“துணிவா இரு. யாரையும் நம்பாத. ஆனா அவங்கள நீ நம்பலை என்கிறதை அவங்களுக்குக் காட்டிக்கொடுக்காத. கவனமா இரு. எந்த ஆம்பிளையா இருந்தாலும் அவன் கண்ணை நேராப் பாத்துப் பேசணும் நீ. எந்த இடத்துலயும் உன் கண்ணு தடுமாறி விலகக் கூடாது. விலகினா எதிர்ல நிக்கறவன், இவளை நோண்டிப் பாப்பமான்னுதான் யோசிப்பான். பொண்ணுங்க கண்ணை வச்சே அவங்க காரக்டரை கண்டுபிடிப்பாங்க ஆம்பிளைங்க. அவங்க கண்ணை நேராவே பாத்து நீ பேசினா திடமனசுக்காரின்னு அர்த்தம். அவங்க கண்ணை பாக்க முடியாம அங்கேயும் இங்கயும் பாத்தேன்னா தடுமாறக்கூடிய ஆள் நீன்னு அர்த்தம். கண்ணைப் பாக்க பயந்தீன்னா நீ பயந்தவன்னு அர்த்தம். நீயே முடிவு பண்ணிக்கோ, நீ எப்படி இருக்கணும்னு.”
சவீதா சொல்லச்சொல்ல, ஒரு பெண் வெளியுலகத்தை நோக்கி வருவதென்றால் இந்தச் சமூகத்தின் முன் எவ்வளவு கவனமாக இருக்கவேண்டும் என்று புரிவது போலிருந்தது.
வாழ்க்கை ஒன்றும் சாதாரணமானது அல்ல. வாழ்வது இலகுவானதும் அல்ல. அப்படியிருக்க, ஒரு இலட்சியத்தை அடைவதை, சுயகட்டுப்பாடு, நிமிர்வு, தைரியம், அலைபாயாத திடமனது என்று அனைத்தையும் கொண்டே சாத்தியமாக்க முடியும் என்று புரிந்தது அவளுக்கு. என்ன, புரிந்தவை அனைத்தும் நடுங்க வைத்தது.
“ஒருத்தன் பல்லிளிப்பான், ஒருத்தன் சொறிஞ்சு பாப்பான், ஒருத்தன் உண்மையாவே நட்பு பாராட்டுவான், இன்னொருத்தன் தன்னோட குடும்பத்து பொண்ணுமாதிரி பாப்பான். இப்படி எல்லா வகை மனுசரும் சூழ்ந்து இருக்கிற உலகம் அது.
அதுக்குள்ளே எவன் நல்லவன் எவன் கெட்டவன்னு உன்னால கண்டு பிடிக்கவே முடியாது. நல்லவன்னு நினைச்சு நீ பழகிக்கொண்டு போகும்போது அவன் கெட்டவனா மாறுவான். கெட்டவன்னு ஒருத்தனை நீ ஒதுக்கி வச்சிருப்ப அவன் ஏதோ ஒரு இடத்தில நீ விழுறப்போ வந்து கை குடுப்பான்.
ஆக, உனக்கு எல்லாரும் தேவை. ஆனா எவனையும் நம்பாத!” அவள் சொல்லச் சொல்ல இவளுக்குத் தலையைச் சுற்றியது.
இப்படி ஒரு உலகத்தில் அவள் வேலை செய்யத்தான் வேண்டுமா?
“எல்லாத்தையும் விட, உன்னைப்பத்திய ஒரு தவறான கணிப்பை ஒருமுறை நீ குடுத்திட்ட. அதை வச்சே உன்ன ஈஸியா விழுத்தலாம்னு வருவாங்க. ஜாக்கிரதையா இருந்துக்கோ.” என்றவள், அவள் பயந்து போயிருப்பது உணர்ந்து அவளருகில் வந்து அமர்ந்து தலையைத் தடவிக்கொடுத்தாள்.
“இதெல்லாம் ஆரம்பத்துக்குத்தான் பயமா இருக்கும். அந்த உலகத்துக்கு ஏத்த மாதிரி நீ மாறிட்ட என்று வை, அதுக்குப்பிறகு நீயே அதைவிட்டு வரமாட்ட. அவ்வளவு அழகான உலகமும் அதுதான். சோ பயப்படாத, சந்தோசமா இரு. இனி உனக்கு நிச்சயமா நல்ல காலம் தான்!” என்றாள் ஆதுரமாய்.
எந்தக்காலம் வந்தும் இனி என்ன ஆகப்போகிறது? குடும்பத்தை இழந்து, அவள் எந்த உயரத்துக்குப் போயும் என்ன பிரயோசனம்? அவளின் வெற்றியைக் கொண்டாட யார் இருக்கிறார்கள்? கலக்கிற செல்லம்மா என்று ஒரு வார்த்தை சொல்ல யார் இருக்கிறார்கள்?
கண்ணீர் பொங்கி வழிய அவளின் மடியில் சரிந்து விம்மினாள் பிருந்தா. இந்த ஒற்றை மடிக்காக எத்தனையோ நாள் காத்திருந்தவள் போன்று அழுது தீர்த்தாள். இன்றோடு அழுது முடிக்கட்டும் என்று சவீதாவும் தடுக்கவில்லை.
அதற்குப்பிறகு ஆரம்பித்தது அவளின் திரை வாழ்க்கை. பேசும் பெரிய கண்களோடும் ஆர்ப்பாட்டம் இல்லாத நளினமான நடிப்பும் சேர்ந்துகொள்ள அடுத்த மூன்று படங்களையும் அவளை வைத்தே தயாரித்து வெற்றிப்படங்களாக மக்கள் முன்னே கொண்டுபோய்ச் சேர்த்திருந்தது ‘ரெயின்போ பிலிம் புரடக்சன்’.
“அந்த ரெயின்போ பிலிம் புரடக்சன்ர பேரன் தான்மா இந்தப் படத்தின்ர ஹீரோ.” என்றவள் கண்களால் அவனைத் தேடிக் கண்டுபிடித்ததும், “ஜேகே! இங்க ஒருக்கா வாங்கோ!” என்று சத்தமாக அழைத்தாள்.
கண்களில் கேள்வியுடன் அவன் வரவும், அவளுக்குள் சிரிப்புக்கு குமிழியிட்டது. இதுவே சாதாரணமாக அழைத்திருக்க வந்திருப்பானா? எருமை மாட்டுக்குமேல் மழை பெய்தது போல் காதிலேயே வாங்காமல் சென்று இருப்பான். அகம்பாவம் பிடிச்சவன்.
அவன் வந்ததும், “இவர் தானம்மா அவர். பெயர் ஜேகே; ஜெயகாந்தன். அருமையான மனுசன். மனுசரை மதிக்கிறதுக்கு இவரை கேட்டுத்தான்.” என்று அறிமுகம் செய்து வைத்தவளின் உதட்டில் விஷமச் சிரிப்பு.
“வணக்கம் தம்பி, சுகமா இருக்கிறீங்களா?” என்று அன்போடு விசாரித்தார் சுபாகரி.
“ஆமா ஆன்ட்டி. நீங்க எப்படி இருக்கீங்க?”
மலர்ந்த சிரிப்போடும் கனிவோடும் உரையாடியவனையே பார்த்தவளின் கண்கள் சிரித்தன.
‘உனக்கு இது பொருந்தலையே ராஜா! அம்மாவையும் டிஸ்போஸ் பண்ணச் சொல்ல வேண்டியதுதானே.’
அவன் எப்போதும்போல அவள் பக்கம் திரும்பவே இல்லை. அவர் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தான்.
“நல்லாருக்கிறன் தம்பி. நீங்க செய்த உதவியைப்பற்றி மகள் இப்பத் தான் சொன்னவா. எல்லாத்துக்கும் நன்றி அப்பு. பாதுகாக்க வேண்டிய நாங்க கையை விட்டுட்டோம். யார் எண்டு தெரியாத நீங்க வாழ்க்கை குடுத்து இருக்கிறீங்க. எண்டைக்கும் மறக்கமாட்டோம்.” என்றார் சுபாகரி நெகிழ்ந்து கலங்கிய குரலில்.
“அதெல்லாம் ஒண்ணுமில்ல ஆன்ட்டி. நீங்க எதைப்பற்றியும் கவலைப்படாதீங்க!” என்றவனை, வெளியே சிரித்துக்கொண்டிருந்தாலும் உள்ளூர வியப்புடன் நோக்கினாள் அனன்யா.
எத்தனை பாந்தமாக உரையாடுகிறான்? அதை சுபாகரியும் உணர்ந்திருக்க வேண்டும். “உண்மையாவே அருமையான பிள்ளைதான்!” என்று மகளிடம் சிலாகித்தார்.
‘ஆமா ஆமா! அந்த ‘அ’னாக்குப் பதிலா ‘எ’னா போட்டா இன்னுமே பொருத்தமா இருக்கும்!’ என்று எண்ணியவளுக்குச் சிரிப்பை அடக்குவது பெரும் கஷ்டமாக இருந்தது.
“ஹாய் அண்ணா! நான் தான்யா.” என்று, அவனிடம் ஓடிவந்து கைகொடுத்தாள் அனன்யாவின் பெரிய தங்கை. சினிமாக்காரர்களை சந்திப்பது அவர்களுக்கு எல்லாம் குதிரைக்கொம்பு தானே!
“நானும் நானும்! அண்ணா, நான் தான் தாமிரா. அக்காட குட்டித் தங்கச்சி!” என்றபடி கைகொடுத்தாள் சின்னவள்.
“ஹாய்மா…” என்று கைகொடுத்து, என்ன படிக்கிறார்கள், அவர்களுக்கு என்னவற்றில் ஆர்வம் அதிகம் என்று அவர்களுக்கேற்றவாறு பேசிக்கொண்டிருந்தவனைப் பார்க்கப்பார்க்க அனன்யாவுக்குப் பொறுக்கவேயில்லை.
சட்டென்று, அவன் முன்னே வந்து நின்று, “ஹாய் ஜேகே! நான்தான் இந்த ரெண்டு வாலுகளின்ரயும் ஒரேயொரு அக்கா. அனன்யா ஆதிரையன்!” என்றபடி கையை நீட்டினாள்.
அவனோ, “அப்போ உன்னோட ஹாபி என்ன?” என்று, சின்னவளிடம் வெகு மும்முரமாக விசாரித்துக்கொண்டு இருந்தான்.
‘அடங்கவே மாட்டியாடா நீ!’ சிரிக்கும் கண்களால் முறைத்தவளுக்கு, இப்போது ஏனோ அவனது திமிர்த்தனத்தை அவ்வளவு பிடித்தது. இதோடு மூன்றாவது முறை… அவன் அவளை அறிமுகம் செய்துகொள்ளவே இல்லை. ராஸ்கல்!
“என்னக்கா நீ. ஒரு படமே வேக் பண்ணி இருக்கிறீங்க. நல்லாத் தெரிஞ்சவரிட்டப் போய் ஆராவது அறிமுகம் செய்து கொள்ளுவீனமா?” என்று கேட்டாள் பெரியவள்.
அவன் உதட்டினில் மின்னலாய் ஒரு சிரிப்பு வந்துவிட்டுப் போனது போலிருந்தது.
உண்மையா என்று அவள் ஆராயத் தொடங்கும்போதே எழுந்து, வெளியே கேட்ட ஆரவாரத்தைக் கவனித்துவிட்டு, “ஓகே ஆன்ட்டி. லன்ச் வந்திருக்குப் போல. வாங்க சாப்பிடலாம்.” என்று அழைத்துக்கொண்டு போனான்.
அங்கே விக்ரமனும் சுந்தரேஸ்வரும் ஏதோ தீவிரமாகப் பேசிக்கொண்டு இருந்தனர். அந்தக் காட்சியே அவளுக்குப் பிடிக்கவில்லை. அப்பாவிடம் அவருக்கு என்ன பேச்சு என்றுதான் தோன்றியது. இவர்களைத் தனியே விட்டுவிட்டு இந்த ஷியாம் எங்கே போனான்?
விழிகளைச் சுழற்ற, அங்கே அர்ஜூனுடன் வந்துகொண்டிருந்தான் அவன். முகத்தில் சங்கடம் தெரிந்தது. ஆக, அவளின் அம்மா அப்பா வந்திருப்பதை அறிந்து வலுக்கட்டாயமாக ஷியாமோடு வருகிறான் அர்ஜுன்.
லன்ச் கொண்டுவந்தவர்களுக்கு உதவிக்கொண்டிருந்த ஜேகேயின் முன்னால் ஓடிப்போய் நின்றாள் அனன்யா.
“நான் இண்டைக்கு நல்ல சந்தோசமா இருக்கிறன் ஜேகே. அதைக் கெடுக்கிற மாதிரியே வாறான் இந்த அர்ஜுன். அவனைப் பாத்தாலே மூட் அவுட் ஆகிடும் போல இருக்கு. அப்பாவும் என்னெண்டு ரியாக்ட் பண்ணுவார் எண்டு தெரியாது. ஏதாவது செய்து இங்க இருந்து அவனை அனுப்பி விடுங்கோ… பிளீஸ்!” என்று அவனுக்கு மட்டும் கேட்கும்படி சொல்லிவிட்டுப் போனவளையே சற்றுநேரம் பார்த்திருந்தான் ஜேகே.
அதன்பிறகு அன்று முழுக்க அர்ஜுனைக் கண்ணாலும் காணவில்லை அனன்யா.

