உன்னில் என்னை தொலைத்தேனடி – 10

அத்தியாயம் 10

 

 

ஒருவழியாக இரண்டு வாரங்கள் கொழும்பிலேயே இருந்து, அவர் சொன்ன மருந்து மாத்திரைகளை எடுத்து, உதயனும் விசயம் தெரிந்தபிறகு கூடுதலாகக் கவனித்துக்கொண்டதில் கொஞ்சம் தேறிக்கொண்டு ஊருக்குப் புறப்பட்டாள் ஷர்மினி.

 

அவளைக் கண்ட அபியின் விழிகள், அப்படியே விரிந்து போயிற்று!

 

தாய்மையால் மெலிந்துபோயிருந்தாலும், பயணக்களைப்பில் சோர்ந்துபோய்த் தெரிந்தாலும் அதையும் தாண்டிக்கொண்டு பிள்ளையைத் தாங்கும் பொலிவு, பேரழகியாய்க் காட்டிற்று. கொழும்புத் தண்ணீர் கொடுத்த அழகு, அதுவரை ஏழ்மையின் சாயல் தெரிந்தவளிடம் தெரிந்த செழுமை, கைகால்களில் மின்னிய நகைகள் என்று முற்றிலும் வேறான ஷர்மினியைக் கண்டாள்.

 

கலங்கிய கண்களில் ஆர்வத்துடன் அவள் பார்க்க, சட்டென்று உள்ளே சென்றுவிட்டாள் அபி. கண்ணோரம் கசிந்துவிட்ட கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள்.

 

தோழியாக இருந்தவளை அண்ணியாக ஏற்க முடியவில்லை. ஏதோ ஒரு ஈகோ. தங்களைவிடப் பலமடங்கு கஷ்டப்பட்டவள், தன்னைவிட எல்லாவற்றிலும் கீழேதான் என்கிற எண்ணம், அவளையறியாமலேயே அவளுக்குள் அழுத்தமாகப் பதிந்து கிடந்திருக்க வேண்டும். அப்படியானவளைத் திடீரென்று தனக்குச் சமமாக, தான் மதிக்கவேண்டிய இடத்தில் வைத்துப் பார்க்க முடியவில்லை. அவளும் சேர்ந்து தெரிவு செய்து வைத்திருந்த பெண்ணை, அண்ணா தட்டிக்கழித்தது இவளால் என்கிற கோபமும் சேர்ந்துகொண்டதில் விலகல் தானாகவே வந்துவிட்டிருந்தது.

 

ஷர்மினி கொழும்பு சென்றபிறகு, தானாகவே நடந்த சுய அலசலில் தெளிந்திருந்தாள். அவள், தன்னோடு இணக்கமாகிவிட எடுத்துக்கொண்ட முயற்சிகளை எப்படியெல்லாம் எடுத்தெறிந்தோம் என்கிற குற்ற உணர்ச்சியும் சேர்ந்துகொள்ள, அனைத்தும் தன் தவறே என்று விளங்கினாலும், உருவாகிவிட்ட விரிசலே மீண்டும் நெருங்க விடாமல் தடுத்துப் பிடிப்பதைப்போல உணர்ந்தாள்.

 

ஒரு தயக்கம். இனி எந்த முகத்தை வைத்துக்கொண்டு கதைப்பாள். கதைத்தால், “ஏனடி இவ்வளவு நாளும் கதைக்கேல்ல?” என்று கட்டாயம் ஷர்மி கேட்பாளே. அந்தக் கேள்வியை எதிர்கொள்ளத் துணிவின்றி விலகலை நிரந்தரமாக்கிவிட்டிருந்தாள்.

 

இன்றோ நீண்ட நாட்களுக்குப் பிறகு சற்றே மேடிடத் துவங்கிய வயிற்றோடு இன்னுமே அழகியாகக் கண்டபோது, ‘என்ர ஃபிரெண்ட் அம்மா ஆகப்போறாள்.’ என்கிற உணர்வு, ஒரு சந்தோச அழுகையைத் தூண்டிவிடச் சட்டென்று உள்ளே வந்துவிட்டாள்.

 

ஏதோ பரவசம் அவளுக்குள்ளும். அத்தையாகப் போகிறாளே. இதழ்களில் புன்னகை மின்னிற்று! அவளின் வயிற்றைத் தடவிப்பார்க்கும் ஆசையில் கைகள் குறுகுறுத்தன. அவளைக் கேலி செய்து, சீண்ட எழுந்த ஆவலை அடக்கப் பெரும்பாடுபட்டாள்.

 

ஆனாலும், பிழை செய்துவிட்டோம் என்கிற உணர்வு, தயக்கம் அவளை வெளியே விடவில்லை. ஷர்மியை நெருங்கவுமில்லை. அன்று மட்டுமல்ல, அதற்குப் பிறகும்.

 

அவள் பார்க்காத வேளைகளில் மட்டும், என்னவோ புதையலைக் காப்பவள் போன்று ஒரு கையால் வயிற்றை அணைத்துப் பிடித்தபடி மெள்ள மெள்ள அடியெடுத்து வைத்து, அசைந்தாடி நடமாடுகிறவளைச் சிரிப்போடு ரசித்துப்பார்ப்பாள்.

 

யாழ்ப்பாணத்திலும் அவளைக் காட்டினார்கள். அந்த வைத்தியரும் இப்போது அவள் விமானப் பிரயாணம் செய்வது அவ்வளவு நல்லதல்ல என்று சொல்லிவிட, சீராளனுக்குக் கோபம் மாறவேயில்லை.

 

தேவகிக்கும் கோபம்தான். பிள்ளை வேண்டாம் என்றபோதும் கேட்கவில்லை. பிறகாவது தன்னைக் கவனித்தாளா? அதுவும் இல்லை. இப்படி, எல்லோரும் பயமுறுத்தும் நிலையிலா அவரின் சந்ததி வளரவேண்டும்? எப்போது, என்ன நடக்குமோ என்று மனம் படபடத்துக்கொண்டே இருந்தது.

 

“அதுசரி, வீட்டுல நல்ல சாப்பாடு சாப்பிட்டு வளந்திருந்தாத்தானே பிள்ளையைத் தாங்க சக்தி இருக்க? பசிக்குப் பழைய சோத்தச் சாப்பிட்டா என்னெண்டு?” என்று சொல்லி, சத்தான உணவு என்று அவர் செய்து தந்த எதுவும் தொண்டைக்குள் இறங்க மறுத்தது. வாய்க்கு ருசியாகவே இல்லை.

 

பழைய சோறு என்ன அவ்வளவு கேவலமா? பழைய சோற்றைப் பழங்கறியில் போட்டுக் குழைத்து, சின்ன வெங்காயமும் வைத்து அம்மா உருட்டித் தரும் உருண்டைச் சோற்றின் சுவைக்கு எது ஈடாகும்? மனம், தாயின் கைச்சமையலுக்கு ஏங்கியது.

 

வயிற்றிலிருந்த குழந்தை வாய்க்கு ருசியாகச் சாப்பிடத் தூண்டிவிட்டாலும், விருப்பமானதை ‘சமைச்சுத் தாங்கோ’ என்று கேட்க அஞ்சி, வாயைக் கட்டினாள்.

 

சில நேரங்களில் நடுச்சாமத்தில் கூடப் பசித்தது. எழுந்து சாப்பிடப் பயத்தில் தண்ணீரைக் குடித்துவிட்டு, கண்ணீர் உகுத்தபடி உறங்கினாள்.

 

இந்த வேதனை ஒரு பக்கமென்றால் வாந்தி, தலைசுற்றல் என்று அதுவும் முற்றிலும் நின்றபாடில்லை.

 

அம்மாவின் அருகாமைக்கு மனம் ஏங்க, அதைக் கணவனிடம் கேட்கத் தயங்கினாள். ஏனோ, அவள் பலகீனமாக இருக்கிறாள் என்று தெரிந்ததில் இருந்து அவனும் சிடுசிடுப்பதில், முன்னரைப்போலத் தன் விருப்பங்களை வெளிப்படையாகக் கேட்க முடியவில்லை.

 

மாமியார் வீடு என்பதில் சிலவற்றை மனம்விட்டுக் கணவனோடு கதைக்கவும் முடியவில்லை.

 

இங்கிருந்து தப்பித்து எங்காவது ஓடிவிடமாட்டோமா என்கிற அளவில் மூச்சு முட்டிப்போயிற்று. வந்ததற்கு இன்னும் அம்மா வீட்டுக்குப் போகவில்லை. தமையனும் உதயனும் மட்டும் வந்து வந்து பார்த்துக்கொண்டார்கள்.

 

அன்று, சயந்தனுக்கு ஸ்பெஷல் கிளாஸ் என்றதில் உதயன் மட்டுமே வர, “அம்மாவைப் பாக்கோணும் மாதிரி இருக்கடா.” என்று சொல்லமுதலே அழுதுவிட்டாள்.

 

அன்றும் இன்றும் அவளின் ஆறுதல் அவன் மட்டும் தானே.

 

“போய்ப் பாக்கப் பயமா இருக்கு. இவரிட்ட கேட்டாக் கத்துவார்.”

 

“அதுக்கெதுக்கு அழுகிறாய்? உனக்காகத்தான் உன்ர மனுசன் இங்கயே இருக்கச் சொல்லியிருப்பார். மாமிக்கும் ஏலாது தானே. அத விளங்கிக்கொள்ளாம சும்மா அழுது இன்னும் உடம்பக் கெடுக்காத!” என்று அதட்டினான் அவன்.

 

புத்திக்கு எல்லாம் புரிகிறதுதான். அலைபாயும் மனதைத்தான் என்ன செய்ய என்று தெரியவில்லை. “எனக்கு அம்மாவைப் பாக்கோணும்!” சிறு குழந்தை போலத் தேம்பினாள் ஷர்மினி.

 

அவனுக்கும் பாவமாயிற்று. “சரியடியப்பா. நான் கூட்டிக்கொண்டு போயிட்டுக் கூட்டிக்கொண்டு வந்து விடுறன். இப்ப இத நிப்பாட்டு. பாக்கவே கன்றாவியா கிடக்கு!” என்றான் அவன்.

 

அதன்பிறகுதான் கண்களைத் துடைத்துக்கொண்டாள்.

 

“ஒவ்வொரு நாளும் விடிய வந்து உன்னைக் கூட்டிக்கொண்டுபோய் விடுறன். வேலை முடிஞ்சு திரும்ப இங்க கொண்டுவந்து விடுறன். அப்ப, இங்க இருந்தமாதிரியும் ஆச்சு, மாமியப் பாத்த மாதிரியும் ஆச்சு. என்ன சொல்லுற?” என்றான் அவன்.

 

“உனக்குக் கஷடம் இல்லையாடா?”

 

சிரமம் என்று சொன்னால் என்ன செய்வாளாம்? குழந்தைப்பிள்ளை போல் அழுதுவிட்டு கேள்வி கேட்டவளை முறைத்தான் அவன். “ஏன் நானே உன்னத் தூக்கிக்கொண்டு திரியப்போறன். பைக் தானே. பெட்ரோலுக்கு மட்டும் உன்ர புருஷனிட்ட காச வாங்கி இந்தப்பக்கம் வெட்டு.”

 

கணவனைச் சொன்னதும் அவளுக்கு ரோசம் பொத்துக்கொண்டு வந்தது. “அதெல்லாம் அவர் தருவார். அவரை என்ன உன்ன மாதிரிக் கஞ்சப்பிசுநாரி எண்டு நினைச்சியா? அதுவும் எனக்கு எண்டா கணக்கே பாக்காம எவ்வளவும் செலவழிப்பார் என்ர மனுசன்.” என்றாள் பெருமையாக.

 

“பார்றா! புருசனுக்கு விளம்பரத்தை!”

 

அவன் சொன்ன விதத்தில் சட்டென்று நகைத்தாள் ஷர்மினி.

 

எப்போதும்போல ஷர்மியைப் பார்க்காததுபோல் பார்த்திருந்த அபியின் பார்வை, அவளின் சிரிப்பிற்குக் காரணமானவனின் மீது ஆச்சரியத்துடன் படிந்தது.

 

இவர்களைக் கவனித்துக்கொண்டிருந்த தேவகிக்கு, அவனைக் கண்டதும் இவள் கண்ணைக் கசக்கியதும், அவன் கேலி கிண்டல் என்று சிரிக்க வைத்ததும் என்று ஒன்றும் பிடிக்கவில்லை. ‘சின்ன வயதில இருந்து கூட வளந்தவன் எண்டாலும் ஒரு அளவு வேண்டாமா? அங்க என்ர பிள்ளை இவளை நினைச்சுக்கொண்டு தனியா இருக்க, இவள் இங்க கூத்தும் கும்மாளமும்! நல்லா தேடிப்பிடிச்சான் கண்டறியாத பொம்பிளை!’

 

அன்று மாலை அழைத்த கணவனிடம், “விடிய அம்மா வீட்டை போயிட்டுப் பின்னேரம்போலத் திரும்பி வரட்டா?” என்று தயங்கி தயங்கிக் கேட்டாள்.

 

இப்போதெல்லாம் அவனிடமும் அவளுக்குத் தயக்கம்தான்.

 

‘அங்கே யார் இவளைக் கவனிப்பார்கள்?’ சட்டென்று கோபம் மூண்டாலும் நலிந்து மெலிந்து ஒலித்த மனைவியின் குரலுக்கு மறுக்கமுடியவில்லை.

 

“ஏன்? இங்க என்ன பிரச்சனை?”

 

“ஐயோ, இங்க ஒரு பிரச்சனையும் இல்ல. வந்ததுக்கு அம்மாவைப் பாக்கவே இல்ல. அதுதான்.” கணவன் மறுத்துவிடுவானோ என்கிற பயத்தில் விழுந்தடித்துக்கொண்டு சொன்னாள்.

 

அது, அவனுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. “சரி கவனமா போய்ட்டுவா. சைக்கிள தொடப்படாது சொல்லிப்போட்டன்! ஆட்டோவில போ. சாப்பாடு, மருந்து எல்லாம் கவனமா சாப்பிடு.” என்றான் தணிந்த குரலில்.

 

“ம்ம்… உதயன்தான் கூட்டிக்கொண்டு போறன் எண்டு சொன்னவன். அவன் வராட்டி அண்ணா வருவான். இல்லாட்டி ஆட்டோல போறன். சைக்கிள் ஓடமாட்டன்.” சின்னப்பிள்ளை போல, அவன் சொன்ன அத்தனைக்கும் தனித்தனியாகப் பதில் சொன்னவளின் மீது, பாசம் பெருகிப்போயிற்று அவனுக்கு.

 

“சுகமா இருக்கிறியா?” என்றான் கனிந்த குரலில்.

 

அந்த ஒற்றை விசாரிப்பில் தேம்பி தேம்பி அழத்துவங்கிவிட்டாள் ஷர்மினி. “இப்ப எல்லாம் நீங்க ஒரே கோபப்படுறீங்க. பாசமா கதைக்கிறதே இல்ல. எனக்கு உங்களிட்ட எதைக் கதைக்கவும் பயமா இருக்கு.” தேம்பிக்கொண்டே சொல்ல, அவனுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது.

 

“பின்ன என்னம்மா? எப்ப இங்க வருவாய் எண்டு நான் இருக்க, நீ உடம்பக் கெடுத்து வச்சாக் கோபம் வராதா? பிள்ளையைப் பற்றியாவது யோசிக்க வேண்டாமா? ஒரு பிரச்சினையும் இல்லாட்டி இப்ப நீ இங்க எனக்குப் பக்கத்தில இருந்திருப்பாய் எல்லோ. அந்த விசர்லதான் கத்திறது.” என்றான் அவன்.

 

“எனக்கு மட்டும் இங்க இருக்க ஆசையா என்ன? உங்களிட்ட வந்திட வேணும் எண்டுதான் உடம்புக்கு ஏலாம இருந்தாலும் படுக்காம எழும்பி இருந்து படிச்சுப் பாஸாகினான். டொக்டர் இப்பிடிச் சொல்லுவா எண்டு நானுமே எதிர்பாக்கேல்ல. அவா தந்த மருந்து எல்லாம் ஒழுங்காத்தான் போட்டனான்.” தன் பக்க நியாயத்தைச் சொல்ல சந்தர்ப்பம் கிடைத்துவிட்டதில் வேகமாகச் சொன்னாள் அவள்.

 

அவன் உதட்டோரம் மெல்லிய முறுவல் அரும்பிற்று. “சரிசரி அழாத! உன்ர புருசன் கொஞ்சம் அவசர புத்திக்காரன் எண்டு உனக்குத் தெரியும்தானே. மன்னிச்சு விட்டுடு. பிழைச்சுப் போகட்டும்!” என்று, அவளைச் சமாதானம் செய்வதற்குள் ஒருவழியாகிப்போனான் சீராளன்.

 

அதன்பிறகான நாட்களில் தாய் வீட்டுக்குப் போய்வந்தாள். நேரமிருக்கையில் சயந்தன் கூட்டிப்போனான். பெரும்பாலும் உதயன்தான் வந்தான்.

 

அன்று, உதயன் வருவதைக் கண்டுவிட்டு வாசல்படிகளில் அவள் வேகமாக இறங்க, “எருமமாடு! என்னத்துக்கடி இவ்வளவு வேகமா வாறாய்? திரும்பவும் எதையாவது இழுத்து வைக்காம நிதானமாக இரு!” என்று கடிந்துகொண்டான் அவன்.

 

அதில் தெரிந்த அக்கறையில் அபியின் பார்வை ஆர்வத்துடன் அவன்மேல் படிந்தது.

 

எதேற்சையாக அங்கே வந்த தேவகி, அதைக் கண்டுவிட்டார்.

 

முன்னரெல்லாம் அவன் வரும் நேரங்களில் ஒதுங்கிப்போய்க்கொண்டிருந்த அபி, இப்போதெல்லாம் அங்கங்கே நிற்பது வித்தியாசமாய்ப் படவே, சட்டென்று உசாரானார்.

 

‘ஒண்டு தவறிப்போயிற்றுது எண்டு பாத்தா மற்றதுமா? முளையிலேயே கிள்ளவேணும். இவனை இப்பிடியே விட்டா கடைசில நான் பெத்த ரெண்டு பிள்ளைகளின்ர வாழ்க்கையும் சீரழிஞ்சு போய்டும்!’

 

அன்று, உதயன் கூட்டிக்கொண்டு வந்து விட்டுவிட்டுப் போனதும் அவளை அழைத்தார் தேவகி.

 

“என்ன இது? எப்ப பாத்தாலும் அவனோட திரியிறாய். முதல் எப்பிடி இருந்தியோ தெரியாது. இப்ப நீ இந்த வீட்டு மருமகள். எங்களுக்கு எண்டு கௌரவம், மானம், மரியாதை எல்லாம் இருக்கு. தாலி கட்டினவன் தனியா கிடந்து அங்க கஷ்டப்படுறான், இங்க நீ இவனோட ஒவ்வொருநாளும் சோடி போட்டுக்கொண்டு போய்வந்தா பாக்கிற மனுசர் என்ன கதைப்பீனம்? இதுல வயித்தில பிள்ளை வேற.”

 

அவர் பேசப்பேச அதிர்ந்து நின்றவள், அவர் சொல்லாமல் விட்ட வார்த்தைகளின் அர்த்தத்தில் கூசிப்போனாள்.

 

“மாமி! என்ன கதைக்கிறீங்க நீங்க?” அவளுக்கு கைகால் எல்லாம் நடுங்கியது. பதட்டத்தில் அதற்குமேல் பேசவும் முடியவில்லை.

 

“உள்ளதைத்தான் கதைக்கிறன். உன்னைப்பற்றி என்ன கதைச்சாலும் பரவாயில்ல. எங்கட வீட்டு வாரிசைப்பற்றி ஒரு பிழையான கதை வரக்கூடாது! அதால ஒழுங்கு மரியாதையா வீட்டில அடங்கி இருக்கப்பார்!” என்றதும் துடிதுடித்துப்போனாள்.

 

“ஒரு குமர்பிள்ளை இருக்கிற வீடு எண்டு கொஞ்சமாவது நினைப்பிருக்கா உனக்கு? உன்ர பெயரோட சேத்து அபின்ர பெயரையும் கெடுத்துப்போடாத!” என்று அவர் சொல்லிவிட, ஆத்திரத்தில் வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கிக் கொள்ள, விறுவிறு என்று பெட்டியைக் கட்டிக்கொண்டு, ஒரு ஆட்டோவைப் பிடித்து வீட்டுக்கு வந்து சேர்ந்துவிட்டாள் ஷர்மினி.

 

 

error: Alert: Content selection is disabled!!