குழந்தைகள் உறங்கியதைப் பார்த்துவிட்டு மெல்ல எழுந்து வெளியே வந்தாள் மதுரா.
ஹாலில் மெல்லிய சத்தத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த தொலைக்காட்சிக்கு, தன்னை யாருமே ஒரு பொருட்டாகப் பார்க்கவில்லை என்பதில் சிறு கவலையும் இருக்கவில்லை போலும்!
அங்கருந்த சோஃபாவில் சாய்ந்தவாறு அமர்ந்திருந்தான் கார்த்திகேயன்.
அவன் தலை சோஃபாவின் தயவை நாடியிருக்க, வலக்கரம் நெற்றிக்கு குறுக்காக விழுந்து கிடந்தது. கால்களிரண்டையும் நீட்டியவாறு அவன் இருந்த கோலத்தில் , ‘நித்திரையோ!’ எனும் சந்தேகம் யாருக்குமே தோன்றும் என்றாலும், அவன் இதயம் இமை மூட விரும்பாது விரிந்தே கிடந்தது.
உணவுவேளையோடு மிகச் சகஜமாகப் பொருந்திவிட்டவள், சற்று முன் தன் குரலின் கடினத்தில் அதிர்ந்ததையே மீண்டும் மீண்டும் எண்ணியது அவனுள்ளம்!
தோழியின் ஏற்பாட்டில் வந்திருந்தவள் என்னதான் சகஜமாகப் பேசியிருந்தாலும், ‘தேவையில்லாது பழைய கதைகளைக் கதைத்துப் பேசி அவளைக் கஷ்டப்படுத்தக் கூடாது!’ என்றே தீர்மானம் செய்து கொண்டான்.
அன்று அவள் இருந்த நிலைக்கும், அவள் செய்கைகளுக்கும் இவர்கள் பக்க நியாயத்தைப் பார்த்துக் கோபம் கொண்டாலும், அவள் பக்க நியாயமும் உண்டே!
அதில் கோபத்துக்கும் வருத்தத்துக்கும் இடமுண்டா என்றால், இல்லை என்றே உணர்ந்தான். அவள் மனம் கனிய, போதிய அவகாசமும் காலமும் தர, அன்றே இவன் தயாராக இருக்கவில்லையா?
‘அதை அவள் தள்ளிச் சென்றிருந்து நிகழ்த்தி இருக்கிறாள்!’ பிரிவுத்துயரின் வேதனை பதம் பார்த்தாலும், தன்னைத்தான் சமாதானம் செய்ய முயன்றான்.
அவளே சொன்னது போல, அவன் இதய தேவதை, அவனை, தன்னவனாக நினைத்து நெருங்குவதும், அதில் உள்ள இதமும் சுகமும் இப்பிரிவின் மகத்தான பரிசாகவே எண்ணிக் கொண்டவன் அருகில் அரவம் உணர்ந்து நிமிர்ந்தான்.
சற்று முன்னிருந்ததிற்கு நேர்மாறாக குழம்பிக் கிடந்த அவன் முகத்தையும் விழிகளையும் பார்த்தவளிடம், “நித்தி எடுத்திருந்தாள் ராது; இரவைக்கு எடுக்கிறாளாம்; உன்னிடம் சொல்லச் சொன்னாள்.” என்றவன், அவள் முகம் கலங்கியதைப் பார்த்து மெல்ல முறுவலித்தான்.
“ஒன்றுமே செய்வதற்கில்லையப்பா! அவள் உன்னை உண்டு இல்லை என்று ஆக்குவாள்; அதை நான் சொல்லியா தெரிய வேண்டும்!” இயல்பாகச் சொல்லி முறுவலிக்க,
“அவள் என்னவென்றாலும் சொல்லட்டும் கார்த்தி, கேட்க வேண்டியதுதான்! என்னில் அவ்வளவு பாசம் வைத்திருந்தவளுக்கு நான் கடைசியில்..” என்று நிறுத்தியவள், “எப்போ கல்யாணம் நடந்தது? யோகம் ஆன்ட்டி எப்படி இருக்கிறார்?” என்று அவர்களைப் பற்றி சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்தார்கள்.
“ ‘கட்டினால் நித்தியைத்தான் கட்டுவேன்.’ என்று சதீஷ் இருக்க, ‘கல்யாணமா? மாட்டேன்; மாட்டவே மாட்டேன்.’ என்று என்ன பிடிவாதம் பிடித்தால் தெரியுமா?” என்றவன், “நீங்க கட்டினால் நானும் கட்டுகிறேன்.” என்று சொன்னதை சொல்லவில்லை என்றாலும் இவளுக்கு அது புரியாதா?
“உங்க இரண்டு பேருக்குமே நிறையவே கஷ்டம் தந்துவிட்டேன் இல்லையா கார்த்தி!?” என்றவாறே, அவன் சற்றும் எதிர்பாராத வகையில், அவனை நெருங்கி, தோளில் தலைசாய்த்தாள் அவள்.
அதோடு, அவன் மடியில் கிடந்த கரங்களை இறுகப் பற்றிக் கொண்டவள் எதையெதையோ சொல்லிடத்தான் நினைத்தாள்; ஆனால், வார்த்தைகள் தான் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டின!
அவனுமே அக்கணம் மூச்சை இழுத்து விடக் கூட வெகுவாக யோசித்தான்!
“ராது.” ஆழ்ந்து அழைத்தவனின் கரம் உரிமையோடு அவளை வளைத்துக் கொண்டது.
அவன் குரலோடு சேர்ந்த ஸ்பரிசம் உடலையும் உள்ளத்தையும் இளகிக் கனியச் செய்வதை இதமாக உணர்ந்தாள் அவள்.
“போனது எல்லாம் போகட்டும் ராது; இனி அந்தப் பேச்சே வேண்டாம் டா!” மெல்ல அவள் முகம் நிமிர்த்திப் பார்க்க முயன்றவன், அவள் முகம் அவன் நெஞ்சில் தஞ்சமடைய, மெல்ல மெல்ல தன் வசமிழக்க முயன்றான்.
அவளோ, சட்டென்று நிமிர்ந்து கண்ணீரோடு அவனைப் பார்த்தாள்.
“அன்று…அன்று நான்…உங்களை விட்டு எப்படிப் போவது என்று திண்டாடிக் கொண்டிருந்தேன் கார்த்தி; அதேநேரம், உங்களை என்னால் ஏற்கவும் முடியவில்லை.” அவளைச் சுற்றியிருந்த கரம் தந்த அழுத்தம் அவனது உள்ள உணர்வுகளை அவளுக்குணர்த்தியது.
“நான் உன்னுள்ளே இருக்கிறேன் என்று எனக்குத் தெரியும் ராது; அதை நீ தெரிந்து கொள்ளத் தாமதமாகிட்டுது; அவ்வளவும் தான்.”
“அன்றைய என் மனதை…உங்களைப் போல அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை கார்த்தி; மனதை அறிந்து கொள்ள நான் முயலவில்லை. அதற்கு எனக்கு அவகாசமும் இருக்கவில்லை.
அப்படிக் குழம்பித் தவித்துக் கொண்டிருக்கும் போதுதான் அம்மா எடுத்தார்.”
“பச்! அதை விடு ராது. சித்தி பேசியது, ஆன்ட்டி சொன்னது எல்லாம் எனக்கும் தெரியும். விடு; முடிந்த கதை!” என்றவனை, நிமிர்ந்து அவன் விழிகளையே உற்றுப் பார்த்தாள் மதுரா.
அவள் பார்வையில் என்ன கண்டானோ, “அந்தப் பேச்சு வேண்டாமே ராது. இப்போ, இக்கணம், உன் மனம் என்னவென்று நீ சொல்லித்தான் தெரிய வேண்டும் என்றில்லை; அதனால், அதை அப்படியே விட்டுவிடு!” சற்றே அழுத்திச் சொன்னான்.
அவன் கழுத்தில் முகத்தைப் புதைத்துக் கொண்டவள், “இல்லை கார்த்தி, நான்…என் மனதிலுள்ளதைச் சொன்னால் தான் நிம்மதியாக உணருவேன்.” என்றவள், அவன் அனுமதிக்குக் காத்திராது தொடர்ந்தாள்.
“என் நிலைகண்ட பரிதாபத்தில் ஒரு வேகத்தில் காட்டும் பரிவாகத்தான் அன்றைக்கு உங்க அன்பு எனக்குத் தெரிந்தது கார்த்தி.
உங்க அன்பை நான் துச்சமாகப் பார்ப்பதாக நித்தியும் அம்மாவும் சொன்னது கூட, என் நிலையை எனக்கு மிகவும் தாழ்த்தித் தான் காட்டியது தெரியுமா?
‘உன் பரிதாப நிலையிலிருந்து மீட்க ஒருவன் தயாராக இருக்கும் போது நீ எப்படி மறுக்கலாம்!’ என்று மறைமுகமாக என்னைச் சாடியதாகவே நான் உணர்ந்தேன்; அதுதான் உண்மையும்.
அதே, சுதா மிஸ், உங்க அக்கா இருவரிலும் கொஞ்சமும் கோபம் வரவில்லை; காரணம் அவர்களின் வாதம் தான் நிஜமானது.
ஆரம்பத்திலேயே நீங்க அவ்வளவு தெளிவாக உங்க அன்பைச் சொன்ன பின்னரும், அதில் நீங்க உறுதியாக இருப்பது தெரிந்த பிறகும், நான் இங்கிருந்து போகாது இருந்தனே! அது எப்படி கார்த்தி?
என்னையும் அறியாது உங்களை, நித்தியை, இந்த வீட்டை உள்வாங்கிக் கொண்ட என்னால் அந்த நிஜம் முகத்தில் அறைந்த போது ஜீரணிக்கவே முடியவில்லை தெரியுமா?” மூச்சுவிடாது சொல்லிக் கொண்டு வந்தவளின் குரல் தழுதழுத்தது.
“நான்… நான் நிரம்பவுமே சுயநலவாதியாக நடந்திருக்கிறேன் இல்லையா கார்த்தி?!”
“அடிதான் வாங்கப் போகிறாய்! உன்னிலையை நாங்க தான் சரியாக உணர்ந்து கொள்ளவில்லை ராது. ஒருவேளை, மனம் விட்டுக் கதைத்திருந்தால் சரி தெளிவு வந்திருக்குமோ என்னவோ! நடந்ததைக் கதைத்துக் கிளறிக் கஷ்டப்படுத்தக் கூடாது என்றே நான் நினைத்தேன்; அதையேதான் கமலா மாமியும் நினைத்தார்.” என்றவன், “பச்! விடும்மா!” முற்றுப்புள்ளி வைத்துவிட முயன்றான்.
அவனுக்கு ஏனோ இந்தப் பேச்சே பிடிக்கவில்லை.
“மனம் விட்டுக் கதைத்திருந்தால்…சொல்லத் தெரியவில்லை கார்த்தி; ஆனால், ஒருத்தன் கைவிட்டால் இன்னொருத்தன் உதவியிருந்தால் தான் வாழ முடியும் என்ற கட்டாயம், என் மனமோ, அதிலுள்ள பச்சை ரணமோ, வாழ்க்கை பற்றிய அருவருப்போ, அதெல்லாம் போக்கி இப்படித்தான் வாழவேண்டும் என்ற என் எதிர்பார்ப்போ, அதற்கான திட்டமிடலோ, எதுக்குமே இந்த இடத்தில் நான் தகுதியில்லாதவள் என்று விடேற்றியாக எல்லோரும் பார்ப்பது போல…” மனதில் அடைத்து வைத்திருந்ததை ஒரு வேகத்தில் சொல்லிக் கொண்டு வந்தவள், அவன் பார்வையில் தீவிரத்தில் நிதானித்தாள்.
“இப்போ என்ன சொல்ல வருகிறாய் ராது; ஏற்கனவே வாழ்க்கையில் அடிபட்ட ஒருத்தியை உண்மையாக அன்பு கொண்டு அணுகவே முடியாது, அது பொய்வேஷம் என்று சொல்லப்…” காரமாக ஆரம்பித்தவன் வாயை அவள் கரம் இறுகப் பொத்தியிருந்தது.
“உங்க அன்பை சந்தேகிக்கவோ அது பற்றி தர்க்கம் செய்யவோ முயலவில்லை கார்த்தி. அது..அது ..உண்மையானது, அப்பழுக்கற்றது என்று என்றோ உணர்ந்து கொண்டேன்!” என்றவளின் விழிகளின் கசிவில் முகம் சிடுசிடுக்க, “இந்தக் கதையை விட்டு விடு என்றால் கேட்கிறாய் இல்லையே!” வேகமாக எழுந்த அவனது வலக்கரம் மிருதுவாக அவள் விழிகளைத் துடைத்துவிட்டது.
கன்னத்தில் படிந்த அவன் கரத்தை அப்படியே தன் கன்னத்தோடு சேர்த்து அழுந்தப் பிடித்துக் கொண்டவள்,
“அன்று நானிருந்த நிலையில் எப்படித்தான் பார்த்தாலும் உங்க அன்பை முழுமையாக உணர முடியவில்லை; என் வாழ்க்கையில் நடந்துவிட்டதை ஜீரணித்து ஏற்கவும் முடியவில்லை; நடந்ததை கொடும் கனவு என்று தட்டிக் கழிக்கவும் முடியவில்லை; இப்படி ஒன்றொன்றாக பல முடியாதுகள் வரிசை கட்டி நின்றதால் தான் உங்களை விட்டு விலகி விடுவதே உங்க வாழ்வுக்கும் நித்தி வாழ்வுக்கும் நல்லது என்று முடிவு செய்தேன். உங்க மனதில் பரிதாபத்தில் வந்த நேசம் மறைந்துவிடும் என்று நினைத்தேன் கார்த்தி..” அவளையுமறியாது விம்மி விட்டாள் மதுரா.
அடுத்தகணம், அவனது இறுகிய அணைப்பு தந்த இதம் கூட தோற்றிடுமோ என்றளவில் தன்வாழ்வு கோணிய விதம் மின்வெட்டாய் அவள் சிந்தையில் கடந்து செல்ல, உடலும் உளமும் அதிர்ந்து போனாள் அவள்.
அந்த அதிர்வை அவனும் தான் உணர்ந்து கொண்டான்.
“ராது! ப்ளீஸ் வேண்டாம்மா; இன்றய நாளும் இனிவரும் காலமும் மட்டும் நமக்கும் குழந்தைகளுக்கும் போதும்மா! போனதை நினைத்து உன்னையும் வருத்தி என்னையும் வருத்தாதே ராது; எனக்கு அதைத் தாங்குமளவுக்கு…” அடைத்துப் போன குரலில் சொல்லிக்கொண்டு வந்தவன் மிகுதியை தன் செய்கையால் அவளுக்குணர்த்த முயன்றான்.
எதிர்ப்பின்றி அவனுள் அடங்கி ஒடுங்கிப் போனவளின் இதயமும் மீண்டும் மீண்டும் அதையே தான் அவளிடம் யாசித்து நின்றது.
நிமிடங்கள் சில பலதுகள், பிரிந்த இரு இதயங்களின் சங்கமத்தில் கலந்து தத்தித்தத்தி கடந்து சென்றன!
அப்போதும், மனம் திறந்து கொட்டியதில் திருப்தியுறாதவளின் அதரங்கள் முணுமுணுபைத் தொடரவே முயன்றன!
“அன்றே எனக்கு வந்த துன்பம் எல்லாம் உங்களைப் போல ஒருவரைக் கைகாட்டத்தான் என்று நினைத்தேன் கார்த்தி. ஆனாலும் அம்மா பேசிய பிறகு என்னுள் வந்த வைராக்கியம் ஒருபுறம்; என்னால் உங்களுக்கு…எந்தச் சுகமும் கிடைக்கப் போவதில்லை; பிரச்சனைகள் மட்டுமே என்று முடிவெடுத்து விலகினேன்.
“விடு என்றால் கேட்க மாட்டாயா ராது?”
“ஆனால், அன்றிலிருந்து இன்று இதோ இந்தக் கணம் வரை என்னுள் இருக்கும் உங்க துணை, உங்க பரிவு, பாசம், அது மட்டும் தான் என்னை என் குழந்தைகளுக்கு துணையாக நடத்திச் சென்றது கார்த்தி!”
பேச்சை நிறுத்தாது தொடர்வதை கடிந்து கூற முயன்றவனின் உதடுகள் உறைந்து நின்றன!
‘இதை விட வேறென்ன வேண்டும்! இத்தனை நாட்களின் காத்திருப்புக்கு இதைவிட கௌரவம் வேறேதும் உண்டா என்ன?’ அவனிதயம் விம்மலோடு முணுமுணுத்துக் கொண்டது.
“இனி… உங்களைக் காணவே மாட்டேன் என்று நினைத்தேன். நீங்க…நீங்க எனக்கு இல்லவே இல்லை என்று நினைத்திருந்தேன்.” விம்மியவளின் விழிநீரை கலங்கிய விழிகளோடு துடைத்தவன் பொறுமை பறந்தே போயிருந்தது.
“மூச்! இனி இந்தப் பேச்சுகளே வேண்டாம் ராது! இரண்டு வருடங்கள் சுத்த வேஸ்ட்…இந்த அழகில் இரண்டு பிள்ளைகள் உள்ளவனை எப்போ கல்யாணம் என்று டோச்சர் பண்ணுறாங்கள்.” கண்ணடித்தவாறே அவர்களிடையே நிலவிய பேச்சுக்கு நீண்ட விடுமுறை வழங்குவதில் முனைப்போடு செயல்பட்டான் அவன்.
எதிர்பாராத நேரங்களில் சற்றும் எதிர்பாராது சந்தித்துக் கொள்பவர்களால் நம் வாழ்வின் வண்ணமே வேறாகிவிடுவதுண்டு!
அப்படியே, தூக்க முடியா துயர மூட்டையின் கனத்தோடு துவண்டிருந்த மதுரமான மலரின் சுமை களைந்து, அதன் கறைகளை அகற்றி, அற்புத நறுமணத்தை கசியச் செய்யும் தென்றலாக அவளைப் ஸ்பரிசித்து, அந்நறுமணத்தை தன் உயிர் மூச்சென ஆழ்ந்து சுவாசித்தான் அவன்!
அவர்களின் சுவாசம் என்றென்றைக்கும் ஒன்றிணைந்து பயணிக்கட்டும்!
சுபம்.

