உயிரைத் திருடும் அழகியே 17 – 1

அத்தியாயம் 17

 

 

அந்த ரியாலிட்டி ஷோவின் இறுதி மேடை. அதற்கு என்றே பிரத்தியேகமாக மிகப்பெரிய செட்டை அமைத்திருந்தார் விக்ரமன்.

 

காட்சி முப்பத்திஎட்டு

 

 

மேடைக்குக் கீழே, இறுதிப்போட்டியாளர்களை நேரில் காண்பதற்காக மக்கள் நிறைந்து வழிந்தனர். கண்களைக் கூசச் செய்யும் ஒளிவெள்ளம் பாய்ந்துகொண்டிருக்க, மாறி மாறி நிறங்களைப் பாய்ச்சும் பெரிய பெரிய டிஸ்கோ லைட்டுகள் உயர்ந்து பதிந்துகொண்டிருக்க, நட்சத்திரங்களாய் மின்னி மின்னி ஒளிரும் பெரிய பெரிய மின்விளக்குகள் மின்னிக்கொண்டிருக்க, பின்னணியில் அந்த மேடையையே அதிரச் செய்யும் இசையுடன் போட்டியாளர்கள் ஐவரையும் மக்களின் கரகோசத்தோடு மேடைக்கு அழைத்தார் மக்களின் பிரதிநிதி.

 

பிரமாண்ட இசை ஒரு பக்கம், அவர்களின் மீது பாய்ந்த வெளிச்சம் மறுபக்கம், ஓயாது உயர்ந்து ஒலித்த மக்களின் கரகோசம் இன்னொரு பக்கம் போதாக்குறைக்கு பெரிய பாம்புகள் போலே நீண்டு அவர்களையே படம் பிடித்த கமெராக்கள் என்று ஒரு மாயலோகத்துக்குள் புகுவது போல அந்த மேடைக்கு வந்து நின்றனர் ஐவரும்!

 

யார் வெற்றியாளர் என்பதைத் தாண்டி ஒரு சந்தோசம். எத்தனையோ நாட்களுக்குப் பிறகு பல மனித முகங்களைப் பார்க்கும் ஆனந்தம். குடும்பத்தாரைச் சந்திக்கப்போகும் சந்தோசம் என்று அவர்களின் மனதின் உற்சாகத் துள்ளலுக்கு அளவே இல்லாமல் இருந்தது. மக்களும் அதை இரட்டிப்பாக்கினர்.

 

மக்களுக்குள் இருந்து, ஐவரின் உறவுகளின் நண்பர்களின் பிரத்தியேக அழைப்புகள், யார் என்று அந்த ஜனத்திரளுக்குள் இவர்களின் தேடல்கள் என்று எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி, ஆரவாரம், சந்தோசம், துள்ளல். போட்டியாளர்களின் குடும்பங்கள் முன்னிருக்கையில் இருக்கக் கண்டு, அப்பா வந்திருப்பாரா என்று தேடி ஏமாந்தன பிருந்தாவின் விழிகள்.

 

வாரா வாரம் வெளியேறியவர்கள் குடும்பத்துடன் வந்திருக்க, அப்பா மட்டும் ஏன் வரவில்லை?

 

பணமில்லையோ? அண்ணாவிடம் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டுத்தானே வந்தாள். அப்போதும் அவருக்கு என் மீது கோபமோ என்று சிந்திக்கவில்லை அவள்.

 

அவ்வளவு தன்னம்பிக்கை. நான் சொன்னால் அப்பா கேட்பார் என்கிற நம்பிக்கை. என்னால் முடியும் என்கிற துணிவு. அதற்குமேல் சிந்திக்க முடியாமல் மக்களின் பிரதிநிதி, அவர்களைப் பற்றி இத்தனை நாட்களும் அசராமல் நின்று பிடித்த அவர்களின் திறமை பற்றி புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

 

கடைசியில் ஐந்தாவது இடத்தை அவளும், நான்காவது இடத்தை தாராவும் பெற்றுக்கொண்டதை அவர் அறிவித்தபோது அவளுக்கு மகிழ்ச்சியே!

 

அப்படியே மூன்றாவது இடத்தை ரதன் பெற்றுக்கொண்டிருந்தான்.

 

மேடையில் தற்போது நின்ற இருவருமே அவளின் பிரியத்துக்கு உரியவர்கள். இருவரில் யார் வென்றாலும் தான் வென்றதைப்போல கொண்டாடக் காத்திருந்தாள் பிருந்தா.

 

சொல்லுகிறார் இல்லையே என்று பரபரத்துக்கொண்டு அவள் நிற்க, சரவெடிகளுக்கு மத்தியில் அங்கிருந்த எல்லோரினதும் இதயத் துடிப்பை எகிறச் செய்துவிட்டு ராகவனை வெற்றியாளராகவும் அஜய் இரண்டாமிடம் என்றும் அறிவித்தார் மக்களின் பிரதிநிதி.

 

முதலாவது ஆளாக மேடைக்கு ஓடிப்போய், “சூப்பர் பா! நீங்க சாதிச்சிட்டிங்க!” என்று அவரைக் கட்டிக்கொண்டாள் பிருந்தா.

 

நாசுக்காக அவளை விலக்கிவிட்டு மற்றவர்களின் வாழ்த்தைப் பெற்றுக் கொண்டிருந்தார் ராகவன்.

 

அஜய்க்கும் வாழ்த்து அவள் சொல்ல, முதலிடத்தைப் பிடிப்போம் என்று முழுதாக நம்பிக்கொண்டிருந்திருப்பான் போலும், ஏமாற்றத்தை மறைத்து மற்றவர்களுக்குள் தன்னைத் தொலைத்துக்கொண்டிருந்தான் அவன்.

 

காட்சி முப்பத்திஒன்பது

 

வாழ்த்துகள், ஆரவாரக் கூச்சல்கள், அணைப்புகள், செல்பிக்கள் என்று அந்த செட் தன் கட்டுப்பாட்டை இழந்து கலகலத்துக்கொண்டிருந்தது. அவர்களின் அருகே செல்ல மனம் விரும்பினாலும், இன்றைய நிகழ்வின் நாயகர்கள் அவர்கள் இருவரும். எங்கே போய்விடப் போகிறார்கள்? என்று சற்றே ஓரமாக அவள் ஒதுங்கியபோது, ஒரு இளைஞன் அவளிடம் வந்தான்.

 

“ஏன்கா இப்படி பண்ணினீங்க?”

 

குழப்பமும் சிரிப்புமாகப் பார்த்தாள் பிருந்தா. என்ன செய்தாள் அவள்?

 

“நீங்க எவ்வளவு ஸ்மார்ட் தெரியுமா? உங்களை எல்லாம் அங்க வச்சிருந்தோம். நீங்க பாத்தா அந்த அஜய் சாரோட நடிப்பை நம்பிட்டீங்களே அக்கா.” என்றான் அவன் கவலையாக.

 

“நடிப்பா? அஜய்யா?” அவளுக்குச் சிரிப்பு வந்தது.

 

மீசை அரும்பும் வயதுக்காரனை கனிவுடன் நோக்கி, “அப்படி எல்லாம் இல்லடா தம்பி.” என்றாள் பாசத்தோடு.

 

“போக்கா, உனக்கு இன்னும் ஒண்ணுமே புரில. வீட்டுக்குப் போய் புரோகிராம் ஒன்னுவிடாம புல்லா பாரு. அப்பத்தான் உனக்குப் புரியும். நீ லவ்வே பண்ணமாட்டேன்னு சொன்னதுக்காகத்தான் அவர் உன்னை லவ் பண்ற மாதிரி ஆக்ட் பண்ணினார். அஜய் சார் மட்டுமில்ல ராகவன் சாரும் செமையா ஆக்ட் பண்ணினார் தெரியுமா? நீ நல்லா நம்பி ஏமாந்திட்ட. இல்லனா அந்தக் கப்பு உனக்குத்தான் கிடைச்சிருக்கும். நீ பாவம் கா.” என்று, அவளுக்காக வருந்தினான் அவன்.

 

இன்னுமே அவளுக்குச் சிரிப்புத்தான் வந்தது. ஆனால், காட்டிக்கொள்ளவில்லை. அவ்வளவு தீவிரமாக அவளிடம் நிறையச் சொல்லிக்கொண்டிருந்தான் அவன்.

 

கேட்கக் கேட்க, அதிர்வும் அவன் சொல்வதுபோல் இருக்காது என்கிற நம்பிக்கையும் அவளுக்குள் மாறி மாறி எழுந்தன.

 

“ஆனாக்கா, யார் என்ன சொன்னாலும் எனக்கும் என்னோட பிரெண்ட்ஸ் எல்லாருக்கும் உன்ன ரொம்பப் பிடிக்கும்கா. ஒரு நாளைக்கு வீட்டுக்கு வாக்கா. அம்மா கூட்டிட்டு வரச்சொன்னாங்க. சினிமாக்காரங்க சினிமால மட்டுமில்ல நிஜத்துலையும் நல்லா நடிப்பாங்க. அது இந்தப் பொண்ணுக்குத் தெரிய மாட்டேங்குதுன்னு சொல்லி வருத்தப்பட்டாங்க அக்கா.” என்றவன், அவளோடு கூடவே நின்று செல்பி ஒன்றை எடுத்துக்கொண்டு விடைபெற்றான்.

 

அவனது பாசத்தை எண்ணி நெகிழ்ந்த மனது அவன் சொன்னதை எண்ணித் தனக்குள் சிரித்துக்கொண்டது. ‘சின்னப் பையன், எதையோ பிழையா விளங்கி வச்சிருக்கிறான்.’ என்று எண்ணினாலும் அவள் விழிகள் அவளின் நம்பிக்கைக்கு உரிய இருவரிடமும் நிலைத்தது.

 

வாழ்த்துச் சொல்லப்போனபோது தவிர்த்தார்களோ?

 

ச்சே ச்சே! மேடையையே சுற்றிவளைத்த ஆட்களுக்கு மத்தியில அவளோடு மட்டும் நின்று பேசமுடியுமா என்ன?

 

“ஒண்ணுக்கும் யோசிக்காதமா. நீயும் வின்னர்தான்.” என்று இதமாகச் சொன்ன வைதேகி, “ஆள் இஸ் வெல் பிருந்து” என்ற இன்னொரு போட்டியாளர், “எல்லாத்தையும் ஜாலியா எடுத்துக்கோ!” என்ற சாந்தினி என்று அவளைப் பாராட்டிய ஒவ்வொருவரின் வார்த்தைகளிலும் மெல்லிய சோகம் இழையோடுகிறதோ என்று இப்போது தோன்றத் தொடங்கியது.

 

மீண்டும் ராகவனையும் அஜய்யையும் பார்த்தாள். இருவரையும் அவர்களின் குடும்பங்கள், உறவினர்கள், நண்பர்கள் என்று மொய்த்திருந்தனர். தன்னைத் தேடுகிறதா அவர்களின் கண்கள் என்று தேடினாள். இல்லையே! சும்மாவேனும் அவளை அருகே அழைத்து அறிமுகம் செய்யவில்லையே.

 

முதலில் இதைக் குறையாக எடுப்பதா என்றே குழம்பிப்போனாள் அவள்.

 

நோ! அவன் சின்னப்பிள்ளை. சும்மா சொன்னதை நினைச்சு நான் குளம்புறது முட்டாள் தானம். என்று சொல்லிக்கொண்டாலும் அவன் சொன்னவைகள் மனத்தைவிட்டு அகல மறுத்தன.

 

குழம்பிய குட்டையாக மனம் மாறிப்போனதாலோ என்னவோ, நிறைந்து வழிந்த மக்களுக்கு மத்தியிலும் தனித்து நிற்பது போலிருக்க, அப்பாவை மிகவுமே தேடியது மனது.

 

அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட ஹோட்டலில் பார்ட்டி ஒழுங்கு செய்திருந்தனர். ஒருவழியாக உடமைகளோடு ஃபோனும் கிடைத்துவிட, உடனேயே வீட்டுக்கு அழைத்தாள். யாருமே எடுக்கவில்லை.

 

லைவ் புரோகிராம் இல்லைதானே. அதைவிட இது நாளை தானே ஒளிபரப்பாகும். வேலைக்குப் போயிருப்பார்கள். வீட்டில் இருக்கும் நேரமாகப் பார்த்துக் கதைக்கவேண்டும் என்று நிமிர்ந்தவளுக்கு, நேரம் செல்லச் செல்ல அந்தச் சின்னப்பெடியன் சொன்ன தகவல் வலுத்துக்கொண்டு போவது போலிருந்தது. அவன் மட்டுமல்ல, அவளுடன் செல்பிக்கள் எடுத்துக்கொண்ட இன்னும் சிலரும் அதையேதான் வலியுறுத்த முனைந்ததாக இப்போது பட்டது.

 

மனதில் ஒரு சஞ்சலம் குடி புகுந்தது. தமையனுக்கு அழைத்தாள். அந்த இலக்கம் தொடர்பில் இல்லை என்றதும் மனதில் முதல் பயமணி அடித்தது. அப்படி இலக்கம் மாற்றுகிறவன் அல்ல அவன்.

 

பார்ட்டி முடிந்து அவரவர் அவரவரின் வீடுகளுக்குப் புறப்பட்டனர். அவளைப்போல, வெளிமாநிலம் அல்லது வெளிநாட்டினருக்கு அந்த ஹோட்டலிலேயே அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தது.

 

போகும்போது விடைபெறுவார்களா என்று கவனித்தாள். விடைபெற்றார்கள் தான். ஆனால், கூட்டத்தோடு கூட்டமாக சொல்லிக்கொண்டு புறப்பட்டுவிட்டிருந்தனர்.

 

தன்னைத் தனிமையில் சந்திப்பதைத் தவிர்க்கிறார்களோ என்கிற சந்தேகம் எழ, வலித்தது அவளுக்கு. அதுவும் அஜய்… எதிர்காலம் என்று எண்ணியவனாயிற்றே! அதற்குமேல் அங்கிருக்க முடியவில்லை. களைப்பாக இருப்பதாகச் சொல்லி விடைபெற்றுக்கொண்டு அறைக்குள் அடைந்தவளுக்கு ஏனோ இரு கண்ணீர் துளிகள் கண்களை விட்டு வெளியேறியது.

 

வீட்டுக்கு அழைத்து அழைத்தே ஓய்ந்துபோனவள், இத்தனை நாட்களாக இருந்த மன அழுத்தம், தூக்கமின்மை, மனச் சஞ்சலங்கள் அணைத்தாலும் மனதளவில் களைத்துப் போயிருந்ததால் தன்னை அறியாமலேயே நல்ல உறக்கத்துப் போயிருந்தாள்.

 

காட்சி நாற்பது

 

காலையில் எழும்போதும் பத்துமணி ஆகியிருந்தது. அப்போதும் வீட்டில் யாரும் எடுக்கவில்லை என்றதும் அப்படி என்னதான் நடந்தது என்று அறிய எபிசோட்களை எடுத்துப் பார்த்தாள். யூ டியூப் வீடியோக்கள், ரிவியூக்கள் எல்லாமே ஆரம்பத்தில் அவளை புகழோ புகழ் என்று புகழ்ந்து, பின் ஏமாந்துவிடக் கூடாது என்று பரிதவித்து, என்ன இப்படிச் செய்துவிட்டாளே என்று ஏமாற்றத்தைத் தெரிவித்து என்று தோண்டத் தோண்ட அதிர்ச்சி மட்டுமே காத்திருந்தது அவளுக்கு.

 

அத்தனை வசைபாடல்கள். சில முகம் சுளிக்கும் மீம்ஸ்கள். பல மோசமான சொல்லாடல்கள். பார்க்கப் பார்க்க மனம் அதிர்ந்தது. வாசிக்கவே மனம் கூசும் வார்த்தைகளை மிகச் சாதாரணமாக சமூக வலைத்தளங்களில் கொட்டியிருந்தனர்.

 

அவளைப் பற்றியா இத்தனை வசைபாடல்கள். அவளால் நம்பவே முடியவில்லை.

 

இதுவே அவள் தன்வீட்டுப் பெண்ணாக இருந்தாலும் இப்படித்தான் முச்சந்தியில் வைத்துத் தூற்றுவார்களா? மூடி மறைத்திருக்க மாட்டார்கள்? மறைக்க வேண்டாம், தரமான வார்த்தைகளையாவது பிரயோகிப்பது இல்லையா? ஒருவரின் முகத்தைப் பார்த்துப் பேச வேண்டியதில்லை என்கிற வசதியில் தம் வக்கிரம் எல்லாவற்றையும் கொட்டி அவளைத் தூற்றியிருந்தவர்களுக்குப் புரியவில்லையா, இப்படி எல்லாம் பேசக்கற்றுக்கொண்ட நீ எப்படியான மனிதம் நிறைந்தவன் என்று?

error: Alert: Content selection is disabled!!