சதிராடும் சித்திரமே 1 – 2

பின்னே நடக்குமா நடக்காதா என்று பல வருடங்களாகக் குழப்பத்தில் இருந்தவளுக்கு விடிவெள்ளியாய் இன்று வெளிச்சம் கிட்டியது. இத்தருணத்திற்காக எத்தனை காலம் காத்திருந்தாள்?

 

பழம் நழுவி பாலில் விழுந்ததைப் போல் தானாக நடக்கையில் எங்கிருந்தோ வந்து மொத்தமாக நாசம் செய்துவிட்டாளே! நினைக்க நினைக்க ரதிப்ரியாவின் கோபம் மளமளவென்று விண்ணைத் தாண்டியது.

 

அதுவும் தனக்குப் பிடித்தமானவன் மேலேயே மோதி அவனைத் தொட்டு உரசி. ‘சீ.. சீ..’ பார்க்கவே அவளுக்குச் சகிக்கவில்லை. இதற்குமேல் அவளால் எப்படி அமைதியாகப் போக முடியும்?

 

“அய்யோ… வைரமா?” அறை வாங்கிய பெண் வாயின் மேல் கையை வைத்துத் திகைத்து நின்றது ஒருசில நொடிகளே. தடாலென்று கீழே குனிந்து முட்டியிட்டு நெறுநெறுவென்றிருந்த மணலில் கையைவிட்டு அளைந்து பரபரவென்று மோதிரத்தைத் தேட ஆரம்பித்தாள்.

 

தன் ‘பேண்ட்’ பைக்குள் வலது கையை வைத்தவாறே குனிந்து அப்பெண்ணைக் கூர்ந்து நோக்கினான் மித்ரன். பச்சை நிறத்தில் சுடிதார் அணிந்திருந்தாள். அவனுக்குப் பிடிக்காத நிறம். நீண்ட கூந்தல் வேறு. அவனுக்கு அது அறவே பிடிக்காது.

 

அதில் மல்லிகைப் பூவை வேறு என்னவோ அவார்ட் வாங்கி மாட்டியதைப் போல் தலையில் தொங்கவிட்டிருந்தாள். சரியான பட்டிக்காடு. கடற்கரை காற்றில் அவள் தலைமுடி அவளை விட்டுப் பிரிந்து ஓட பெரும் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தது. அதை ஒதுக்கிவிடு என மனதில் தோன்றிய எண்ணத்தை அடக்க மித்ரன் பெரும் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தான்.

 

மித்ரன் தன்னை அளவிட்டுக் கொண்டிருக்கிறான் என்பதை அறியாமல் பரவியிருந்த மணலைக் கையில் எடுத்துச் சலித்துப் பார்த்துத் தேடிக் கொண்டிருந்தாள் அப்பெண்.

 

அவளது முகமும் கூட வட்டமாக இல்லை. குனிந்திருந்ததால் விழிகள் சரியாகத் தெரியவில்லை. அவளையே பார்த்துக் கொண்டிருக்கோம் என்ற சுரணைக் கூட இல்லாமல் அவளையே நோக்கியிருந்தான் மித்ரன்.

 

சில நிமிடங்களில் அப்பெண்ணின் முகம் சந்தோஷத்தில் பூரித்து மலர்ந்தது. பளீரென்று தெரிந்த பற்களில், அவளது சிரிப்பில் அவன் இதயம் சற்றே நின்று துடித்தது. அப்புன்னகையை பொன்நகையென மனதில் சேர்த்துச் சேகரித்து வைத்துக் கொண்டான்.

 

தவறி விழுந்த மோதிரம் அவள் கைகளில் அகப்பட்டதே அவளின் முகப்பூரிப்புக்குக் காரணம். மலர்ந்த முகத்துடன் அதைக் கையில் எடுத்து ரதிப்ரியாவிடம் நீட்டி, “இதோ கண்டு பிடிச்சிட்டேன்” என அவள் சொல்ல, ஏதோ பார்க்கக் கூடாததைப் பார்த்ததைப் போல் அம்மோதிரத்தை உற்றுப் பார்த்தாள் ரதிப்ரியா.

 

‘இந்தப் பிச்சைக்காரியின் கையிலிருந்து வாங்குவதற்காகவா காத்திருக்கிறேன்?’ என்ற ஆவேசம் தலைக்கேறியது.

 

“புழுதியில் புரட்டி எடுத்த பூவைப் போய்ச் சாமிக்கு வைப்பியா? அது மாதிரி புழுதியில் புரண்டு விழுந்த மோதிரம் எனக்கு வேண்டாம்” எனக் கத்தினாள் ரதிப்ரியா.

 

பின்னே மித்ரன் அவள் விரலில் மோதிரம் போடப் போகிறான் என வண்ணக் கனவுகளுடன் எதிர்பார்த்துக் காத்திருக்க, அதில் கரும் வண்ணத்தை வாரி இறைத்துவிட்டாள். ரதிப்ரியாவுக்குத் துக்கத்தில் அழுகை பொங்கியது. ஆனால் அழுவது அவளது இயல்பல்ல. ஆகவே அதைக் கோபமாக மாற்றிவிட்டாள்.

 

“அக்கா… சாரிக்கா.. தெரியாமப் பண்ணிட்டேன். நான் வேணா கடல் தண்ணீர்ல அலசிக் கொடுக்கிறேன்” என அப்பெண் கடலை நோக்கி நகர, அக்காவென அழைத்ததில் ரதிப்ரியாவுக்குக் கோபம் கட்டுக்கடங்காமல் போனது.

 

“யாரு உனக்கு அக்கா?” என்றவள், அப்பெண் கையிலிருந்த மோதிரத்தைப் படாரென்று பறித்துக் கடலலையை நோக்கித் தண்ணீரில் தூக்கித் தூர வீசியெறிந்தாள் ரதிப்ரியா.

 

அதைப் பார்த்துக் கொண்டிருந்த பெண் அனிச்சைச் செயலாக வலது கையை எடுத்து வாய் மேல் வைத்து, ‘அய்யோ’ எனத் திகைத்து நின்று விட்டாள்.

 

விலை தெரியவில்லை என்றாலும் அது வைர மோதிரம் என்று அவளுக்குத் தெரியும். விலையுயர்ந்ததாக இருக்கும் என்று அதைப் பார்த்ததும் தெரிந்து கொண்டாள். அதைப் போய் இப்படித் தூக்கி வீசிவிட்டாளே என அவளை நம்பாமல் அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்த்தாள்.

 

“மணல்ல விழுந்ததை உருண்டு புரண்டு எடுத்து தந்தயில்ல.. இப்போ தண்ணில விழுந்துடுச்சு. போ போய் உருண்டு புரண்டு எடுத்துட்டு வா” எனத் தெனாவெட்டாக ரதிப்ரியா சொல்லவும் அப்பெண்ணுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

 

அவளுக்கு முதலில் நீச்சல் தெரியாது. அடுத்து பரந்து விரிந்திருந்த கடலில் எங்கு விழுந்ததோ மோதிரம்? அதைத் தேடி எடுக்கும் அளவுக்கு அவள் என்ன சினிமாவில் வரும் கதாநாயாகனா?

 

விழிகள் உயர்த்தி அருகில் நின்றிருந்த மித்ரனை நோக்கினாள். அவன் எதுவும் பேசாமல் இன்னுமே ‘பேண்ட் பாக்கெட்டி’ல் ஒரு கையை வைத்துக் கொண்டு நடப்பவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

 

இது என்ன அராஜகமாக இருக்கிறது? ஏதோ தெரியாமல் வந்து இடித்ததற்கு மன்னிப்புக் கேட்டு மோதிரத்தையும் கையில் எடுத்துக் கொடுத்தாகி விட்டது. வேறு என்ன செய்ய வேண்டுமாம் இவர்களுக்கு?

 

வேண்டுமென்றே மோதிரத்தை மீண்டும் தண்ணீருக்குள் வீசிவிட்டுப் போய் எடுத்துக் கொண்டு வா என்றால் எப்படி எடுப்பது? அவள் திகைத்துப் போய் இருவரையும் மலங்க மலங்க முழித்துப் பார்த்தாள்.

 

உடனே சுதாரித்துக் கொண்டு, “சார்… சார் தெரியாமப் பண்ணிட்டேன். நீங்களாவது சொல்லுங்க. யாரோ நாலு பேர் துரத்திட்டு வந்தாங்க. அதான் வேகமா ஓடி வந்து கவனிக்காம உங்க மேல மோதிட்டேன்” என அவள் மன்றாடும் குரலில் சொல்ல,

 

அதுவரையில் எதுவும் சொல்லாமல் நின்று கொண்டிருந்த மித்ரன் வலது கையைப் பேண்ட் பாக்கெட்டுக்குள் இருந்து வெளியில் எடுத்தான். அவள் கையை இரும்பெனப் பற்றினான். அந்தத் திடீர் தாக்குதலில் அப்பெண் திகைக்க அவளைத் தரதரவென்று இழுத்துக் கொண்டு போய்க் கடலலைகளில் தள்ளிவிட்டான்.

 

அவன் செய்யப் போவதை உணர்ந்து, “ஐயோ என்னை விடுங்க… விடுங்க எனக்குச் சத்தியமா நீச்சல் தெரியாது” என அவன் கைகளைப் பற்றியவாறே போராடினாள். எவ்வளவு முயன்றும் அவளால் அவன் பிடியிலிருந்து விடுபட முடியவில்லை.

 

அதே சமயத்தில் வந்த பெரிய அலை ஒன்று இராட்சசனைப் போல் அவளை நோக்கி வந்தது. அதை எதிர்பார்த்தவன் போல் அலை அருகில் நெருங்கும் முன்னரே அவள் கைகளை விட்டுவிட்டு அங்கிருந்து வேக நடையுடன் நகர்ந்து விட்டான் மித்ரன்.

 

இராட்சசனை எதிர்கொள்ளத் தெரியாமல் அப்படியே திகைத்து நின்றுவிட்டாள். அவள் சுதாரித்து வெளியேறும் முன்னரே வேகமாக வந்த அலை அவளை முழுவதும் நனைத்து உள்ளே இழுத்துச் சென்றது.

 

தட்டுத் தடுமாறி அலைகளிலிருந்து வெளியேறி மணலில் கால் புதைய நடந்து வந்தவளிடம், “சாரிங்க மேடம். தெரியாம தள்ளி விட்டுட்டேன்” என மித்ரன் அவளிடம் பணிவாகச் சொல்லவும், ‘லூசா இவன்?” என அவனை முறைத்துப் பார்த்தாள்.

 

“சாரி சொன்னா எல்லாம் சரியாயிடும் இல்ல… சாரி… சாரி” என மித்ரன் இப்போது தெனாவெட்டாகச் சொல்லவும், “தெரியாம செய்யறதும் தெரிஞ்சு செய்றதும் ஒண்ணா?” எனக் கோபத்தில் கொந்தளித்தாள்.

 

அவளைச் சற்று ஆழ்ந்து பார்த்தவன், “என் அகராதில ரெண்டுமே ஒண்ணு தான்” எனக் கிஞ்சித்தும் இரக்கம் இல்லாமல் சொன்ன மித்ரன், ரதிப்ரியாவை நோக்கித் திரும்பி, “ரதி, வா கிளம்பலாம். கண்ட கண்ட நாய்னால என் மூடே கெட்டுடுச்சு” என உணவகம் நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

 

சற்றுதூரம் நடந்து சென்றவன் மீண்டும் திரும்பி வந்து அப்பெண்ணை நோக்கி, “இன்னைக்கு இதோட விட்டேன்னு நினைச்சுக்கோ. இனிமேல் என் கண்ணுல பட்டுடாத. அப்புறம் நடக்குற எதுக்கும் நான் பொறுப்பில்லை. ஜாக்கிரதை” என எச்சரித்துவிட்டு நகர்ந்தான் மித்ரன்.

 

“டேய்…” என அவள் கத்த, மித்ரனின் நடை தடைப்பட்டது. ஆனால் அவளைத் திரும்பியெல்லாம் பார்க்கவில்லை.

 

“நீயும் என் கண்ணுல பட்டுடாத. இன்னைக்குத் தப்பு என் மேலேங்கிறதால பேசாம இருக்கேன். இல்லை, நீ என் கையைப் பிடிச்சு இழுத்ததற்கு உன் கன்னம் பழுத்திருக்கும். யாரு நாய்? நீயா, இல்லை, நானா?” எனப் படபடவென்று பொரிந்தவள் விடுவிடுவென்று அவனுக்கு எதிர்திசையில் நடந்து சென்றாள்.

 

‘இவள் என்னையே மிரட்டுகிறாளா?’ எனத் திரும்பி அவனைவிட்டு விலகி நடப்பவளின் முதுகை வெறித்துப் பார்த்தான் மித்ரன்.

 

திரும்பியவளுக்கு அனைத்தும் மங்கலாகத் தெரிந்தது. கோவிலுக்கு வந்தவளை அடையாளம் கண்டுகொண்டு அவளைத் துரத்திக் கொண்டு வந்தது ஒரு கூட்டம். அவர்களிடம் இருந்து தப்பிக்க எண்ணி, கூட்டம் நிரம்பியிருந்த கடற்கரைக்கு வந்தது தவறா?

 

அந்தக் கயவர்களிடம் இருந்து தப்பித்துவிட்டோம் என்று எண்ணினால் இப்படி ஓர் அரக்கனிடம் வந்து மாட்டிக் கொண்டாளே. இதுவரையில் அவளை யாரும் நாய் என்று சொல்லியதில்லை. தன்னைப் பற்றி எதுவும் தெரியாமல் அவளை எடுத்த எடுப்பில் நாய் என்று சொல்லிவிட்டானே.

 

‘யார் நாய்? இவன் தான் நாய். அதுவும் பெரிய ஓநாய்…’ என மனதுக்குள் பொறுமிக் கொண்டாள்.

 

குனிந்து நனைந்த உடைகளைப் பார்த்தாள். இப்படியே எப்படி வீட்டுக்குச் செல்ல முடியும்? கண்களில் இருந்து கண்ணீர் கடகடவென்று வழிந்தது அவளுக்கு. சட்டு சட்டென்று அழுபவள் அவளல்ல. ஆனால் இன்று நடந்த விஷயங்கள் ஏனோ அவள் தொண்டையை அடைக்கச் செய்தது.

 

இதயத்தின் மீது யாரோ கனம் கொண்டு அழுத்தியதைப் போல் உணர்ந்தாள். இதுவரையில் யாரும் அவளை இப்படி அவமதித்ததில்லை. தந்தையாகட்டும், தம்பியாகட்டும், சந்தோஷாகட்டும், எல்லோருமே அவளைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள். அதற்காக அவள் ஒன்றும் அடாவடியான ஆளுமில்லை.

 

பணம் படைத்தவர்கள் என்றால் என்ன வேண்டுமென்றாலும் பேசலாமா? அவன் மேல் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. சற்று இருள் வேறு பரவ ஆரம்பிக்க, அதற்கு மேல் அங்கே நிற்பது உசிதமல்ல என்று அவளுக்குப் புரிந்தது.

 

இந்த ஈர உடைகளுடன் அவள் பேருந்தில் செல்ல முடியாது. டாக்ஸி புக் செய்ய நினைத்தால் கைப்பை, கைப்பேசி என அனைத்தும் அலையில் நனைந்து போயிருந்தது. அதுமட்டுமல்லாமல் தேவையில்லாமல் நேர விரயம் வேறு. செலவும் இழுத்து வைத்துவிட்டான். பெயர் தெரியா அந்த ஜோடியின் மேல் கடலலையென அவளுக்குப் பெருங்கோபம் கொப்பளித்தது.

 

அவர்களை இனிமேல் எந்த ஜென்மத்திலும் சந்திக்கக் கூடாது என்று மனதுக்குள் அறைகூவல் விடுத்தாள் திவ்யதர்ஷினி. எதேச்சையாக அவள் திரும்பிப் பார்க்க, அவளையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன். இராட்சசன்!

error: Alert: Content selection is disabled!!