என்றும் உன் நிழலாக – 16

16

 

கீழே வந்த வசியைக் கேள்வியாகவும் கூர்மையாகவும் அளந்தனர், அவன் தாயும் பாட்டியும்.

அவனோ அமைதியாக வந்து அவர்கள் முன்னாலிருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டான்.

‘‘அம்மா! சித்தி தாறுமாறாக அதுவும் என்ர காதுபடவே அவளை ஏசினார்மா!” என ஆரம்பித்தவன், “அதுமட்டுமில்ல, நேற்று அவளை அடிச்சு அவளுக்கு நல்ல காச்சல் வேற, நான் போய்த் தான் பரசிட்டமோல் குடுத்தன்…அதுதான்..’’ மெல்லிய தயக்கத்துடன் தொடர்ந்தான்.

‘சித்தி அவ்வளவு ஏசின பிறகு, அவள் அந்த வீட்டில இருக்கிறது சரி வராது; அவவிற்கும் அதில விருப்பம் இல்லையம்மா. அதனாலதான் என்னோட கூட்டிக்கொண்டு வந்திட்டன்.’’ சொல்லிக்கொண்டு வர, மகன் சொல்லவந்ததைச் சொல்லட்டும் என்று அமைதியாக இருந்த சுமி இடையிட்டார்.

‘‘அதெல்லாம் சரி தம்பி…ஆனால், நீ இப்பிடி அவளைக் கூட்டிக்கொண்டு வந்தது எனக்கென்னவோ சரியாகப்பட இல்லை. ஏனென்றால், அதுதான் அவள்ட வீடு. இந்திரன் வந்து என்ன நினைப்பார் சொல்லு பார்ப்பம்? அவரும் வீட்டில இல்லாத போது நீ இப்பிடிச் செய்தது சரியே இல்லை.’’

மகனின் செய்கையில் தன் விருப்பமின்மையைத் தெளிவாகச் சொன்னார் சுமி.

‘‘அது வந்தம்மா…நானே சித்தப்பாட்டச் சொல்லுறன். ஏன் என்றால்…அம்மா…நான்…நிதியை விரும்புறன்மா…’’ சற்றே தடுமாறினாலும் நிமிர்வாகவே சொல்லிவிட்டான்.

தொடர்ந்து, ‘‘இல்ல இல்ல…நாங்க இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறம். அதனால தான் சித்தி இப்பிடியெல்லாம் அவள ஏசினதைக் கேட்டுக்கொண்டிருக்க முடியாமல் கூட்டிக்கொண்டு வந்தன்.

இனி அவள் அப்பிடியெல்லாம் பேச்சும் திட்டும் கேட்கத் தேவையில்லம்மா. உங்களுக்கே தெரியும், சித்தி சும்மாவே அவளப் போட்டுப் படுத்திற பாடு. அது இனி இன்னும் கூடுமேயொழிய குறையாது. அதனால…’’

படபடவென்று சொல்லிக்கொண்டு வந்தவன், தன் முன்னால் அமர்ந்துள்ள பெரியவர்கள் இருவரையும் கூர்மையாகப் பார்த்தான்.

சில நொடி மௌனத்தின் பின், ‘‘அவள் இனி இங்கயே நம்மோட இருக்கட்டும்மா!’’ முடிவாகச் சொல்லிவிட்டு, அப்படியே கண் மூடி சோஃபாவில் சாய்ந்து விட்டான்.

நினைத்ததை நன்றாக ஆராய்ந்தது செய்பவன் வசி. அது தெரிந்திருந்தாலும், ‘இந்த விசயத்தில் அவன் எடுத்த முடிவு சரியா?’ குழம்பினார் சுமி.

‘‘தம்பி…ரஞ்சன் நிதியை…விரும்புறான் என்று புவனி…சொன்னாளே…’’ என்று நிறுத்தி நிதானித்து ஆரம்பிக்க, கண் திறந்து பார்த்தவன், சிறிது நேரம் அமைதி காத்தான்.

‘‘ம்ம்…அவனுக்கு…அவன் விரும்பி இருக்கிறான், மச்சாள் தானே! அதுக்காக அவன் மட்டும் விரும்பினால் போதுமாம்மா? நிதிக்கு அப்படி ஒரு எண்ணம் இருக்கேல்ல. அவன் தான் அப்பிடி ஒரு நினைவில இருந்து வீட்டிலும் சொல்லி தேவையில்லாமல் பிரச்சனை. ஆனால், இதுவும் நல்லதுக்குத் தான், இப்ப எல்லாருக்கும் எங்கட விசயம் தெரிஞ்சிரிச்சி…” சொல்லிக்கொண்டு வந்தவன் தாயின் முகம் சுருங்குவதைப் பார்த்துவிட்டு நிறுத்தினான்.

“ம்மா…கோபிக்காதீங்க! உங்களிட்ட மறைக்க வேணுமென்று ஒருகாலும் நினைக்கேல்ல. இதைப் பற்றிக் கதைக்க வேணுமென்று நேரம் பார்த்துக் கொண்டு இருந்தன்மா…” என்றவன், மௌனமாக இருக்கும் தாயின் அருகில் சென்றமர்ந்தான்.

“இப்பக் கொஞ்சத்துக்கு முதல் தான்மா அவள விரும்புறன் என்று மனம் விட்டு அவளிட்டயே சொன்னன்.’’ தயக்கத்துடன் சமாதானம் செய்தவனை, செல்லமாக முறைத்தார் சுமி.

“ராஜா…நிதி என்ர மருமகள் என்றா அதில எனக்கு எப்பவாவது விருப்பமில்லாமல் இருக்குமா சொல்லு? இந்த விசயத்தில உனக்கு ஏன்யா இவ்வளவு தயக்கம்! ஆனால், நான் என்ன சொல்லுறன் என்றால்…இந்திரன் வீட்டில இருந்து நீ அவள இப்பிடி கூட்டிக்கொண்டு வந்தது பிழை.” என்ற தாயை இடைநிறுத்தினான்.

“ப்ச்…இப்பிடியே பார்த்துக் கொண்டிருந்தா..அவளோ வாய்திறந்து ஒரு வார்த்தை எதிர்க்கிறாள் இல்ல. சித்தியோ…கொடுமைக்காரி போல நடந்து கொள்ளுறார்.” என்றவன், “விடுங்கம்மா நான் பார்த்துக் கொள்ளுறன்.” தாயைச் சமாதானம் செய்தான்.

“நிதி கொஞ்ச நேரம் நித்திரை கொள்ளட்டும்மா, நான் போய் அவளுக்கு முக்கியமாகத் தேவையான சாமான்கள் கொஞ்சத்தை எடுத்துக்கொண்டு வாறன்…’’ என்று சொல்லி, தன் முடிவில் உறுதியாக நிற்பவனை அவசரமாகத் தடுத்தார் சுமி.

‘‘ராஜா, இது அவசரப்படுற விசயம் இல்லப்பா. நீ அவள விரும்பினால் அது வேற கதை. வாழப்போற ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருந்தால், அதைவிட வேறென்ன வேணும் சொல்லு!

ஆனாலும் தம்பி…இதால ஒன்றாயிருக்கிற நம்மட குடும்பங்கள் பிரிஞ்சிரக் கூடாது ராசா. இதெல்லாம் உனக்கு நான் சொல்லித் தான் தெரிய வேணுமா?’’ என்றவர், கண்கள் கலங்க வசியைப் பார்த்தார்.

‘‘பார்…இன்னும் லண்டனில உன்ர அக்கா வீட்டுக்காரர்கள் கோபமே குறையேல்ல.”‘என்றவர், தன்னைச் சமாளித்துக்கொண்டு, ‘‘அதனால…முதல் அப்பாட்டச் சொல்லி, பிறகு என்ன செய்யிறதென்று முடிவெடுப்பம்; கொஞ்சம் பொறுமையா இரு!’’ அழுத்திச் சொன்னார்.

அதேவேகத்தில், கணவருக்கு அழைத்து விசயத்தைச் சுருக்கமாகச் சொல்ல, அவரும் உடனே வருவதாகச் சொல்லி வந்தவர் நடந்தவற்றைக் கேட்டு விட்டு, எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருக்கும் மகனை நிதானமாகப் பார்த்தார்.

‘‘வசி…நிதி இந்த வீட்டுக்கு மருமகளா வாறது எனக்கும் நல்ல சந்தோசம்பா. ஆனால், எனக்கும் நீங்க இப்பிடி நிதியைக் கூட்டிக்கொண்டு வந்தது சரியாப்படேல்ல.

இவ்வளவு வருசங்களாக அவளின்ட நல்லது கெட்டது பார்த்தது அவே தான். நாம அவையளோட முறையாப் பேசி, கலியாணம் முடிச்சு அவளை இங்க கூட்டிக்கொண்டு வாறது தான் மரியாதை; ரெண்டு குடும்பத்துக்குமே நல்லது. இப்ப என்ன, கலியாணத்தை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கெதியாச் செய்வமே …போதுமா?’’ என்றவர், ஏதோ மறுத்துச் சொல்லத் தொடங்கிய மகனை கையசைவால் தடுத்தார்.

‘‘நீங்களும் சேர்ந்து நிதியைக் கூட்டிக்கொண்டு போய், நிதி இனி இந்த வீட்டு மருமகள் என்று புவனியிட்டத் தெளிவாச் சொல்லிட்டு வாங்க. நான் பின்னேரம் இந்திரன் வரவிட்டுக் கதைக்கிறன்.’’ என்று மனைவியிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போது கீழே இறங்கி வந்தாள் நிதி.

அங்கு ஜீவானந்தமும் இருப்பதைக் கண்டதும் தயங்கிக்கொண்டே அவர்களருகில் வந்தவள், ‘‘நான் வீட்டுக்குப் போகப் போறன், கூட்டிக்கொண்டு போய் விடுறீங்களா? ப்ளீஸ்!’’ வசியிடம் கேட்க, இதுவரையிலும் கதைத்து அம்முடிவையே எடுத்திருந்தவர்கள் ஒருவரை ஒருவர் தங்களுக்குள் பார்த்துக் கொண்டனர் .

பெற்றோர் எடுத்த முடிவையே அவளும் பிரதிபலித்ததில் மனம் சுணங்கிப் போன வசி, சிடுசிடுப்போடு அவளை ஏறிட்டான்.

அதையுணர்ந்தாலும் தன் முடிவை மாற்றும் எண்ணம் அவள் மனதில் துளியும் எழவில்லை. தான் செய்தது தவறு என்றுணர்ந்தவள் எப்போடா வீடு செல்வோம் என்றே தவித்தாள்.

சுமியின் அருகில் சென்றமர்ந்தவள், ‘‘சுமி மாமி…நான் இப்பிடி இவரோட வந்தது பிழை தானே? என்னைப் பற்றி மாமா மாமி என்ன நினைப்பீனம்? அந்த நேரம் யோசிக்காமல் வந்திட்டன்.’’ தாழ்ந்த குரலில் சொன்னவள், ‘புரிஞ்சு கொள்ளுங்களன்!’ என்றவகையில் வசியை நோக்கினாள்.

மகனின் முறைப்பையும் நிதியின் தவிப்பையும் கவனித்த ஜீவானந்தம் இலேசாகச் சிரித்துக் கொண்டார்.

அதேநேரம், மருமகளாக வரப்போகின்றவள் மேல் பெருமையும் திருப்தியும் கொண்டார்.

‘‘சரியாச் சொன்னாய்மா. நாங்களும் அதைத்தான் கதைச்சுக் கொண்டிருந்தம். நீ இப்ப போம்மா…இனி அங்க ஒரு பிரச்சனையும் வராமல் இருக்க நாங்க பொறுப்பு. இனி நீ இந்த வீட்டுப் பிள்ளையடா!’’ என அன்பாகச் சொன்னவர்,

‘‘பகல் சாப்பாட்டைச் செய்து சாப்பிட்டிட்டே போகலாமே!’’ மனைவியிடம் சொல்ல, ‘‘அட…இதுவும் நல்ல யோசனை தான்.’’ என்றவாறே எழுந்தார் சுமி.

‘‘புவனி மாமியும் சமைச்சிருக்க மாட்டார்; அவையளுக்கும் சேர்த்துச் சமைச்சுக்கொண்டு போவம்; வாங்க நானும் உதவி செய்யிறன்.’’ சேர்ந்தெழுந்த நிதியை எரிச்சலோடு பார்த்தான் வசி.

‘‘உம்மைத் திருத்தவே முடியாது. இவ்வளவுக்கும் பிறகும் புவனி மாமி என்று உருகுகிறீர்! பச்..’’ கோபமாய் சொல்லி, விருட்டென்று நகர, மகனின் கோபத்தைப் பார்த்த ஜீவானந்தம் வாய்விட்டே நகைத்தார்.

சமையலறை நோக்கி நகர்ந்த நிதி அப்படியே நின்றுவிட்டாள்.

தனக்காகவே அவன் கோபப்படுகின்றான் என்று புரிந்தாலும், அவன் கோபத்தில் மனம் கலங்கவே செய்தது.

அதைக்கவனித்த ஜீவானந்தம், ‘‘அட விடம்மா…அவனும் அவன்ட கோபமும்.’’ சமாதானம் செய்தவர், ‘என்னதான் என்றாலும்…வளர்த்த பாசம் போகுமா? புவனி சிடுசிடு என்று இருந்தாலும், மற்றவே ஒரு நாளுமே இந்தப் பிள்ளையை விட்டுக்குடுக்கிறதில்ல.’ என நினைத்துக்கொண்டவர்,

‘‘எனக்குக் கொஞ்சம் வேலைகள் இருக்கு, இன்றைக்கு வசியும் இல்லையா அதுதான்…போய் முடிச்சிட்டுச் சாப்பிட வாறன் .’’ என்று கிளம்பிச் செல்ல, சமைத்து, தாங்கள் உண்ட பின் புவனி வீட்டினருக்கும் எடுத்துக்கொண்டு புறப்பட்டனர்.

புறப்பட முன், அவளோடு சிலவிடயங்களை மனம் விட்டு கதைக்க விரும்பினான் வசி.

ரஞ்சன் அவளை விரும்பியது தனக்கு முன்னரே தெரியும் என்பதைச் சொல்லிவிட நினைத்தவன், வார்த்தைகளைப் பொறுக்கி எடுத்து ஒருவழியாகச் சொல்லிவிட்டான்.

கேட்டவளோ, ‘அது எனக்கும் தானே தெரியும். நான் எவ்வளவோ ஒதுங்கியும் பலன் இருக்கேல்லயே!’ என எண்ணினாலும், வசியை நினைக்கையில் ஆச்சரியமாக இருந்தது.

‘இவருக்கு எவ்வளவு துணிவு!’ என்று வியந்த கணமே, அவனைப் பற்றியும் ரஞ்சன், ரதீஷ் இருவரிலும் இவனுக்குள்ள பாசமும் அக்கறையையும் அறிந்திருந்தவளுக்கு, தன் மீது அவனுக்குள்ள நேசத்தின் ஆழம் புலப்படவே செய்தது.

பாசமான தம்பியே ஆனாலும் ‘என்ர விருப்பத்தை விட்டுக்கொடேன்.’ என்கின்ற அவன் துணிவு அவளுள்ளத்தில் அலாதியான அமைதியை நிறைத்தது.

அதோடு, ‘மாமா மாமி மட்டும் என்னை இங்க கூட்டிக்கொண்டு வந்திருக்காவிட்டால் , இவரைப் போல ஒருத்தரைச் சந்திச்சிருப்பனா?’ என நன்றியுடன் நினைத்துக்கொண்டவளுக்கு புவனி, இந்திரன் மீதான பாசமும் அன்பும் அதிகரிக்கவே செய்தது.

அதேநேரம், ரஞ்சன் ரதீஷ் இருவருமே வசியில் மிகுந்த கோபத்தில் இருப்பார்கள் என்பதும் புரிந்தவளுக்கு, என்னதான் என்றாலும் தானும் வசியுமாக ரஞ்சன் மனதை காயப்படுத்தி விட்டதாகவே உணர்ந்து மனம் வருந்தவும் செய்தாள்.

அதே வருத்தம் அவனுள்ளும் இருப்பதை உணர்ந்தவள், “முடிஞ்சது எல்லாம் போகட்டும் வசி, ரஞ்சனை எப்பிடியும் சமாதானப்படுத்திப் பழையபடி ஆக்கவேணும்.” கண்கலங்கச் சொன்னாள்.

“நிச்சயம், இது பற்றி அவனோட கதைச்சு விளங்க வைப்பன் நிதி; இப்ப இல்ல…ரெண்டு மூன்று நாட்கள் போகட்டும்.” என்றவன், “அதனால நான் இப்ப அங்க வரேல்ல .” என்றான்.

அவளோ, விடாது கெஞ்சிக் கூத்தாடி, ‘‘சரி நீங்க முதல் போங்க…நான் கொஞ்சத்தில வாறன் .’’ என்று சொல்ல வைத்த பின்னரே ஓய்ந்தாள்.

error: Alert: Content selection is disabled!!