அவன் போட்ட, ‘ஓ..ஓ…ஓ…ஓஹோ…ஹோ…’வில் அவளுக்குச் சினம் பெருகிற்று.
அதைவிட அவள் நடக்கையில் இரசனையோடு அவளையே தொடர்ந்த அவன் கண்கள் இயல்பாக இருக்கவிடாமல் தடுத்தன.
ஏற்கனவே யாரோடும் ஓட்ட முடியாமல் மனம் முழுக்க வேதனையைச் சுமந்துகொண்டு தனக்குள் ஒடுங்கிப்போய் இருந்தவளை இவன் இன்னும் சினமேற்றினான்.
வாயை மூடிக்கொண்டு கேட்காதது போன்று நகர்ந்தாள்.
வந்த நாளில் இருந்து இப்படித்தான் சீண்டிக்கொண்டே இருக்கிறான். ஆரம்பத்தில் அவனது கேலிகளைச் சாதாரணமாக எடுத்தவளுக்கு, நாளாக நாளாக எரிச்சலும் கோபமும் தான் பொங்கிக்கொண்டு வந்தது.
எதற்கும் ஒரு அளவு வேண்டாமா? அவளின் மனநிலையை அறியாமல் சீண்டுகிறவனை முடிந்தவரை தவிர்த்துவிடுவாள். ஆனால், ஒரே வீட்டுக்குள் இருந்துகொண்டு எத்தனை நாட்களுக்குத் தவிர்க்க முடியும்? அச்சிறு வீட்டில் எவ்வளவு தூரத்துக்குத் தான் விலகியிருக்க முடியும்?
இப்போதும் அவன் விடவில்லை. அவளுக்குக் கேட்கும் தூரத்தில் வந்து அமர்ந்துகொண்டு, அவளையே பார்த்தபடி மேசையில் தாளம் போட்டபடி தொடர்ந்து பாடிக்கொண்டே இருந்தான்.
படுக்கையை இறைவன் விரித்தான்
வரும் பனித்திரையால் அதை மறைத்தான்
படுக்கையை இறைவன் விரித்தான்
வரும் பனித்திரையால் அதை மறைத்தான்
பருவத்தில் ஆசையை கொடுத்தான்
வரும் நாணத்தினால் அதை தடுத்தான்
வரும் நாணத்தினால் அதை தடுத்தான்
ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்.
எத்தனை அழகான பாடல். ஆனால், ஒவ்வொரு வார்த்தைகளையும் அவன் உச்சரித்த விதம் பாடலின் பொருளுக்கு மாறான அர்த்தத்தைக் கொடுத்து அவளை வெறுப்பேற்றியது.
நமக்குப் பிடிக்காத ஒன்றை நம்மீது திணிக்கையில் இயல்பாகவே அதற்கு எதிர்வினையாற்றி விடுவோம். அப்படி, பதிலடி கொடுக்காமல் வாயையும் மனத்தையும் அடக்கிக்கொண்டு இருப்பது பெரும் சித்திரவதையாக இருந்தது அவளுக்கு.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவள் முடியாமல், ஒருமுறை அவனை அழுத்தமாகப் பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள். அங்கிருந்த மற்றப் பெண்களோடும் விளையாடினான் தான். அவர்கள் அதனைச் சாதாரணக் கேலியாக ஏற்று நடந்தது எப்படி என்று அவளுக்குப் புரியவே இல்லை.
இதெல்லாம் பழகியவர்கள் போலும்!
வீட்டுப்புறா வெளியுலகத்தில் வீசிய காற்றுக்கும் மழைக்கும் ஈடு கொடுக்க முடியாமல் தடுமாறி நெஞ்சுக்குள் கண்ணீர் வடித்தது.
‘இதைத்தான் குளத்தில நீந்துற மீன் குஞ்சுக்கு கடல்ல நீந்துறது கஷ்டம் எண்டு சொன்னீங்களா அப்பா? அப்ப விளங்கேல்ல இப்ப விளங்குது.’ கண்ணைக் கரித்துக்கொண்டு வந்தது அவளுக்கு.
‘அப்பா… என்ன கூட்டிக்கொண்டு போங்கப்பா..’ மனம் ஊமையாக அழுதது. எத்தனை தரம் அப்பா சொன்னார். கேட்டிருக்க வேண்டுமோ. அசட்டுத் துணிச்சலில் வந்துவிட்டேனோ? கண்டதையும் எண்ணிக் கலங்கினாள்.
அவனோ விடாமல் பாடிக்கொண்டே இருந்தான். அந்த வீட்டிலேயே அவள் வெறுக்கும் முதல் மனிதன் அவன் தான்.
இப்போது அப்பா, அம்மா, அண்ணா அருகில் இருந்தால்? அதுவும் அப்பாவை மிகவுமே தேடியது மனது. அவர் இருந்தால் யாராவது அவளிடம் வாலாட்டியிருக்க முடியுமா? அந்த நொடியே ஒட்ட நறுக்கி இருப்பார். இங்கே பொறுத்துப்போக வேண்டி இருந்தது.
அன்று ஷூட்டிங் முடிந்து காருக்கு வந்த ஜேகே அப்படியே நின்றுவிட்டான். நான்கு டயர்களை காற்றுப்போய் நின்றது! வேகமாக அனன்யாவைத் திரும்பிப் பார்க்க, அவளோ அதைவிட வேகமாக முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
“யார் பாத்தா வேல? கைல கிடைச்சான்..?” என்று, அவன் காவலன் விமல் பல்கலைக் கடித்தான்.
“தெரிஞ்சு என்ன செய்யப்போற?”
“என்ன பாஸ் இப்படி கேக்குறீங்க? நடு மண்டையிலேயே போடணும்!” என்றபோது,
“சீப்பை எடுத்து மறைச்சு வைக்கிறதுக்குப் பதிலா மாப்பிள்ளையை கடத்தியிருந்தா கல்யாணம் நின்னிருக்கும்!” என்று, அவர்களைக் கடந்து போகும்போது ஷியாமிடம் சொன்னாள் அனன்யா.
என்ன இவள் சம்மந்தமே இல்லாமல் பேசுகிறாளே என்று குழப்பத்துடன் ஷியாம் பார்க்க, ஜேகேக்கு சந்தேகம் உறுதியாயிற்று!
“யாருன்னு கேட்டியே, இந்தா போறா அவதான்.” என்றான் ஜேகே.
அதிர்ச்சியோடு பார்த்தான் விமல்.
“டயரை மாத்திட்டு கொண்டுவா!” அமைதியாகச் சொல்லிவிட்டு நடையைக் கட்டினான் ஜேகே.
அப்படியே நின்றுவிட்டான் விமல். இது ஜேகே அல்ல. யார் என்று தெரிந்தக்கணம் கன்னம் சிவந்திருக்கவேண்டும். இவன் என்னவென்றால்.. ஒன்றும் விளங்காமல் திகைத்து நின்றான் விமல்.
காட்சி பன்னிரண்டு
பிருந்தாவின் மனம் தோள் சாய துணை தேடியது. ஆறுதலாக இரண்டு வார்த்தைகள் கிடைத்தால்.. மனதுக்குள் அடக்கி வைத்திருக்கும் கோபத்தையும் குமுறல்களையும் எங்காவது கொட்ட முடிந்தால்? மனது பெரிதும் ஏங்கிற்று. அப்போதுதான், அருவமாய் இருந்து குரல் வழியே மட்டுமே அவர்களுக்கான டாஸ்க்குகளை வழங்கும், அவர்களோடு உரையாடும், அவர்களின் குறைநிறைகளைக் கேட்டுக்கொள்ளும் அந்தக் குரலின் நினைவு வந்தது. ஓடிப்போய் அதனிடம் சரணடைந்திருந்தாள் பிருந்தா.
தனியறைக்குள் புகுந்ததுமே பொங்கிப் பொங்கி அழுதாள்.
“சொல்லுங்க பிருந்தா!” அசரீரியாய் ஒலித்து அறைமுழுவதும் நிறைந்த அக்குரலில் தேகம் சிலிர்க்க நிமிர்ந்தாள் பிருந்தா. முதன் முதலாக தன் பெயரை உச்சரித்த அந்தக் கம்பீரக் குரலுக்குச் சட்டெனப் பதில் சொல்ல முடியவில்லை அவளால்.
“உங்க மனசுல இருக்கிற குழப்பம் என்ன?” அப்படிக் கேட்டதும் அவள் கன்னங்களை கண்ணீர் மீண்டும் நனைத்தது.
“அப்பா.. அப்பா வேணும். எனக்கு வீட்ட போகோணும்.”
“நீங்க மிகவுமே துணிச்சலான பெண். இலங்கைல இருந்து தைரியமா இங்க வந்து இருக்கிறீங்க. இப்படி அழலாமா?”
“அப்பாவைப் பாக்க வேணும் போல இருக்கு. ஒரே ஒருக்கா… ப்ளீஸ்!” குழந்தையைப்போன்று உடைந்து அழுதாள் பிருந்தா.
“இது ஒன்னும் நிரந்தரப் பிரிவு இல்லையே! இன்னும் மூன்று மாதத்தில பாக்கத்தான் போறீங்க. எத்தனை ஆண்கள் அவங்க மனைவியை, குழந்தையை, அம்மா அப்பாவை, பிறந்து வளர்ந்த ஊரை, நாட்டை விட்டு வெளிநாடுகள்ல போய் வருஷக்கணக்கா இருக்கிறாங்க. இது ஜஸ்ட் மூன்று மாதம்தான்.”
அந்தக்குரல் அவளுக்குள் புகுந்து ஏதோ மாயம் செய்திருக்க வேண்டும். அவளின் அழுகை நின்றிருந்தது. அத்தனை வலிமை மிகுந்த குரல்தான் அது!
“நீங்க அழுறதைப் பாத்தா அப்பா சந்தோசப்படுவாரா? அவருக்கு எது சந்தோசத்தைக் கொடுக்குமோ அதைச் செய்ங்க. தைரியமா இருங்க. எல்லோரும் உங்களுக்காக இருக்கோம்.” அந்தக்குரல் கொடுத்த தைரியத்தில் கண்களைத் துடைத்துக்கொண்டாள் பிருந்தா.
“இதுவும் உங்க வீடுதான். ஆடிப்பாடி சந்தோசமா இருங்க. இப்ப நீங்க போகலாம்.” என்று அவளை அனுப்பி வைத்தது அந்தக்குரல்.
வெளியே வந்தவளை மீண்டும் ஏதோ பாடல் பாடி சினமேற்றினான் அஜய்.
‘கடவுளே.. தைரியத்தை வரவழைச்சுக்கொண்டு வந்தா இவன் வேற.. அப்பா என்ன காப்பாத்துங்கப்பா!’
அப்போது இரண்டு கோப்பிக் கப்புகளுடன் அவளருகில் வந்தமர்ந்தார் ராகவன்.
“என்னம்மா?”
ஒன்றுமில்லை என்பதாகத் தலையசைத்துவிட்டுப் பேசாமல் இருந்தாள் பிருந்தா. அவளுக்குத்தான் அவளின் தைரியம் மீண்டிருந்ததே. அதனால் அதையெல்லாம் அவரிடம் சொல்லத் தோன்றவில்லை.
அவளிடம் ஒரு கோப்பையை நீட்ட வாங்கிக்கொண்டாள். இருவருமே சற்றுப் பருகிக்கொண்டனர்.
“வீட்டு நினைப்பு வந்திருச்சா?” அவள்புறம் திரும்பாமல் கேட்டார்.
வீட்டு நினைவு தானாக வரவில்லையே. ஒருத்தன் வரவைத்தான். அதனால் பதில் சொல்லாமல் அமர்ந்திருந்தாள்.
அவரும் புரிந்துகொண்டிருக்க வேண்டும். சற்றுநேரம் அமைதியாக இருந்தார்.
“முடிவு எடுக்கற சுதந்திரம் நம்ம கையில இருக்கற வரைக்கும் யாராலயும் நம்மை எதுவும் செய்ய முடியாது பிருந்தா!” சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டார் மனிதர்.
திகைத்துப்போய் போகிறவரையே பார்த்துக்கொண்டிருந்தாள் அவள்.
என்ன சொல்லிவிட்டுப் போகிறார்? அவன் செய்வதை உன் மண்டைக்குள் எடுப்பதா இல்லை குப்பையாக ஒதுக்குவதா என்கிற முடிவை நீ எடுக்கவேண்டும். அதை நீயாக எடுக்காதவரைக்கும் அவன் உனக்குத் தொந்தரவாகத்தான் தெரியும் என்கிறாரா!
சட்டென்று மனம் தெளிந்துபோயிற்று! சுகமாகச் சாய்ந்துகொண்டு அந்தக் கோப்பியை இரசித்து இரசித்துப் பருகிமுடித்தாள்.
‘கட்’ சொன்னபிறகு அசந்துபோய் அப்படியே அமர்ந்திருந்தாள் அனன்யா. அஜய்யாக வந்தவன் ஜேகேதான். அவனோடு நடிக்கப் போகிறாள் என்றதுமே அவளுக்குள் ஒரு நமட்டுச் சிரிப்பு வந்திருந்தது. இந்த முறைப்புச் சாமியார் எப்படி நவரசங்களைக் காட்டி நடிக்கப்போகிறான்? அவன் திணறுவதைப் பார்க்கப் பெரும் ஆவலாகவே இருந்தாள்.
‘ஷார்ட் கட்’ ஹெயர் கட்டிங்கோடு, நறுக்கிவிடப்பட்ட மீசையுமாக, தன் வயதின் பத்தைக் குறைத்துக்கொண்டு வந்துநின்றபோது அவள் புருவங்கள் உச்சிமேட்டுக்கு உயர்ந்தன.
‘இது மட்டும் போதுமா?’
முதல் காட்சியில் அவளின் பின்னால் அவன் சுற்றியபோதும் சிரிப்புத்தான் வந்தது.

