அவர்களின் ஒருவயதுக்குப் பிறகு பக்கத்தில் இருக்கின்ற ‘டேகேரி’ல் விட்டுவிட்டு, ‘பிறைமறி ஸ்கூல் டீச்சிங் கோர்ஸ்’ செய்யத் தொடங்கினேன்; அதனால் பாஷையும் நன்றாக வந்தது.
பிள்ளைகள் நான்கு வயதில் பள்ளி போகத் தொடங்க, நானும் அவர்களோடு அதே பள்ளியில் வேலை செய்யலாம் என்று எண்ணித்தான் அதற்கு படிக்க ஆரம்பித்தேன்.” என்று கூறி நிமிர்வாக முறுவலித்த தோழியை ஆச்சரியமாகப் பார்த்தாள் உஷா.
அவளறிந்த அவள் தோழி மது மிகவும் மென்மையானவள்! அதிர்ந்து பேசத் தெரியாதவள்! எதிர்த்து நிற்கத் தெரியாதவள்; ஏன் வீண் பிரச்சனை என்று ஒதுங்கி நடப்பவள்! அளவற்ற அன்பை இன்முகமாக வழங்கத் தெரிந்த அற்புத மலரவள்!
இன்றோ!? அவள் வாழ்வில் நடந்ததை முழுமையாகத் தெரிந்து கொண்ட பின், அவளைப் பார்கையில் பெருமை கொள்ளாது இருக்க முடியவில்லை.
‘அவள் வாழ்வில் சந்தித்தவை, வாங்கிக் கொண்ட அடிகள் அவளைக் காய்ந்த சருக்காக்கிடவில்லையே! உருக்குலைத்து இருந்த இடம் தெரியாது அழித்திடவில்லையே! நிலையாக நிமிர்ந்து நின்று வாழ்வை எதிர்நோக்கும் திடத்தைப் பெற்று நிற்கிறாளே!’ என, நினைத்த உஷாவின் எண்ணத்தில் ஒரு பெரிய கேள்வி உருவானது.
‘அப்போ, இவள் வாழ்விற்கு இது மட்டும் போதுமா?
இன்னமும் இருபத்தியேழு வயதே நிரம்பாத என் செல்லத் தோழி, மிகுதி நாட்கள் அனைத்தையும் எதிர்நோக்கும் சவால்களுக்கு முகம் கொடுப்பது எப்படி என்று சிந்தித்துச் செயல்படுவதிலேயே கழிக்க வேண்டுமா?’ எண்ணியவாறே, தோழியை ஆராய்ச்சியாக உற்றுப் பார்த்தாள் உஷா.
‘தனிமையே இவள் இணைபிரியாச் சொத்தாக வேண்டுமா? அத்தனிமையைப் போக்குவதற்கு குழந்தைகள் மட்டும் போதுமா? அவர்கள் வளர்ந்து தந்தை என்கின்ற பேச்சை எடுத்தால், இவள் பதில் என்னவாக இருக்கும்?’ தன் மனதின் வினாவுக்கு, தோழியிடமிருந்து விடைகான விரும்பினாள் உஷா.
“அதுசரிடி, அப்போ நீ கார்த்தியை மறந்து விட்டாயா?” திடுமென்று கேட்ட உஷாவை முறைத்தாள் மதுரா. அடுத்த நொடி, “நான் எப்போ அவரை நினைத்தேன்; மறக்க!” என்றவளின் விழிகள் அளவில்லா நேசத்தில் மின்னியதை மறைக்க முயலவில்லை அவள்.
“அதுசரி, மறந்தால் தானே நினைக்க வேண்டும் என்கிறாயா மது!? விஷம விழிகளோடு ஏட்டிக்குப் போட்டியாக வினவினாள் உஷா.
“இல்லடி; அப்படி எல்லாம் இல்லை. அந்தக் கதையை விடுடி.” சட்டென்று சமாளிப்பாகச் சொன்னாலும், தோழியின் குறும்புப் பார்வையைத் தவிர்த்தன மதுராவின் விழிகள்.
“ஆரணி, ஆரபி அப்பா இல்லாத குழந்தைகள் என்று ஒருகணமும் நான் நினைத்ததில்லை உஷா.” முகம் கனியத் தொடர்ந்தவளை ஆச்சரியமாக நோக்கினாள் அவளின் தோழி.
“அப்படி நினைக்க என்னால் முடியாதடி; காரணம், குழந்தைகளின் அப்பா என்றால் என் நினைவில்..” சிறிது நேரம் அங்கு பலத்த மௌனம் நிலவியது.
“என் குழந்தைகளின் தந்தை அவர்களோடு இல்லையென்றாலும் எங்கோ அந்த உறவு இருக்கென்று மனதில் ஆழமாகப் படிந்துவிட்டதடி. நீங்க அப்பா இல்லாதவர்கள் என்ற வார்த்தையை என் வாய் என்றைக்குமே குழந்தைகளிடம் சொல்லாது. அதேநேரம், இவர்தான் உங்க அப்பா என்றும் கார்த்தியை என்னால் காட்ட முடியாது. அவர்களின் அப்பா கார்த்தி எங்கிருந்தாலும் குடும்பம் குழந்தைகள் என்று நலமாக இருக்க வேண்டும்.” சொன்னவள், விழிகளில் ததும்பிய கண்ணீரை மறந்து முறுவலித்தாள்.
“ஏன்டி, அப்போ அவரை மனதில் வைத்துக்கொண்டு காலம் முழுதும் இப்படியே வாழ முடியும் என்று நினைத்துக் கொண்டாயா?”
“ப்ளீஸ்டி உஷா, அத்தூரமிருந்து நேற்றுத்தான் வந்தீங்க. அது போதாதென்று என் கதை முழுவதும் சொல்லி நன்றாக அறுத்து விட்டேன். இனி, அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விடு. ஒத்த வார்த்தை பேசாதே!” தீர்மானமாகச் சொல்லி, “இன்றைக்கு இரவைக்கு எல்லோருக்கும் இங்கு சமைக்கிறேன்; ஆன்ட்டியிடம் காலையில் சொல்லிட்டேன்; எல்லோருமாக சாப்பிட வாங்க.” என்றபடி எழுந்தாள்.
“உனக்கேன்டி கஷ்டம், நீ அங்கு வா.” என்ற உஷாவிடம், “பிள்ளைகள் நித்திரையால் எழுந்ததும் உன் மகனையும் மகளையும் காண ஓடி வந்து விடுவார்கள். அவர்கள் இருவரையும் இவர்களுக்கு நன்றாக பிடித்துப் போயிட்டுது.” அழகாகப் பேச்சைமாற்றிய தோழியை யோசனையாகப் பார்த்தவாறே எழுந்து விடைபெற்றாள் உஷா.
அவள் அப்பால் செல்ல உள்ளே நுழைந்த மதுரா, அந்த நடுத்தர அறையின் நடுவில் கிடந்த இரட்டைக் கட்டிலில் ஆழ்ந்த சயனத்தில் கிடந்த தன் செல்வங்களைப் பார்த்துக்கொண்டே சிறிதுநேரம் நின்றாள்.
பல நாட்களின்பின், கடந்து போனவற்றை எல்லாம் மனதுள் ஒன்றாகக் கூட்டி, விரும்பியும் விரும்பாமலும் புரட்டிப் புரட்டிப் பார்த்து, அந்நிமிடங்களை உணர்ந்து, ஒவ்வொரு கணத்திலும் வாழ்ந்து, தோழியிடம் பகிர்ந்து கொண்டதில் மிகுந்த அயர்வாக இருந்தாலும், கடந்து சென்ற துன்பங்களும் அவமானங்களும் அதன் நிறமற்றுப் போயிருக்க, அதன் கருமை நிறத்தை அடித்து அழித்த அற்புதநினைவுகள் அவளை தம்முள் இழுத்துக் கொள்ள, அப்படியே கட்டிலில் பதுமையென அமர்ந்து கொண்டாள்.
மனம் இட்ட தடையையும் மீறி நகர்ந்த அவள் கரம் தன் தலையணைக்குக் கீழிருந்து புகைப்பட ஆல்பத்தை எடுத்துக் கொண்டது.
இந்த இரு வருடங்களும் தனிமையைச் சற்றும் அணுகவிடாது திடத்தையும் நிமிர்வையும் தந்து, கணமும் விலகாதிருந்து காத்த ஜீவன் அச்சிறு அல்பத்தினுள் இருக்கே!
விரைந்து திறந்தவளின் விழிகள் அதில் மேய, தம்மை மறந்த உதடுகள் வார்த்தைகளை உதிர்த்தன!
“ ‘என் முதல் திருமணமும் அந்த உறவும் எனக்கு தீமையை மட்டுமே செய்திருந்தாலும் என்மனதில் இருந்து என்றைக்கும் நீங்காது. அந்த இடத்தில் இன்னொரு உறவை வைத்துப் பார்க்க முடியவே முடியாது. அதனால், நீங்க உங்க வாழ்வைப் பார்த்துக் கொள்ளுங்க. என் வாழ்வை, என் குழந்தைகளை எனக்குப் பார்த்துக் கொள்ளத் தெரியும். யாரின் தியாகமும் பரிதாபமும் எனக்குத் தேவைப்படாது.’ கடினமாக, கடிதம் எழுதி வைத்துவிட்டு அன்று புறப்பட்டு வந்தனே!
என்னில் கோபம் கொண்டீர்களா கார்த்தி? நன்றி கெட்டவள் என்றும் எண்ணி இருப்பீங்க தானே! எனக்காக பார்த்துப் பார்த்து எவ்வளவு செய்தீங்க! அந்த நன்றியை மறந்து நேரில் சொல்லாது, நீங்க வீட்டில் இல்லாத சமயமாகப் புறப்பட்டு வந்தேனே!” என்றவளின் மென்விரல்கள் புகைப்படத்தில் இருந்தவன் உருவை உணர்ந்து வருடின.
“எப்படிங்க உங்க முகம் பார்த்து இந்த வார்த்தைகளைச் சொல்வேன்? அதுவும் அத்தனையும் பொய் என்று தீர்மானமாக அறிந்த பின்னரும்!” கசந்த முறுவலும் கலக்கமும் போட்டி போட்டுக்கொண்டு வெளியேறப் பிதற்றினாள்.
ஏனோ, அக்கணம், தன்னுள் உறைந்த நிமிர்வையும் துணிவையும் தொலைத்து அவன் அன்புக்குள் ஒன்றிட ஏங்கும் பதுமையாக விம்மினாள் மதுரா.
‘அன்று உங்க அன்பு எனக்குப் புரிந்தாலும் அது உருவாகக் காரணமே என் அவல நிலை தானே? அந்த நிதர்சனம் புரிந்த பின்னாலும் என்னால் எப்படி உங்கள் அன்பை ஏற்க முடியும்? இந்த இரண்டுவருடங்களில், உங்களைப் பற்றி அறியத் துடிக்கும் மனதுக்கு இரும்புச்சங்கிலி பிணைத்து வைத்திருக்கிறேன் கார்த்தி. நீங்க நன்றாக இருப்பீர்கள் என்று நிச்சயம் தெரியும். நீங்களும் நித்தியும் அமோகமாக வாழ்வதை என்றாவது கண்குளிரக் காண்பேன்.’ அரற்றியவாறே பொலபொலவென்று கண்ணீர் உகுத்தாள்.
“ம்மா… ஆரணி எம்பிட்டாள். பசிக்குது ஃப்ருட் தாங்க?” மகளின் மழலையில் சட்டென்று சுதாகரித்தவள், விழிகளின் ஈரத்தை கரம் கொண்டு துடைக்க முன், பஞ்சு மூட்டையாக தொப்பென்று மடியில் விழுந்தாள் அவள் செல்வம்.
குழந்தை பார்க்கா வண்ணம் விழிகளை அழுந்தத் துடைத்துவிட்டு “ஆரணி குட்டி எழும்பியாச்சா? வாங்க வாங்க, அதோ, ஆரபியும் எழும்பீட்டாள்; பழம் சாப்பிட்டுவிட்டு விளையாடுங்க; அம்மா இரவுச் சாப்பாடு செய்ய வேண்டும்.” மனதை அடக்கிவிட்டு, குழந்தைகளோடு ஒன்றினாள் மதுரா.

