தையும் குறித்து வைத்துக் கொண்டார்கள்.
அடுத்த இருப்பது நிமிடங்களில், அண்ணளவாக ஒரு மணித்தியாலம் எடுக்கும் என்றபடி, திறந்த படகொன்றில் ஏறிக்கொண்டார்கள். அப்போது அழைத்தான், மயூரன்.
“அச்சச்சோஓஓஓ!” தாமதியாது அழைப்பை ஏற்ற பைரவி, கடகடவென்று ‘சொறி’களை உதிர்த்தாள்; இடையில், சுகமாக வந்திறங்கியதையும் சொருகியிருந்தாள்; பயணம் சென்றவள் சத்தமே இல்லையென்ற எரிச்சலோடு, பதற்றமும் சேர அழைத்தவனைக் கதைக்க விட்டாளா என்ன?
“அம்மா அப்பாக்கும் சொல்லி விடுங்க மயூரன். எனக்கு கோல் பண்ண நேரம் கிடைக்குமோ தெரியா. சைட் சீயிங் போட் ல ஏறிட்டம். வைக்கிறன் என்ன?” அவன் பதிலை எதிர்பாராதே, அழைப்பைத் துண்டித்திருந்தாள்.
“அடிப்பாவி!” ஏசிக்கொண்டே இருந்த மயூரன், கனடாவில் விடிந்ததும் பாமினிக்கு அழைத்தான்.
“நானும் இப்பத்தான் கதைச்சனான் மயூரன். பெட்டைக்குச் சரியான சந்தோசம். எங்களை எல்லாம் நினைவே இல்ல.” சிரிப்போடு சொன்னார், அவர்.
இங்கே, படகு, நிதானமாக நகரத் தொடங்கியிருந்தது. அப்போதுதான் தன் ஆதிக்கத்தைத் தொடங்கியிருந்தான், ஆதவன். அவனோடு போட்டி போட்டது, அந்தக் கால்வாய்க் குளிர்மை. கால்வாயின் இருகரைகளிலும் உயர்ந்த, நுண்ணிய வேலைப்பாடுகளுடனான கட்டிடங்கள் வேறு தம் பங்குக்கு விருந்தளித்தன.
“புகழ்பெற்ற இக் கால்வாய்களை, 17 ஆம் நூற்றாண்டில், டச்சு, தன் பொற்காலத்தில் கட்டத் தொடங்கியது.”
கைட் குரல் கம்பீரமாக ஒலித்தது. மூன்று முக்கிய கால்வாய்களான ‘ஹேரென்கிராக்ட்’ (Herengracht), ‘பிரின்சென்கிராக்ட்’(Prinsengracht) மற்றும் ‘கெய்சர்ஸ்கிராக்ட்’(Keizersgracht) என்பவற்றைக் கடந்து சென்றவர்கள், மிக மிக அழகிய ‘பிரௌவெர்ஸ்கிராக்ட்’ (Brouwersgracht) என்ற கால்வாயைக் கடக்கையில், விழிவிரித்துப் பார்த்தார்கள். பார்வையோடு போட்டி போட்டுக்கொண்டு, கைப்பேசியும் புகைப்பட, ஒளிப்படக் கருவிகளும் அவர்களையும் சுற்றத்தையும் தம்முள் சேகரித்துக் கொண்டன.
“ஆம்ஸ்டர்டாம் உலகிலேயே அதிக நீர் நிறைந்த நகரம். அதன் கால்வாய்கள் மற்றும் துறைமுகங்கள், ஆம்ஸ்டர்டாமின் மொத்த மேற்பரப்பில் கால் பகுதியை முழுமையாக நிரப்புகின்றன. ஆம்ஸ்டர்டாமில் 100 கிலோமீட்டர் கால்வாய்கள் உள்ளன. இது, வெனிசில் உள்ள கால்வாய்களின் அளவைக் கணிசமாக மிஞ்சும்.” கணீரென்று ஒலித்த கைட் குரல், தன்னைக் கவனியேன் என்றது.
“இந்தக் கால்வாய்களில நீந்தலாமா?” ஒரு சுற்றுலாப்யணியின் ஆசை கேள்வியாக வந்து விழுந்தது.
சிரித்தார் கைட். “நன்றாக நீந்தலாமே! ஆகக்குறைந்தது 140 யூரோ வரை தண்டம் செலுத்தத் தயாராக இரு! இது, ஆகக் குறைவான தொகை என்பதையும் மறந்து விடாதே!” கண்ணடித்தார்.
“இந்தக் கால்வாய் நீரையும் கூட, உடனுக்குடன் ப்யூரிஃபை பண்ணி குடிநீராகப் பயன்படுத்தலாம் எண்டு வாசிச்சிருக்கிறன்.” இவர்களைப் போலவே கல்லூரி மாணவி போலிருந்த ஒருத்தி சொன்னாள்.
“உண்மைதான்… இங்கு, கடைகளில் தண்ணீர் வாங்கத் தேவையில்லை,
ஆம்ஸ்டர்டாம் நகரில், 500 க்கும் மேற்பட்ட நீர்க்குழாய்கள் உண்டு; அங்கு, இலவசமாகவே தண்ணீர் நிரப்பிக் கொள்ளலாம்.” என்றார், இன்னொரு சுற்றுலாப் பயணி.