எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் சற்றுநேரம் அமைதியாக இருந்தவள், அவள் எதற்காக சைகை மொழியைக் கற்றுக் கொண்டாள் என்று அவர்களிடம் தெரிவித்தாள். வாய் பேசிக் கொண்டிருந்தாலும் கைகள் பாட்டுக்கு சைகையால் மீனாட்சிக்கும் புரியுமாறு சொல்லிக் கொண்டிருந்தது.
“நீங்க வேலைக் கொடுப்பீங்கன்னு இதைச் சொல்லலை” என ஆரம்பித்து அனைத்தையும் பகிர்ந்து கொண்டாள். அவள் புதிதாகப் பணியில் சேர்ந்திருந்த சமயத்தில் ஒரு கட்டடத்தை நேரில் பார்வையிட்டுவிட்டு வரவேண்டும் என்று சொன்னார்கள்.
அதற்காக அங்கே சென்றாள். அவள் சென்ற சமயத்தில் அங்கே இயங்கிக் கொண்டிருந்த மின்தூக்கி சரியாக மாட்டப்படாமல் பழுதாகி நின்றுவிட்டது. அதைச் சரி செய்வதற்கு பாதுகாப்பு பொறியாளரை வரவழைத்து அவசரமாகக் காரியத்தில் இறங்கியிருந்தனர்.
மின்தூக்கியின் முன்னால் இருக்கும் கதவு திறந்திருந்தது. ஆனால் மின்தூக்கியோ பல அடிகள் தூரம் கீழே போய் நின்று கொண்டிருந்தது. அது மிகவும் ஆபத்தானது. அறியாதவர்கள் தெரியாமல் மின்தூக்கியின உள்ளே காலை வைத்துவிட்டால் உள்ளே விழுந்து விடுவார்கள்.
மின்தூக்கி அப்படியே அந்தரத்தில் நின்று கொண்டிருக்க மேலிருந்து கீழே எதுவும் இல்லாமல் வெற்றிடமாக இருந்தது.
கதவு திறந்திருந்தாலும் ஒருவரும் ஏற வேண்டாம் என்றும் பரபரப்புடன் தகவல் தெரிவித்து கொண்டிருந்தனர். அவர்கள் பேசிக் கொண்டதைக் கேட்டவாறே திவ்யதர்ஷினி படிகளில் மேலே ஏறிச் சென்றாள்.
அவள் மேலேறி வந்து ஐந்தாம் தளத்திலிருந்து ஆறாவது தளத்துக்கு ஏறப் போகையில் அந்த தளத்தில் வேலையிலிருந்த இளைஞன் ஒருவன் அவளைப் பார்த்துப் புன்னகைத்தவாறே சென்றான்.
அவனிடம், “லிஃப்ட் வேலை செய்யலைங்க. கதவு திறந்திருக்கும் ஆனாலும் உள்ளே போயிடாதீங்க. படில இறங்கிப் போங்க” எனத் தகவல் தெரிவித்துவிட்டு மேலே ஏறினாள்.
அங்கே வேலை செய்கிறான் என்பதால் அவனுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும் என்று எண்ணிவிட்டாள். ஒரு எச்சரிக்கைக்காக மட்டுமே அவள் சொல்லிச் சென்றாள். ஆனால் அவள் கனவிலும் நினைக்கவில்லை அவனுக்குக் காது கேட்காது அவனால் பேசவும் முடியாது என்று.
சில படிகள் தான் ஏறியிருப்பாள். திடீரென்று அம்மா என்று யாரோ அலறும் சத்தம் கேட்டது. மனம் பயத்தில் நடுங்க சத்தம் வந்த திசையை நோக்கித் திரும்பிப் பார்த்தாள். ஏதோ சரியில்லை என்று உள்மனம் எச்சரிக்க தடதடவென்று சத்தம் வந்த திசையை நோக்கி ஓடினாள்.
கீழே வந்த சத்தத்தை வைத்து அவளுக்கு எதிரில் நடந்து சென்றவன் அவள் சொல்வதைக் கேட்காமல் அந்த மின்தூக்கியின கதவு வழியே உள்ளே நுழைந்து இருக்கிறான் என்று புரிந்தது.
அந்த இளைஞன் கவனிக்காமல் அப்படியே உள்ளே காலை வைக்கவும் பத்தடிக்கு அப்படியே கீழே போய் அலறலுடன் விழுந்திருக்கிறான். மீட்புப் படையினர் வந்து அவனை மீட்டெடுப்பதற்குள் அவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
உண்மை இதுவென்று அவளுக்குப் புரியவும் திவ்யதர்ஷினிக்கு மயக்கம் வர மயங்கிச் சரிந்தாள். அன்றிலிருந்து மின்தூக்கி என்றாலே அவள் உடலெல்லாம் நடுக்கம் கொள்ளும். அன்று தண்ணீர் தெளித்து அவளின் மயக்கம் தெளிந்த பின்னர் அந்த இளைஞனின் மரணத்தைக் கேட்டு குமுறிக் குமுறி அழுதாள்.
ஒரு சில விநாடிகளுக்கு முன் புன்னகை முகத்துடன் அவனைப் பார்த்தாளே என மனம் வெதும்பினாள்.
அப்போது அங்கே மேற்பார்வையாளராக இருக்கும் ஒருவர் வந்து அவளிடம், “அவனுக்குக் காது கேட்காதுங்க மேடம். இன்னைக்குத் தான் வேலைக்குச் சேர்ந்தான். குடும்பத்துல கஷ்டம்ன்னு சொன்னான். சரிவருமான்னு யோசிச்சு, பரிதாபப்பட்டு தான் சேர்த்தோம். நீங்க சொன்னதைக் கேட்காம போய் லிப்ட்ல ஏறிட்டான். உங்க மேல எந்த தப்பும் இல்லை மேடம். எதுக்காக நீங்க இப்படி அழறீங்க?” என அவளைச் சமாதானப்படுத்தினார்.
அந்தச் சம்பவம் அவளை மிகவுமே பாதித்தது. அவளுக்கு சைகை மொழி தெரிந்திருந்தால் அவனிடம் தெரிவித்திருப்பாளே. அவளால் இப்படி அநியாயமாக ஓர் உயிர் பறிபோய் விட்டதே என அவள் வெகுநாட்களாய் துடித்துக் கொண்டிருந்தாள்.
இனிமேலும் இப்படி நடக்கக் கூடாது. அதுவும் அவள் கட்டுமான துறையில் இருக்கையில் இதுபோல் பல மனிதர்களைச் சந்திக்க நேரும் எனச் சைகை மொழியைச் சிரமத்துடன் கற்றுக் கொண்டாள்.
அவள் சொல்லாத விஷயமும் ஒன்று இருந்தது. அந்த இளைஞனின் தங்கை பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தாள் என்று. அதைக் கேட்டதும் அவளுக்குத் தன் தம்பி சசிதரனின் ஞாபகம் வந்தது.
ஆகவே அந்தப் பெண்ணின் கல்லூரிப் படிப்புக்குத் தேவையான உதவிகளைச் செய்து அவளைப் படிக்க வைத்தாள். அப்பெண் இன்று ஒரு வேலையிலும் அமர்ந்துவிட்டாள்.
ஆகவே தெரியாதவர்களிடம் பேசும் பொழுது ஏதாவது முக்கியமான செய்தியைச் சொல்ல வேண்டுமென்றால் வாய் பேசினாலும் சைகை மொழியையும் சேர்த்தே சொல்லுவாள் திவ்யதர்ஷினி.
அதை, ‘அபிநயம் பிடிக்கிறாள்’ என அன்று மித்ரன் கிண்டல் செய்தான். இக்காரணத்தால் அவளுக்கு மின்தூக்கி என்றால் எப்போதும் பயம். ஆகவே அன்று மித்ரனின் அலுவலகத்திலும் மின்தூக்கியில் சிக்கிக் கொள்கையில் இறந்தவனின் எண்ணங்கள் அவளைத் தாக்க, அப்படியே மயங்கிச் சரிந்திருந்தாள்.
அவள் சொன்ன காரணத்தைக் கேட்ட மீனாட்சிக்கு, இப்பெண் இளகிய மனம் கொண்டவள் என்று தோன்றியது. வத்சனுக்கும் அவள் மேல் மரியாதை தோன்றியது.
“ஐம் வெரி சாரி. உங்க அடி மனசுல இப்படி ஒரு காயம் இருக்கும் என நான் எதிர்ப்பார்க்கலை. ஆனா இதுல உங்க தப்பு எதுவுமில்லை” என்றவன், “சரி உங்களை எப்படிக் கூப்பிடறது” என மிக முக்கியமான கேள்விக்கு வந்தான்.
“கொஞ்சம் நெருக்கமானவங்க தர்ஷின்னு கூப்பிடுவாங்க. அதிக பழக்கமில்லாதவங்க தர்ஷினி சொல்லுவாங்க. அப்பா மட்டும் திவினு சொல்லுவாரு. நீங்களும் தர்ஷினினு கூப்பிடுங்க” எனப் புன்னகைத்தாள்.
“தள்ளியே நில்லுடா… உன்னை எனக்கு அதிகப் பழக்கமில்லைன்னு சொல்லாம சொல்லற மாதிரி இருக்கு” என வத்சன் சொல்ல, “அப்படியில்லை. ரெண்டு முறை தானே பார்த்திருக்கோம்” என அவள் நிதர்சனத்தை எடுத்துச் சொன்னாள்.
புன்னகைத்துக் கொண்டவன், “உங்க பயோடேட்டா ரொம்ப இம்ப்ரஷிவ்வா இருக்கு. டான்ஸ் ஆடுவீங்கன்னு போட்டிருந்தது” என வத்சன் அவளிடம் கேட்க,
“பரதநாட்டியம் கத்துக்கிட்டேன். என்னவோ தெரியலை… ஆல் இன் ஆல் அழகுராஜா ஆகிடுவேன் அப்படிங்கிற நம்பிக்கையில அப்பா என்னை எல்லாத்தையும் கத்துக்க வச்சார்” என அவள் கலகலவென்று சிரிக்க,
“அப்போ கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் எங்ககிட்ட காட்ட வேண்டியது தானே?” என வத்சன் சிரித்தான்.
“கொஞ்சம் கொஞ்சமா கத்துகிட்டதை இறக்குறேன். இல்லைன்னா உங்களுக்குப் போர் அடிச்சிடும். அதுக்கு முன்னாடி முதல்ல வேலையைக் கொடுப்பீங்களா இல்லையான்னு சொல்லுங்க. அப்புறம் இந்த வேலையில என்கிட்டே என்னென்ன எதிர்பார்க்கிறீங்க? நான் என்ன செய்யணும்ன்னு சொல்லுங்க” என அவள் வந்த விசயத்தில் கவனமாக இருக்க, அவளின் பொறுப்புணர்வு பார்த்து மீனாட்சிக்கு அவளை மிகவும் பிடித்துப் போனது.
அதன்பிறகு சற்றுநேரம் பேசி அவள் சம்பளத் தொகையை முடிவு செய்து, அவளுக்கு என்னென்ன வேலைகள், அவர்களின் எதிர்பார்ப்புகள் என அனைத்தையும் ஆலோசித்து ஒரு முடிவுக்கு வந்தனர்.
முக்கியமாக அவரால் பேச முடியாததால் அவர் சார்பில் மற்றவர்களிடம் பேசவேண்டும், அத்தோடு அவர்கள் சொல்லும் விஷயத்தையும் இவரிடம் கடத்த வேண்டும். மீனாட்சி ஓவியராக இருப்பதால் அது சம்மந்தப்பட்ட வேலைகளே நிறைய இருக்கும் என்றும் அவளுக்குப் புரிந்தது.
திவ்யதர்ஷினிக்கும் திருப்தி ஏற்பட இந்த வேலையில் சேர சம்மதித்தாள். குறைந்தபட்சம் ஆறு மாத காலமாவது அவள் இந்தப் பணியில் இருக்க வேண்டும் என்ற கட்டளையுடன் அவளிடமிருந்து வத்சன் கையொப்பம் வாங்கிக் கொண்டான்.
மேலும் சற்றுநேரம் அங்கே இருந்து சில விஷயங்களைச் சொல்லிவிட்டு வத்சன் திருப்தியுடன் கிளம்பிச் சென்றான்.
திவ்யதர்ஷினியும் உற்சாகமாக மீனாட்சியிடம் பேசி, அவருக்கு என்னென்ன தேவைகள், எதிர்பார்ப்புகள் இருக்கு எனக் கேட்டு ஓரளவுக்கு அவளது வேலை பற்றிய எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.
வரும் வழியில் வீட்டுக்குத் தேவையான பொருட்களையும் வாங்கிக் கொண்டு வீட்டுக்குச் செல்ல, மாலை வெகுநேரமாகி விட்டிருந்தது. சசிதரன் சாப்பிட்டுவிட்டு உறங்கியிருந்தான்.

