4
இரவு நீண்ட நேரம் கழித்து நித்திரைக்குச் சென்றாலுமே விடிகாலையில் குறித்த நேரத்தில் கண்விழித்துப் பழகியிருந்த நிதி, இன்றும் வழமை போலவே விழித்தெழுந்தாள்.
அமைதியாக இருந்த வீடே மற்றவர்கள் இன்னமும் துயில் கலையவில்லை என்பதை உணர்த்தியது. சத்தம் வராதவாறு பதுங்கிப் பதுங்கித் தன் காலைக்கடன்களை முடித்தவள், பாடப்புத்தகத்தையும் எடுத்துக் கொண்டு கீழே சமையலறை வந்து, தேநீரைத் தயாரித்து எடுத்துக் கொண்டு சாப்பாட்டு மேசையில் வந்தமர்ந்து பாடப்புத்தகத்தில் ஆழ்ந்து விட்டாள்.
இவள், தன் மாமா இந்திரனை போலவே ‘எம்எல்டி’யில்(மெடிகல் லேப் டெக்னிசியன்) இரண்டாம் வருடத்தில் படித்துக் கொண்டிருக்கிறாள்.
‘நான்கு வருட முடிவில், நிச்சயமாக ஒரு வேலையில் சேர்ந்திரலாம்; என்ர குடும்பத்தை முழுமையாகப் பொறுப்பேற்கலாம்.’ என்ற எண்ணமே அவள் மனதில் நின்று, எந்த வேலை என்ன தடை என்றாலும் படிப்பில் கவனத்தைச் செலுத்தத் தூண்டுகின்றது.
அத்தோடு, தம்மைப்போல் கார் பழக்கும் பயிற்சிக்குச் செல்லுமாறும் வற்புறுத்திக் கொண்டிருக்கிறான் வசி.
‘‘இப்பிடி அங்கயும் இங்கயும் வேலைக்கு அலையாமல், இந்தப் பயிற்சி கிழைமைக்கு ஒருதரம் தான்…அதுவும் சனி மட்டும்; ரெண்டு வருசத்தில படிச்சு முடிச்சா எங்களிட்டயே வேலை செய்யலாம்; உம்மட படிப்பு முடிய முதலே உழைக்கத் தொடங்கீருவீர்.’’ என்று அவனும், ‘‘இதுவும் நல்ல யோசனையா இருக்கே!’’ என்று இந்திரனும் சொல்லியும், அவள் கொஞ்சமும் அசைந்து கொடுக்கவில்லை.
இப்போது படித்துக்கொண்டிருக்கும் படிப்புக்கும் வங்கிக்கடன் எடுத்துள்ளதால், இன்னுமொருதரம் கடன் எடுப்பதற்கு அவள் விரும்பவில்லை.
‘‘அப்பிடிப் படிக்கிறதாக இருந்தால், இந்தப் படிப்பு முடிஞ்சதும் படிக்கிறன்.’’ என்றவளிடம், ‘‘நாங்க காசு தாறம் படியும்; பிறகு வேலைக்கு வந்து கொஞ்சம் கொஞ்சமாகத் திருப்பித் தாரும்.’’ என்று வசி சொல்லியும் அதற்கு இசையாமல் இருக்கிறாள் இவள்.
இப்படியான இவளின் செய்கைகளே அவளை ஒரு பிடிவாதக்காரியாக மற்றவர்களுக்கு, குறிப்பாக வசிக்குக் காட்டி நிற்கின்றது.
படித்துக்கொண்டே தேநீரை அருந்தி முடித்தவள், எழுந்து சென்று யன்னல் திரையை விலக்கி வெளியில் பார்த்தாள்.
அங்கே, நிலமகளை வெண்பஞ்சால் அலங்கரித்து மகிழ்வதில் சுவாரசியம் கொண்ட வான்மகளோ, அலுக்காமல் சலிக்காமல் பூவாய்ப் பனித்தூவலை தூவிக் கொண்டிருந்தாள்.
‘‘இன்றைக்கு இது ஓயாது! நான் பஸ்சில தான் போக வேணும். ஒன்பதுமணி பஸ் எடுத்தால் அங்க போய்ச் சேரச் சரியாயிருக்கும்.’’ தனக்குத் தானே கதைத்துக் கொண்டவள், மணி ஏழாவதைக் காட்டவே, இன்று ஞாயிறு என்பதால், ‘மாமா மாமி ஆட்கள் எழும்பவும் நேரமாகும்.’ நினைத்தவாறே, மீண்டும் வந்து பாடப்புத்தகத்தில் ஆழ்ந்துவிட்டாள்.
சிறிது நேரத்தில், மாடிப்படியில் அரவம் கேட்கவே நிமிர்ந்து பார்த்தாள்.
“மோர்னிங் நிதி…’’ முறுவலுடன் சொல்லிக்கொண்டே வந்த ரஞ்சன், அவளருகில் இருந்த கதிரையை மெதுவாய் இழுத்துப் போட்டு அமர, சிறு முறுவலோடு எதிர்கொண்டவள், ‘‘மோர்னிங்…என்ன வெள்ளனவே எழும்பிட்டீங்க? தேத்தண்ணி ஊத்துறன்.’’ எழுந்து, அவனுக்குக் தேநீரைத் தயாரித்து எடுத்து வந்து கொடுக்க, அதை வாங்கிக்கொண்டே, ‘‘படித்துக்கொண்டு இருந்தீர், குழப்பீட்டன் போல!’’ என்றவன், தேநீரை அருந்தத் தொடங்கினான்.
‘‘இல்ல…அப்பிடியெல்லாம் இல்ல…’’ அவசரமாய் மறுத்தவள், அவன் தன்னையே குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்து விட்டாள். எவ்வளவு நேரத்துக்கென்று அவன் பார்ப்பதைத் தெரியாதமாதிரி நடிப்பதாம். மனதில் எழுந்த கலக்கத்தைக் கோப முகமூடி போட்டுச் சமாளிக்கப் பார்த்தாள்.
‘‘இங்க பாருங்க…நேற்று ஏன் உங்கட அண்ணாவ அங்க வரச்சொன்னீங்க? வேலைக்குப் போற எனக்குத் திரும்பி வரத் தெரியாதா? இனிமேல் இப்பிடிச் செய்யாதீங்க!’’
கோபத்துடன் வருவித்துக் கொண்ட கடுமையும் கலந்து சொல்ல, சட்டென்று முகம் மாறினான் ரஞ்சன்.
‘‘ஏன் நிதி…உமக்கு இப்ப என்னதான் பிரச்சனை சொல்லும்? வர வர நீர் நடக்கிற விதம் ஒண்டும் எனக்கு விளங்கேல்ல; எப்பப் பார்த்தாலும் என்னில எரிஞ்சு விழுறீர்; நான் உமக்காகத் தானே…’’ எனச் சொல்லிக்கொண்டிருந்தவனை முழுவதுமாகச் சொல்லவிடாது சிடுசிடுப்போடு இடையிட்டாள் நிதி.
‘‘அதுக்குத் தான் சொல்லுறன், எனக்கு என்னைப் பார்க்கத் தெரியும்; நான் ஏதாவது கேட்டால் மட்டும், அதுவும் உங்களால ஏலும் எண்டா மட்டும் செய்து தாங்க; இல்லையோ, பேசாமல் விடுங்க; நான் ஒன்றும் தெரியாத பாப்பா இல்லை.”
முகம் சிவந்தது ரஞ்சனுக்கு! அதைக் கவனித்தாளா இல்லையா என்றில்லாது தொடர்ந்தாள் அவள்.
“உங்களுக்கு…ஏன் உங்கட அண்ணாவுக்கு எல்லாம் என்ன தலையெழுத்தா சொல்லுங்க? நான் இந்த வீட்டுக்குக் கனக்க விசயங்களில எவ்வளவோ கடமைப்பட்டு இருக்கிறன்; அதுவே போதும்.’’ கண்கள் கலங்க படபடவென்று தொடர்ந்தவள், விருட்டென்று அவ்விடத்தை விட்டெழுந்து தன்னறை நோக்கிச் சென்றாள்.
விடுவிடுவென படிகளில் சென்று கொண்டிருந்தவளைப் பார்த்துக் கொண்டே, இன்னமும் குடித்து முடித்திருக்காத தேநீரைக் கையில் வைத்துக் கொண்டு திகைத்துப் போய் அமர்ந்திருந்தான் ரஞ்சன்.
அவள் இதுவரையிலும், ‘‘எனக்கு என்னைப் பார்த்துக் கொள்ளத் தெரியும்; நீ உன்ர வேலையைப் பார்த்திட்டுப் போ!’’ என்ற வகையில் அவனுடன் எடுத்தெறிந்துக் கதைத்ததில்லை. அதனால், இன்று அவள் அப்படிக் கதைத்ததும் மிகவும் வேதனையாகவும், ‘இவள் ஏன் இப்படி மாறீட்டாள்?’ என்று ஏக்கமாகவும் இருந்தது, அவனுக்கு.
அவளின் இந்த ஒதுக்கத்துக்கும் கலக்கத்துக்கும் தான் மட்டுமே, தன் அதீத கவனிப்பும், அதுவும், தன்னை அவனவள் என்று எண்ணிக்கொண்டு கவனிப்பதை அவள் உணர்ந்து கொண்டதே காரணமென அவன் கொஞ்சமும் உணரவோ, நினைத்துப் பார்க்கவோ இல்லை.
இப்போதோ, அவள் கதைத்த விதம் அவனுள்ளத்தில் கோபத்தை ஏற்படுத்தியது.
‘‘இவள இப்பிடியே விடக்கூடாது. விட்டால் அப்பிடியே ஒதுங்கிப் போயிருவாள்.’’ சொல்லிக் கொண்டவன், மிச்சத் தேநீரை ஒரேமூச்சில் குடித்து விட்டு மேலே சென்று மூடியிருந்த அவளின் அறைக்கதவை மெதுவாய்த் தட்டினான்.
தான் தட்டியதும் கதவைத் திறந்தவளின் கலங்கிய விழிகளில் பார்வையை கூர்மையாகப் பதித்தவன், ‘அங்க என்னோட கத்தினாள்; இங்க வந்திருந்து அழுறாள்; சரியான லூசு!’ என நினைத்துக்கொண்டே, ‘‘வேலைக்குப் போக வெளிக்கிட்டு நில்லும்; கொண்டு போய் விடுறன்.’’ என்றவன், அவள் மறுப்புக் கூறும் முன்பு தன்னறை நோக்கி மேலே சென்று மறைந்தான் .
அவன் அப்படிக் கூறிச் சென்றதும், தலையை அப்படியே சுவரில் முட்டலாம் போலிருந்தது அவளுக்கு!
சற்றுமுன், அவனது முகத்துக்கு நேரே கடுமையாகக் கதைத்ததை நினைத்து அழுது கொண்டிருந்தவள், அவன் மீண்டும் வந்து இப்படிச் சொல்லிச் சென்றதும், எதுவுமே செய்ய முடியாத நிலையில் சிறிது நேரம் அப்படியே இருந்தவள் நினைவில், ரஞ்சனோ ரதீஷோ தனக்கு உதவும் போதெல்லாம் தான் புவனியிடம் மேலதிகமாக வாங்கிக்கட்டும் திட்டுகளும், முதன் முதல் ரஞ்சனை ‘‘அண்ணா’’ என்று அழைத்ததற்குப் புவனி போட்ட கூச்சலும், அதனைத் தொடர்ந்து வீட்டில் நடந்த சண்டையும் அழைக்காமல் நினைவுக்கு வந்தது.
அவள் அண்ணா என்றதும் நிதியின் அருகில் வந்து அவளின் தோள் பற்றித் திருப்பினார் புவனி.
‘‘என்ன அண்ணாவா? இதென்ன பகிடி! அவன் உனக்கு எப்பிடி அண்ணா? நீ என்ன என்ர வயிற்றிலையா பிறந்தனீ? பாவம் பார்த்து இரக்கப்பட்டு உன்ன இங்க கூட்டிக்கொண்டு வந்திருக்கிறம்; அத்தோட நின்று கொள்! இப்பிடி உறவு முறை சொல்லி நெருங்க வேணாம் சொல்லீட்டன்.’’ எகிறினார்.
அதைக் கேட்டுக்கொண்டே அங்கு வந்த இந்திரன், ‘‘ஏன் புவனி…சின்னப்பிள்ளையிட்ட இப்பிடிக் கத்துறீங்க?’’ நிலைமையை இலகுவாக்க முயன்றவர், மனைவியின் முறைப்பைப் பொருட்படுத்தாமல், ‘‘அய்யோம்மா…அவன்கள் ரெண்டு பேரும் உனக்கு மச்சான்கள்! ஆசையா வாய் நிறைய மச்சான் என்று சொல்லு சரியா?’’ இயல்பாகச் சொன்னதும், கோபத்தில் கொதித்துப் போனார் புவனி.
அதேவேகத்தில் கணவனைப் போட்டு வாங்கு வாங்கென்று வாங்கியது மட்டுமின்றி, ‘‘இந்த உறவு முறை சொல்லுறது என்ர காதில விழுந்தால் அடுத்த நிமிசம் இலங்கையில இருப்ப சொல்லீட்டன்!’’ கடுமையாகவே எச்சரித்திருந்தார்.
அதன் பின்னர் ரஞ்சனும் ரதீஷும் எவ்வளவோ ஆறுதல் சொல்லியும், அன்று நடந்ததை அவளால் மறக்க முடியாத மாதிரியே, அவர்களை முறைசொல்லி அழைத்ததுமில்லை.
‘அப்போதிருந்தே நான் அண்ணா என்று சொல்லிக்கொண்டு வந்திருந்தால் இவரும் என்னைத் தங்கச்சியாகத்தான் பார்த்திருப்பார். இந்த மாமி நான் சொத்தில் பங்குக்கு வந்திட்டாலும் என்ற கணக்கில் எவ்வளவு கத்தினார்? இப்ப…கடவுளே!’ கலங்கினாள்.
‘ரஞ்சனுக்கு உண்மையில் மூளை குழம்பீட்டு. இவர் செய்யிறதுக்கு எல்லாம் நான் தான் வாங்கிக் கட்டுவன் என்று தெரிஞ்சும் இப்பிடிச் செய்யிறாரே!’ நினைத்துக்கொண்டே நேரத்தில் கண்களை ஒட்டியவள், அது விரையும் வேகத்தைப் பார்த்து அவசரம் அவசரமாக வேலைக்குத் தயாராகச் சென்றாள்.
தயாராகிக் கீழே வந்த நிதி, சாப்பாட்டு மேசையில் வீட்டினர் அனைவரும் அமர்ந்து காலையுணவை உண்ணத் தொடங்கியிருப்பதைப் பார்த்தவள், தனக்கென இரு பாண் துண்டுகளை வாட்டி அதன் மீது மெலிதாய் ஜாமையும் பூசி எடுத்துக்கொண்டு சாப்பாட்டு மேசையில் வந்தமர, சிநேகமாய்ப் புன்னகைத்தவாறே மேசையில் இருந்த தேநீர் குவளையை அவள்புறம் நகர்த்தி வைத்தான் ரதீஷ்.
சனி ஞாயிறுகளில் இந்திரன், புவனி வேலைக்குச் செல்வதில்லை.
ஆறுதலாக எழுந்து வீட்டுவேலைகள், சமையல், எங்காவது வெளியில் போவது என்று அன்றைய பொழுதைப் போக்குவார்கள். அதுவும் வார இறுதி நாட்களில் ஏதாவது விசேசங்களுக்கான அழைப்புகள் வந்தால், மாலைப்பொழுது அதோடு போய்விடும் .
‘‘எத்தனைக்கு நிதி இன்றைக்கு வேலை?’’
‘‘பத்துக்கு மாமா.’’ என்றவள் தன் சாப்பாட்டைத் தொடர, அவளை முறைப்பாகப் பார்த்தார் புவனி.
‘‘ஏன்? ஒரு வார்த்தையோட இன்னொரு வார்த்தை சேர்த்துக் கதைச்சா முத்தா உதிர்ந்திரும்? இப்பிடி ஊமக்கொட்டான் போல இருந்திருந்து எல்லாரையும் கொண்டு நல்லா வேலை வாங்கு.’’ ஆரம்பித்தார்.
மனைவியின் சீறலை அதிர்வுடன் எதிர்கொண்ட நிதியைப் பார்த்த இந்திரன், சாப்பாட்டை வாயில் வைத்தபடி அவள் மலங்க மலங்க முழிப்பதைப் பார்த்துப் பரிதாபம் கொண்டவர், ‘இவளப் போட்டு வறுக்கிறதுக்கு இன்றைக்கு என்னவோ கிடைச்சிருக்கு! இந்தப் பிள்ளையை எதுவும் சொல்லாட்டி இவவுக்கும் விடியாது.’ மனையாளை மனதில் திட்டியபடி, ‘‘ஏன் புவனி…இப்ப என்ன நடந்திட்டு? சாப்பிடேக்க இப்பிடிக் கதைக்க வேணாம் என்று எத்தனையோ தடவைகள் சொல்லியிருக்கிறன்; நீங்களோ அதைக் கேட்கிற மாதிரி இல்லை.’’ கண்டித்தார்.

