அத்தியாயம் 36
தன் வீட்டிலிருந்து வெளியேறிய தூயவன், நொடி கூட எங்கும் தாமதிக்கவில்லை. பைக்கை மிக வேகமாக நேசனின் வீடு நோக்கி விரட்ட ஆரம்பித்தான்.
நேசனோடு வாக்குவாதப்பட்டுக்கொண்டிருக்கையிலேயே இதற்குத் தன் அப்பாதான் காரணமாக இருப்பார் என்று அவன் உள்ளுணர்வு சொல்லத் தொடங்கிற்று. தங்களைப் பற்றி நேசனிடம் சொன்னது சண்முகம் என்று அறிந்ததும் அவன் சந்தேகம் உறுதியாயிற்று.
அதில்தான் நேராக அவரிடமே சென்று நின்றான்.
ஒரு பக்கம் யாழிசை எங்கே, என்ன நிலையில் இருக்கிறாளோ என்கிற பரிதவிப்பு என்றால், மறுபக்கம் எனக்கு இத்தனையையும் செய்வது என் அப்பாவா என்கிற நம்ப முடியாத வலி. அப்படித் தன் அப்பா தன் முன்னால் தவறான ஒரு மனிதராக நின்றுவிடக் கூடாது என்றும் அவன் உள்ளம் படாத பாடு பட்டுக்கொண்டிருந்தது.
ஆனால் அவர் அசையவேயில்லையே! அவன் எவ்வளவு கேட்டும் உண்மையை ஒத்துக்கொள்ளவே இல்லை!
அதில்தான் கொதித்தெழுந்திருந்தான். தன் காதலை, தன் மனத்தை வீட்டில் சொல்லிவிட்ட ஆசுவாசமோ நிம்மதியோ சிறிதுமில்லை. இன்னும் சொல்லப்போனால் அவன் அதை உணரவும் இல்லை, உணர்ந்து சொல்லவும் இல்லை.
இதோ இப்போதும் அவன் நெஞ்சின் கோபமும் கொதிப்பும் அடங்குவதாக இல்லை. அவனிடமே மறைக்கிறாரே! அவனிடமே தனக்கு எதுவும் தெரியாது என்று நாடகமாடுகிறார். அவரிடமே அவர் தோலை உரித்துக் காட்டவில்லையானால் அவன் என்ன அவர் இரத்தம்?
இடைவழியில் குருவும் வந்து சேர்ந்துகொண்டான். தன் பைக்கை அறிந்தவர் வீட்டில் நிறுத்திவிட்டு இவனோடு தொத்திக்கொண்டான் குரு.
“என்னவாமடா மாமா?”
“பிடி குடுப்பார் எண்டு நினைக்கிறியா நீ?” என்று திருப்பிக் கேட்டான் அவன்.
“இனி என்ன செய்றது?”
“எங்களிட்ட இருக்கிற நம்பிக்கையான பெடியலை வச்சு அப்பான்ர கையாளா இருக்கிற அத்தனை பேரைப்பற்றியும் விசாரி. எங்க, என்ன செய்யினம் எண்டு பாரு. எவன் மிஸ்ஸானாலும் அவனைப் பிடி.”
“அதுக்கெல்லாம் ஏற்பாடு செய்தாச்சு. எல்லாரும் ஊருக்கையே இருக்கிற மாதிரித்தான் இருக்கு. மாமாவைத் தவிர வேற ஆர் இந்த வேலை பாத்திருக்கலாம் எண்டு நினைக்கிறாய்?”
“இவ்வளவு பெரிய காரியத்தைச் செய்ற அளவுக்கு என்னைப் பிடிக்காத ஆக்கள் நேசன், விமல் ரெண்டு பேரும்தான். யாழிசையோட நான் கதைக்கிறது தெரிஞ்சிருந்தா அவளுக்குப் பாத்த பெடியனுக்கும் என்னில கோவம் வந்திருக்கலாம். சோ, அப்பாவோட சேர்த்து மொத்தம் நாலு பேர். நேசன் இதைச் செய்யப்போறேல்ல. விமல், அந்தப் பெடியன், அப்பா. எனக்கு இன்னுமே அப்பா எண்டுதான் மனம் சொல்லுது.”
இதற்குள் யாழிசையின் வீடு வந்திருந்தது. அந்த வீட்டைக் கண்டதும் அவன் மனநிலையே மாறிப்போயிற்று. இதுவரையில் அவன் வந்ததேயில்லை. இன்று புதிதாக வருகிறோம் என்கிற உணர்வும் இல்லை. நெஞ்சை என்னவோ போட்டுப் பிசைந்தது. மனம் அளவுக்கதிகமாக அவளைத் தேடிற்று.
நேசன் வந்து சொன்ன கணத்தில் அவன் செய்வதறியாது திகைத்து நின்றிருந்தாலும் தன் தந்தைதான் காரணமாக இருக்க முடியும் என்று உள்ளம் அடித்துச் சொன்னதில் பதற்றம் இருந்தாலும் பெரிய பயம் இருக்கவில்லை. எப்படியும் அவளை மீட்டுவிடலாம் என்றே நினைத்தான்.
ஆனால் இப்போது? சொல்ல அவனுக்குத் தெரியவில்லை. நெஞ்செல்லாம் நடுங்கியது. வாழ்வில் முதல் முறையாகத் தன்னை மிகுந்த பலவீனமானவனாக உணர்ந்தான்.
இல்லை, நான் முடங்கி நிற்கும் நேரம் இது இல்லை என்று தன்னைத்தானே தேற்றிக்கொண்டு உள்ளே சென்றான்.
பைக் வந்து நின்ற சத்தத்தைக் கேட்டு வீட்டுக்குள் இருந்து ஓடி வந்த நளினி இவர்களைக் கண்டு திகைத்தாள். அவன் பார்க்கிற தரத்துக்கும் தராதரத்துக்கும் அவர்கள் வீட்டுக்கெல்லாம் வருவான் என்று கனவிலும் அவள் சிந்தித்ததில்லை.
தூயவனுக்குமே அவளிடம் என்ன சொல்வது, பேசுவது என்று தெரியவில்லை.
சுரபி ஒரு பக்கமாக இருந்து அழுதுகொண்டிருந்தாள். அவளைப் பார்த்ததும் அன்று தன் அத்தைக்காக அவனையே அவள் விரல் நீட்டி எச்சரித்தது நினைவில் வர, சின்ன தலையசைப்பால் அவளைத் தன்னிடம் வரும்படி அழைத்தான்.
ஓடி வந்து நின்றவள் தலையை இதமாக வருடிவிட்டு, “உங்கட அத்த வந்திடுவா. அழக் கூடாது சரியா?” என்றான் இதமான குரலில்.
கண்கள் கலங்கி முகம் சிவந்தாலும் அவள் தலையசைத்துக் கேட்டுக்கொண்டாள்.
“நேசன்… நேசன் அண்ணா எங்க?” இத்தனை காலமும் நேசனை மதிக்கத் தோன்றியதில்லை. பெயர் சொல்லித்தான் அழைப்பான். ஆனால் இன்று, அவனுடைய இசையரசிக்காக அவன் சட்டையையே பிடித்தவனிடம் தெரிந்த பாசத்தின் பரிதவிப்பில் மரியாதை தானாக வந்தது.
“போலீஸ் ஸ்டேஷன் போனவர். வந்துகொண்டு இருக்கிறம் எண்டு சொன்னவர். இப்ப வந்திடுவார்.”
அவள் சொன்னதைத் தலையசைத்துக் கேட்டுக்கொண்ட தூயவனுக்குக் காவல்துறை யாழிசையை உண்மையாகவே தேடும் என்கிற நம்பிக்கை கொஞ்சமும் இல்லை. கருணாகரனின் செல்வவும் செல்வாக்கும் எப்படியெல்லாம் பாயும் என்று அவனுக்குத் தெரியாதா என்ன?
“இசையின்ர அறையப் பாக்கோணும்.”
காரணம் புரியாதபோதும் அழைத்துப்போய்க் காட்டினாள் நளினி.
அந்த அறைக்குள் காலடி எடுத்து வைக்கையிலேயே ஓங்கி அடிக்கும் அலைகளைப் போல் அவள் நினைவுகளும் அவன் நெஞ்சினில் வந்து மோதின. ஒரு முறை அறை முழுவதையும் விழிகளால் வட்டமிட்டான்.
அங்கே மேசையில் சீராக அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகம், கொப்பிகளைக் கண்டுவிட்டு அங்குச் சென்று, அவற்றை ஒவ்வொன்றாக எடுத்துப் புரட்டிப் பார்த்தான்.
குருவும் தன் கண்களுக்கு எதுவும் தென்படுகிறதா என்று தேடினான். இவர்கள் கருணாகரன்தான் என்று இருக்க வேறு யாராவதாக இருந்துவிட்டால்?
“டயரி ஏதும் எழுதுற பழக்கம் இருக்கா அவளுக்கு?” என்று கேட்டான் தூயவன்.
“இல்ல.”
“இண்டைக்கு என்ன உடுப்புப் போட்டிருந்தவள் எண்டு தெரியுமா?”
“இல்லை.”
“கடைசியா எத்தின மணிக்குக் கதைச்சவள்?”
தன் கைப்பேசியை எடுத்துக் காட்டினாள் நளினி.
கடையாக இரண்டு நிமிடங்கள் பேசி இருக்கிறார்கள். அதன் பிறகு நளினி அழைத்த அழைப்பு அந்தப் பக்கம் எடுக்கப் படாமலேயே இருந்திருக்கிறது. அதன் பிறகு அதைப் போல் பலமுறை.
அவனும்தானே அழைத்து அழைத்து ஓய்ந்து போனான்.
அப்போது நேசனின் பைக் வந்து நிற்பதும் அவர்கள் வீட்டுக்குள் வருவதும் தெரிய இவர்களும் விறாந்தைக்கு வந்தார்கள்.
அப்படி, அவன் வீட்டுக்குள் நுழைகையில் தூயவன் அவன் வீட்டு அறையிலிருந்து வெளியே வருவதைக் கண்டு ஒரு நொடி அதிர்ந்து நின்றுவிட்டான் நேசன்.
அடுத்த கணமே, “உன்னை ஆரடா இஞ்ச வரச் சொன்னது?” என்று சீறிக்கொண்டு அவனை நெருங்க, “என்னோட ஆறுதலா சண்டையைப் பிடிங்க. இப்ப போலீஸ் என்ன சொன்னவே எண்டு சொல்லுங்க.” என்று தடுத்தான் தூயவன்.
“என்ன சொல்லுவாங்கள் எண்டு நினைக்கிறாய்? ஒரு அண்ணனா அவன்ர தங்கச்சியப் பற்றி என்ன மாதிரியான கேள்விகளை எல்லாம் காதால கேக்கக் கூடாதோ அத்தனை கேள்விகளையும் கேட்டு, அதுக்குப் பதிலும் சொல்லிப்போட்டு வந்திருக்கிறன்.” என்று கொதித்தான் அவன்.
தூயவனின் கை நரம்புகள் புடைத்தன. ஆனால், ஆத்திரப்படும் நேரம் இதுவன்று! அவன் விரைந்து செயலாற்ற வேண்டும். அதில், “அவளுக்கு நீங்க பாத்த பெடியன் வீட்டுக்காரருக்கு எடுத்து அந்தப் பெடியன் எங்க நிக்கிறான், இண்டைக்கு என்ன செய்தவன் எண்டு சும்மா விசாரிக்கிற மாதிரி விசாரிங்க.” என்றான்.
“அவரை என்னத்துக்கு விசாரிக்க?” அவன் சொன்னதைச் செய்யாமல் எதிர்க்கேள்வி கேட்டான் நேசன்.
“சொன்னதைச் செய்ங்க அண்ணா. உங்களோட நிண்டு வாக்குவாதப்பட எனக்கு நேரமில்லை. இப்பவே அனுராதபுரம் வரைக்கும் போய்ப் பாத்துக்கொண்டு வரப்போறன்.” தூயவனுக்குமே பொறுமை பரந்திருந்தது.

