அத்தியாயம் 8
வெளிநாட்டுக்கு மீண்டும் போகப்போகிற மகனுக்குத் தன் கையால் உணவைக் கொடுக்க முடியாமல் ஹோட்டலிலேயே தங்கிவிட்டார்களே என்று தேவகிக்குப் பெரும் மனக்குறை.
இதற்கெல்லாம் அவள்தான் காரணம் என்று தோன்றுவதைத் தடுக்க முடியவில்லை. ஒரே நாளில் தன்னிடமிருந்து அவனைப் பிரித்துவிட்டதைப்போல் உணர்ந்தார்.
என்னவோ விருந்தினர் வீட்டுக்கு வருவது போன்று வருவதும், அடுத்த நிமிடமே ஓடுவதும், அவனோடு ஒட்டிக்கொள்ளாத குறையாக அவள் இருப்பதும் என்று ஒன்றும் பிடிக்கவில்லை.
ஒரு வார்த்தை மகனிடம் தனியாகப் பேசிக்கொள்ள முடியாத துன்பம் வாட்டியதென்றால், இங்கேயே நில்லுங்கள் என்று அழுத்திச் சொல்லமுடியாமல் அவன் முகத்தில் தெரிந்த சந்தோசம் தடுத்தது.
திருமணம் முடிந்தபிறகு, முதன் முதலாகக் கணவனின் வீட்டுக்குள் காலடி எடுத்துவைத்த ஷர்மினிக்கு, தோழியாக இருந்த நாட்களில் கிடைத்த அந்தச் சந்தோசமான வரவேற்புக் கூட, மருமகளாகக் காலடி எடுத்து வைத்தபோது கிடைக்கவில்லை.
புதிதாய் மணமானவளுக்கே உரித்தான பூரிப்புடனும், தோழியின் கோபம் ஆறியிருக்குமா என்கிற எதிர்பார்ப்புடனும் வந்தவளின் மனமும் முகமும் அப்படியே வாடிக் கசங்கிப் போயிற்று!
அன்று, மதிய விருந்து முடிந்ததும் வாங்கி வந்திருந்த ஆப்பிள்களைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டினான் சீராளன். அருகில் நின்ற அபிக்குக் கொடுத்துவிட்டு இன்னும் இரு துண்டுகளை எடுத்து, “உன்ர அண்ணிக்குக் குடு.” என்று நீட்டினான்.
தமையனோடு ஃபோனில் பேசிவிட்டு அப்போதுதான் உள்ளே வந்தவள் ஆவலோடு அபியைப் பார்த்தாள். அவ்வளவு நேரமும் தமையனோடு சிரித்துக் கதைத்துக் கொண்டிருந்த அபியின் முகத்தில் உணர்வுகள் காணாமல் போயின. ஷர்மியின் கண்களைச் சந்திக்காமல் கொண்டுவந்து நீட்டினாள்.
அதை வாங்கியதோடு விடாமல் அவள் கரத்தையும் பற்றி, “என்னை அண்ணி எண்டெல்லாம் கூப்பிடாதயடி. நான் எப்பவும் உன்ர பிரெண்ட்தான்.” என்றாள் சிரித்துக்கொண்டு.
வெடுக்கென்று கையை இழுத்துக்கொண்டாள் அபி. “என்ர அண்ணான்ர மனுசி எனக்கு ‘அண்ணி’தான்.” என்று, முகத்தில் அடித்தது போன்று சொல்லிவிட்டுப் போகவும் சட்டென்று கண்களில் நீர் கோர்த்தது அவளுக்கு.
அவள் அண்ணிதான் என்றால் இனித் தோழி இல்லை என்கிறாளா? என்ன காரணம்? அவளின் ஏழ்மையோ? சுருக்கென்று தைத்தது.
கணவனைப் பார்க்க, அவன் பார்வையும் அவளிடம் தான் இருந்தது.
வேகமாகத் தன் வேதனையை மறைத்துக்கொண்டு, “என்ன பாக்கிறீங்க? ஆப்பிளை வெட்டுங்கோ. எனக்கு இன்னும் வேணும்.” என்று, நடந்தது ஒன்றுமே இல்லை என்று காட்ட முனைந்தாள்.
மனைவியின் கண்களுக்குள் ஆராய்ந்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் பழத்தை வெட்டிக்கொடுத்தான் சீராளன்.
திருமணத்தன்று நெகிழ்ந்திருந்தாலும் அவ்வப்போது தேவகியும், அவள் விளங்கிக்கொண்ட அளவில் அவனோடு அவளைப் பார்க்கும் நேரமெல்லாம் அவனிடம் ஒரு ஒதுக்கத்தைக் காட்டிக்கொண்டுதான் இருந்தார். அப்படியேதான் அபியும்.
அது புரிந்தாலும், தாய் தங்கையின் கோபதாபங்களை ஒதுக்கிவிட்டு, அவர்களோடு இணக்கமாகப் போய்விட முயன்றுகொண்டிருந்தான் சீராளன்.
“விடு தம்பி! கொஞ்ச நாள்ல எல்லாம் சரியாகும்.” என்று அவனது அப்பாவும் சொல்லிப்பார்த்தார்.
அவனால் அப்படி விடமுடியவில்லை.
சுவிஸில் இருந்த நாட்களில் கூட தொலைபேசியில் கதைப்பது, எடுக்கும் முடிவுகளை அலசி ஆராய்வது, வீட்டுக் கணக்கு வழக்குகளைப் பற்றிப் பேசுவது, தங்கையின் எதிர்காலம் குறித்துத் திட்டமிடுவது எல்லாமே அம்மாவிடம்தான்.
அப்பாவின் உடல்நலம் குறித்து, நாட்டு நடப்புகள் பற்றி, அவனது நண்பர்கள் பற்றி என்று விசாரிப்பதும் அவரிடம் தான்.
தந்தையோடும் கதைப்பான்தான். அவையெல்லாம், ‘எப்பிடி இருக்கிறீங்கப்பா?’, ‘சாப்பிட்டீங்களா?’ போன்ற சம்பிரதாயக் கேள்விகளோடு முடிந்துவிடும். மற்றும்படி அவருக்கும் அவனுக்குமான பாலமும் அம்மாதான்.
அப்படி, அனைத்திலும் சகலதுமாகக் கலந்திருந்த அம்மா, இன்று தள்ளி நிற்கவும் தானாகச் சரியாகும் என்று விடமுடியவில்லை. கேலி கிண்டல் என்று சிரித்து விளையாடிய தங்கையையும் அப்படியே விடமுடியவில்லை.
“உனக்கும் வயது வந்திட்டுது. கலியாணத்துக்குப் பொம்பிளை பாக்கிறன் தம்பி.” என்றவர், என்னமாதிரியான பெண் வேண்டும் என்று கேட்டபோது, “உங்களுக்கும் அபிக்கும் பிடிச்சமாதிரி இருந்தா சரியம்மா.” என்று சொன்னது அவன்தான்.
அவரும் சந்தோசமாகத் தனக்குப் பிடித்த ஒருத்தியைப் பார்த்து வைத்திருக்க, அவள் வேண்டாம் இவள்தான் வேண்டும் என்று நின்று கட்டியது பெரும் பிழைதானே. அந்தக் குற்ற உணர்வும் மனதிலிருக்க, போவதற்குள் எப்படியாவது அவர்களைச் சமாதானம் செய்துவிடவேண்டும் என்பதில் குறியாக இருந்தான் சீராளன்.
அவரோ மாட்டேன் என்று நின்றார்.
அதுவே, அவனுக்கு மிகுந்த மனவுளைச்சலைக் கொடுக்கிறது என்பதை ஷர்மினியும் அறிவாள். அப்படியிருக்க, தன் கவலையையும் அவனிடம் காட்டவேண்டாம் என்று மறைத்துக்கொண்டாள்.
ஆனால், மிகுதி நாட்களையும் ஹோட்டலில் கழிக்க அவன் முடிவு செய்தபோதுதான், அவனும் அதைக் கவனித்திருக்கிறான் என்று புரிந்துகொண்டாள்.
மனைவியிடம் தாயையும் விட்டுக்கொடுக்காமல், தாயிடம் மனைவியையும் விட்டுக்கொடுக்காமல் இந்தச் சிக்கலுக்குத் தீர்வை, அவளுக்கே சொல்லாமல் தேடியிருக்கிறான் என்பதில், கணவன் மீதான நேசம் இன்னுமே பெருகிப்போயிற்று!
அந்த அன்புக் கணவனை, அவன் தாயோடு பழையமாதிரி இணைக்க முடியவில்லையே என்கிற வேதனை, அவளை அரித்துக்கொண்டே இருந்தது.
அடுத்தநாள் ஷர்மினியின் வீட்டுக்கு வந்திருந்தனர்.
சீராளன், அவள் தமையனோடு தன் பயணத்தைப் பற்றிக் கதைத்துக்கொண்டிருக்க, மெல்லத் தோட்டத்துக்குள் வந்திருந்தாள் ஷர்மினி.
அபியை சமாதானம் செய்தால் அவள் மூலம் மாமியை பிடிக்கலாம் என்றால், இந்த அபி ஏன் இப்படி ஒதுக்குகிறாள் என்கிற சிந்தனையோடு இருந்தவளிடம், வேலியால் எட்டிப் பார்த்துவிட்டு, “அடடே! என்ன இது ஆச்சரியம்? உன்ர புருசன் உன்ன தனியா விட்டுட்டார்.” என்றபடி வந்தான் உதயன்.
அந்தக் கேலிக்கான எதிரொலி அவளிடம் இல்லை. அவனைக் கண்டதும் கண்கள் கலங்கிற்று.
பக் என்றாயிற்று அவனுக்கு. “ஏய் என்ன? என்னத்துக்கு அழுகிறாய்?” என்றான் வேகமாக.
மனப்புழுக்கத்தைக் கொட்டக் காத்திருந்தவள் அப்படியே கொட்டினாள்.
“எவ்வளவோ ட்ரை பண்ணிப் பாத்திட்டன் உதயன். அபி கதைக்கிறாளே இல்லையடா. இனி என்ன செய்றது எண்டே தெரியேல்ல. மாமியும் பாக்கிற பார்வையாலேயே என்னை யாரோவா தூர நிக்க வைக்கிறா. அந்த வீட்டுல, மாமா மட்டும் தான் மருமகள் எண்டு சந்தோசமா, பாசமா என்னோட கதைக்கிறது. என்ர மனுசன் அருமையான மனுசனடா. அந்தாளோட முழுச் சந்தோசமா கதைச்சுச் சிரிக்க முடியேல்ல. என்னவோ பிழை செய்ற மாதிரியே உறுத்துது. என்னாலதான் மாமி அவரோட பாசமா கதைக்கிறேல்ல எண்டு நினைக்க நினைக்கச் சரியான கவலையா இருக்கு.”
அங்கே சீராளன் வருவது தெரியவும் அவசரமாகக் கண்களைத் துடைத்துக்கொண்டாள்.
“இவரிட்ட ஒண்டும் சொல்லிப்போடாத. ஏற்கனவே மாமியால சரியான கவலை அவருக்கு. என்னட்ட சொன்னா, என்னாலதான் இதெல்லாம் எண்டு நான் கவலைப்படுவன் எண்டு சொல்லுறதும் இல்ல. தனக்குள்ளேயே வச்சுக் கவலைப்படுறார். பாவமடா. மனத்தில கவலையோடவே ஃபிளைட் ஏறப்போறார்.” எனும்போதே மீண்டும் அழுகை வந்தது அவளுக்கு.
அதற்குள் சீராளன் நெருங்கிவிடவும், “எல்லாம் சரியாகும், நீ கெதியா கண்ணத் துடை.” என்றான் உதயன் சத்தமற்று.
அதைக் கவனிக்கத் தவறவில்லை சீராளன். கூடவே, தன்னைப் பார்த்துப் புன்னகைத்த மனைவியின் நனைந்து, கண்ணீரில் ஒட்டியிருந்த இமைகளையும் கண்டான்.
“அழுதியா?”
“நான் ஏன் அழ?” என்றவள் கணவனின் பார்வை கூர்மையாகவும் சட்டெனச் சிரித்தாள்.
“இந்த மாடு ஓவர் நக்கலப்பா. சிரிச்சு சிரிச்சு எனக்குக் கண்ணுல தண்ணியே வந்திட்டுது.”
சீராளன் நம்பாமல் உதயனைப் பார்த்தான். அவனோ இவனைப் பாசத்தோடு இறுக்கி அணைத்துக்கொண்டான்.
“என்ன உதயன்?” ஆச்சரியத்தோடு கேட்டான் சீராளன்.
“நாங்க தேடி இருந்தாக்கூட இவளை இவ்வளவு பாசமா பாக்கிற மாப்பிள்ளை கிடைச்சிருக்க மாட்டார். அடம்பிடிச்சுக் கட்டினத்துக்குத் தேங்க்ஸ். எப்பவும் அவளைச் சந்தோசமா வச்சிருக்கவேணும். நீங்களும் சந்தோசமா இருக்கவேணும்.” என்றான் பாசத்தோடு.
தன் மனைவியை, தான் சந்தோசமாக வைத்திருப்பதற்கு இவன் நன்றி சொல்வானா? உதட்டில் மலர்ந்த சிரிப்புடன், “அவள்தான் என்ர சந்தோசம். அவளைக் கஷ்டப்படுத்திப் பாக்க என்னால ஏலாது!” என்றான் பதிலாக.
“சரிசரி வாங்க நாங்க போவம். இவன் விட்டா அலட்டிக்கொண்டே நிப்பான்.” என்றவள், “சரியடா வாறம்.” என்று விடைபெற்றுக்கொண்டு, சீராளனின் கையைப் பற்றி இழுத்துக்கொண்டு நடந்தாள்.

