சதிராடும் சித்திரமே 2 – 1

அத்தியாயம் – 2

 

சலசலத்துக் கொண்டே அருகில் சென்ற ஒரு வயது முதிர்ந்த பெண்மணியின் குரலில் சுயஉணர்வு பெற்றவள், பார்வையை அவனிடமிருந்து திருப்பி, அவரை நோக்கி ஓடிச் சென்றாள்.

 

அவள் கைப்பேசி நனைந்துவிட்டதால் ஒரே ஒரு அழைப்புச் செய்ய உதவுமாறு வேண்டினாள். அவரோ தெரியாதவளிடம் எப்படிக் கைப்பேசியைக் கொடுப்பது என்று தயங்கினார்.

 

இந்தக் காலத்தில் யாரையும் நம்ப முடியாது என்பதால் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லதே. அவர்களைக் குறை கூற இயலாது. உலகம் இப்போது அப்படி மாறிக் கொண்டிருக்கிறது. உதவச் செல்பவர்களுக்கே ஆபத்தில் வந்து முடிந்துவிடுகிறது.

 

ஆகவே அவர்களே அழைக்கும் எண்ணை அழுத்திக் கொடுத்தால் போதும் என்றும் ஸ்பீக்கரில் போட்டுப் பேசுவதாகச் சொல்லவும் உடனிருந்த அவரது கணவர், “கொடும்மா, சின்னப் பொண்ணு… என்ன கஷ்டமோ” என அவரைச் சம்மதிக்க வைத்தார்.

 

அவர்களிடம் சொன்னது போலவே அலைபேசியை அவள் கையில் தொடவில்லை. அவரையே எண்ணை அழுத்தித் தருமாறு சொல்லி ஸ்பீக்கரில் தன் நண்பன் சந்தோஷிடம் பேசினாள் திவ்யதர்ஷினி.

 

“எங்க இருக்க சந்தோஷ்?” என அவன் அழைப்பை எடுத்ததும் கேட்க, “இந்த உலகம் சுழலறதுக்குப் பூமியைத் தள்ளிவிட்டு ஹெல்ப் பண்ணிட்டு இருக்கேன்” என்றவன், அவள் பதிலுக்குக் காத்திராமல்,

 

“சொல்லு, என்ன பிரச்சனை? இல்லைனா, இந்த நேரத்துல அதுவும் வேற நம்பர்ல இருந்து கூப்பிட மாட்டியே” என அவள் ஏதோ ஓர் இக்கட்டில் இருக்கிறாள் என்று உடனே புரிந்து கொண்டான்.

 

நடந்ததைச் சுருக்கமாகச் சொன்னவள், “வீட்டுக்குப் போக டாக்ஸி கூட புக் பண்ண முடியலை. தனியா இப்படி ஈர டிரஸ்ல வர்றதுக்கு ஒரு மாதிரியா இருக்கு” என அவள் முடிக்கவில்லை,

 

“கோவிலுக்கு எந்தப் பக்கம் இருக்க? சரியான இடம் சொல்லு. பக்கத்துல இருக்கேன். இதோ வரேன்” என்று அவளை அழைத்துப் போவதாக வாக்களித்தான் சந்தோஷ்.

 

அவர்கள் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த கைப்பேசி பெண்மணி, அவள் அழைப்பைத் துண்டித்ததும், “இந்தக் காலத்துல யாருக்குமே பொறுமையில்லை. இப்படியா ஒரு வயசு பொண்ணைப் பொறுப்பே இல்லாமல் தண்ணில தள்ளி விடறது? கொஞ்சம் கூட அறிவேயில்லை. நீ ஜாக்கிரதையா இரும்மா” என அவளுக்கு அறிவுரை வழங்கிவிட்டுச் சென்றனர்.

 

அதே நேரத்தில்…

அவளைப் பார்ப்பதை அந்தப் பெண் கண்டுகொண்டாள் என்பதை உணர்ந்த மித்ரன், வெடுக்கென்று முகத்தைத் திருப்பிக் கொண்டு நடக்க ஆரம்பத்தான். விடுவிடுவென்று உணவகம் நோக்கி நடந்து சென்ற ரதிப்ரியாவைத் தொடர்ந்து சென்ற மித்ரன், அவள் கரம் பற்றி இழுத்து நிறுத்தினான்.

 

அவன் கரம் அவளின் மேல் பட்டதும் சூடான அவளது உள்ளம் குளிர்ந்து போனது. “ரதி, நீ கோபப்பட்டது சரி. அதுக்காக ஏன் அந்த வைர மோதிரத்தைத் தூக்கிக் கடல்ல வீசின?” என அவளைக் கண்டித்தான்.

 

தன்னை வந்து சமாதானம் செய்வான் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த ரதிப்ரியாவுக்குப் பலத்த ஏமாற்றம். சற்றுக் குளிர ஆரம்பித்திருந்தவளின் உள்ளம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியது.

 

“ஓ.. இப்ப நான் அந்த மோதிரத்தை வீசினது உங்களுக்குப் பெருசாப் போச்சு. ஒரு நல்ல தருணத்தை எங்கிருந்தோ வந்த ஒருத்தி கெடுத்தது பெருசாத் தோணலையா?” என வெடுக்கென்று சிடுசிடுத்தாள்.

 

புருவம் சுருக்கி அவளை வியந்து பார்த்தான் மித்ரன். ரதிப்ரியாவின் கோபம் பற்றி நன்கு அறிவான் மித்ரன். ஆனால் அவள் இதுவரையில் அவனிடம் கோபத்தைக் காட்டியதில்லை.

 

“உன் கோபம் நியாயமானது. ஆனா தப்பான ஆள்கிட்டே காட்டற ரதி” என்ற மித்ரனின் பேச்சில் புருவம் சுருக்கினாள்.

 

“அந்தப் பொண்ணு பண்ணின தப்புக்கு அவளை அறைஞ்சு உன் கோபத்தை வெளிப்படுத்திட்ட… நானும் என் கோபத்தை அவளைத் தண்ணில தள்ளிக் காட்டிட்டேன். அதோட முடிஞ்சது. ஆனா நீ தூக்கி வீசினது என் பொருள். தப்பு செய்யாத எனக்கு எதுக்குத் தண்டனை?” என மித்ரன் சொல்லவும், அவள் விழிகள் அதிர்ச்சியைக் காட்டின.

 

“நான் கஷ்டப்பட்டுச் சம்பாதிச்ச காசுல வாங்கின பொருள் அது. எதுக்கு என்னோட சம்மதமில்லாம அதை வீணா தூக்கிக் கடல்ல போட்ட? உனக்கும் பிரயோஜனம் இல்லாம, யாருக்கும் கிடைக்காம அது இப்போ வேஸ்டா போச்சே. ஐ டோன்ட் லைக் இட்” என மனதில் பட்டதை வெளிப்படையாகச் சொல்லி அவளிடம் குறைப்பட்டான் மித்ரன்.

 

ரதிப்ரியாவின் உள்ளம் கொந்தளித்தது. இவனுக்கு எல்லாவற்றையும் விடப் பணம் முக்கியமாகப் போய்விட்டதா என அவள் மனம் நெருடியது. மனதில் உள்ளதைத் தன்னிடம் சொல்ல வந்ததை ஒருத்தி தடுத்துவிட்டாள் என்ற கோபம் அவனுக்குச் சுத்தமாக இல்லையா?

 

அவன் எதையும் சொல்ல வரவில்லையா? அவள் தான் தேவையில்லாமல் ஏதேதோ கற்பனை செய்து கொண்டாளோ? எய்தவள் எங்கோ இருக்க அவள் அம்பாகிப் போனாளே. தேவையில்லாமல் அவள் மேல் சிடுசிடுப்பைக் கொட்டிக் கவிழ்க்கிறானே என அவனை ஆராய்ச்சியாய் நோக்கினாள்.

 

“எவ்வளவு ஆச்சுன்னு சொல்லுங்க. நான் தரேன்” என ரதிப்ரியா சொல்லவும், அவன் தன்மானம் மொத்தமும் வேங்கையாய்ச் சீறியது.

 

“என்னைப் பார்த்தா காசுக்கு வழியில்லாதவன் மாதிரியா உனக்குத் தெரியுது ரதி?” என மித்ரன் ஒரு மாதிரி கோபக் குரலில் கேட்கவும், இவனைப் பற்றித் தெரிந்தும் இப்படிப் பேசுவது சரியல்ல என ரதிப்ரியா சற்றே சாந்தமடைந்தாள்.

 

“பின்னே, எதுவுமே செய்யாத என் மேலே கோபப்பட்டா நான் என்ன செய்யறது மித்ரன்…” எனக் குழைந்த குரலில் பேசினாள்.

 

‘இவளுக்குத் தான் செய்த தப்பு புரியவேயில்லையா?’ என ஒரு நொடி அவளைக் கூர்ந்து பார்த்தவன், “எனக்கு மத்தவங்களுக்குக் கொடுத்து மட்டுமே பழக்கம். வாங்கிப் பழக்கமில்லை ரதி. அதை முதல்ல புரிஞ்சுக்கோ” என முகத்தில் அடித்ததைப் போல் உரைத்தவன் விடுவிடுவென்று நடக்க ஆரம்பித்தான்.

 

நிலைமை இப்படித் தீவிரமடையும் என அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. “ப்ச்.. மித்ரன், என்ன இது? யாரோ ஒரு பொண்ணால நம்ம ஏன் சண்டை போடணும்? நம்ம நல்ல மூடையும் கெடுத்துக்க வேண்டாம். எனக்கு ரொம்பப் பசிக்குது. வாங்க போய்ச் சாப்பிடலாம்” என அவனைச் சமாதானம் செய்தவாறே அவனைப் பின்தொடர்ந்தாள்.

 

அவள் இறங்கி வந்து பேசவும், மித்ரனும் சற்றுக் கோபத்தைத் தணித்தான். “கரெக்ட்… சாரி ரதி…” என எரிச்சலையும் கைவிட்டான்.

 

‘மனதில் உள்ளதைச் சொல்வானா, இல்லையா?’ என்ற குழப்பத்திலேயே ரதிப்ரியாவின் அன்றைய மாலை உணவு நேரம் கழிந்தது.

 

****

சற்று நேரத்தில் திவ்யதர்ஷினி இருக்குமிடம் தேடி வந்தான் சந்தோஷ். அவளைத் தன் காருக்கு அழைத்துச் சென்றவன், “சொல்லு, இந்நேரத்துக்கு எதுக்கு ‘பீச்’க்கு வந்த?” என முக்கியமான பிரச்சனைக்கு வந்தான்.

 

“அது…” எனத் தயங்கியவள், “நான் சொல்லியிருந்தேன் இல்ல… எங்க கம்பெனில எங்களுக்கு மேலே பெரிய போஸ்ட்ல இருக்கிற ஒருத்தன் என் ஃப்ரெண்ட்கிட்ட லவ் பண்ணறதா சொல்லிப் பழகியிருக்கான்.

 

பின்னர் கொஞ்ச நாளா அவளைப் பார்க்கிறப்போ எல்லாம் அத்துமீறி டீஸ் பண்ணி, ஃபோட்டோ எடுத்து அவளை ‘செக்ஸுவலா ஹராஸ்’ பண்ண ட்ரை பண்ணியிருக்கான். அதுவுமில்லாம அதை வச்சே அவளை அடிக்கடி மிரட்டவும் ஆரம்பிச்சிருக்கான்.

 

அவள் தாங்க முடியாம என்கிட்டே வந்து தற்கொலை செய்யப் போறதா அழுதா. நான் அவளுக்குத் தைரியம் சொல்லி, கம்பெனில ஹச் ஆர்ல கம்ப்ளைன் பண்ணினோம். ஆனா ஆதாரமில்லாமல் பெருசா எதுவும் பண்ண முடியலை. அதுவும் இவ லவ் பண்ணினது நிறையப் பேருக்குத் தெரியும்.

 

அவன் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாச்சு. அப்புறம் அவ வீட்ல பேசி இப்போ அவன் மேலே போலீஸ்ல கேஸ் கொடுத்திருக்காங்க” என நிறுத்தி அவன் முகத்தைப் பார்த்தாள்.

 

அவன் ஆள் பலம் மற்றும் பணப் பலம் படைத்தவன் என்பதால் தோழியின் வீட்டில் எப்போதும் சற்று பயந்து கொண்டே இருக்கின்றனர். அவர்களுக்குத் தைரியமளித்து இதுவரையில் நடத்திக் கொண்டு வந்தது இவளே.

 

அவன் அந்தத் தப்பை மட்டும் செய்யவில்லை. குடித்துவிட்டு காரை ஓட்டிக் கொண்டு போய் யாரோ ஒருவரின் மேல் மோதி அவர் இப்போது மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருப்பதாகக் கேள்விப்பட்டாள்.

 

ஆனால் அவன் குடிக்கவேயில்லை என்றும், அவன் அன்று காரை ஓட்டவேயில்லை என்றும் அவர்களின் ஓட்டுநர் தான் விபத்தை உண்டு பண்ணியதாகச் சொல்லவும் அவளுக்கு ஐயோ என்றிருந்தது.

error: Alert: Content selection is disabled!!