அத்தியாயம் 13
திவாகர் அஜந்தா ஜோடியைத் தன் அறைக்கு அழைத்து, விருந்து கொடுக்கலாம் என்றுதான் யாமினி முதலில் திட்டமிட்டிருந்தாள். அதை நிரோஜனிடம் பகிர்ந்துகொண்டபோது, அவன்தான் எல்லோருமாகச் சேர்ந்து பார்ட்டி வைக்கலாம் என்று சொன்னான்.
முதலில் அவளுக்கு அதில் உடன்பாடில்லை. ஒரு நேர உணவோடு போகிற செலவைப் பெரும் செலவாக மாற்றுகிற வேலையாகத்தான் அதை நினைத்தாள். அதை அவள் சொன்னபோது அவனுக்குக் கோபம். எல்லாவற்றையும் பணத்தை வைத்துக் கணக்குப் போட்டுப் பழகாதே என்று கண்டித்தான்.
அவளுக்கும் அது புரியாமல் இல்லை. என்ன, அவளின் தற்போதைய இக்கட்டான நிலையும், பட்டறிவும் பணத்தை வைத்துத்தான் அனைத்தையும் யோசிக்க வைத்தன.
கடைசியில் அவள் முன்னேயே நண்பர்களுக்கு அழைத்து, திவாகர் வந்திருப்பதை நிரோஜன் சொன்ன கணமே, “டேய்! அப்ப ஒரு பார்ட்டிய போடுவம்!” என்று ஆரப்பரித்திருந்தனர் அவன் நண்பர்கள்.
அப்போதும் செலவை எண்ணி மிகவுமே தயங்கினாள் அவள். எத்தனை பேர் வருவார்கள், அவர்களுக்கான செலவு, அலங்கரிப்புச் செலவு என்று அண்ணளவாகக் கணக்குப் போட்டுப் பார்த்தபோது வந்த தொகை மிகப் பெரிது இல்லை என்றாலும் பெரிதுதான்.
அப்போதும் நிரோஜன்தான் எல்லோரிடமும் பகிர்ந்து வாங்கலாம் என்று சொல்லி, அந்தப் பொறுப்பை அவன் எடுத்துக்கொண்டிருந்தான். முதலில் அவள் நம்பவில்லை. எந்தக் காலத்தில் அவன் அப்படிச் செய்திருக்கிறான்? கடைசியில் அவன் அதட்டி உருட்டிய பிறகுதான் சம்மதித்தாள்.
அதன் பிறகு பலமுறை எல்லோரும் பணம் தந்துவிட்டார்களா என்று கேட்டிருக்கிறாள். அப்போதெல்லாம் ஆம் என்றுதான் சொன்னான். நவீன், அசோகனைத் தவிர்த்து மற்ற யார் மீதும் அவளுக்கு நம்பிக்கை இல்லை. அதையே கேட்கிறாள் என்று அவன் கோபப்பட்ட பிறகுதான் அமைதியானாள்.
மகேஷ் உளறியது கேட்டு, அதுவும் வாங்கிய பணத்தைத் திரும்பியே கொடுக்காத பரம்பரை தன் பரம்பரை என்று சொன்னதுதான் அவள் உச்சிக்கு அடித்திருந்தது. அதுதான் நிரோஜனின் வங்கிக்கணக்கை ஆராய்ந்தாள்.
அவள் நினைத்ததுபோல் அவள், நவீன், அசோகன் தவிர்த்து வேறு யாரும் அவனுக்குப் பணம் கொடுக்கவில்லை. அதை விடவும் அவள் கவனத்தில் பதிந்தது, கடந்த இரண்டு மாதங்களாக கழிந்துகொண்டிருந்த வங்கிக்கடன் தொகை.
அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. வங்கியில் லோன் ஏதும் எடுத்தானா? அவளுக்குத் தெரியாதே. முதல் ஏன் எடுத்தான்? அப்படி என்ன தேவை அவனுக்கு? இந்தக் கேள்விகள் கொடுத்த மண்டைக் குடைச்சலில் அவன் வங்கிக் கணக்கைக் கீழே கீழே தட்டிக்கொண்டு போனாள்.
அவள் ஊருக்குப் போன அந்த நாள்களில் மகேஷிடமிருந்து எந்தத் தொகையும் அவனுக்கு வந்திருக்கவில்லை. அதற்கு மாறாக இவளுக்கு அவன் தந்த அதே தொகை, காவ்யாவின் பெயரிலிருந்து இவனுக்கு வந்திருந்தது.
ஆக பொய் சொன்னது மகேஷ் இல்லை. அவன்! அத்தனையையும் மறைத்திருக்கிறான்.
கண்மண் தெரியாத ஆத்திரம். அந்த நொடியே அவன் சட்டையைப் பிடித்துக் கேட்க வேண்டும் போலொரு ஆவேசம். எல்லோர் முன்னும் எதையும் கேட்டு, இருவர் மானமும் கப்பல் ஏற வேண்டாம் என்று வாயை இறுக்கி மூடிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
அவன் தன்னையே அடிக்கடி திரும்பி திரும்பிப் பார்ப்பது அவள் பார்வை வட்டத்தில் விழாமல் இல்லை. அதுவும் சேர்ந்து அவளுக்கு ஆத்திரத்தை உண்டாக்கிற்று.
“என்ன யாமினி?” அவள் முக மாற்றத்தைக் கவனித்துவிட்டு இன்னொரு பெண்ணுடன் வந்து விசாரித்தாள் திலினி.
“தலை இடிக்குது. அதான்.” அவர்களைப் பாராமல் முணுமுணுத்தாள்.
அது உண்மை இல்லை. சற்று முன் வரை இருவர் முகங்களும் எப்படி இருந்தன என்று திலினிக்குத் தெரியுமே. நிரோஜனைத் தேடிப்போய் அவள் ஒரு மாதிரி இருப்பதைச் சொன்னாள்.
அவனும் அவளைக் கவனித்துக்கொண்டுதானே இருக்கிறான். “வாயை வச்சுக்கொண்டு சும்மா இருக்கவே மாட்டியா நீ?” என்று மகேஷிடம் சீறிவிட்டு யாமினியிடம் போனான் நிரோஜன்.
மகேசுக்குத் தான் செய்துவைத்திருக்கும் காரியம் தெரியவில்லை. “சிப்ஸ் எடுத்துச் சாப்பிட்டது ஒரு பிழையா மச்சான்?” என்றான் அருகில் அமர்ந்திருந்த மித்ரனிடம்.
அவளருகில் வந்து நின்ற நிரோஜன் பேசவே தயங்கினான். அந்தளவில் அவள் முகம் கடுத்துச் சிவந்து கொதித்துக்கொண்டிருந்தது. “யமி!” என்றான் மெல்ல.
அவன் குரலைக் கேட்ட கணமே அவளுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. அவள் இருக்கும் மனநிலைக்கு அவனிடம் நிதானமாகக் கதைக்க முடியும் என்கிற நம்பிக்கை அவளுக்குக் கொஞ்சமும் இல்லை. அந்தளவில் கொந்தளித்துக்கொண்டிருந்தாள். வாயைத் திறந்தாலே கத்திவிடுவோமோ என்று பயந்து, தன் கைப்பையை எடுத்துக்கொண்டு விறுவிறுவென்று அங்கிருந்து நடந்தாள்.
பின்னாலேயே ஓடி வந்தான் அவன். அவனைத் திரும்பியும் பாராது, விடுவிடுவென்று படிகளில் இறங்கி, வெளியே செல்ல முயன்றாள் அவள். அதற்கு விடாமல், தன்னுடைய அலுவலக அறைக்கு இழுத்துக்கொண்டு போனான். அவள் விடுபட முயன்றாள். அதற்கு விடாமல் அறைக்குள் வந்ததும் முதல் வேலையாகக் கதவைச் சாற்றினான் அவன்.
அப்போதும் அவள் கதவைத் திறந்துகொண்டு போக முயன்றாள். அவன் விடவில்லை. அவளைத் தடுத்துப் பிடிக்க, “விடுங்க எண்டு சொல்லுறது விளங்குதா இல்லையா உங்களுக்கு? விடுங்க!” என்று சீறினாள்.
கண் முகமெல்லாம் சிவந்து, பத்திரகாளியாக நின்றவளைக் கண்டு, “அம்மாடி! என்ன கோவம் வருது உனக்கு?” என்று இலகுவாகவே பேசி, அவளைச் சமாதானப்படுத்த முயன்றான் அவன்.
செய்வதை எல்லாம் செய்துவிட்டு நடிக்கிறானா என்று அவளுக்கு இன்னும் முகம் கடுத்தது. இன்னும் பிடிவாதத்துடன் அவன் கைகளைத் தட்டி விட்டுவிட்டு அங்கிருந்து போக முயன்றாள்
“யமி! இப்பிடி ஒண்டும் சொல்லாமக் கோவப்பட்டா என்ன அர்த்தம்? என்ன எண்டு சொல்லு.” தன் தவறு தெரிந்திருந்ததாலேயே நிதானமாக அவளை அணுக முயன்றான்.
அவள் வாயைத் திறப்பதாக இல்லை. ஒரு முசுட்டுப் பிடிவாதத்தோடு அவனிடமிருந்து விடுபடுவதிலேயே குறியாக இருந்தாள்.
“சரி, அவங்கள் காசு தரேல்லத்தான். அதுக்கெண்டு தாராமையே இருப்பாங்களா? தாறன் எண்டு சொல்லியி…” என்று அவன் சமாளிக்க முயல, “இதுவரைக்கும் நீங்க சொன்ன பொய்களே போதும் நிரோ. இப்பிடி பொய்க்கு மேல போய் சொல்லி உங்களை வெறுக்க வச்சிடாதீங்க!” என்றதும் அவனுக்கு முகம் மாறிப்போயிற்று.
“கதைக்கிறத யோசிச்சுக் கதை யமி.” என்றான் எச்சரிக்கும் குரலில்.
“என்ன யோசிச்சுக் கதைக்கோணும் உங்களுக்கு? எத்தினை தரம் கேட்டனான், தந்திட்டினமா தந்திட்டினமா எண்டு. அப்ப எல்லாம் வாய் கூசாம ஓம் எண்டு பொய் சொன்னவருக்கு இப்ப கோவம் வருதா?” செய்வதையும் செய்துவிட்டுக் கோபம் வேறு படுவானா என்று பற்றிக்கொண்டு வந்தது அவளுக்கு.
“ஏய் என்னடி பொய் பொய் எண்டுறாய். எல்லாருக்கும் வேலைல அவ்வளவு டென்சன். எங்கயாவது டூர் போறதுக்கு டைமும் இல்ல. சோ, கிடைச்ச சான்ஸ பயன்படுத்தி எல்லாரும் சந்தோசமா இருக்கலாம் எண்டு நினைச்சன். அவங்கள் காசு தரேல்ல எண்டு சொன்னா நீ பார்ட்டியே வேண்டாம் எண்டு சொல்லுவாய். அதான் சொல்லேல. அதுக்கு வாய்க்கு வந்ததை எல்லாம் கதைப்பியா நீ?” என்று இப்போது அவனும் ஆத்திரப்பட்டான்.
“இப்ப என்ன நீங்க மறைச்சதுக்கு நான் காரணம் எண்டு சொல்லுறீங்களா?”
“ஏன் சொல்லாம விட்டனான் எண்டுறதுக்கு விளக்கம் சொல்லுறன்.”
“ஓ! விளக்கம் சொல்லுறீங்களோ?” என்று ஒரு மாதிரியாகக் கேட்டுவிட்டு, “மகேஷ் அண்ணா வாங்கின கடனைத் திருப்பித் தந்திட்டாரா? எனக்கு நீங்க தந்த அதே தொகைய காவ்யா உங்களுக்கு அனுப்பியிருக்கிறாள். அது என்ன கணக்கு? ரெண்டு மாசமா ஏதோ லோன் ஓடுதே, அது ஏன் எடுத்தனீங்க? இதையெல்லாம் ஏன் எனக்குச் சொல்லேல்ல. எத்தின தரம் கேட்டனான், மகேஷ் அண்ணா கடன் காசு தந்திட்டாரா எண்டு. அப்ப எல்லாம் என்ன சொன்னனீங்க?” என்று அடுக்கடுக்காய் அவள் கேட்ட கேள்விகளில் அவன் அதிர்ந்துபோனான்.
அப்போதுதான் அவள் சமீபத்திய வங்கி வரவு செலவை மாத்திரமல்லாமல் மொத்தமாக அலசியிருக்கிறாள் என்பது பிடிபட்டது. தான் மொத்தமாக மாட்டிக்கொண்டது புரிந்து, மானசீகமாய் நெற்றியில் அறைந்துகொண்டவனால் வாயைத் திறக்கவே முடியவில்லை.

