அத்தியாயம் – 4
வீட்டுக்குச் சென்றால் மித்ரன் எப்போதும் கார் நிறுத்துமிடத்தில் வேறொரு கார் நின்று கொண்டிருந்தது. யார் அங்கே வேண்டுமென்றே வந்து நிறுத்தியிருப்பார்கள் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும்.
ஆகவே அந்தக் காரைப் பார்த்ததும் நீரில் முங்கிய பந்து போல் அமுங்கியிருந்த எரிச்சல் மீண்டும் மெல்ல எட்டிப் பார்த்தது.
‘இருக்கிற இம்சை போதாதுன்னு இவன் வேற வந்துட்டான்’ எனச் சத்தமாக முணுமுணுத்தவாறே காரைத் தள்ளி நிறுத்திவிட்டு வீட்டினுள் நுழைய, வத்சனின் குரல் அவனை இனிதே வரவேற்றது.
“வாங்க வாங்க…” என வரவேற்பறையில் அமர்ந்து தன் அன்னையிடம் வளவளத்துக் கொண்டிருந்தவனைக் கண்டுகொள்ளாமல் தன் அறையை நோக்கிச் செல்வதற்கு மாடிப்படிகளில் ஏற ஆரம்பித்தான் மித்ரன்.
“என்ன நண்பா, என்னைப் பாசத்துல வந்து கட்டிப்பிடிப்பேன்னு பாத்தா இப்படிப் பார்க்காத மாதிரி போற” என்ற நக்கலான பேச்சு மித்ரனின் செவிகளைத் தீண்டியது. படிகளில் ஏறி பாதி தூரம் சென்றவன் நின்று திரும்பி கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த வத்சனை முறைத்துப் பார்த்தான்.
“என்ன இது, லுக் பக்னு இருக்குது கொஞ்சம் கூட பாசமா இல்லையே?” எனச் சலித்துக் கொண்ட வத்சன், “உன்னைப் பார்த்து ரொம்ப நாளாச்சேன்னு ஆசையா ஓடி வந்தா இப்படியா வரவேற்ப? கொஞ்சம் கூட என் மேல லவ், அக்கறை எதுவுமே இல்லையா?” என நாடக வசனம் போல் இழுத்து இழுத்துப் பேச,
“அம்மா எனக்கு ரொம்ப டயர்டா இருக்கும்மா. நான் வெட்டியா டைம் வேஸ்ட் பண்ண விரும்பலை. டின்னர் வெளில சாப்பிட்டுட்டேன். நீங்களும் சாப்பிட்டுப் படுங்க” என அக்கறையுடன் தன் அன்னையைப் பார்த்துச் சைகையால் சொன்னான் மித்ரன்.
மீண்டும் பார்வையை வத்சன் மேல் பதித்து மீட்டவன், “தேவையில்லாம ரொம்ப நேரம் முழிச்சு உங்க உடம்பைக் கெடுத்துக்காதீங்க அம்மா” என அன்னையிடம் சைகையால் சொல்லிவிட்டு, மீண்டும் படிகளில் ஏற ஆரம்பித்தான் மித்ரன்.
“ஆடு உறவு குட்டி மட்டும் பகையா? நல்லா இருக்குடா நீங்க செய்யறதும் உங்க நியாயமும். நல்லது நினைச்ச எனக்கு இதுவும் தேவை இன்னமும் தேவை” என வத்சன் புலம்பியவாறே மித்ரனை மேலும் வம்புக்கிழுக்க, மித்ரன் கண்டுகொள்ளாமல் மேலே ஏறினான்.
“என்ன சித்தி இது? உங்ககிட்ட மட்டும் ஒன்னு சேர்ந்துட்டான். என்னை மட்டும் இப்படி எதிரியா பாக்குறானே” என சைகையால் பேசி வத்சன் சலித்துக் கொண்டான்.
மேலே சென்றதும் நின்ற மித்ரன், “இனிமேல் காரைக் கொண்டு வந்து முன்னாடி நிறுத்தி வைக்காத. அடுத்த தடவை அப்படி நிறுத்தின கொஞ்சமும் யோசிக்க மாட்டேன். அடிச்சுத் தூக்கிடுவேன்” என எச்சரித்துவிட்டுத் திரும்பினான்.
“ஆஹ்.. பிளீஸ் அப்படியெல்லாம் பண்ணிடாத…” எனப் படாரென்று இருக்கையில் இருந்து எழுந்த வத்சன், “ எனக்கு ரொம்பப் பயமா இருக்கு” என நடுங்குவதைப் போல் நடித்துக் காட்டினான்.
“போடா டேய்… பெரிய ஹீரோ நீ. வந்துட்டான் மிரட்ட. அப்படியே பயந்துட்டேன் பாரு. நீ சொன்ன மாதிரி மட்டும் இடிச்சி வச்ச, அதைச் சரி செய்யறதுக்கு உன்கிட்ட தான் பில் அனுப்பி வைப்பேன். ஜாக்கிரதை” என எச்சரித்தான்.
தொடர்ந்து, “நான் சொல்றதைக் கொஞ்சம் கேட்டுட்டு போ. வெளிய பளபளன்னு ஒரு கார் பார்த்த இல்ல. புது மாடல் அது. அடுத்த வாரம் என் ஷோரூம் ஓப்பன் பண்றேன். அப்போ நீ அந்தக் காருல கடைக்கு முன்னாடி வந்து இறங்கற” என வத்சன் சொல்ல,
“என்னை வச்சு ஃப்ரீயா விளம்பரம் தேடிக்கப் பார்க்கிற?” என மித்ரன் எகத்தாளமாகப் பேசினான்.
“ஆமா இவன் பெரிய ஷாருக்கான். காரு கொடுத்து விளம்பரம் பண்ண. பாப்கார்ன் ரேஞ்சுல இருந்துட்டு பேசறான். குடும்பத்து ஆளுங்களே வேற கார்ல வந்து என் ஷோரூம்ல இறங்கினா நல்லாவா இருக்கும்?” என மித்ரனிடம் குறைபட்டுக் கொண்டான்.
வெகுநாட்களாக வத்சனுக்கு பி. எம். டபிள்யூ கார் ஷோரூம் ஒன்றைத் துவங்க வேண்டுமென்ற ஆசை. அது இப்போது நிறைவேறப் போகிறது. அதன் திறப்புவிழாவுக்கு அவன் சித்தி மற்றும் சித்தியின் மகன் மித்ரனையும் அழைக்க வந்திருந்தான்.
“மறக்காம அம்மாவையும் கூட்டிட்டு வா” என அவனுக்குத் திட்டமிட்டுக் கொடுத்தான் வத்சன்.
மித்ரன் அப்பொழுதும் எதுவும் சொல்லாமல் மேலே ஏறிப்போக, “இவனை நம்ப முடியாது சித்தி. எதுக்கும் நீங்க ரெடியா இருங்க. நானே வந்து உங்களைக் கூட்டிட்டுப் போறேன், இல்லை, கார் அனுப்புறேன்” என மேலேறிச் செல்பவனை முறைத்துப் பார்த்தவாறு தன் சித்தியிடம் சைகையில் சொன்னான்.
அறைக்குச் சென்ற மித்ரன் கசகசவென்று இருக்கிறதென்று குளிக்க நினைத்தான். அப்போது எதிரே அறையில் இருந்த கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்த்தான். சட்டையின் இடது மார்பு பகுதியில், பாக்கெட் இருக்கும் இடத்தில் ஏதோ சிவப்பாகப் பூசியிருந்தது.
குனிந்து அந்தக் கறையைப் பார்த்தவன், அதை வலது கை ஆட்காட்டி விரலால் மெதுவாக தடவினான். பின்னர் ஆட்காட்டி விரலை எடுத்து மூக்கின் மேல் வைத்து வாசம் பிடிக்க,
கடலோரத்தில் வந்து மோதிய பெண்ணின் வாசனை மூச்சுக் குழாய்களில் இறங்கி அவன் நுரையீரல் வரையிலுமே பயணித்தது.
முகத்தைச் சுளித்தவாறே அதையே முறைத்துப் பார்த்தவன் சட்டையைக் கழற்றி, மீண்டும் அதை முகர்ந்து பார்த்தான். ஏனோ உள்ளுக்குள் ஒரு வித அமைதி பரவியது. அந்தப் பெண்ணின் வாசத்தின் வசமதில் சிக்கிக் கொண்டான்.
அது வரையில் கட்டுக்கடங்காமல் தெறித்து ஓடிய எண்ணங்கள் ஒரே புள்ளியில் வந்து இணைந்து நின்றன. எதைப் பற்றிய சிந்தனையும் இல்லாமல் அப்படியே அவன் சட்டையை முகத்தின் மேல் வைத்தவாறே நின்று கொண்டிருந்தான்.
அப்போது யாரோ கதவைத் தட்டிவிட்டு உடனே கதவைத் திறக்க, மித்ரன் நின்றிருந்த கோலம் வத்சனின் கண்களில் பட்டது.
“ஆனாலும் இந்த மயக்கம் ஆகாது நெஞ்சே உனக்கு…” என வத்சன் கிண்டலாகப் பாடிவிட்டு, “என்ன சித்தி, இவன் அப்படியே மெய்மறந்து நின்னுட்டான். ஒருவேளை யாரையாவது பார்த்து மயங்கிப் போய் நிக்கிறானோ? எதுக்கும் விசாரிச்சு வைங்க” எனப் பரிகாசமாகப் பேசினான்.
“உனக்கு இப்ப என்ன வேணும்?” எனக் கேட்டவாறே முகத்தில் எரிச்சலை வரவழைத்துக் கொண்ட மித்ரன் கையில் இருந்த சட்டையை அழுக்கு கூடையில் தூக்கிப் போட்டான்.
அதாவது நீ நினைப்பது போலெல்லாம் நான் ஒன்றும் மயங்கி கிடக்கவில்லை என்று சொல்லாமல் சொல்கிறானாம்.
அந்த முகமறியா பெண்ணின் மேலிருந்த கோபமா, அல்லது, அவளை நினைத்துக் கொண்டிருந்த தனிமையையும் இனிமையையும் கெடுத்துவிட்டான் என்ற வத்சனின் மேலிருந்த எரிச்சலா எனத் தெரியவில்லை. மொத்த கோபத்தின் வடிகாலாக வத்சன் மாறினான்.
“எதுக்குடா என் மேல இப்படிக் கோவப்படுற? இதே நான் அத்தை பொண்ணா இருந்திருந்தா, காதல் அது இதுன்னு சொல்லி, குடும்பத்தை ஒண்ணு சேர்க்க வந்தேன்னு எமோஷனலா யோசிச்சிருப்ப. உனக்கு நல்ல மனசு, என்னை லவ் பண்ணி போராடி, சண்டை போட்டுக் குடும்பத்தை ஒண்ணு சேர்த்து ஹீரோவாகியிருப்ப” என வத்சன் ஏற்ற இறக்கங்களுடன் சொல்ல,
விடுவிடுவென்று வத்சனை நெருங்கி அவனைத் தரதரவேன்று இழுத்துக் கொண்டு போய் வெளியில் விட்டான் மித்ரன்.
“நான் என்னடா தப்பு பண்ணினேன்?” என வத்சன் மீண்டும் இறங்கி வந்து அவனிடம் பேச, “நீ நட்புங்கிற பேர்ல என்னை ஏமாத்திட்ட. உன்னை ஒருபோதும் நான் மன்னிக்க மாட்டேன். நம்பிக்கைத் துரோகி” என எரிச்சலுடன் சொன்னான்.
“தேய்ஞ்சு போன ரெகார்ட் மாதிரி அதையே சொல்லிட்டு இருக்காதா. பெரிய இவன், போடா. என்னை இப்படியெல்லாம் படுத்தி எடுக்கிறதுக்கு யாராவது உன்னை நல்லா வச்சு செய்வாங்க பாரு. இது வத்சன் விடும் சாபம். அப்போ புரியும் என் நிலைமை” என வத்சன் முறைத்தான்.

