Skip to content
“ஜங்லி ராணி, எங்க போயிட்ட?”
“இங்கதான இருக்கேன்”
“ஹே பியூட்டி, என் ஹைபி எங்க?”
“ஹைபியா”
“செம்பருத்திதான். செம்பருத்தி செம்பருத்தின்னு நீளமா கூப்பிட முடியல தொண்டை வலிக்குது ஹைபிஸ்கஸ சுருக்கி ஹைபி. நீ பேபி அவ ஹைபி எப்படி”
ஆன்லைனில் இருந்த மருத்துவ டாக்குமெண்ட்ஸை மருத்துவரின் பார்வைக்கு அடுக்கியவாறு இருந்த அவினாஷ் ஹைபியா என்று எரிச்சலானான்.
“இவ்வளவு நீளமா பேச வருது செம்பருத்தின்னு கூப்பிட்டா தொண்டை வலிக்குமாம். நீ திருந்தவே மாட்டியா அபி”
“அழகு எங்கிருந்தாலும் ரசிக்கும் ரசிகன் நான். எதுக்குத் திருந்தணும்?”
“ஐயோ… நிறுத்து… செம்பருத்திக்குத் தெரிஞ்சா உன் மேல வச்சிருக்கிற மரியாதை என்னாகும்? உன் காதல் மன்னன் வேலை எல்லாம் மூட்டை கட்டி வை”
தள்ளி நிற்கும் அவினாஷுக்கும், பக்கத்து அறையில் இருக்கும் காவ்யாவுக்கும் காதில் விழுமாறு சொன்னான்.
“அழகு பொண்ணுங்களைத் தேடி நான் போறதில்லை ஜங்லி. என் பார்வை பட்டாலே நான் பொண்ணுங்க அழகாயிடுறாங்க. அதுனால நான் காதல் மன்னன் தானே. வேர் இஸ் ஹைபி”
கடுப்போடு அங்கிருந்து அப்பால் அவினாஷ் நகர, ராதிகாவும் முறைத்துக் கொண்டே நங்கென்று கையில் இருந்த பாத்திரத்தை அப்படியே வைத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்.
பக்கத்தில் யாருமில்லை என்று அறிந்ததும் விஷச் சிரிப்புடன் அபிராமின் அறைக்குள் நுழைந்த காவ்யா.
“என்ன அபி எகத்தாளம் துள்ளுது. இன்னும் உன்னை நினைச்சு மயக்கத்தில் இருப்பேன்னு நினைக்கிறியா… என்னை மறுத்துட்டு போன உனக்கு பாரு நடக்கக் கூட முடியாம போச்சு. ஒண்ணே ஒன்னு அபி, சில சமயம் நான் இப்படி நினைப்பேன். நீ பைக் பின்னாடி உக்கார வச்சு சுத்திகிட்டு இருந்தியே என் பிரெண்ட், அவ விபத்து நடந்ததும் போன் பண்ணி உன்னைக் காப்பாத்த சொன்னதுமே, நான் ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணிருந்தா, நீ நடந்திருப்பியோன்னு. பட் உன் கொழுப்புக்கு இது தேவைதான். இனிமே நீ ஆசைப்பட்டா கூட முடவனுக்கு இந்தக் கொம்புத்தேன் கிடைக்காது”
மின்னாமல் முழங்காமல் அவனது தலையில் அந்தப் பேரிடியை இறக்கினாள்..
“உன் கண்ணுல பட்டதால அழகியான அந்த ஹைபி எங்கன்னு தெரியுணுமா அபிராம். வெளிய போயிருக்கா, ஒருத்தங்க கூட, சரியா சொல்லப் போனா ஒரு ஜோடி கூட விருந்து சாப்பிட, அதில் லேடி பேரு மங்கையற்கரசி.
அவங்க நீ மயக்கத்தில் இருந்தப்ப இங்கதான் தங்கி இருந்தாங்க. உன் ரூமில் தான் இருந்தாங்க. உனக்கு முழிப்பு வந்ததும் செம்பருத்தியோட சேர்த்து வெளிய அனுப்பிட்டான் அவினாஷ்.
முக்கியமான விஷயம் திருநெல்வேலிலேயே செம்பருத்திக்கும் அவினாஷுக்கும் அறிமுகம் உண்டு. அவன் தேர்ந்தெடுத்து அப்பாயிண்ட்மெண்ட் பண்ணவதான உன் ஹைபி. நிஜ முதலாளி போயிட்டு வரச் சொல்லும் போது உன்னை மாதிரி டம்மி முதலாளிக்காக மாட்டேன்னு சொல்ல முடியுமா. தகவல் போதுமா இல்லை இன்னும் வேணுமா?”
காவ்யா இன்னொரு இடியையும் இறக்கிவிட்டு அப்படியே நகர்ந்தாள்.
அபிராமின் முகம் கோபத்தால் சிவக்க ஆரம்பித்தது. “அவினாஷ்… “ வீடு அதிர அவன் கத்தியத்தைக் கேட்ட அனைவரும் பயத்துடன் அவனது அறையை நோக்கி ஓடி வந்தனர்.
அதே நேரத்தில் செம்பருத்தியும் சரியாக வீட்டிற்கு வர, மற்றவர்களுடன் சேர்ந்து அபிராமின் அறைக்கு ஓடினாள்.
கண்கள் சிவக்க அனைவரையும் பார்த்த அபிராம் அங்கு செம்பருத்தி நிற்பதைப் பார்த்து முதல் முறையாக அனைவரின் முன்பும் தட்டுத்தடுமாறி நடந்து வந்தான். ஓடி வந்து அவனைத் தாங்க வந்தவர்களை மறுத்துவிட்டு நேர் பார்வை பார்த்தவண்ணம் செம்பருத்தியிடம் வந்தான்.
“எங்க போயிட்டு வர செம்பருத்தி?”
“ஹோ… ஹோ…ட்டல்ல சாப்பிட்டு…” திக்கித் திணறினாள்.
“நீயும் என்னை ஏமாத்திட்டேல்ல… “ அவன் கண்களில் தெரிந்த ஏமாற்றம்.
“இல்ல… இல்ல சார் எனக்குத் தெரியாது” இருதலை கொள்ளியாய் துடித்தாள்.
யாருக்கு சப்போர்ட் பண்ணுவாள் உள்ளம் கவர்ந்தவனுக்கா இல்லை ஊனும் உயிரும் தந்தவனுக்கா?
“அபி அவளுக்கு ஒன்னும் தெரியாது. அவளை ஒன்னும் சொல்லாதே” என்று இடையிட்டான் அவினாஷ்.
“நீ பேசாம இருடா… உங்கம்மா எதுக்குடா இங்க வந்தா… என்னைக் கொல்லுறதுக்கா?”
“மரியாதை அபி.. மரியாதை… “
“அவளுக்கெல்லாம் என்னடா மரியாதை? அவ என்னடா மரியாதை தர்ற அளவுக்கு நடந்தா”
“அபி வேண்டாம்.. வேண்டாம்… ரொம்பப் பேசுற “ என்று சேச்சி தடுத்தார்.
“நீ பேசாதே லீலாம்மா… உனக்கும் எங்கப்பாவுக்கும் கூடதான் உறவு இருக்குன்னு ஊரெல்லாம் பேசுது. நான் உன்கிட்ட ஏதாவது கேட்டேனா… உன்னை எவ்வளவு மரியாதையோட நடத்துறேன். ஆனால் இவனோட அம்மா இருக்காளே. மரியாதைக்கு கூடத் தகுதி இல்லாதவ…. “
“டேய் மரியாதையா பேசு… எங்கம்மாவைப் பத்தி உனக்கென்னடா தெரியும்?உனக்கு உங்கம்மாவைப் பத்தியே தெரியாது எங்கம்மாவைப் பத்தி என்னடா தெரியும்”
“என்னடா தெரியாது. குடும்ப சொத்துக்காக ஏற்கனவே கல்யாணமான எங்கப்பாவை இழுத்துகிட்டு ஓடினவதானே. ஓடிப் போயி மும்பைல உக்காந்துக்கிட்டா பண்ண துரோகம் எல்லாம் மறைஞ்சுடுமா? ஆமா இப்ப எதுக்கு என் வீட்டுக்கு வந்திங்க? என்னைக் கொன்னுட்டு அரண்மனையும், மத்த சொத்துக்களையும் எடுத்துக்கத்தானே இந்த நல்லவங்க வேஷம். ஓடுகாலிக்குப் பொறந்தவனே”
“டேய்… “ என்று அவினாஷ் கொதிக்க
பளார் என்று அபிராமின் கன்னத்தில் அறை விழ, அப்படியே அதிர்ந்து போனான். அவன் எதிரே அனல் பறக்கும் கண்களுடன் லீலாம்மா நின்றுருந்தாள்.
“லீலாம்மா… “ என்று அவினாஷ் திகைக்க.
“அபி அவனைப் பாத்து என்ன வார்த்தை சொல்லிட்ட… அவன் வாரிசுடா… இந்த பாகமங்கலம் சாம்ராஜ்யத்து வாரிசு. உங்க குடும்பத்தால இப்ப ஒரு வேலைக்காரனாட்டம் இங்கேயும் அங்கேயும் ஓடிக்கிட்டு இருக்கான். இந்தப் பாவம் எல்லாம் உங்களை எப்படிடா சும்மா விடும்”
error: Alert: Content selection is disabled!!