மலருமோ உந்தன் இதயம் 27 – 2

தேவதைகள் போல இரண்டு செல்வங்கள்; அன்பை மட்டுமே காட்டும் நித்தி; கண்ணில் தூசி விழுந்தாலும் பதறிப் போகும் கார்த்தி…இதைவிட வேறென்ன வேண்டும்” வாய்விட்டே சொல்லிக்கொண்டு வந்தவள் விசுக்கென்று எழுந்தாள்.

“நான்…நான்…இப்போ என்ன சொன்னேன்.” தன் தலையைப் பிடித்துக் கொண்டவளுக்கு பைத்தியம் பிடித்துவிடும் போலிருந்தது.

‘சரியாகத் தான் சொன்னாய் மதுரா. உன் மனம் முழுவதும் இந்த நினைவுதான். இப்போ நீ இருக்கும் நிலையில் மிகவும் திருப்தியோடு இருக்கிறாய் இல்லையா? இவ்வளவு சுயநலமானவளா நீ!’

அவள் உள்ளத்தின் ஒருபுறமோ, அவளை மிக மிக ஏளனத்தோடு துச்சமாகப் பார்த்தது!

“கடந்து போன வாழ்வின் அனர்த்தங்களை நினைத்து கலங்குகிறாயா ஏங்குகிறாயா என்றால், ‘இல்லவே இல்லை.’ என்று அடம் பிடிக்கும் நீ, திருமணம் செய்ய விருப்பம் என்றவனையும் உன்னைச் சுற்றியுள்ளவர்களின் நிம்மதியையும் சிதைத்துவிட்டு, அந்த சிறுபெண்ணின் வாழ்வும் அந்தரத்தில் நிற்க, இப்படியே காலம் முழுவதும் இருந்துவிட நினைக்கிறாயா?”

‘இல்லை இல்லை; நான் அப்படியெல்லாம் நினைக்கவில்லை.’

“க்ளினிக்கில் வேலை செய்பவர்களில் இருந்து, நித்தி, யோகம் ஆன்ட்டி குடும்பம் என்று எல்லோருமே உன்னைக் கார்த்திகேயனின் துணையாகவே பார்க்கிறார்கள். அவன் உன் காதுபட உன் குழந்தைகளை ‘அப்பா’ என்று கொஞ்ச, நீ அமைதியாக இருக்கிறாய்.”

மனசாட்சி கூரிய ஊசியால் குத்த, சற்றுமுன் தமையனும் தங்கையும் கல்யாண விடயம் பற்றிக் கதைத்துள்ளார்கள் என்பதும் அதில் நித்தியின் கருத்தும் காதுகளில் ஒலிக்க, அப்படியே இறுகிப் போய் அமர்ந்திருந்தாள் அவள்.

“இந்த கண்ணாமூச்சு ஆட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடு மதுரா. நீ அவரைத் திருமணம் செய்து கொள். அதன் பின் நித்தியின் திருமணமும் நடக்கும். உன் அம்மாவும் மகிழ்வார்.” மனசாட்சியின் தீர்மானத்தில் அதிர்ந்தவள் விசுக்கென்று எழுந்து கொண்டாள்.

‘ “உனக்கு நான் நல்ல துணையாக இருப்பேன் என்ற நம்பிக்கையும் எனக்கிருக்கு; உன் அடிமனதிற்கும் இந்த நிதர்சனம் தெரியும் ராது.” என அன்று அவர் அவ்வளவு உறுதியாக சொன்ன பின் அதையே என் மனமும் உணர்ந்ததால் தான், அவர் முகத்தையே பார்க்க முடியாது தவித்து நிற்கிறேன்.’ ஒருகணம் என்றாலும் முடிவெடுக்க முடியாது திணறியது அவளின் நைந்து போன உள்ளம்.

‘இல்லை அது முடியாது. அது எப்படி…நான் அவருக்கு கொஞ்சமும் பொருத்தம் இல்லாதவள்.’ கண்ணீரோடு கலங்கியவள், “மதுராவோ எந்த ‘ரா’,வோ உங்களுக்கு ஒருமனைவி வந்த பின்..” என்ற நித்தியின் கூற்றை மீண்டும் எண்ணிப் பார்த்தாள்.

‘நான் இங்கிருந்தால் தானே அவர் குழந்தைகளையும் என்னையும் பார்த்துக்கொண்டிருப்பார்; நான் இனி இங்கிருக்கப் போவதில்லை.’ முன்னரும் எத்தனையோ தடவகைகள் இப்படி நினைத்து நினைத்து மீண்டும் இங்கேயே தங்கிக் கொண்டவள் திரும்பவும் அந்த முடிவுக்கே வந்தாள்.

அதேவேளை, “என்னால் எப்படி?” தீனமாக முனகினாள். ‘இந்த வீட்டை…கார்த்தியை பிரிவதை..’ தொடர்ந்து நினைக்க முடியாது கலங்கினாள்.

‘என் திருமணவாழ்வில் நான் கடந்து வந்த கசப்புகள் ஒவ்வொன்றையும் கனவா என வியந்து போகும் வண்ணம், இந்த கொஞ்ச நாட்களில் என்னை பழையபடி மாற்றியது இந்த வீடுதான்; நித்தியும் கார்த்தியும் தான்.’ மனதுள் அரற்றியவள், ‘மறுமணமா? விலகிச் செல்வதா?’ துணிந்து முடிவெடுக்க முடியாது திண்டாடிப் போனாள்.

அந்நேரம் பார்த்து அவள் கைபேசி சிணுங்கியது.

“அம்மா!” அவசரமாக அழைப்பை ஏற்று, “அம்மா, எப்படிம்மா இருக்கிறீங்க?” ஆவலாக பேச்சை ஆரம்பித்தாள்.

மறுபுறம், அவ்வளவு இலகுவில் பதில் அளிக்கப்படவில்லை.

“அம்மா…அம்மாதானே!? என்னம்மா சத்தத்தைக் காணவில்லை; நான் பேசுவது கேட்கின்றதா?”

“ம்ம்ம்…கேட்குது கேட்குது.” பட்டும் படாமலும் பதில் தந்தார் கமலா.

“சொல்லுங்கம்மா; தங்கச்சிகள் எங்கே? விதுராவின் கல்யாணம் நெருங்குதே, ஆயத்தம் எல்லாம் எப்படிப் போகுது?” கலகலப்பாகப் பேசிய மகளின் நினைவில், மனதுள் மிகவும் சுணங்கினார் கமலா.

‘இத்தனை கலகலப்பாக பேசுபவள் அந்தத் தம்பியைக் கல்யாணம் செய்யச் சம்மதித்து, முறையாக அந்த வீட்டில் இருந்தால் எவராவது ஒத்தவார்த்தை பேச முடியுமா? ஏன் இந்தப்பிள்ளைக்கு இது புரியுதில்லை!’ மனதுள் அழுதவர்,

“இங்க பார் மதுரா, நான் இப்போது அந்தக் கதை கதைக்க எடுக்கவில்லை.” கோபமாகவே ஆரம்பித்தார்.

சட்டென்று முகம் சுருங்கிப் போனாள் மதுரா.

“பிள்ளைகள் கொஞ்சம் வளர்ந்ததும் இங்கு வாறேன் என்றாயே! எப்போ வரப் போகிறாய்”

மகளின் அதிர்வையும் திகைப்பையும் அறியாதவர் தொடர்ந்தார்.

“ஏன் கேட்கிறேன் என்றால் அதைப் பற்றி ஒருவார்த்தையும் நீ சொல்லவில்லையே! உங்கள் மூன்று பேரையும் நல்லபடிதான் வளர்த்ததாக நினைக்கிறேன்.” தாயின் பேச்சில், மதுராவின் முகத்தில் யோசனை பளிச்சிட்டது.

“எந்தவித உரிமையும் இல்லாத இடத்தில் வாடகைக்கு இருக்கலாம். சரி, காசே கொடுக்காதும் இருக்கலாம்; அதுவேறு கதை. ஆனால், உன் பிள்ளைகளை அந்தத் தம்பி ‘அப்பா’ என்று உரிமையாகக் கொஞ்ச, கல்யாணம் செய்யாத நீ அங்கிருப்பது அழகா மதுரா? மற்றவர், என்னை நிறுத்தி வைத்து கேட்கும் போது…எனக்கு…எனக்கு எப்படி இருந்தது தெரியுமா?” சீறினார்.

“அம்மா! என்னம்மா சொல்லுறீங்க!? யார் என்ன சொன்னது?” என்றவள் “ஊர் சொல்வதற்கெல்லாம் நாம் வாழ முடியாதும்மா.” சொல்லவும் செய்தாள்.

“ஏன்டி சொல்ல மாட்டாய்?! கல்யாணம் பேசி செய்து வைத்தவள் நான் தானே? ஒத்தவார்த்தை சொல்லாது விவாகரத்து வரை செல்லத் தெரிந்த உன்னால் இதை ஏன் சொல்ல முடியாது? உனக்கு எல்லாமே அவ்வளவு இலகுவாகப் போயிட்டு இல்லையா?”

“அம்மா!” அதிர்வாக குறுக்கிட்ட மகள் குரலை காதிலும் வாங்கவில்லை கமலா.

“உங்களுக்கு நான் தான் அப்பா என்று குழந்தைகளைக் கொஞ்சும் ஆம்பிளையை கல்யாணம் செய்து கொள்; அதற்குப் பிறகு அந்த வீட்டில் உரிமையாக, நிமிர்வாக இரு என்றால் அது உனக்குக் கசக்கிறதே! பிறகு, என்ன தேவைக்காக அங்கே இருக்கிறாய்?

உனக்குக் கல்யாணம் செய்து வைத்து, உன்னை இந்த நிலையில் நிறுத்திய பாவத்துக்கு உயிரோடு இருக்கும் வரை உன்னையும் குழந்தைகளையும் வைத்துப் பராமரிக்கிறேன். இனியும் அங்கே இருக்க வேண்டாம்; குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வந்து சேர்.

இவ்வளவு நாட்களாக நெருக்கமாகப் பழகிய சுதாவே என்னை நிற்க வைத்துக் கேள்வி கேட்டாள். ‘எந்த உரிமையில் மதுரா அங்கு இருக்கலாம்.’ என்று அவள் கேட்டதில் என்ன பிழை இருக்கு சொல்லு பார்ப்போம்.

தன் அக்கா பிள்ளைகள் வெளிநாட்டில் வளர்ந்தாலும் நம்ம பழக்கவழக்கங்களில் ஊறியவர்களாம். அப்படி இருந்தும் உன்னை அங்கு தங்க வைத்திருப்பதில் அவர் மிகுந்த கோபத்தில் இருக்கிறார்.

‘பார்க்கிறவர்கள் என்ன பேசுவார்கள் கமலா? இதை உன் மகளிடம் சொல்லிப் புரியவைக்க மாட்டாயா? உனக்கு உதவி செய்ய என் அக்கா பிள்ளைகளை அனுப்பி…பார், இப்போ எந்தளவுக்கு வந்திருக்கு!

உன் மகளுக்கு கார்த்தியில் விருப்பம் இல்லையென்றால் மிகவும் சந்தோஷம். இனியும் மதுராவுக்கு அந்த வீட்டில் என்ன வேலை. அது என்ன சத்திரமா? இப்போ அவளால் நித்தியின் கல்யாணமும் இழுபறியில் அல்லவா நிற்குது! இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறாய்?’ என்று என்னிடம் கேட்கிறாள்.

அப்படியே நாக்கைப் பிடுங்கிக்கொண்டு செத்துவிடலாம் போல இருந்திச்சு.”

படபடவென்று பொரிந்த கமலா இறுதியில் அழுதும் விட்டார். அதேவேகத்தில் டப்பென்று அலைபேசி இணைப்பும் துண்டிக்கப்பட்டு விட்டது.

தாயின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் தப்பாது குறி பார்த்து அடிக்க, குழந்தைகள் இருவரும் ஒன்றாக அருண்டு சிணுங்கியதையும் உணராது சிலையாக அமர்ந்திருந்தாள் மதுரா.

error: Alert: Content selection is disabled!!