அத்தியாயம் 4
கற்கண்டருக்குத் திடீர் நெஞ்சுவலி வந்துதான் வைத்தியசாலைக்குக் கொண்டுபோனார்கள். இதயத்துக்கான இரத்த நாளத்தில் அடைப்பு என்று கண்டுபிடித்து, பைபாஸ் அறுவைச் சிகிச்சையைத் தனியார் வைத்தியசாலையில் செய்தார்கள்.
இனி எல்லாம் சரியாகிவிடும் என்று நம்பிக்கொண்டிருந்த நேரத்தில் இரத்தப்போக்கு அதிகரித்து, ஹார்ட் அட்டாக் வந்து இறந்திருந்தார் மனிதர்.
அனைத்துமே கொஞ்சமும் எதிர்பாராமல் நிகழ்ந்துபோனதில் அவரவரிடம் இருந்த பணத்தை எடுத்துக் போட்டு அனைத்தையும் செய்து முடித்திருந்தார்.
அதுவே அந்தியேட்டிக்கு அந்த வீட்டின் ஒற்றை மருமகனாக அனைத்தையும் செய்ய ஆதவன் தயாராகவே இருந்தான்.
கொழும்பிலிருந்து போன அன்றே, எவ்வளவு செலவாகும் என்று கணித்த தொகையை வங்கியிலிருந்து எடுத்து, அவனிடம் கொடுத்தாள் யாழினி.
ஆதவன் அதை வாங்கச் சம்மதிக்கவில்லை. “ஆஸ்பத்திரிச் செலவு, செத்த வீட்டுச் செலவு எண்டு எல்லாத்துக்கும் பிடிவாதமா நிண்டு நீங்க தந்ததே போதும் யாமினி. இத மாமாக்கு நான் செய்றன்.” என்று அவன் சொன்னபோது யாமினிக்குக் கண்ணைக் கரித்துவிடப் பார்த்தது.
ஆனால், அதிர்ந்து நின்ற தமக்கையைக் கவனித்துவிட்டு, “இப்பிடி நீங்க சொல்லுறதே போதும் அத்தான். இத வாங்குங்கோ ப்ளீஸ்!” என்று நீட்டினாள்.
அவன் கடைசிவரையிலும் வாங்காகவே இல்லை.
மாதங்கி அதிலிருந்து இவளுக்கும் அன்னைக்கும் முகம் கொடுக்க மறுத்தாள்.
யாமினிக்குக் கோபம் என்பதையும் தாண்டி மிகவுமே வேதனையுற்றாள். இது தன் தமக்கைதானா என்று நம்ப முடியவில்லை.
சின்ன வயதிலிருந்தே அவள் சைக்கிளைக் கூட இவளைத் தொட விடமாட்டாள். அவளின் உடைகளைப் போட்டால் பிடிக்காது. அதெல்லாம் சின்ன சின்ன விசயங்களாக இருந்ததில் பெரிதாகப் பட்டதில்லை. கற்கண்டு ஐயா இருந்தவரை என்ன நல்லது கெட்டது நடந்தாலும் அவரே அனைத்தையும் முன்னின்று பொறுப்பெடுத்துப் பார்த்துக்கொண்டதில் இப்படி ஒரு பிரச்சனை இவர்களுக்குள் வந்ததில்லை. அதனாலேயே மாதங்கியின் இந்தக் குணம் பெரிதாக்கத் தெரியாமலேயே இருந்துவிட்டது.
கற்கண்டரின் அந்தியேட்டி நிறைவாகவே நடந்து முடிந்தது. வந்தவர்கள் எல்லோரும் அவரைப் பற்றியும் அவரின் நல்ல குணங்களைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்துவிட்டுப் போனது மிகுந்த ஆறுதல்.
அடுத்த நாள் அவள் புறப்பட வேண்டும். அதற்கு முதல் ஆதவனிடம் திரும்பவும் பணத்தைக் கொண்டுபோய் நீட்டினாள் யாமினி. அப்போதும் அவன் வாங்க மறுத்தான்.
“அவர் எனக்கு மாமா யாமினி. அப்பாக்குச் சமன். அவருக்கு நான் செய்யக் கூடாதா? ஏன் இந்தக் காசைத் தந்தே ஆகோணும் எண்டு நிக்கிறீங்க? நீயாவது சொல்ல மாட்டியா மாது?” என்று கொஞ்சம் கோபமாகவே கேட்டுவிட்டுப் போனான் அவன்.
இதற்கு மேல் என்ன செய்வது என்று தெரியாது அவள் நிற்க, “அம்மாச்சி, அக்கா அந்தக் காச தன்னட்ட தரட்டுமாம் எண்டு சொல்லுறா. குடுத்துவிடுங்கோ பிள்ளை.” என்று, வந்து அவள் காதில் இரகசியமாகச் சொன்னார் நாகேஸ்வரி.
அன்னையைக் கொஞ்சம் அதிர்ச்சியோடு பார்த்தாள் யாமினி. அவளுக்கு அதைக் கொடுப்பதில் ஒன்றுமில்லை. ஆனால், ஒரு குறிப்பிட்ட தொகைப் பணத்திற்காகத் தமக்கை சொந்த வீட்டினுள் செய்யும் இந்த அரசியல் அதிர்ச்சியளித்தது. கூடவே, அவளுக்கு இசைந்து முழுத் தொகையையும் கொடுத்துவிடு என்று சொல்லும் அன்னையும் அவளுக்குப் புதிதாய்த் தெரிந்தார்.
முழுச் செலவையும் அவளே ஏற்றுக்கொள்வதாகச் சொன்னாள்தான். கொழும்பிலிருந்து வரும்போதே பணத்தைத் தயார் செய்துகொண்டு வந்ததும் அதனால்தான். அது வேறு. அன்னை அவர்கள் இருவருக்கும் அன்னையாயிற்றே. அவர் மாதங்கியிடம் ஒன்றுமே சொல்லவில்லையா?
“அக்காவா கேட்டவாவாம்மா?”
“ஓம் பிள்ளை.”
“நீங்க என்ன சொன்னனீங்க?”
“நான் என்ன சொல்ல இருக்கு? ஏதாவது சொன்னா நான் சரி. உன்ர அத்தான் இல்லாத நேரத்தில என்னை ஒரு வழியாக்கிப்போடுவா. சின்னவனைப் போட்டு அடிச்சு, பண்ட பாத்திரத்த டொம் டொம் எண்டு போட்டு, என்ன கேட்டாலும் பதில் சொல்லாம முகத்தை நீட்டிக்கொண்டு திரிஞ்சு எண்டு பயமா இருக்கும் பிள்ளை.”
அப்பாவும் இல்லை என்கிற தைரியத்தில் மாதங்கி அன்னையைத் தன் முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டுவர முயல்வது நன்றாகவே புரிந்தது.
பேசாமல் அந்தப் பணத்தை எடுத்து அன்னையின் கையில் பொத்திவிட்டுப் போய்ப் படுத்துக்கொண்டாள். அழுகையும் ஆத்திரமும் சேர்ந்து வந்தன.
இத்தனை காலமும் அப்பா என்கிற அந்த மனிதன் எத்தனை பெரிய நம்பிக்கையை, நிம்மதியை, தைரியத்தைத் தந்துகொண்டிருந்திருக்கிறார் என்று இப்போதுதான் மெல்ல மெல்லப் புரிய ஆரம்பித்தது.
என்னவோ கதவுகள் அற்ற வீட்டில் வாழ்வது போன்று, பாதுகாப்பற்ற தன்மை மணத்தைச் சூழ்ந்ததில் ஒரு பயம் பிடித்துக்கொண்டது.
அடுத்த நாளே எழுந்து புறப்பட்டாள்.
“கொஞ்ச நாளைக்கு என்னோட வந்து இருக்கப்போறீங்களாம்மா?”
“அப்பிடி எப்பிடிப் பிள்ளை வாறது? என்னால அந்த ஒற்றை அறைக்க அடைஞ்சு கிடைக்கவும் ஏலாது. இஞ்ச சின்னவர் நான் இல்லாம இருக்க மாட்டார். அக்காவும் சமாளிக்க மாட்டா.”
அவளோடு வந்து இருந்தால் அவருக்கு ஆறுதலாக இருக்குமோ என்றெண்ணித்தான் கேட்டாள். அவருக்கு விருப்பமில்லை என்றதும் புறப்பட்டுவிட்டாள்.
புகையிரதம் ஏறியதும் நிரோஜன் அழைத்தான்.
“வெளிக்கிட்டியா?”
“ஓம்.”
“பிக்கப் பண்ண வருவன். ஒரு 20 நிமிசத்துக்கு முதல் மெசேஜ் பண்ணு!”
“ஓகே!”
அவளின் ஒற்றைச் சொல் பதில்கள் அவனை யோசிக்க வைத்தன. “என்ன யாமி? ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்?”
“இல்ல. அது… அப்பா இனி இல்லவே இல்லை என்ன? அதான்…” அதைச் சொல்லும்போதே குரல் கைமாறிப்போயிற்று. தாயும் தமக்கையும் ஆறுதலாக இருந்திருந்தால் கூட பரவாயில்லாமல் இருந்திருக்கும் போலும். இது என்னவோ அவள் தனித்துவிடப்பட்டுவிட்டது போன்றதொரு உணர்வை உண்டாக்கி, அவர் இழப்பை இன்னும் அதிகமாக்க காட்டிற்று.
“யம்மும்மா. எனக்கு உன்ர மனநிலை விளங்குது. ஆனா, ஏற்க கஸ்டமா இருந்தாலும் சில உண்மைகளை ஏற்றுத்தான் ஆகோணும். அப்பிடி இந்தக் கடந்து வா. அங்கிள் எப்பவும் உனக்குத் துணையா இருப்பார்.”
உண்மைதான். அவள் தந்தை அவளோடுதான் இருப்பார். அவள் திருமணத்தையும் பார்த்துவிட ஆசைப்பட்ட மனிதர். நிரோஜனின் தங்கைக்கு இன்னும் முடியாததால் இவளால் அவர்களின் காதலை அவரிடம் சொல்ல முடியாமல் போயிற்று.
அதைச் சொன்னால், அவனும் அவளும் அங்கே வேலை செய்வதை விரும்ப மாட்டார், வேறு எங்கும் மாற்றிக்கொள்ளச் சொல்லிவிடுவாரோ என்று ஒரு பயம்.
அந்த நேரம் காதலும், காதலனோடு செலவழிக்கும் அந்த நேரங்களும் முக்கியமாகத் தெரிந்தன. ஆனால் இன்று அதைச் சொல்லி, நிரோஜனை அவருக்கு அறிமுகப்படுத்தி, குறைந்தபட்சமாகச் சின்ன மகளுக்கும் ஒருவன் பொருத்தமாய் இருக்கிறான் என்கிற நிம்மதியையாவது கொடுத்திருக்கலாம் என்று நினைத்தாள்.
“யமி?”
“ம்?”
“என்ன?”
“இல்ல அது…” என்று ஆரம்பித்து, வீட்டில் நடந்தவற்றைச் சுருக்கமாகப் பகிர்ந்துகொண்டாள்.
நிரோஜனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. என்ன இருந்தாலும் அது அவள் தமக்கை. அவளைப் பற்றி அவள் சொல்வது வேறு. அவனும் ஏதாவது சொன்னால் அது வலிக்கும்.
அதில், “நீ ஏன் அவாவைப் பற்றி யோசிக்கிறாய்? உன்னைப் பற்றி யோசி. ஒரு மகளா இருந்து அத்தனை செலவையும் அவருக்காகச் செய்திருக்கிறாய். அப்ப அவருக்கு நீ எவ்வளவு அருமையான மகள் எண்டு யோசி.” என்று அவன் சொன்னபோது, அவள் கன்னத்தில் கண்ணீர் வழிந்தே போயிற்று.
“அவரும் அந்தளவுக்கு நல்ல அப்பா நிரோ. அப்பிடியானவருக்குச் செய்ய…” என்றவளால் மேலே பேச முடியாமல் போயிற்று.
“அதுக்கு ட்ரெயின்ல இருந்து அழுவியா? பாக்கிற சனம் என்ன நினைக்கும்? கண்ணைத் துடை.” என்று அவளோடு பேசி அவளைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தினான்.
“காசு விசயத்தில நீங்களும் கொஞ்சம் கவனமா இருங்க நிரோ. இவ்வளவு காலமும் வீணா சிலவழிச்ச காசைக் கணக்குப் பாத்தா எனக்கு நெஞ்சுவலி வந்திரும் போல இருக்கு. சிலவழிக்கேக்க தெரியேல்ல. இப்பிடி ஒரு அவசரத் தேவை எண்டு வந்து, காசில்லாம நிக்கேக்கதான் எல்லாம் விளங்குது. எப்பவும் உங்களச் சிலவாளி எண்டு சொல்லுவன். ஆனா நானும் அப்பிடித்தான் இருந்திருக்கிறன் எண்டு இப்பதான் தெரியுது.” என்றாள் அவள்.
அவனுக்கு அதை வீண் செலவில் கொண்டுபோய்ச் சேர்ப்பதில் ஒப்புதல் இல்லை. இந்த வயதில் அனுபவிக்காமல் எந்த வயதில் அனுபவிக்கப்போகிறார்களாம்? அவர்கள் ஒன்றும் ஊதாரியாகத் திரியவில்லையே. நல்ல வேலை, நல்ல சம்பம, வீட்டுக்கும் கொடுக்கிறார்கள். மிகுதியில் அனுபவிக்கிறார்கள். அதில் தவறு இருப்பதாக அவன் நினைக்கவில்லை. இதையெல்லாம் இப்போது அவளிடம் சொல்லி, அவள் மனநிலையை இன்னும் மோசமாக்கவும் பிடிக்கவில்லை.

