Skip to content
“உங்கட மகனக் கைகழுவி விட்டாச்சா ஆன்ட்டி? எங்க காணவே கிடைக்குதில்ல?” சீண்டினாள். அவள் மனதுள் புகுந்து பார்த்தாரா அவர்? மகனோடு இவளைச் சம்பந்தப்படுத்தி எல்லாம் கற்பனையும் செய்யவில்லை, அவர். அவருக்கு அவர் கவலை! தன் மனத்தாங்கலை அவளிடம் கொட்டிவிட்டார். அவனுடைய திருமணம் என்பது, அவருக்கு இவ்வளவு பிரச்சனை கொடுக்கிறதே!
கேட்டுக்கொண்டு நின்றவளுக்கு, அப்போதுதான், உண்மை நிலவரம் விளங்கியது. இவர் பாட்டில் கலியாணம் பார்த்து அவனும் தலையாட்டினால்? அவள், தன்னைத்தான் முழுமையாக உணர்ந்தாலும் ஒருவிதமான தயக்கம், மனதை வெளியில் காட்டும் விருப்பைக் கொடுக்கவில்லை.
அவனிடம் அவள் விருப்பைத் தெரிவித்தால்… இல்லை என்பானா என்ன? திமிறி நிமிர்ந்து நின்று கேட்டது, உள்ளம்.
அதற்குத்தான் கனமான மௌனமும் தவிர்ப்புமே பதிலாகத் தந்து விட்டானே. பிறகென்ன? சோர்வாகவும் இருந்தது.
படிக்க வந்த இடத்தில் உனக்கு இதெல்லாம் தேவையா பைரவி? தன்னைத் தானே அதட்டினாலும், “உங்கட மகனுக்குக் கலியாணம் நடக்க வேணும் எண்டு இயற்கை குறிச்சு வச்சிருந்தா நடக்கும் ஆன்ட்டி! கவலைப்படாதீங்க!” அவரைக் கட்டிப் பிடித்துக் கொஞ்சினாள்.
“அப்பிடிச் சொல்லும். அம்மா வீணாக் கவலைப்பட்டுப் பட்டு பிரஷர் ஏறுறது தான் மிச்சம்.” என்றாள், மதி.
“உங்கட அண்ணாக்கு இப்பத்தான் பதினெட்டு, நான் கலியாணத்துக்கு அவசரப்படுறன் என்ன?” முணுமுணுப்போடு நகர்ந்தார், கௌசல்யா.
பைரவியின் தாய் தகப்பனிடையே ஆறு வயதுகள் வேறுபாடு; அதற்கே அவள் கடிப்பாள்; ஒத்த வயதில், இல்லையோ, ஓரிரு வயது அதிகமுள்ளவனையே தான் கல்யாணம் செய்வேன் என்றெல்லாம் சொல்லி இருக்கிறாள்; இப்போதோ, உதடுகளுள் நெரிந்த முறுவலோடு தன் அந்த எண்ணத்தையும் நெரித்து அழித்து விட்டாள்.
இப்படிச் சென்ற ஒரு மாதத்துக்குப் பின்னரே, ஆரூரன் என்பவன் தரிசனம் கிடைத்து.
அப்போதும் கூட, லேசாக நொண்டிக்கொண்டு தான் வந்தான். இவளை வீட்டினுள் எதிர்பார்க்கவில்லை என்றது, சட்டென்று வந்து போன முகமாற்றம்; சமாளித்து விட்டான். தாய் வேறு இருக்கிறாரே!
“ஹாய்…” என்றுவிட்டு, சிறு தலையாட்டலோடு பின்புறமாகச் சென்றுவிட்டான்.
“பரவாயில்லயே ஆன்ட்டி, உங்கட மகனுக்கு என்னை எல்லாம் நினைவு இருக்கே!”அவள் குரல், அவனைக் கலைத்துச் சென்றது.
“இப்ப, இப்பிடியெல்லாம் கொழுவல் பட்டாக் கூட்டிக்கொண்டு போக மாட்டான் சொல்லிட்டன். பிறகு, என்னட்ட கண்ணக் கசக்கிறது இல்லை.” குசுகுசுத்துவிட்டு, தேநீர் தயாரிக்க எழுந்தார், கௌசல்யா.
“ஓம் எல்லா?” மெல்லச் சொன்னவள், வாய்க்கு ‘சிப்’ போட்டுக் காட்டினாள்.
அடுத்த ஒரு மணித்தியாலத்தில், ‘ஆரூர் மஷ்ரூம் பூட்’ டெலிவரி வாகனம் புறப்படத் தயாரானது.
விடைபெற்று நடந்தவனோடு ஓடி வந்து சேர்ந்து நடந்தாள், பைரவி. அவனைப் பார்க்கவில்லை, முதுகுப் பையின் முன் பொக்கற்றுக்குள் எதையோ தேடிக்கொண்டே வருகிறாளாம்.
வந்ததிலிருந்து தம் வீட்டில் இருப்பவளைப் பார்த்தும் பாராது தான் பொருட்களை ஏற்றிவிட்டு வெளிக்கிட்டான், ஆரூரன். அவளோ, கைப்பேசியிலேயே கவனமாக இருந்தாள். இன்று, பல்கலைக்கழகம் இல்லையா என்ன? பச்! என்னவும் செய்யட்டும், நம்மளோடு சோலிக்கு வராட்டிச் சரிதான். சலிப்பும் எரிச்சலுமாக எண்ணிக் கொண்டான், அவன். அவள் காட்டும் பாராமுகம் அந்தளவுக்கு சிடுசிடுப்புக் கொடுத்திருந்தது.
தாயைக் கேள்வியாகப் பார்த்தான், ஆரூரன்.
“வவுனியாக்குப் போகவேணும் எண்டவா தம்பி. பஸ்ஸில போகத்தான் வெளிக்கிட்டவா. புது இடம் எல்லா? நான் தான் உங்களோட போகலாம் எண்டு மறிச்சனான். அவவோட படிக்கிற பிள்ளைக்குப் பிறந்தநாளாம். சர்ப்ரைஸ் குடுக்கப் போகினமாம். மற்றப் பிள்ளைகள் நேற்றே போய்ட்டினமாம். அதான். நீங்களும் எப்படியும் இண்டு திரும்பப் போறதில்ல என்ன? நாளைக்கு வரேக்க பிள்ளையையும் கூட்டிக் கொண்டு…” கடகடவென்று சொல்லிக் கொண்டு வந்தவர், மகன் முகம் இறுகவும் மிச்ச வார்த்தைகளை விழுங்கிக் கொண்டார்.
“ம்மா! நான் என்ன வேலைக்கு வெளிக்கிடுறன் எண்டு தெரியாதா உங்களுக்கு? அதுக்கு இடையில…” பைரவியை முறைத்தான். அவன் பார்வைக்காகவே காத்திருந்தாளோ, தன்னையும் மீறி, வாயை அப்படியும் இப்படியுமாகச் சுழித்தாள்; விழிகளில் விசமம் பொங்கி வழிந்தது.
அவன் மனம் வேறு ரசியடா எண்டு சொல்லிட்டா? விசராகிப் போனான், ஆரூரன். கோபமாகத் தாயிடம் திரும்பினான்.
“ஆர் இவாக்கு வவுனியா புது இடமோ? என்னம்மா உங்கட கதை? இந்த உலகத்தில மூலை முடுக்கெல்லாம் கண்டபடி திரியத் தெரிஞ்ச மனுசருக்கு, வவுனியா போறதுக்கு என்ர வாகனமும் நானும் வேணுமோ? அது சரி வராது அம்மா. வேணும் எண்டா மயூரனிட்டச் சொல்லி கார் ஹயர் பண்ணிக்கொண்டு போகச் சொல்லுங்க. ஒண்டும் தெரியாத பயந்த குழந்தைப்பிள்ளை பாருங்க!” சீறிக்கொண்டு அவன் செல்ல, அவன் கோபம் சுர்ரென்று தாக்க அப்படியே நின்றாள், பைரவி.
ஒரு கணம், சரிதான் போடா என்று நின்று விடத் தான் மனம் சொல்லிற்று. அந்தளவுக்கு ரோசம் கெட்டு இங்கு ஒருவரும் இல்லை. கண்கள் கலங்கி முகம் சிவந்து அவள் நின்ற விதம் பார்த்துவிட்டு, “தம்பி கொஞ்சம் நில்லு!” அதட்டலோடு சென்றார், கௌசல்யா.
“அதென்ன கண்டபடி திரியிறது எண்ட கதை? அர்த்தம் விளங்கேல்ல!” தாயின் கோபமே, தான் சொன்ன விசயத்தின் கனம் உணர்த்த, தடுமாறியது, அவன் மனம்.
“ம்மா, நான் பிழையா ஒண்ணும் சொல்லேல்ல சரியா? எல்லா இடமும் போகத் தெரிஞ்சவா எண்டுற அர்த்தத்தில தான் சொன்னனான். உண்மையா அம்மா.” என்றவன் பார்வை அவளிடம் பாய்ந்தது. கோபமும் கூர் பார்வையுமாக நின்றவள், அவனை மிகவுமே சங்கடப்படுத்தினாள்.
“என்ன அம்மா இதெல்லாம்? நான் என்ர பாட்டுக்கு வெளிக்கிட்டன், நீங்கதான் மறிச்சு வச்சு… இப்பத் தேவையே இல்லாத பிரச்சினை.” சினந்தான் ஆரூரன்.
“என்ன எண்டாலும் நீ அப்படிச் சொல்லி இருக்கக் கூடாது. அதோட, என்ர சொல்லுக்கு உள்ள மரியாதை இவ்வளவும் தான் என்ன? உன்னால கூட்டிக்கொண்டு போக ஏலாது. அப்படித் தானே? சரி விடு! கவனமாய்ப் போயிட்டு வா!” விசுக்கென்று திரும்பியவர், “வாம்மா , பைரவி” கரம் பற்றி நடந்தார்.
ஒரு நாளுமில்லா தாயின் கோபம்; சீறல் மட்டுமா? கணத்தில் அவனையே அந்நியம் ஆக்கிவிட்டாரே!
“இதெல்லாம் கொஞ்சமும் சரியில்லம்மா. உங்களுக்கு வர வர என்னில அன்பு இல்லாமல் போகுது என்ன? எப்பப்பார் எதையாவது காரணம் சொல்லிக் கோவிக்கிறீங்க!” மகன் சொன்னது, கௌசல்யா மனத்தைத் தட்டியது. உண்மைதான். கலியாணக் கதை தான் எல்லாத்துக்கும் மூலகாரணம். என்ன விசயம் நடந்து விட்டாலும் அதுவும் வந்து சேர்ந்து கோபிக்க வைத்து விடுகிறது.
“வாரும் போகலாம்” அவளைப் பார்த்துச் சொன்னவன் மனதில், இல்ல நான் வரேல்ல என்பாள் என்ற எண்ணம்; அதைப் பொய்யாக்கினாள், அவள்.
“போயிட்டு வாறன் ஆன்ட்டி!” எப்போதும் போல், கௌசல்யாவைக் கட்டிப் பிடித்து கன்னத்தில் அழுத்தமாகக் கொஞ்சிவிட்டு ஓடி வர, மிகவுமே தடுமாறிப் போனான், ஆரூரன். அப்படியெல்லாம் ஒன்றுமே இல்லை என்று சொல்ல ஆசைப்பட்டான்; முடிந்தால் தானே! “வாறன் அம்மா!” முணுமுணுப்போடு நடந்தான், அவன்.
“நாளைக்கு வரேக்க பத்திரமா கூட்டிக் கொண்டு வர வேண்டியது உங்கட பொறுப்புத் தம்பி. பின்னுக்கு ரெண்டு பேருக்கும் மத்தியானச் சாப்பாடு இருக்கு.” சந்தோசமாக வழியனுப்பி வைத்தார், கௌசல்யா.
error: Alert: Content selection is disabled!!