Skip to content
சமையலுக்கு வரும் மனிசி, எப்போதும் போலவே தடல் புடலாகச் சமைத்து வைத்து விட்டுப் போயிருந்த உணவுகள் அப்படியே கிடந்தன.
“உணக்கையா உள்ள தள்ளுறது ஒண்டு தான் குறை. சும்மா நடிப்புக்கு ஆரும் இங்க உள்ள தள்ளாமல் இருக்கத் தேவேல்ல. அண்ணா, நீங்க சாப்பிடலாமே!” என்று நகர்ந்த கலா, பாமினியைக் கோபமாகப் பார்த்துவிட்டு படிகளில் ஏறினார். அதே நேரம், வாசல் அழைப்பு மணி ஒலித்தது.
இம்முறை அசையாது அமர்ந்திருந்தாள், பைரவி; இருந்தாலும் ‘திரும்பவும் வந்திட்டானோ!’ மனம் எண்ணாதிருக்கவில்லை.
சேகர் தான் சென்று திறந்தார். அங்கே, பொலீஸ் ஒருவரோடு இன்னும் இருவர் நின்றிருந்தார்கள். சாதாரண உடையில் நின்றாலும் அவர்களும் காவல்துறை தான் என்றது, தோரணை. ஒருகணம் திடுக்கிட்டாலும் சமாளித்துக்கொண்டு என்னவென்பதாக விசாரித்தார்.
“உள்ளுக்க வந்து கதைக்கலாமா?”
“வாங்க…” நகர்ந்து வழிவிட, சுகுமாரும் வந்து விட்டார் .
“டினோசன் இருக்கிறாரோ? நீங்க அவருக்கு ஆர்?”
“அவரிட அப்பா. ஓம் இருக்கிறார், என்ன விசயம்?” கலக்கம் மறைத்து வினவினார், சேகர்.
காவல்துறை என்றதும் எல்லோருள்ளும் ஒருவகைப் பதற்றம். ‘ஆரூரன் தான் கொம்ளையின்ட் செய்திட்டாரோ!’ பாமினியும் வந்தார்.
வந்தவர்கள் பார்வை அவர்களைக் கூர்மையாக ஆராய்ந்தது; அதில் எள்ளல் தொனித்தது; அதையுணர்ந்த பைரவியின் முகம் இறுகியது.
“வாங்கடி” மைத்துனிமாரோடு அறைக்குள் நுழைய முயன்றாள்.
“எங்கயும் போக வேணாம், இங்கயே நில்லுங்க! டினோசன் எங்க? வரச் சொல்லுங்க!” அதட்டலாகச் சொன்னார், அதிகாரி போல் நின்றவர்.
“ஏன், என்ன விசயம் எண்டு முதல் சொல்லுங்கவன்?” முன்னால் வந்தார், சுகுமார் மற்றும் கலாவின் தந்தை. அவர், பள்ளித் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர்; கண்டிப்பான ஆசிரியராக இருந்து உழைப்பாலும் முயற்சியாலும் அதிபராகியவர்.
அவரை, அங்கு நின்ற பொலீசுக்கு தெரிந்திருந்தது.
“வணக்கம் சேர், டினோசன் உங்கட…”
“பேரன். மகள்ட மகன். என்ன, ஏதாவது பிரச்சினையா?”
“அவரோட கொஞ்சம் கதைக்க வேணும், கூப்பிட ஏலுமா சேர்?” தணிவாகக் கேட்டார், அவர்.
“என்ன கதைக்க வேணும், எங்களிட்ட முதல் சொல்லுங்கவன்!” அதட்டலாக இடையிட்டு இருந்தது, கலாவின் குரல்.
“நாங்களே உங்களிட்ட வர இருந்தம். ஒருத்தன், விடிய வெள்ளன வீடு பூந்து என்ர மகன அடிச்சிட்டு, எங்களை எல்லாம் கேவலமா ஏசிட்டுப் போனவன். வெளிநாட்டில இருந்து டொக்டருக்குப் படிக்க வந்த என்ர அண்ணன் மகள, பிடிச்சுத் தள்ளிட்டு அசிங்கமா எல்லாம் நடந்தவன்.” அவர் அடுக்கிக் கொண்டே செல்ல, பைரவி தொடங்கி எல்லோருமே வாயடைத்து நின்றிருந்தார்கள்.
“ஓ! அப்பிடியா என்ன விசயம்? வெள்ளன நடந்தத நாங்களா வந்த பிறகு சொல்லுறீங்க? ம்ம்” அதட்டினார், ஒருவர்.
கலா, அழுதபடி கதையளக்க, “ஐயோ கலா, நீ கொஞ்சம் சும்மா இரு! நாங்க கதைக்கிறம்.” அதட்டினார், சுகுமார்.
“நீங்க சும்மா இருங்க அண்ணா. இங்க வந்து என்ர மகன அடிச்சிட்டு, அப்பிடியே போய், இவேட்ட கதை அளந்தானோ என்னவோ!” என்றதும், வந்தவர்கள் தமக்குள் பார்த்துக் கொண்டார்கள்.
“என்ன எண்டாலும் முதல் உங்கட மகனக் கூப்பிடுங்க அம்மா.” பொலீஸ் தான்.
“அவன் நித்திரை, என்ன விசயம் சொல்லுங்க?”
“அத அவரிட்டத் தான் சொல்ல வேணும், கூப்பிடுங்க!” முதல் கதைத்தவர் அதட்டலாகச் சொன்னார்.
“தனு, அண்ணாவ வரச் சொல்லு!” மூத்த மகளை மாடிக்கு அனுப்பினார், சேகர்.
“அண்ணோய்!” என்றபடி, பாய்ந்தோடினாள், அவள்.
அடுத்த கால் மணித்தியாலத்தினுள், அந்த வீடு, மீண்டும் ஒரு தடவை கலங்கி நின்றது. கலா, அவர் அம்மா என்று, பெருங்குரலில் அழ அழ, காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டிருந்தான், டினோசன்.
ஒரே ஒரு வீடியோ தான்; அதில் இருந்த விசயமோ உச்சபட்ச அதிர்வைக் கொடுத்திருந்தது.
“அவளத் தூக்கோணும். அதும் உடனே! சின்னா பின்னமாக்கிச் சீரழிச்சுத் துண்டு போட்டு, அவன் ஆரூரனுக்கு அனுப்பி, நான் ஆர் எண்டு காட்ட வேணும்!”
மகனில் அளவற்ற பாசத்தோடு இருக்கும் கலாவுக்கே, மகன் குரல் நாரசாரமாக அல்லவா கேட்டிட்டு! இன்னமும் மனதுள் அதிர்வேற்படுத்தியபடி இருக்குதே! மகன் மட்டில் எவ்வளவு பெருமை அவருக்கு! அவனா இப்படியெல்லாம் உக்கிரமும் வன்மமும் காட்டிக் கதைத்தான்? பதறித் தவித்தவருக்கு, இதில் ஏதோ சூழ்ச்சி இருக்குமென்றே தோன்றியது.
அதுவே, காவல்துறையினரிடமும் கெஞ்ச வைத்தது; பயன் தான் இல்லை! மகனை அழைத்துச் சென்றுவிட்டார்கள். இனி அவன் எதிர்காலம்?
அதே அதிர்வு தான் மற்றவர்களுக்கும்; அதிலும் பைரவி, தனுசூயா, அனுசூயா மூவருமே நடு நடுங்கிப் போனார்கள்.
வீடியோக் கோலில், இன்னும் மூன்று நண்பர்களோடு சேர்ந்து உறுமியிருந்தான்,டினோசன். கோப வெளிப்பாடெல்லாம் இல்லை என்ற வகையில், நிலாவை எப்படித் தூக்கலாம் என்று விலாவாரியாகத் திட்டமும் போட்டிருந்தார்கள்!
இத்தனைக்கும், காவல்துறையினரைக் கண்டதும் அதிர்ந்து நின்றான் தான். அதன் பின்னர், இலாவகமாகத் தன்னைச் சுதாகரித்தும் இருந்தான். தனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை என்றளவில் அசட்டையாக நின்றுமிருந்தான்.
“அம்மோய்! கொஞ்ச நேரம் சும்மா இருங்கோ!” என்று அதட்டிவிட்டு, “ நான் என்ர லோயரோட கதைக்கிறன்.” என்று, கைப்பேசியை இயக்க முதல், காவல்துறை அதிகாரி அதைக் கைப்பற்றி விட்டார்.
“என்ன என்றாலும் ஸ்டேசனில் வந்து சொல்லுங்க!” கட்டளையிட்டு விட்டார்.
“நான்… நிலாவ விரும்பிறவன். அப்பிடி இருக்க இப்பிடி எல்லாம் செய்வனா?” என்று, சொல்லிப் பார்த்தவனுள் பெரு போராட்டம். ‘ஆர் இதை எடுத்துக் கொடுத்தது? கதைத்த மூவருமே அவன் மிக நெருங்கிய நண்பர்கள். பிறகு?’
கலா, ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கியிருந்தார். மறுபுறம் சேகர், சுகுமார் அதையிதைச் சொல்லி அரியண்டம் கொடுக்க, காவல் துறையினருக்கும் அந்த இடம் விட்டுப் போனால் போதுமென்று வந்திட்டு.
“போகலாம்.” டினோசனை விடாப்பிடியாக அழைத்துச் செல்ல, கையை முறுக்கி விடுவிக்க முனைந்தான், அவன்.
“அது நான்… கோவத்துல சும்மா கதைச்சது. உண்மையா அவள விரும்பிறன். இதுக்கு வீடு பூந்து அடிச்சா, ஆருக்கு எண்டாலும் கோவம் வரும் தானே? அதான் அப்பிடிக் கதைச்சிட்டன். எனக்கும் ரெண்டு தங்கச்சிகள் இருக்கினம். அப்பிடி எல்லாம் செய்வனா? விடுங்கோ ப்ளீஸ்!” தணிவாகக் கெஞ்சியும் இருந்தான்.
காவல்துறையினர் எதையுமே காதில் வாங்கவில்லை.
“என்ன கதைக்கிறது எண்டாலும் ஸ்டேசனுக்கு வந்து கதையும். இத்தறிக்கு உம்மட அந்த மூன்று நண்பர்களும் அங்க வந்திருப்பினம்” நக்கல் சிரிப்போடு சொன்னார்.
“ரவீந்தருக்குச் சொல்லுங்கோ அப்பா!” என்றுவிட்டு, “பிசி இல் இருக்கிற வாட்ஸ் அப்பில நம்பர் இருக்கு.” சென்றிருந்தான், டினோசன்.
“எல்லாமே பொய்! ஆருக்குப் பம்மாத்துக் காட்டினம்? என்ர மகன் அப்படிப்பட்டவன் இல்லவே இல்ல. அந்த வீடியோவே பொய்!” கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணிய கலா, மொத்தக் கோபத்தையும் வெறுப்போடு பாமினியில் உமிழ்ந்தார்.
“எல்லாம் உன்ர கொண்ணனிட வேலையாத்தான் இருக்கும். அம்மா அப்பாவ வச்சிப் பார்க்கிறன் எண்டதால தான், அண்ணா எனக்குச் செய்யிறவர். அது, ஆரம்பத்தில இருந்தே உனக்குப் பிடிக்கிறதில்ல எண்டும் எனக்குத் தெரியும். இங்க பார் அண்ணா, உன்ர மனிசிட கொள்ளிக் கண்ணும் அவளிட கொண்ணனிட வன்மமும் என்ர குடும்பத்தை அழிக்கப் போகுது. எல்லாத்துக்கும் நீ மட்டும் தான் பொறுப்பு. அவனை வெளில கூட்டிக் கொண்டு வந்து, உன்ர மகளுக்குக் கல்யாணம் செய்து வச்சிரு சொல்லிட்டன் .”
கிரீச்சிட்டுக் கத்தினார் கலா. தங்கை, மனைவியை ஒருமையில் விளிக்கவே, வாய் திறக்க இருந்த சுகுமார் நெஞ்சுக்குள் எதுவோ செய்தது. தன்பாட்டில் உயர்ந்த வலக்கை, நெஞ்சைத் தேய்த்துவிட, “இங்க பார் கலா…” என்று ஆரம்பித்தவர், ‘மகளைக் கல்யாணம் செய்து வச்சிரு’ என்றது காதில் விழ, நெஞ்சை அழுத்திப் பிடித்தபடி தடாலென்று விழுந்துவிட்டார்.
error: Alert: Content selection is disabled!!