நிரோஜனும் யாமினியும் கீழே அவர்களுக்காக நின்றிருந்த கேப் வரைக்கும் கூடவே வந்து விடைகொடுத்தனர்.
காரினுள் ஏறும் முன், “எப்பிடி இருக்குமோ, நீங்க எல்லாரும் எப்பிடிப் பழகுவீங்களோ எண்டு அரை மனதாத்தான் வந்தனான் நிரோஜன். ஆனா உண்மையா எங்கட லைப்ல எண்டைக்குமே மறக்கேலாத ஒரு நாளா இந்த நாளை மாத்தித் தந்திருக்கிறீங்க.” என்று நிரோஜனை ஆரத்தழுவி, நன்றி சொல்லிவிட்டுப் புறப்பட்டான் திவாகர்.
அவர்களின் கார் கண்ணுக்கு மறையும் வரை நின்று பார்த்துட்டே திரும்பினர். நன்றாகவே களைத்துப்போயிருந்தார்கள். ஆனாலும் உற்சாகத்துக்குக் கொஞ்சமும் குறைவில்லை.
இன்னும் சொல்லப்போனால் வேலையில், வாழ்க்கையில் இருந்த அத்தனை அழுத்தங்களையும் கவலைகளையும் மறந்து, சிரித்து மகிழ்ந்ததில் உடலும் உள்ளமும் பெரும் ஆசுவாசத்தில் திளைத்தன.
உதட்டோரம் மலர்ந்திருந்த புன் சிரிப்புடன் நிரோஜன் அவளைப் பார்க்க, அவளும் அவனைத்தான் பார்த்தாள்.
“என்ன?”
ஒன்றுமில்லை என்று தலையை அசைத்துவிட்டு, தோள்கள் உரசும் அளவிற்கு நெருங்கி வந்து, அவள் கரம் பற்றி விரல்களோடு விரல்களைக் கோர்த்தான் அவன்.
அலுவலக கட்டடத்தினுள் நுழைந்து, படியேறப்போகும் முன்னே அவளோடு ஒரு பக்கமாக ஒதுங்கி, அவளைச் சுவரில் சாய்த்தான் அவன்.
“நிரோ!” என்றவளுக்குக் குரலே எழும்பவில்லை. எல்லோரும் மேலே இருக்கிறார்கள். அப்படியே யாரும் வந்தாலும் அவர்கள் பார்வையில் பட மாட்டார்கள் என்று புரிந்தாலும் ஒரு பதற்றம்.
அவன் பேசவே இல்லை. அவளின் இரு புறமும் கைகளை ஊன்றிச் சிறை செய்து, குறுகுறு என்று அவளையே பார்த்தான்.
இதே யாமினிதான் சற்று முன் அவனை அதட்டி, தன் சொல்லுக்கு அடங்கி நிற்க வைத்தாள். அவன் நெஞ்சுச் சட்டையில் பிடித்துத் தள்ளி, அவனைச் சுவரோடு சுவராகச் சாய்த்தாள். ஆனால் இப்போது, அவளால் அவன் பார்வையின் வீச்சை எதிர்கொள்ள இயலவில்லை. முகத்தைத் திருப்பி தன் உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டுவர முயன்றாள்.
அவன் பார்வை அவள் காதில் ஆடிக்கொண்டிருந்த ஜும்காவில் நிலைக்க, “ஒய் ஜும்க்கா!” என்றான் இரகசியக் குரலில்.
அவள் உதடு கடித்தாள். ஜூம்காவை ஒற்றை விரலால் சுண்டி விட்டுவிட்டு, “இந்த ஜும்க்கா உனக்கு எவ்வளவு வடிவா இருக்கு எண்டு சொல்லவா?” என்று அவள் காதோரமாய்க் கிசுகிசுத்தான்.
அவள் பயந்துபோனாள். “ஒண்டும் வேணாம். தள்ளுங்க நீங்க!” என்று அவனைத் தள்ளி விட்டுவிட்டு ஓட முயன்றாள்.
அவன் விட வேண்டுமே. “நீதானே நல்லாருக்கா எண்டு கேட்டனி?” என்றான் குறும்புடன்.
அதற்கு இப்படித்தான் வம்பு செய்வானா? அவன் நெற்றியில் புருவங்களைத் தொடுமளவுக்குப் புரண்டு கிடந்த சுருள் கேசங்களை அப்படியே கொத்தாகப் பற்றி, அவன் முகத்தைப் பின்னே சாய்த்து, “என்ன சேட்டையா?” என்றாள் கோபம்போல்.
அவன் இதழில் வழிந்த புன்சிரிப்புடன் கண்ணைச் சிமிட்டினான். அவள் மயங்கிப்போனாள். அந்தச் சுருள் கேசம், சிரிக்கும் கண்கள், அளவாக நறுக்கிவிடப்பட்ட மீசை, ட்ரிம் செய்யப்பட்ட தாடி என்று அவள் மனத்தைப் பறித்தான் அவன்.
அன்று முழுக்க அவன் தன்னையே சுற்றி வந்ததும் சேர, அந்த முகம் முழுக்க ஒரு வேகத்துடன் தன் ஈர முத்தங்களைப் பதித்துவிட்டு, அவனிடமிருந்து தப்பித்து ஓடி வந்திருந்தாள்.
இவர்கள் மேலே வந்தபோது அங்கே ஆண்கள் தமக்கான கச்சேரியை ஆரம்பித்திருந்தார்கள். யாமினி நிரோஜனை முறைத்தாள்.
“உனக்கு நான்தானே குடிக்கக் கூடாது.” என்றான் அவன்.
“நேரமாச்சு நிரோ. எல்லாத்தையும் ஒதுக்கிப்போட்டுப் போக வேண்டாமா?”
“அதெல்லாம் போகலாம், இரு.” என்றுவிட்டு நண்பர்களிடம் போனான் அவன்.
அவர்களையும் சேர்த்துக்கொண்டு அவன் அந்தப் பக்கம் ஒதுக்க ஆரம்பிக்க, இங்கே இவளும் மற்றப் பெண்களோடு சேர்ந்துகொண்டு உணவுகள் வைக்கப்பட்டிருந்த இடத்தை ஒதுக்க ஆரம்பித்தாள்.
அப்போது மகேஸுக்கு ஒரு அழைப்பு வந்தது. ஏற்றுப் பேசியவன் யாருக்கோ இந்த அரங்கிற்கு வரும் வழியைச் சொல்லிவிட்டு வைத்தான்.
சில நிமிடங்களில் ஒருவன் மேலே வந்தான். அவன் அணிந்திருந்த மேற்சட்டையும், கொண்டுவந்த பெரிய பையிலிருந்து வந்த கொத்துரொட்டி வாசமும் உணவகம் ஒன்றிலிருந்து வருகிறான் என்று சொல்லின.
பார்சலை மகேஸின் கையில் கொடுத்துவிட்டுத் தொகையைச் சொன்னான் அவன். அங்கிருந்த மேசையில் பையை வைத்துவிட்டு நிரோஜனை அழைத்தான் மகேஷ்.
அங்கே உள்ளே வேலையாக நின்ற நிரோஜனுக்கு ஒலித்துக்கொண்டிருந்த பாடலுக்கு மத்தியில் கேட்கவில்லை. அதில் அவன் வரவில்லை. தானே பணத்தைக் கொடுக்காமல் நிரோஜனை அழைத்த மகேஷின் செய்கையில் யாமினியின் முகம் மாறிற்று.
“அவருக்கு கேக்கேல்லை போல. நீங்களே கொடுக்கலாமே.” என்றாள் நைச்சியமாக.
உள்ளே சென்றிருந்த மதுவும் சேர, “என்னது? நான் பே பண்ணுறதா? பிறகு என்ர மானம், மரியாதை எல்லாம் என்னாகிறது? வாங்கின காசையே திருப்பிக் குடுக்காத பரம்பரை என்ர பரம்பரை.” என்று மார் தட்டினான் அவன்.
வாங்கிய பணத்தையே கொடுக்கவில்லையா? தந்துவிட்டதாக நிரோஜன் சொன்னானே. உள்ளே போன மதுவில் உளறுகிறானா, இல்லை, உண்மையைச் சொல்கிறானா என்று அவள் திகைத்து நிற்கையிலேயே வேகமாக வந்தான் நிரோஜன்.
தவிப்பும் தடுமாற்றமுமாக அவளில் படிந்த அவன் பார்வையே அவனும் மகேஷ் சொன்னதைக் கேட்டுவிட்டான் என்று சொல்லிற்று.
“வா மாச்சான் வா. நீ சொல்லு, நீதானேடா எங்கட பேங்க். எண்டைக்காவது உன்னட்ட வாங்கின காசை திருப்பித் தந்திருக்கிறமா? இல்ல, எண்டைக்காவது நீ இருக்கேக்க நாங்க காசு குடுத்து உன்னை அவமானப்படுத்தியிருக்கிறமா? இதையெல்லாம் உன்ர ஆளிட்டச் சொல்லி வைக்க மாட்டியா?” என்று வந்தான் மகேஷ்.
“மகி பேசாம இரு!” வாய்க்குள் அவனை அதட்டியபடி தன் கைபேசி மூலம் பணம் செலுத்த முயன்றான் நிரோஜன்.
கோபத்துடன் அவன் கைப்பேசியைப் பறித்துவிட்டுத் தன்னுடையது மூலம் பணம் செலுத்தினாள் யாமினி.
நிரோஜனால் அந்த இடத்தில் வைத்து எதுவும் பேச முடியவில்லை. அவள் முக இறுக்கத்தைப் பார்த்துவிட்டு மகேஸோடு உணவையும் எடுத்துக்கொண்டு உள்ளே நடந்தான்.
இங்கே ஒரு பக்கமாக அமர்ந்த யாமினிகுத் தன்னைச் சமாளித்துக்கொள்ள நேரம் தேவையாக இருந்தது.
இன்றைய மொத்தச் செலவுக்கும் யார் யார் எவ்வளவு கொடுத்தார்கள் என்று அறிய, அவன் கைப்பேசி மூலம் அவன் வங்கிக் கணக்கினுள் சென்றாள்.
அப்படிப் பார்த்தவள் முகம் சிவந்து கொதிக்க ஆரம்பித்தது.

