செம்பருத்தி 30- 1

கட்டிடக் கலையின் சாட்சியாக இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக கம்பீரமாக நிற்கும் பாகமங்கலம் அரண்மனை.அதன் முன்பு கார்கள்  வழுக்கிச் செல்ல வாகாக  விரிந்திருந்த தார்சாலை. 

பாலைவனத்தைக் கூட சோலைவனமாக மாற்றும் திறன் படைத்த சிறந்த தோட்டக்காரர்கள் கண்கவர் பூந்தோட்டத்தை சாலையின் இருமருங்கிலும் தோற்றுவித்திருந்தார்கள். 

வண்டுகள் எந்தப் பூவினைத் தேர்ந்தெடுப்பது என்று தெரியாமல் வியக்க, தென்றல் காற்று மலர்களிடமிருந்து கொஞ்சம் வாசனையைத் திருடிக் கொண்டு வர, இயற்கை எழில் கொஞ்சும் பூந்தோட்டத்தைப்  பார்த்து ரசித்தவண்ணம் காரிலிருந்து இறங்கினார் ஜோசியர். 

“வாங்க, வாங்க” என்று எதிர்கொண்டு அழைத்துச் சென்றார் மன்னர் பாகநேத்ர பூபதி. சுருக்கமாக இனி பூபதி. 

“வணக்கம். உங்களின் அழைப்புக்கு நன்றி. உங்க குடும்பத்தோட முக்கியமான முடிவுக்காக ஜாதகம் பார்த்து சொல்றது என்னோட பாக்கியம்” என்றார் ஜோசியர். 

“சிரமப்பரிகாரம் செஞ்சுக்கோங்க. கோவிலுக்கு போன என் தங்கையும் வந்துடுவா. நம்ம ஜாதகத்தைப் பார்க்கலாம்” என்றார். 

அங்கு வந்த வேலையாள் ஜோதிடரை அவர் தங்க வேண்டிய இடத்திற்கு அழைத்துச் சென்றான். செல்லும் வழி எங்கிலும் டச்சு நாட்டுப் பளிங்குக் கற்களால்  இழைக்கப்பட்டிருந்தது. வெயில் காலத்தில் குளுமையாகவும், குளிர்காலத்தில் வெம்மையாகவும் இருக்கும்  நமது ஆத்தங்குடியின் பூ வேலைப்பாடு நிறைந்த பூக்கற்களும் பல அறைகளில் பதிக்கப் பட்டிருந்தது.  

பெரிய பெரிய தேக்கு மரத் தூண்களில் யாழியும், யானையும் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டிருந்தது. இயற்க்கை பொருள்களைக் கொண்டு வரையப்பட்ட பச்சிலை ஓவியத்தில் சொக்கனின் அழகில் மயங்கி வெட்கத்துடன் மீனாட்சி புன்னகைத்தாள். 

சுவற்றில் பல இடங்களில் மிருகங்களின் தலைகள் பாடம் செய்யப்பட்டிருந்தது. வேட்டை. பொழுதுபோக்கு என்று மன்னர்கள் கருத்தியதால், நேரம் கிடைக்கும்போது மற்ற பாளையக்காரர்களுடன் சேர்ந்து, காடுகளில் சென்று வேட்டையாடுவது வழக்கம். வேட்டையாடிய சிங்கம் புலி யானை தந்தங்கள் அனைத்தையும் பாடம் செய்து தருவதற்கு என்று ஒரு தனி குழு இருக்கிறது. 

அது தவிர பெரிய பெரிய தேக்கு அலமாரிகளில் பாலிஷ் செய்யப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளியினால் ஆன பரிசுப் பொருள்கள் கேடயங்கள் எல்லாம் பார்வைக்காக அடுக்கப்பட்டிருந்தன. சுவற்றில் மற்ற அரசர்களுடனும், வெள்ளைக்கார துரைகளுடனும் அரச குடும்பத்தினரின் புகைப்படங்கள் தொகுத்து அடுக்கப்பட்டிருந்தது.

அவர்கள் நடந்து கொண்டிருக்கும் பொழுதே எதிரில் வந்த மற்றொருவன் இவனிடம் “கந்தா, நெல்லு மூட்டை எடுத்துட்டு வரணும். எத்தனை எடுத்துட்டு வர்றது” என்று கேட்டான்

அதற்கு கந்தன் ’10 மகாராஜா எடுத்துட்டு வா” என்றான்.

தெற்கு பகுதிக்கு ஜோதிடர் புதியவர் என்பதால் அவர்கள் பேச்சு வழக்கு சுத்தமாய் புரியவில்லை. கந்தனிடம்

“நெல்லு மூட்டை10 மகாராஜாவா, அப்படின்னா? இது உங்க ரெண்டு பேருக்குள்ளற ஏதாவது சங்கேத வார்த்தையா”  என்றார்.

“சங்கேதமெல்லாம் ஒன்றும் இல்லைங்க ஐயா. அடுத்த வாரம் சமையலுக்கு நெல்லு எடுத்துட்டு வந்து அவிக்கணும். அது எத்தனை மூட்டை எடுத்துட்டு வர்றதுன்னு கேட்டான். அதுக்கு நான் 18 மூட்டை எடுத்துட்டு வான்னு சொன்னேன். 

அடுத்த வாரம் விருந்தெல்லாம் இல்லை. வீட்டு ஆளுங்க மட்டும் தான். அப்புறம் சமையல்காரங்க, வேலை செய்றவங்க. எங்களுக்கு மட்டும் தான் சாப்பாடு. அதனால 18 மூட்ட போதும் இல்லைங்களா” என்று பதில் கேள்வி அவரிடம் கேட்டான்.

ஏதேது இந்த அரண்மனையில் தினமும் கல்யாண சமையல்தான் போலிருக்கிறது.

“இருந்தாலும் நீ 18 என்று சொல்லலையே என்னமோ 10 மகாராஜான்னு தானே சொன்ன”

“அதுவா, நானு எட்டையபுரமுங்க. எங்க ஊர் பக்கம் 8ன்னு சொல்ல மாட்டோம். அதுக்கு பதிலா ‘மகாராஜா’ ன்னு சொல்லுவோம். இப்ப 7க்கு அப்பறம் மகாராஜா, 17க்கு அப்பறம் பத்து மக ராஜா”

“ஓ எட்டப்பன் ஊரா நீ” என்றார் ஜோசியர். கட்டபொம்மன் திரைப்படத்தில் எட்டப்பனின் செயல்களை அவரும் பார்த்திருக்கிறாரே. 

“அதானங்க எட்டப்பன்னு கேவலமா பேசுறீங்க. எங்க ராஜாவுக்கு எப்படி இந்தப் பெயர் வந்தது தெரியுமா? அவர்கிட்ட ஒருத்தன் நான் செத்துப் போனா என்னோட எட்டு பிள்ளைகளையும் பார்த்துக்க ஆளில்லையேன்னு கவலைப்பட்டான். அந்த எட்டு பேரையும் நானே தத்து எடுத்து பாத்துக்குறேன் தத்து எடுத்து 8 பிள்ளைகளுக்கும் அப்பனா இருந்தாரு அதனாலதான் அவருக்கு பெயர் எட்டப்பன்”

கட்டபொம்மன் கதை  இதெல்லாம் காமிக்கலையே என்று யோசித்துக் கொண்டிருந்தார் ஜோசியர். 

“நீங்க சினிமாவை பார்த்துட்டு எட்டப்பன் என்று சொல்லிட்டு இருக்கீங்களா எட்டப்ப நாயக்கருக்கும் கட்டபொம்மு  நாயக்கருக்கும் எல்லை  பிரச்சனை இருந்துச்சு. மூணு கிராமங்களுக்காக ரெண்டு பேரும் அடிக்கடி சண்டை போட்டுப்பாங்க. 

அதுக்காக தெற்கத்தி பாளையத்திலேயே முதல் பாளயமா 500 கிராமங்களை வைத்து ஆட்சி செஞ்ச எட்டயபுரத்து சமாஸ்தானத்து  ராஜாவ சினிமால கெட்டவரா காமிச்சுட்டாங்க. அதனால எங்களுக்கெல்லாம் ஒரே வருத்தம்”

தங்கும் அறைக்கு அழைத்துச் செல்வதற்குள் ஒரு வரலாற்றுப் பாடத்தையே கந்தன் ஜோசியருக்கு எடுத்துவிட்டான்.

ஜோசியர் தங்கும் அறை அவ்வளவு நவீனமாக இருந்தது. பெரிய கட்டில்கள் அலங்கார நாற்காலிகள், பூக்குவளைகள், படுக்கையில் அமர்ந்து கொண்டே பெல் அடித்தால் வேலைக்காரர்கள் வரும் வசதி. அத்துடன் ஒரு பெரிய அலமாரி முழுவதும் உயர்ரக மது வகைகள்.

“கந்தா, இது யாரு ரூமு” என்று வியந்து பார்த்தபடி கேட்டார். 

“இது ஸ்பெஷல் அறை.  இதுல தான் அந்த காலத்தில் துரைமார்கள் எல்லாம் வந்து தங்குவாங்க.

இங்க பாத்தீங்களா, அவங்களோட பேப்பர் எல்லாம் இஸ்திரி பண்றதுக்கு இஸ்திரி பெட்டி. 

துரைமாருங்க படிக்க தினம் காலைல ட்ரெயின்ல இங்கிலீஷ் செய்தித்தாள் வரும். திருநெல்வேலியில் இருந்து வாங்கிட்டு வந்து அவங்க எந்திரிக்கறதுக்குள்ளார இஸ்திரி போட்டு, படிக்கிறதுக்கு ரெடியா வச்சிருப்போம்”

“அது சரி, எதுக்குய்யா பேப்பரை இஸ்திரி போடுறீங்க?” ஜோதிடருக்கு சுத்தமாக புரியவில்லை

“அப்புறம் பேப்பர் சரியா காயலைன்ன தொரைங்க படிக்கும் பொழுது கையில் இங்கு பட்டுருமே”

அதனாலதான் அந்த காலத்துல பெரிய தொரையான்னு நெனைப்புன்னு கிண்டல் பண்ணுவாங்களோ?

அரண்மனை பழக்கவழக்கங்கள் அனைத்தும் வித்தியாசமாகவே இருந்தது அவருக்கு.

 

error: Alert: Content selection is disabled!!