‘ராட்சஷி! புருஷன் இல்லை என்று சொல்; அதில் உண்மை இருப்பதால் கேட்டுக்கொண்டே போவேன். அதென்ன அண்ணா முறை?! நான் உனக்கு எப்போடி அண்ணா ஆனேன்?’ மனதுள் பெருங்குரலில் கத்தியவன் சட்டென்று எழுந்து குழந்தையை தாதியிடம் கொடுத்துவிட்டு, விறுவிறுவென்று வெளியேறிவிட்டான்
‘போ! இப்படியே போய்விடு. என் குழந்தைகளைப் பார்க்கவும் வராதே!’ இவளும் பெருங்குரலில் கத்த முயன்றவள், கார்த்திகேயனின் முகம் அவமானத்தில் சுருங்கியிருந்ததைப் பார்த்து வாயடைத்துப் போனாள்.
ஏதோ ஒருவகையில் அவள் நெஞ்சம் பிசைய, விழிகள் கலங்கிவிட்டன!
கரத்திலிருந்த குழந்தையை நெஞ்சோடு அணைத்தவளுக்கு உடலே பதறியது.
‘ஏன்? எதற்காக? நான் யாரோ ஒருத்தி; அதுவும் அவர்களின் தயவை நாடி நின்றவள். பிரதிபலன் பாராத அவர்களின் கவனிப்பை, அக்கறையை, உதவிகளை வாங்கிக் கொண்டவள். இவருக்கு, என் உதாசீனத்தை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் என்ன வந்தது? என்னாலும் தான் அது எப்படி முடிந்தது?’ வேதனையில் முனகிய மனம் விழிகளைக் கலங்கடித்தது.
‘என்ன மாதிரியான வாழ்விது! எனக்கு ஏன் இப்படியெல்லாம் நடக்க வேண்டும்? இங்கு வர விமானம் ஏறிய அக்கணம் இப்படியெல்லாம் அவஸ்தைகளை அனுபவிப்பேன் என்று ஒரு துளியேனும் கற்பனை பண்ணியிருப்பேனா!?’
விழிகளின் கரைகளை இலகுவாகக் கடந்த உப்புநீர் கன்னத்தால் வழிந்து குழந்தையின் பட்டுக்கன்னத்தைத் தொட்டுச் சிதற, குழந்தை மூக்கையும் வாயையும் சுளித்தாள்.
‘கொஞ்சம் கூட என் மனநிலையை அறிந்து கொள்ள முடியவில்லையா? அல்லது விருப்பு வெறுப்புகளுக்கு நீ தகுதியில்லாதவள் என்று எண்ணுகிறாரா?’ மனதுள் அரற்றினாள்.
அவளுக்கு, அவனை வார்த்தைகளால் சாடியதும் பிடிக்கவில்லை; அதேநேரம், அவன் அவளை, தன்னவள் எனக் கருதுவதையும் சகிக்க முடியவில்லை.
‘குழந்தைகள் வயிற்றிலிருக்கும் போதே அவர்களை அண்ணனும் தங்கையும் உரிமை கொண்டாடினார்களே! அப்போதே அதற்குத் தடைபோட்டிருக்க வேண்டும். அதை வளர விட்டுவிட்டு இப்போ முறைப்பதில் என்ன பயன்!’ அவள் மனசாட்சி முள்ளாய் குத்தியது.
அடுத்த நாள், இவளைப் பார்ப்பதற்காக சதீஷ் வந்திருந்தான்.
“குழந்தைகள் பிறந்த விடயத்தை கேட்டதும் அம்மா சந்தோஷப்பட்டார் மதுரா. தானில்லையே என்றும் கவலைப்பட்டார்.” இப்படிப் பொதுவாக நலம் விசாரித்துப் பேசியவன், “அறை ஏதாவது கிடைத்ததா?” என்றதும் ‘இல்லை’ என்பதாய் தலையாட்டினான்..
“நம்ம அவசரத்துக்கு ஒன்றும் கிடைக்குதில்லை மதுரா. கொஞ்ச நாட்கள் பொறுத்துக் கொள்ளுங்க; எப்படியும் பார்த்துத்தாறேன். இப்போ குழந்தைகளும் பிறந்துவிட்டார்கள். கார்த்திகேயன் வீட்டில் குழந்தைகளுக்கு எல்லாம் தயார் செய்து வைத்திருக்கிறார்களாமே! இப்போதைக்கு அங்கேயே இருங்க; இவ்வளவு நாட்களும் இருக்கவில்லையா?” என்றவனோடு தேவையற்று இவள் வாயை விடவில்லை.
அந்தப் பக்கம் போனதும், அனைத்தையும் ஃபோனைப் போட்டு ஒப்பித்து விடுவானே!
ஆரம்பத்தில், மூன்று தினங்களில் வீடு செல்லலாம் என்றது, ஐந்து நாட்களாக மாறிவிட்டது.
அன்றைக்குப் பிறகு கார்த்திகேயனை நேராக சந்திக்கவில்லை இவள். இவள் சென்று வந்த பின் குழந்தைகளைப் பார்க்க வந்து போய் இருக்கிறான் என்பதை தாதியின் பேச்சிலிருந்து அறிந்து கொண்டாள்.
இரண்டு நாட்களுக்கு முன் திரும்பி வந்த நித்தி, மகிழ்வோடு வந்து மதுராவைக் கட்டிக் கொண்டாள். அடுத்த நொடி விக்கி விக்கி அழுதும் விட்டாள்.
அவள் இல்லாத போது நடந்தவைகளின் நினைவில், கார்த்திகேயனின் பேச்சும் நடத்தையும் தந்த வலியில், தன்னில் தானே கொண்டுள்ள குற்ற உணர்வில் என, தானுமே அழுதுவிட்டாள் மதுரா. அழுகையின் ஊடே, இருவரும், மாறி மாறி ஒருவரை ஒருவர் தேற்றிக் கொண்டார்கள்.
முதல் முதல் மதுரவைக் காண்கையில், அவள் எப்படி மனம் நொந்து போயிருந்தாளோ, அதேயளவு வேதனையை இப்போதும் பிரதிபலித்து நிற்க அதிகமாகவே நொந்தாள் நித்தி.
‘இதற்குக் காரணம் நாங்கள் அல்லவா?’ என்று எண்ணியவளுக்கு, டூர் போய் வந்ததும் மதுராவையும் குழந்தைகளையும் காணவேண்டும் என்ற ஆவலில் புறப்பட்ட தன்னிடம் தமையன் சொன்னவைதான் நினைவில் வந்தது.
“நித்தி…ஹாஸ்பிட்டல் போக முதல் உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும்மா?” என, தீவிர பாவனையில் ஆரம்பித்தவன் வழமைக்கு மாறாக அமைதி காக்கவே, பயந்து போனாள் அவள்.
“என்னண்ணா?! சொல்லுங்க?” என்றவள், “மதுராவும் குழந்தைகளும் சுகமாக இருக்கிறார்கள் தானே?” மெல்லிய பயத்தோடு கேட்டாள்.
“அவர்கள் நன்றாக இருக்கிறார்கள்ம்மா. இது…வேறு விடயம்.” என்றவன் மிகத் தயங்கினாலும், “நான்…எனக்கு…” தடுமாறி, “அண்ணி வேண்டும் என்று ஒரே ஆர்ப்பாட்டம் பண்ணுகிறாய் தானே…” என்றதும் விழிகள் விரிய மகிழ்வோடு தமையனைப் பார்த்தாள்.
“ஹைய்ய்…என்னண்ணா சொல்லுறீங்க? ஹே..ஹே..யார் அந்த லக்கி? எவ்வளவு நாட்களாக நடக்குது?” ஆர்ப்பரித்தவள் சட்டென்று நிதானித்தாள்.
“சித்தி, பெண் பார்த்திருக்கிறாரா அண்ணா? ஃபோட்டோ பார்த்தீங்களா? பிடித்திருக்கா? காட்டுங்க பார்ப்போம்! வந்து இவ்வளவு நேரமும் அதைச் சொல்லாது…உங்களை என்ன செய்யலாம்?” படபடத்தாள்.
“ம்ம்…பெண்ணைப் பிடித்திருக்கு நித்தி; நிறையவே!” குரல் கனியச் சொன்னவன், அடுத்த நொடி, இலேசான தவிப்போடு தங்கையைப் பார்த்தான்.
“உனக்கும் நிச்சயம் பிடிக்கும் நித்திம்மா. அப்போதான் எனக்கு நிம்மதியாக இருக்கும். நீங்க இரண்டு பேருமே எனக்கு மிக மிக முக்கியம்.” தொடர்ந்தவனின் விழிகள் இலேசாகக் கலங்கினவோ என்ற சந்தேகம் நித்திக்கு!
“என்னண்ணா புதிர் போடுறீங்க? முதல் ஃபோட்டோவைக் காட்டுங்க.” அவசரப்பட்டாள்.
மீண்டும் சில கணங்கள் அமைதி காத்து, நித்தியின் பொறுமைக்கு வேட்டு வைத்துவிட்டு, அங்கிருந்த அலுமாரி லாச்சியைத் திறந்து ஒரு சிறுஆல்பத்தை எடுத்தவன், “இதில் இருக்கிறாள் உன் அண்ணி!” ஆவலும் அவசரமுமாகக் கை நீட்டியவளிடம் கொடுத்துவிட்டு, அருகிலிருந்த சோஃபாவில் அமர்ந்து கொண்டான்.
‘ஹப்பாடா!’ பெரும் பாரம் இறங்கியதாக உணர்ந்தது அவன் மனம். அதுவரை தன்னுள் ஓடிக்கொண்டிருந்த தயக்கமும் படபடப்பும் மெல்ல மெல்ல விலகுவதாக உணர்ந்தவனின் பார்வை, தன்னருகில் வந்தமர்ந்த தங்கையில் நிலைத்தது.
‘பெண்ணின் ஃபோட்டோ ஆல்பத்திலா!?’ என்ற வியப்போடு, தமையனில் தெரிந்த தடுமாற்றத்தில் அவளுள்ளே குதித்த ஆர்ப்பாட்டம் நிதானத்துக்கு வர, மெல்ல ஆல்பத்தைத் திறந்தவள், அடுத்த நொடி, சகலமும் ஸ்தம்பிக்க உறைந்தாள்.
சட்டென்று நிமிர்ந்தவளின் விழிகள் அமைதியாக பார்த்திருக்கும் தமையனைப் பார்த்த வேகத்தில் அடுத்தடுத்த பக்கங்களில் பதிந்து இறுக மூடிக்கொள்ள, ஆல்பத்தை மூடிய விரல்கள் சிறு நடுக்கத்தோடு அதைப் பொத்திப் பிடித்துக் கொண்டன.
சத்தியமாக இக்கணம் அவள் மனம் என்ன எண்ணுகின்றது என்பதை அவளால் அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. அதேநேரம், தான் அறிந்த செய்தியால் முற்றிலும் அதிர்வடைந்திருந்தாலும் நிச்சயம் வெறுப்பை உமிழவில்லை; அதிருப்தியை வெளிப்படுத்த நினைக்கவில்லை.
‘ஆனாலும் எப்படி இப்படி?’ என்றவளுள், மதுராவின் குழந்தைகள் பிறந்த பின்னர் எடுத்த புகைப்படங்கள் அடங்கிய அச்சிறு அல்பத்திலிருந்த புகைப்படங்கள் மீண்டும் ஒருமுறை மின்னி மறைந்தது.
‘நான்..நான் அப்பப்போ பகிடி பண்ண அதுவே உண்மையாகி இருக்கா?’ என்றவளுள், ‘இதற்கு நான் தான் காரணமா?’ என்ற கேள்வியும் எழுந்தது.
மதுரா இங்கே தங்கியிருப்பதற்கே அதிருப்தி கொண்டுள்ள சிறிய தாயாரையும் தமக்கையையும் நினைத்ததும் உள்ளே நடுக்கமும் ஓடி மறைந்தது.
எல்லாவற்றையும் விட, ‘மதுரா…இதற்குத் தலையாட்டுவாரா?’ என்ற கேள்விக்கு, சாதகமான பதிலை நினைத்துப் பார்க்கவே முடியாது தடுமாறியவள் தமையனை நோக்கினாள்.
“அண்ணா என்னண்ணா!” பேச்சின்றித் தடுமாறியவள், “வேண்டாம்ணா, மதுரா மிகவும் பாவம்; ஒருமுறை பட்டதே போதும். நம்மிடம் ஆதரவுக்காக, அப்படியும் இல்லை; நாம் வற்புறுத்தியதால் நம்மோடு வந்திருக்கிறார். அப்படியிருக்க, அவரை வருத்தும் படி நாம் நடப்பது சரியில்லை.” நீளமாக படபடத்தவளை அமைதியாகப் பார்த்தான் கார்த்திகேயன் .
“அப்போ, நான் என்ன விளையாட்டாக எதையோ சொல்கிறேன் என்று நினைத்துக் கொண்டாயா நித்தி? அப்படியெல்லாம் இல்லையம்மா!” என்றவன், சிறிதுநேரம் மௌனம் காத்தான்.
“எனக்குக் கல்யாணம் செய்து வைக்க எவ்வளவோ விரும்பி, அது நிறைவேறாமலேயே அம்மா போய்விட்டார். அதேநேரம், நான் யாரையாவது விரும்பி, கைகாட்டியிருந்தால், அடுத்த நிமிடம் கல்யாணம் செய்து வைத்திருப்பார்!” என்றவன், மீண்டும் தாயின் நினைவில் அமைதி காத்தான்.
“இப்போ, சுதா சித்தி ஒரே கரைச்சல் செய்கிறார். உனக்கு முடிந்த பின் செய்வோம் என்ற முடிவில் இருந்தேன்; இப்போதும் அதில் மாற்றமில்லை! ஆனால், பெண் மதுரா தான்.” என்றவன், பேச்சற்று அதிர்வோடு பார்த்திருக்கும் தங்கையை நேராகப் பார்த்தான்.
“மதுரா தான் என் மனைவி; உனக்கு அண்ணி! குழந்தைகள் இருவரும் என்னுடையவர்கள்.” தீர்மானமாகச் சொன்னான்.
‘இதை, சித்தியும் அக்காவும் ஏற்றுக் கொள்வார்களா?’ மனம் கேள்வியெழுப்ப, “அண்ணா! எனக்கு எனக்கு…என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மதுரா நல்லவர்தான்; பாவம் தான்; ஆனால், ஏற்கனவே கல்யாணம் செய்தவர்; இருகுழந்தைகளோடு…” இழுத்தாள்.
சிறுமுறுவலோடு அமைதி காத்தான் கார்த்திகேயன்.
“மதுராவை எனக்கு மிகவும் பிடிக்கும்ணா! ஆனால் இப்படி யோசித்துப் பார்க்க…என்ன சொல்வது என்றே தெரியவில்லை. முதல், மதுரா இதை எப்படி எடுத்துக் கொள்வார் என்று பயமாகவும் இருக்குண்ணா. நீங்க பரிதாபப்பட்டு செய்யும் செயல்…” தடுமாறும் தங்கையின் தலையை வருடியவாறே இடையிட்டான் அவன்.
“நிறைய யோசித்துக் குழம்பாதே நித்தி! மதுராவுக்கு வாழ்க்கை கொடுப்பதாகவோ, நான் பெரிய தியாகம் செய்வதாகவோ என் மனதில் துளியும் எண்ணவில்லை. பரிதாபம் என்ற பேச்சுக்கு இங்கு இடமே இல்லை.
எனக்கு இதுவரை எந்தப் பெண்ணையும் பார்த்து இப்படி ஒரு எண்ணம் வரவில்லை. எவ்வளவோ பெட்டைகளோடு பழகுகிறாய் ஒருத்தியையும் பிடிக்கவில்லையா என்று அம்மா எவ்வளவு கேலி செய்திருக்கிறார்!” தமையன் சொல்ல, நித்தியும் அதையே தான் நினைத்தாள்.
“மதுராவை என் மனைவியாக, என்னையும் அறியாமல் மனதில் பதித்துவிட்டேன் நித்தி. அதில் எந்த மாற்றமும் நிச்சயம் நிகழாது. மதுராவின் மனம் கொஞ்சம் சமாதானம் ஆகவிட்டு என் விருப்பத்தைச் சொல்லலாம் என்றிருந்தேன். அது பார்த்தால்…” என்று ஆரம்பித்து அவள் அறிந்து கொண்டதையும் கடுமையாக மறுத்ததையும் சொல்ல,
“தெரியும்ணா. மதுரா இதையெல்லாம் இலகுவாக எடுத்துக்கொள்ள மாட்டார். அப்படிப் பார்க்கையில், உங்களுக்கு ஏன் வீணாக! ப்ளீஸ்ணா, இந்த பேச்சை இப்படியே விட்டு விடுவோமே!” கெஞ்சினாள்.
அவனோ, இதுதான் என் முடிவு என்ற வகையில் தீர்மானமாகப் பேச, ‘இதற்குமேல் நான் ஆட்சேபனை செய்ய என்ன இருக்கு!’ என்று அமைதியானவள், சமாதானமாகவும் ஆர்வமுமாகத்தான் வைத்தியாலைக்கு வந்திருந்தாள்.
இப்போதோ, மதுராவின் கலக்கம் பார்த்ததும் அவள்பால் இரக்கமே வந்தது. அவளின் கண்ணீரைத் துடைத்து விட்டவள், “நான் இல்லாமல் போயிட்டேன் அண்…மதுரா; சரியா கஷ்டப்பட்டீங்களா?”
அண்ணி என உரைக்க வந்தது புரிந்து இவள் முகம் இறுகியது. ‘அதற்கிடையில் தங்கச்சியிடமும் சொல்லிவிட்டாரா?’ மனம் கடுகடுத்தது.

