அத்தியாயம் 26- 1

இனியும் எங்களால் நட்டப்பட முடியாது. இதே நிலை உங்களுக்கு வருவதை விரும்ப மாட்டீர்கள் என்று நினைக்கிறோம் என்ற உறுமலோடு, பெரும் அச்சம் ஏற்படுத்தியே முகவர்களை அனுப்பி வைத்தார்கள்.

  அவர்கள் கப்பலிலிருந்து இறங்கிச் செல்வதையும் பார்த்துவிட்டு, படகிலிருந்த இருவரும் மறுப்புறமாகச் சீறி மறைந்தார்கள்.

 பணத்தாசையில், புலிவால் பற்றிய நிலையில் இலங்கை பிரதிநிதிகள்! தொடை நடுங்கியபடி கரைக்கு வந்தவர்கள், வெறி பிடித்த வேட்டை நாய்களாக மாறினார்கள்.

  போதைப்பொருள் வியாபாரத்துக்கு, அச்சுறுத்தலாக இருப்பது யார் என்பதைக் கண்டுபிடித்தே தீருவோம் என்ற சபதத்தோடு, களத்தில் குதித்து விட்டிருந்தார்கள். 

 

பைரவிக்கு மீண்டும் இலங்கை வாசம்! 

பல்கலை ஆரம்பிக்க இன்னும் ஐந்து நாட்கள் இருந்தன. இரண்டு வருடங்களாகத்தான் இலங்கையில் தங்கியுள்ளாள்; அதுவும் கிட்டத்தட்ட ஒரு வருடமாகத் தான் இங்கு, மலர் இல்ல வாசம். ஆனாலும் ஏனோ, காலம் காலமாக வசித்து வந்த தன் இடம் வந்த உணர்வு! மனதுள் இருந்து வந்த  அலைக்கழிப்புக்குச் சற்றே ஓய்வு கிடைத்தவுணர்வும் சேர்ந்து கொண்டது. வந்ததும் வராததுமாக, பக்கத்து வீடு செல்ல முயன்ற கால்களுக்கு உடல்  ஒத்துழையேன் என்றதில், கட்டிலில் விழுந்தவளுக்கு வேறெதுவுமே தெரியாது. 

அவளுக்கான தேநீர், காலை உணவு, மதிய உணவு என்று, அறைக்கு வந்து வந்து திரும்பிப் போனது.

“என்ன பைரவி இப்பிடி நித்திரை கொள்ளுறா? உடம்புக்கு என்னவோ தெரியா. மதி… தொட்டுப் பாத்தனியாம்மா. பார், நாலு மணியாப் போச்சு!”

கௌசல்யா, மகளுக்குச் சொல்லிக் கொண்டிருக்கையில் ஆரூரன் உள்ளிட்டான். இரண்டு நாட்களுக்கு முதல் டெலிவரிக்காகச் சென்றவன் இப்போது தான் வருகிறான்.

“அம்மா, தேத்தண்ணி போடுங்கோ… வாறன்!” என்று, பின்புறமாகச் சென்றவன், தன்பாட்டில் மலர் இல்லத்தைச் சுற்றத் தொடங்கியிருந்தான்.

அந்தக் கண்ணாடியறை, இன்றும் அமைதியாகவே இருந்தது. அவனையும் அறியாது முறுவல் பூத்தான், ஆரூரன். வெளிநாட்டுச் சுற்றுலா என்று சென்றவள், புகைப்படம் போட்டே அவனைப் படாதபாடு படுத்தியவள் ஆச்சே! அத்தனை மைல்களுக்கு அப்பால் நின்றபடி, பத்துப் பத்தாகப் புகைப்படம் போட்டே, ஏதோ அவனருகில் ஒட்டிக்கொண்டு நிற்பது போன்று உணர வைத்திருந்தாளே! இனி, நேரில் கண்டால்…

முதல், சும்மா பகிடிக்குச் சேட்டை விடுறாளா? உண்மையிலேயே அவளுக்கு அவனில்…

அந்த எண்ணமே அவனை வெகுவாக எச்சரித்தது. அவளைச் சந்திக்கும் சந்தர்ப்பத்தை உருவாக்காதே ஆரூரா என்று, மனதுக்கு, அதன் விருப்புக்கு மாறாக கட்டளையும் இட்டது. ஏனாம்? முறுகல், முனகலோடு ஆரம்பித்த மனதை அடக்க வேண்டியவனானான், அவன்; விறுவிறுவென்று அவர்கள் வளவுக் கிணற்றடிக்கு வந்து விட்டான்.

அதன் பின்னரான நாட்களில், பார்த்து பார்த்து நடந்ததில், பைரவியை நேருக்கு நேராகச் சந்திக்கும் சந்தர்ப்பம் அமையவில்லை. அங்கு அமைந்திருந்த காளான் கொட்டில்களுக்கு என்று நியமித்த பெடியன்களும், அவன் உதவியின்றி, அனைத்தையும் சீராகச் செய்யும் அளவுக்குத் தேறியிருந்ததில் வேலை இன்னும் இலகுவாகிற்று. 

பைரவிக்குத்தான் பெரும் எரிச்சல்! அதிலும், மனதிற்குப் போட்டியாக விழிகள் சுழன்றடித்துக் களைத்துப் போயின. இரவுகளில், அவன் ஒரு சுற்றுச் சுற்றுவானே! அப்போது பிடிக்க வேண்டும் என்ற காத்திருப்பும் வீணாகிற்று! 

பெரிய துரை அவர்! முகத்திலறைந்த ஏமாற்றம், கோபம் தான் கொள்ள வைத்திட்டு! இப்ப அவரை ஏன் தேடுறன்? கோபத்தோடு மனதை அதட்டியவள், ‘வேற என்னத்துக்கு, அவனுக்கு என்று வாங்கி வந்தவற்றைக் கொடுக்க மட்டும் தான்’ என்றும், அதே கோபத்தோடு சொல்லிக் கொண்டாள்.  

கௌசல்யா, மதி, நிலா மயூரன் வீட்டினர், ஏன், அவளிருந்த அறை ஆன்ட்டி, அங்கிளுக்கு என்றெல்லாம் வாங்கி வந்தவற்றைக் கொடுத்தவள், அவனுக்கு என்று வாங்கியவற்றைத் தன் பெட்டிக்குள் போட்டு விட்டிருந்தாள்.

ஐந்து நாட்கள், ஐந்து மணி நேரம் போல் கடந்துவிட, பல்கலைக்கழகமும்  ஆரம்பித்திருந்தது. படிப்போடு, மதியோடு சேர்ந்து காளான் பண்ணைக் கணக்கு வழக்குகள் பார்த்தாள்; காளான் அறுவடை கூட செய்தாள்; அவன் மட்டும் கண்ணிலேயே படவில்லை. 

வேண்டுமென்றே தவிர்க்கிறான் என்பது விளங்காதிருக்க, அவள் என்ன குழந்தையா? அந்த எண்ணம், மனதுள் அழுந்த விழுந்தது முதல், கோபம் தான் வந்தது. 

“மகனே அம்பிட்டியோ கதை கந்தல்” கனடாவில், பக்கத்து வீட்டுப் பாட்டி சொல்வது போலவே முணுமுணுக்க மட்டுமே முடிந்தது.

“உங்கட ‘மு’ எங்க ஆளையே காணேல்ல?”  வேலையில் மும்முரமாக இருக்கும் செழியனைக் கடிப்பாள். 

“மு? அப்பிடி எண்டா?”

“இது கூட விளங்காமல்? முதலாளி…” வாயைச் சுழித்தாள், பைரவி.

சிரித்துவிட்டான், செழியன். “அண்ணாவா? மன்னாரிலும் ஸ்டோல் திறக்கிற அலுவலாத் திரியிறார் போல!”

“இந்தாளுக்கு விசர் பிடிச்சிட்டோ! இப்பிடி ஒரு மனிசன் நிக்க இருக்க நேரமில்லாமல் உழைச்சு…” எரிச்சல் பட்டாள்.

ஒரு சாதியாகப் பார்த்தான்,செழியன். “இந்த வயசில உழைக்காமல்? அண்ணாதான் எங்கள் எல்லாருக்கும் முன்னுதாரணம்!” என்றவன் விழிகளில் பெருங்கனவு! 

“ஓஓ!” நக்கல் பார்வை பார்த்தாள், பைரவி. “அப்பிடி என்டா உங்கட ‘மு’ வுக்குப் போட்டியா நீங்களும் ‘மு’ ஆக வேணும் செழியன்.” என்றவள், “அடோய்! உள்வீட்டுக்க இருந்து கொண்டே என்ன வேலை பாக்கிறீர்?” என்று, அப்போதுதான் உள்ளே நுழைந்த மதியிடம் கடி வாங்கினாள். மனம் இலகுவானது போலிருந்தது, அவளுக்கு. அந்தக் கணம், வேலையில் தான் திரிகிறான், என்னைத் தவிர்க்க என்று இல்லை என்றெண்ணிக் கொண்டாள். மறுநிமிடம், என்ன வேலை இருக்கட்டும், என்னை ஒரு தடவை சரி பார்க்க வேண்டுமென்று நினைக்க இல்லையே என்றது அவளுள்ளம். 

பைரவிக்கு, தன்னை நினைக்க நினைக்க என்ன செய்வதென்றே தெரியவில்லை. சின்னதோ பெரிதோ… சரிவை நோக்கிச் செல்லும் நீரோட்டமாக, அவள் மனம், அவன் பின்னாலே ஓடுவதையே வேலையாகச் செய்கிறதே! முறுவலோடு கௌசல்யாவைப் பிடித்தாள்.

error: Alert: Content selection is disabled!!