அத்தியாயம் – 22
அன்றே மீனாட்சியிடம் வேலையை விட்டு நின்று விடுவதாக திவ்யதர்ஷினி தெரிவித்தாள். அவர் எத்தனையோ முறை ஏன் என்று கேட்டுப் பார்க்க, ‘உன் மகனால்’ என்று அவளால் உண்மையைச் சொல்ல முடியுமா என்ன?
ஆறு மாதங்கள் கடந்து விட்டது. அதனால் அவள் மேற்கொண்டு தன் கனவுகளை நோக்கிப் பயணிக்க போவதாகச் சொல்லிவிட்டாள். அதைக் கேட்ட மீனாட்சி ஒருவிதக் கவலையில் ஆழந்தார்.
இத்தனை நாட்கள் அவள் வீட்டில் இருக்கையில் வீடே கலகலவென்று இருந்தது. அதுமட்டுமல்லாமல் அவரின் குறையை அவர் குறையாகக் கூட உணரவில்லை. அவள் அப்படி உணர வைக்கவில்லை. இப்படிப்பட்ட ஒரு பெண்ணை எங்கு தேடினாலும் கிடைக்கமாட்டாள்.
சத்தியமாக அவளை வேற்றாளாக அவரால் எண்ணவே முடியவில்லை அத்தனை அந்நியோன்யமும் அக்கறையும் அவளிடம் இருத்தது. இனி அவளைப் பார்க்க முடியாதா என அவர் மனம் வேதனையில் வலித்தது.
அவர் ஏதேதோ கனவுகளுடன் இருந்தாரே. தன் மகனுக்கு இவளைப் பிடித்திருக்கிறது என்ற அவர் ஆசையில் மண் விழுந்துவிட்டதா? தவறாக மகனை எடை போட்டுவிட்டார். மித்ரனுக்கு இவளைப் பிடித்திருந்தால் அவள் நெற்றியில் இருந்து இரத்தம் வருவதைப் பார்த்துப் பதறியிருப்பானே. திட்டியிருக்க மாட்டான்.
‘சரி, தான் கொடுத்து வைத்தது அவ்வளவே. அத்தோடு தனக்கு எதுவும் நிரந்தரமில்லை’ என மனதைத் திடப்படுத்திக் கொண்டார் மீனாட்சி.
பாராட்டு விழா முடிந்த மறுநாளே அவள் வேலைக்கு வரும் கடைசி நாள் என முடிவாகச் சொல்லிவிட்ட பின்னர் அவரால் மேற்கொண்டு என்ன சொல்ல முடியும்? அவளை இங்கேயே வாழ்நாள் முழுவதும் பிடித்து வைத்துக் கொள்ள அவருக்கு அதிகாரமும் இல்லை, உரிமையும் இல்லை.
ஏற்கனவே ஒத்துக்கொண்டதால் மட்டுமே பாராட்டு விழாவுக்கு மீனாட்சியின் உதவியாளராகச் செல்ல முடிவு செய்திருந்தாள் திவ்யதர்ஷினி.
அன்று மாலையில் வீடு திரும்பிய மித்ரனிடம் அதைப் பற்றி மீனாட்சி சோகத்துடன் சொல்ல, “வேலைக்குத் தானே வந்தாங்க. போகட்டும். இவங்க இல்லைன்னா வேற ஆளைத் தேடிக்கலாம். இதெல்லாம் சம்பளத்தை ஏத்தறதுக்குப் போடற பிளானா இருக்கும்” என நாக்கில் நரம்பில்லாமல் பேசினான்.
மீனாட்சி அதைக் கடைசி ஆயுதமாக எண்ணியே மகனிடம் சொன்னார். உண்மையில் அவள் மேல் விருப்பமிருந்தால் சிறிதேனும் பதறுவான் என நம்பினார். ஆனால் கிடைத்த விடையில் தோல்வியடைந்ததைப் போல் துவண்டார்.
“வரேன் ஆன்ட்டி” எனப் பின்னால் இருந்து குரல் கேட்டது. மித்ரன் திரும்பிப் பார்க்க திவ்யதர்ஷினி நின்று கொண்டிருந்தாள். எப்பொழுதும் இந்நேரம் வீட்டுக்குக் கிளம்பிப் போய்விடுவாளே என மித்ரனுக்குத் திக்கென்றிருந்தது.
அன்று காலையில் தாமதமாக வந்ததால் மாலையில் சற்றுநேரம் இருந்து வேலையை முடித்துவிட்டே கிளம்ப நினைத்தாள் . அதுவுமில்லாமல் சீக்கிரமே வேலையிலிருந்து நிற்க வேண்டியதால் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் இருந்தன. அதையெல்லாம் முடித்துக் கொடுக்க வேண்டுமே.
அவன் சொன்னதைக் கேட்டுவிட்டாளோ என அவன் பார்வை அவளையே தொடர, அவளின் முகம் தொட்டாச்சுருங்கியாய்ச் சுருங்கிப் போயிருந்தது. ஆனால் மித்ரன் என்றொருவன் அங்கே நின்று கொண்டிருக்கிறான் என்று கூட அவள் சட்டைச் செய்யவில்லை. கிளம்பிவிட்டாள்.
வீட்டிற்குச் சென்றதும் தந்தையின் கைப்பேசியை வாங்கி சந்தோஷூக்கு அழைத்தாள். அவனோ அழைப்பை எடுக்கவே இல்லை. பலமுறை அழைத்துப் பார்த்தும் இதுவே பதிலாக இருந்தது.
நோட்டம் விடுவதற்கு என்று சந்தோஷின் அன்னையை அழைத்துப் பார்க்க, “திவிம்மா. இதுக்குப் பேசாம நாங்க அங்கேயே இருந்துருப்போம். ஏதோ வந்த புதுசுல ஒரு ரெண்டு நாள் வெளில கூட்டிட்டுப் போனான். அப்புறம் காலையில போனா அர்த்த ராத்திரியில தான் வீட்டுக்கு வர்றான். குளிச்சிட்டு தூங்குகிறான். அப்படி என்ன வேலையோ? அப்படி என்ன பிசினஸோ?” என மட மடவென்று அவர் மனக்குமுறலை வெளியிட்டார்.
ஆக! சந்தோஷ் உண்மையில் வேலையில் மும்முரமாக இருக்கிறான் என்று அவளுக்குப் புரிந்தது.
“இன்னைக்கு என்னவோ அதிசயமா மத்தியானம் வீட்டுக்கு வந்தான். நீயும் அவனும் பேசினீங்களே. அப்போ நானும் அங்கே இருந்தேன். உன்கிட்டே பேசறதுக்கு ஃபோனைக் கேட்டேன். கொடுக்கலை. உன் ஃபோன் தொலைஞ்சிடுச்சுனு சொன்னான்” என அவர் பேசிக் கொண்டே போனார்.
சந்தோஷ் அப்படிப் பேசியதுக்குக் காரணம் அவன் அன்னை அருகில் இருந்தத்தால் என மனம் தெளிந்தாள், சற்றுநேரம் அவரிடம் பேசி, நடந்தவைகளைச் சொல்லி, எப்படியோ அவரைச் சமாதானப்படுத்தி அழைப்பை வைத்தாள்.
வைத்த அடுத்த நிமிடம் சந்தோஷ் அழைத்தான். காலையில் அவன் அன்னை அருகில் இருந்ததால் அப்படி நடந்து கொண்டதாகக் சொன்னவன், சசிதரனைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்வதாகச் சொல்லி அழைப்பை வைத்தான்.
அன்றிரவு தனிமையின் அமைதியில் காலையில் மித்ரன் சொன்ன வார்த்தைகளே சம்மட்டியாய் மனதில் வந்து ஒலித்தது.
அவள் ஆரம்பத்தில் நினைத்தது போலவே துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்று இருந்திருக்க வேண்டும். தேவையில்லாமல் அவன் புன்னகையிலும் நன்நடத்தையிலும் மனதை அலைபாயவிட்டு அதைப் பறிகொடுத்து விட்டாள். இதிலிருந்து மீட்சி கிடைக்குமா என்று அவளுக்குத் தெரியவில்லை.
நெஞ்சடைத்துக் கொள்வதைப் போலிருந்தது. அழுகையில் கரைந்தாள். இதற்குக் காலம் பதில் சொல்லட்டும்!
அன்றிலிருந்து இயந்திரம் போல் செயல்பட ஆரம்பித்தாள் திவ்யதர்ஷினி. காலையில் நேராக வேலைக்குச் சென்றாள். அங்கே முடிக்க வேண்டிய வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு மீண்டும் இரவு வீட்டிற்கு வருவாள்.
இப்பொழுதெல்லாம் மதிய சாப்பாட்டைக் கூட மீனாட்சியுடனும் வத்சனுடனும் அவள் அருந்துவதில்லை. அதுவும் மித்ரன் வீட்டிற்கு வரும் நேரத்தில் அவன் கண்களில் படவேயில்லை திவ்யதர்ஷினி.
அன்று அவளைத் திட்டிவிட்டாலும் மித்ரனின் மனம் ஏனோ பதை பதைத்துக் கொண்டே இருந்தது. ஒவ்வொரு முறையும் வீட்டிற்கு வரும் பொழுது திவ்யதர்ஷினியை அவன் பார்வை தழுவித் தழுவிச் சென்றது.
அவளோ மித்ரன் என்ற ஒருவன் அங்கே இருக்கிறான் என்பதைக் கூட காட்டிக் கொள்ளவில்லை. அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
‘அவன் தான் கோபத்தில் இருக்கிறான் என்று அவளுக்குத் தெரியுமே. சமாதானப்படுத்தவாவது முயற்சி செய்யலாமே’ என அவளையே உறுத்து விழித்தான் மித்ரன். அவளோ இவன் பார்வையில் படுவதே தீங்கு என்பதைப் போல் விலகிப் போனாள்.
திவ்யதர்ஷினி இப்படிச் சத்தியாக்கிரகம் செய்வதைப் பார்த்து, ‘வேண்டுமென்றே செய்கிறாள்’ எனக் கோபத்துடன் எண்ணிக் கொண்டான்.
மித்ரனிடம் பேசுவதை அறவே நிறுத்திவிட்டாள் திவ்யதர்ஷினி. என்ன ஏது என்று விசாரிக்காமல் அது எப்படி அவள் மேல் உடனே அவனால் சந்தேகப்பட முடிந்தது? அப்படி என்றால் அவள் மேல் அவன் வைத்திருக்கும் காதல் உண்மையே அல்ல. அது ஆழமான காதலும் அல்ல.
அது வெறும் ஈர்ப்பாக இருக்கும். அதனால் தான் அவனால் அப்படி அவளைத் தவறாக எண்ண முடிந்திருக்கிறது என்ற முடிவுக்கு வந்திருந்தாள்.
****
பத்து நாட்கள் கழிந்தன, சசிதரன் டெல்லி சென்று போட்டிகளில் பங்கேற்று அனைத்துச் சுற்றுகளிலும் வெற்றியைக் குவித்துக் கொண்டிருந்தான். அன்று இறுதிப் போட்டி. திவ்யதர்ஷினி கைப்பேசியும் கையுமாகத் திரிந்து கொண்டிருந்தாள்.
ஒருவழியாகச் சசிதரனிடமிருந்து அழைப்பு வந்தது. “அக்கா, நம்ம ஜெயிச்சுட்டோம்” என்றான்.
அவன் இந்திய அளவில் முதலாவதாக வந்திருந்தான். “நீ ஜெயிச்சுட்ட… உன் அயராத உழைப்பும் தன்னம்பிக்கையும் ஜெயிச்சிருக்கு” என மனதார வாழ்த்தினாள். சற்றுநேரம் பேசிவிட்டு பிறகு அழைப்பதாகச் சொல்லி அழைப்பை வைத்துவிட்டான்.
அவளுக்குச் சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை. அங்கே வந்த வத்சனிடம் அதைப் பகிர்ந்து கொண்டாள். அதே சமயத்தில் சந்தோஷ் அழைத்திருந்தான்.
அவள் அனைவரிடமும் சிரித்துப் பேசுவதைக் கேட்டவாறே வந்த மித்ரனுக்குச் சில நாட்களாக இறங்கத் தொடங்கியிருந்த கோபம் மீண்டும் தலைக்கேறியது. ஆனால் எங்கே யாரிடம் கொட்டுவது என்று அவனுக்குத் தெரியவில்லை. அவன் உதவியாளர் வசமாகச் சிக்கிக் கொண்டான்.

