“என்னடி விட்டா கதைச்சுக்கொண்டே போறாய்? ஏமாளியா நான் உனக்கு? நான் என்ன ஆரோ ஒருத்தனுக்கா தூக்கிக் குடுத்தனான். அவன் என்ர ஃபிரெண்ட். குடுத்தா என்ன?”
“குடுத்தது பிரச்சினை இல்ல. திருப்பி வாங்கினனீங்களா?”
“அது என்ர பிரச்சினை. அதுக்க நீ வராத!” என்றான் அவன் பட்டென்று.
அவளுக்கு முகம் கன்றிப்போனது. “அப்ப நான் ஆர் உங்களுக்கு? உங்கட பிரச்சினை என்ர பிரச்சினை இல்லையா?”
“போதும் யமி. சும்மா செண்டியா கதைச்சு எரிச்சலக் கிளப்பாத. நீ எனக்கு எல்லாமா இருந்தாலும் எனக்கு என்ர ஸ்பேஸ் வேணும். அதுக்க நீ வராத. முக்கியமா எனக்கும் என்ர பிரெண்ட்ஸுக்கும் நடுவில வராத.” வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்கிற தொனியில் அவன் சொன்னபோது காயப்பட்டுப்போனாள் யாமினி.
“அதுதான் நான் வரேல்லையே நிரோஜன். சிவனே எண்டு வீட்டுக்கு வெளிக்கிட்டவளை இழுத்துக்கொண்டு வந்து சண்டை பிடிக்கிறது நீங்க.” என்றுவிட்டு அவள் போக முயல, ஓடிப்போய்த் திரும்பவும் அவளைத் தடுத்து நிறுத்தினான் அவன்.
“குடுத்ததை எல்லாம் திருப்பி வாங்க வேண்டியது என்ர பொறுப்பு. இதால உனக்கும் எனக்கும் சண்டை வேண்டாம் எண்டு சொல்லுறது உனக்கு விளங்கேல்லையா?” என்றான் சற்று நிதானமான குரலில்.
“எப்பிடி வாங்குவீங்க? இல்ல, இதுக்கு முதல் எப்ப வாங்கினனீங்க? வாங்கின காசைத் திருப்பிக் குடுக்காத பரம்பரையாமே அவரின்ர பரம்பரை. இதெல்லாம் ஒரு பெருமை. வெக்கமா இல்லையா அந்த ஆளுக்கு!”
“யமி போதும் நிப்பாட்டு! என்ன கதைக்கிறதா இருந்தாலும் என்னைப் பற்றி மட்டும் கதை. என்ர ஃபிரெண்ட்ஸ பற்றிக் கதைக்காத.”
“ஏன் கதைக்கக் கூடாது? அந்தளவுக்கு என்னை விட அந்த சுயநலக் கூட்டம் முக்கியமா உங்களுக்கு? அவேக்கும் நல்ல சம்பளம் வருதுதானே? பிறகும் உங்கட காசில் வயிறு வளக்க வெக்கமா இல்லையாமா? ஒருக்கா ரெண்டு தரம் எண்டா கூட வேற. எப்பவும் உங்களையே உறிஞ்சி வாழுறது எல்லாம் என்னது?”
அவளை விடவும் அவர்கள் முக்கியமாகிப்போனார்களா என்கிற கோபம் அவளைப் பேச வைத்தது. அவனுக்கோ இதற்குமேலும் பேசினால் இது பெரும் பிரச்சனையில் முடிந்துவிடுமோ என்று பயமாயிற்று.
“நீ நிக்கவே வேணாம். போ முதல் இஞ்ச இருந்து!” என்று இப்போது அவனே அலுவலக அறையின் கதவைத் திறந்துவிட்டான்.
“பதில் சொல்லேலாது எண்டதும் துரத்துறீங்களோ? ஃபிரெண்ட்ஸுக்க காசு மாறுறது நடக்கிறதுதான். நானும்தான் அஜந்தாட்ட வாங்கினனான். உடனேயே திருப்பிக் குடுக்கேல்லையா. அதுதான் நல்ல ஃபிரெண்ட். அதுக்குப் பெயர்தான் நல்ல பிரெண்ட்ஷிப். இதுக்கு பேர் பிரெண்ட்ஷிப் இல்ல. சுயநலம். ஒருத்தன் கிடச்சிட்டான் எண்டு உங்கட தலைல ஏறி இருந்து மொட்டை அடிக்கிற ஏமாத்துக்காரங்கள். உங்கள வச்சுத் தங்கட வாழ்க்கையை அனுபவிக்கிறவங்கள். நீங்களும் அறிவு கெட்டுப்போய் அள்ளிக் கொடுத்துக்கொண்டு நிக்கிறீங்க.”
“ஏய், போதும் நிப்பாட்டடி. நான் அறிவு கெட்டவனா உனக்கு? நீ கேக்காமயே காசைத் தூக்கித் தந்தன் பார். நான் அறிவு கெட்டவன்தான். நீயும்தான் அந்தக் காசைத் திருப்பித் தரேல்ல. அப்ப நீயும் சுயநலக்காரியா? ஏமாத்துக்காரியா? என்னை வச்சு அனுபவிக்கப்பாக்கிறாய் எண்டு நான் சொல்லவா?”
அவள் முகத்தின் முன்னே வந்து நின்று சீறியவனை அதிர்ந்துபோய்ப் பார்த்தாள் யாமினி. அவளுக்கு மூச்சுப் பேச்சு எல்லாமே மொத்தமாக அடங்கிப்போயிற்று.
அவள் பிடிக்கிற அத்தனை சண்டைகளும் அவனுக்காக. அவனை எல்லோருமாகச் சேர்ந்து ஏமாளியாக்குகிறார்களே என்கிற கோபம். எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு என்றோ ஒரு நாள் ஒன்றும் இல்லாமல் நின்றுவிடுஆனோ என்கிற தவிப்பு.
அவனுக்காக அவள் யோசித்தால் என்ன சொல்லிவிட்டான்?
ஒரு நொடி இமைகளை மூடித் திறந்து தன்னை நிதானப்படுத்திக்கொண்டு, “இன்னும் ரெண்டு நாள். ரெண்டே நாள். உங்கட காசு உங்களுக்கு வரும்!” என்றவள் அவன் கைப்பேசியை அவன் மேசையில் வைத்துவிட்டு, அறையிலிருந்து வெளியேறி, அந்த அலுவலகத்தை விட்டும் வெளியேறினாள்.
நிரோஜன் அப்படியே நின்றுவிட்டான். எதையும் யோசிக்கும் நிலையிலேயே அவன் இல்லை. அந்தளவில் மூளை கோபத்திலும் கொதிப்பிலும் சூடாகிப்போயிருந்தது.
மாறி மாறி வார்த்தைகளை விட்டு ஒருவரை மற்றவர் காயப்படுத்துகையில் தெரியவில்லை. ஆனால் இப்போது? நெற்றியில் அறைந்துகொண்டான்.
கைப்பேசியை எடுத்து ஜீன்ஸ் பொக்கெட்டினுள் போட்டுக்கொண்டு ஓடினான். அங்கே அவள் அந்த வளாகத்தின் கேட்டருகில் வீதியைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள்.
“யமி, அது கோவத்துல வாய் தவறி…”
அவள் வேகமாக முகத்தை எதிர்ப்புறத்தில் திருப்பித் துடைத்தாள்
அழுகிறாள். உள்ளே சுருக்கென்று எதுவோ தைக்க, “யமி…” என்றவனை இடைமறித்து,
“ப்ளீஸ். இனி எதுவும் கதைக்க வேண்டாம். நானும் நீங்க சொன்ன மாதிரி உங்களுக்கும் உங்கட பிரெண்ட்ஸுக்கும் நடுவில வரேல்ல.” என்றாள் அவள் உடைந்து தழுதழுத்த குரலில்.
“யமி, அழாத ப்ளீஸ்!”
அவன் அப்படிச் சொல்லவும்தான் அவளுக்கு விம்மி வெடித்துக்கொண்டு வந்தது. சொல்லிக் காட்டிவிட்டானே. அஜந்தாவிடம் வாங்கியதுபோலவே இருந்திருக்கலாம். இனி எந்தக் காலத்தில் இந்தக் காயம் ஆறும்? உதட்டைக் கடித்து அடக்க எவ்வளவோ முயன்றும் முடியாமல் விம்மல் ஒன்று வெடித்துவிட, அவன் தவித்துப்போனான்.
“யமி” என்று அவள் கரம் பற்ற வந்தவனிடமிருந்து வேகமாகத் தள்ளி நின்றுகொண்டு, “என்னைத் தனியா விடுங்க ப்ளீஸ்!” என்றாள் ஆத்திரமும் அழுகையும் நிறைந்த குரலில்.
“ஓகே ஓகே! இப்ப என்ன உனக்கு? வீட்டுக்குத்தானே போகோணும்? பைக் அங்க நிக்குது. வா. இஞ்ச இந்த நேரம் தனியா நிக்கிறது ஆபத்து.” அவன் போய் பைக்கை எடுத்து வரும் அந்தச் சொற்ப நேரத்திற்கும் அவளைத் தனியாக விடப் பயந்துகொண்டு சொன்னான் அவன்.
“தேவை இல்ல. இப்ப கேப் வரும்!” என்று அறிவித்தாள் அவள்.
“இந்த நேரம் வேண்டாம் யமி.”
“…”
“சொல்லுறதைக் கேளு யாமினி. இந்த நேரத்தில உன்னைத் தனியா அனுப்பி ரிஸ்க் எடுக்க நான் ரெடி இல்ல.”
“…”
“கூட்டிக்கொண்டு வந்தவனுக்குக் கூட்டிக்கொண்டு போய் விடத் தெரியாதா? ஆரைக் கேட்டு கேப் வரச் சொன்னனீ?” என்று அதட்டினான்.
“…”
“அத கேன்சல் பண்ணு!”
“…”
அத்தனை பிடிவாதமாக நின்றவள் செய்கை, அவனை மறுபடியும் கோபமூட்டிற்று. “நானே கூட்டிக்கொண்டு போறன் எண்டு சொல்லுறது உனக்கு விளங்குதா இல்லையா?” அவள் கையைப் பற்றி இழுத்துத் தன்னைப் பார்க்க வைத்துச் சீறினான்.
இதற்குள் அவர்கள் முன்னே கேப் வந்து நின்றது. அவள் அதில் என்ற முயன்றாள். அதற்கு விடாமல் தடுத்தபடி, “நான் கதைச்சது பிழைதான். ஆனா நீ போகக் கூடாது. நீ என்னோடதான் வரோணும்!” என்று அந்த ஓட்டுனருக்கு கேட்டுவிடாதபடி வார்த்தைகளை இறுக்கமாக உதிர்த்தான் அவன்.
அவள் தன் காரத்தைப் பற்றியிருந்தவனின் கையைப் பிடிவாதமாக எடுத்துவிட்டுவிட்டுக் காரில் ஏறி அமர்ந்தாள்.
“அவ்வளவு பிடிவாதம் என்ன உனக்கு? என்ன சண்டை பிடிச்சாலும் எப்பவும் நீ சொல்லுறதை மட்டும்தான் நான் கேட்டிருக்கிறன். ஆனா நீ அப்பிடி இல்லை என்ன? போ! நல்லா போ! இனி எப்பவும் கேப்லேயே போ!” என்று சீறிவிட்டு அவளுக்கு முதல் திரும்பி நடந்தான் அவன்.

