கடன் அன்பை முறிக்கும் 4 – 1

அத்தியாயம் 4

 

 

கோகிலா மகேந்திரன் தம்பதிக்குத் தவநேசன் பிறந்து 15 வருடங்களின் பின் எதிர்பாராமல் பிறந்தவள்தான் யாழிசை. அதனாலேயே அவர்கள் வீட்டுக்கு மட்டுமல்லாமல் இரு வீட்டுக்கும் செல்லப்பிள்ளை அவள்.

 

அதுவும் அரசரட்ணத்துக்கு யாழிசை மீது பிரத்தியேகமான பாசமிருந்தது. நாளடைவில் வசிக்க ஒரு வீடில்லாமல், வாழ ஒரு வழியில்லாமல் நின்ற காலத்தில், அவர் மனைவி வயிற்றில் குழந்தையோடு இருப்பதை அறிந்தும் அவரின் பிறந்த வீட்டினரே கை விரித்துவிட்ட நிலையில், மனைவியின் ஒன்றுவிட்ட தமையனான தனக்கு இடம் தந்து, வேலை வாங்கித் தந்து, ஆறுதலாகவும் அரவணைப்பாகவும் நடந்த நண்பனின் மகளைத் தனக்கே மருமகளாக்கிக்கொள்ள வேண்டும் என்கிற பெரும் ஆசையும் அவருக்கு வந்திருந்தது.

 

அது மட்டுமல்லாமல், காலப்போக்கில் மகேந்திரனின் வீட்டு நிலை அதே நிலையில் இருந்தாலும் அரசரட்ணம் அவர்களை விடவும் நல்ல நிலைக்கு வந்திருந்தார்.

 

தொழில் விவசாயம்தான் என்றாலும் பேச்சில் நாணயமும் வல்லவருமான அவர், நிலபுலன்களை கைமாற்றிவிடும் தரகராகவும் இருந்து நன்றாகவே இலாபம் பார்த்திருந்தார்.

 

தன் நண்பனையும் தன் உயரத்துக்கே கொண்டுவந்துவிட வேண்டும் என்று மகேந்திரனுக்கு ஏதாவது செய்யப்போனால் அவரின் ரோசக்கார நண்பன் பிடிவாதமாக நின்று தடுத்துவிடுவார்.

 

அதனாலேயே யாழிசையை மருமகளாக்கி, தன் சொத்தில் சரி பாதியை அவளுக்குச் சேர்ப்பித்துவிட வேண்டும் என்பதும் அவர் மட்டுமே அறிந்த ஒன்றாக இருந்தது.

 

அவர் வீட்டில் இருந்தால் அவரோடுதான் யாழிசை இருப்பாள். மகேந்திரனைப் போலவே மென்மையான மனமும் குணமும் கொண்ட பெண், அவரின் உயிர் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் அவளை அழைப்பதே மருமகள் என்றுதான்.

 

யாருக்கும் அதில் மறுப்பில்லாததில் பிள்ளைகள் வளர்ந்த பிறகு அவர்களும் பிரியப்பட்டால் முடித்துக்கொடுக்கலாம் என்றுதான் எண்ணியிருந்தனர்.

 

அவர் மறைந்தபிறகும் எதுவும் மாறவில்லை. இன்னும் சொல்லப்போனால் சுவர்ணா திருமணமாகி கணவனோடு சென்றுவிட்ட பிறகு, மாதவியின் ஆதாரமாகவே மாறிப்போனவள் யாழிசைதான்.

 

ஜீவனின் 21வது வயதில் ஸ்டுடென்ட் விசா கிடைத்து இலண்டனுக்கு அவன் புறப்பட்டபோது, “தம்பி, கலியாணம் கட்டுற காலத்தில உனக்கும் இசைக்கும் பிடிச்சிருந்தா உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கோணும் எண்டுறது அப்பான்ர பெரிய ஆசை. அதுக்காக எந்தக் காலமும் அம்மா உன்னைக் கட்டாயப்படுத்த மாட்டன். ஆனா நீ அவாவ கட்டினா அப்பான்ர ஆத்மாவில இருந்து எங்கட ரெண்டு குடும்பமும் அவ்வளவு சந்தோசப்படுவம். உனக்கும் அக்காக்கும் தெரியாது. ஆனா, அவே எங்களுக்குச் செய்தது நிறைய அப்பு.” என்று சொல்லியிருந்தார்.

 

அவருக்கு வெளிநாடு செல்லும் மகன் வழிமாறிப் போய் விடுவானோ என்று ஒரு பயம். அதே நேரம், அவனுக்கு இலண்டன் போகக் கிடைத்த சந்தர்ப்பத்தைத் தடுக்கவும் விருப்பமில்லை.

 

தன் பக்க உறவுகளிடம் ‘பாருங்கள், நீங்கள் ஆதரவு தராவிட்டால் என்ன, என் கணவன் இல்லாதபோதிலும் மகனை வெளிநாட்டுக்கு அனுப்பிப் படிக்க வைக்கும் நிலையில்தான் நான் இருக்கிறேன்.’ என்று சத்தமே இல்லாமல் மார் தட்டிச் சொல்லிவிடும் ஒரு வைராக்கியம்.

 

அதில் அவன் மனத்தில் தம் விருப்பத்தைப் போட்டு வைத்தார்.

 

சிறு பராயத்தில் ‘அவள் உன்ர மனுசியடா’ என்று சொல்லி அவனை வெட்கப்பட வைத்திருக்கிறார்கள்தான். ஆனால், ஒரு பருவத்துக்குப் பிறகு யாருமே அதுபற்றிப் பேசுவதில்லை. வளரும் பிள்ளைகள் மனத்தைக் கெடுக்க வேண்டாம் என்று நினைத்திருந்திருக்கலாம். அதனாலேயே அது மனத்தை விட்டுப் போயும் இருந்தது.

 

திடீரென்று அன்னை அந்தப் பேச்சைத் திரும்பவும் எடுக்கவும் அவனுக்குக் கூச்சமாயிற்று. “அம்மா என்னம்மா இது?” என்று கேட்டுவிட்டு அங்கிருந்து அகன்றிருந்தான். ஆனால், அதன் பிறகு அவன் பார்வை ஒருவிதக் குறுகுறுப்புடன் யாழிசை மீது படிய ஆரம்பித்திருந்தது.

 

“என்ன சின்னப்பு? ஏன் ஒரு மாதிரிப் பாக்கிறீங்க?” விசயம் அறியாதவள் வேறு நேரடியாகக் கேட்டுவிட திக்குமுக்காடிப்போனான் ஜீவன்.

 

அவன் புறப்படுவதற்கு இரண்டு நாள்களுக்கு முதல்தான் அவளின் பதினெட்டாவது பிறந்தநாள் வந்தது. கோகிலா பலகாரங்கள் செய்தார். நளினி கேக் செய்தாள். தவநேசன் புது ஆடைகள் வாங்கிக்கொடுத்தான். மாதவி பிள்ளையார் பென்டெட்டுடன் கூடிய ஒரு செயின் வாங்கிப் போட்டுவிட்டார்.

சுவர்ணாவும் தன் பங்குக்கு உடை வாங்கப் பணமாகக் கொடுத்தாள்.

 

“என்ன மச்சான், நீங்க ஒண்டும் தரேல்ல?” என்றவளிடம், “ஏன் உனக்கு இவ்வளவு பேர் தந்தது காணாதா?” என்றுவிட்டுப் போனவனுக்குத் தான் வாங்கிய கையில் கட்டும் மணிக்கூட்டை எல்லோர் முன்னும் கொடுக்க மனமில்லை.

 

தனியாகக் கொடுக்கப் பிரியப்பட்டான். அதற்குத் தோதான சமயம்தான் அமையவில்லை. அவன் பயணம் புறப்படுவதால் இரு வீட்டிலும் ஆட்கள் இருந்துகொண்டே இருந்தனர்.

 

யாழிசை வேறு காலில் சக்கரம் பூட்டியவள் போன்று அந்த வீட்டுக்கும் இந்த வீட்டுக்குமாக ஓடிக்கொண்டிருந்தாள். புறப்படுகிற அன்று அவன் அன்னையோடு சேர்ந்து இவளும் அழுதுகொண்டிருந்தாள். அவனுக்கு அவளுக்குத் தான் ஆசையாக வாங்கியதைக் கொடுக்காமல் போக முடியவில்லை.

 

கடைசியில், “இசை! இஞ்ச ஒருக்கா வந்திட்டுப் போ!” என்று தன் அறைக்குள் நின்றுகொண்டு அவசரமாக அழைத்தான்.

 

“என்ன மச்சான்?” என்று அறை வாசலில் வந்து நின்றவள் கையில், “உன்ர பிறந்தநாள் கிஃப்ட். இந்தா.” என்று கொடுத்தான்.

 

அழுது சிவந்திருந்த விழிகளை ஆச்சரியத்தில் விரித்தாலும், “அண்டைக்கு மறந்திட்டு இப்ப அவசரமா வாங்கி இருக்கிறீங்க என்ன? உங்களுக்கும் பிறந்தநாள் வருமெல்லோ. நானும் ஒரு மாதம் கழிச்சு எதையாவது வாங்கித் தாறன்.” என்றபடி வேகமாய் அதைப் பிரித்தாள்.

 

“மணிக்கூடு சின்னப்பு. நல்ல வடிவா இருக்கு.” என்றபடி உடனேயே தன் கையில் கட்டி அழகு பார்த்தவளைப் பார்த்து முறுவலித்தவன் அவளுக்குப் பின்னாலும் ஒரு முறை பார்த்துவிட்டு, “முதலே வாங்கிட்டன். தனியா தருவம் எண்டா எங்க? உன்னத் தனியா பிடிச்சிட்டாலும்.” என்று குரலைத் தணித்துச் சலித்தான் அவன்.

 

“ஏன் தனியா தரோணும்? மற்றவே பாத்தா என்ன?” தன் கையை அப்படியும் இப்படியுமாக அசைத்து அழகு பார்த்துக்கொண்டிருந்தவள் அவன் கூற்றுப் புரியாமல் வினவினாள்.

 

“மற்றவேயும் நானும் ஒண்டா உனக்கு?” செல்லக் கோபம் அவனிடத்தில்.

 

“என்ன வித்தியாசம்?”

 

“உன்ர அரசரட்ணம் மாமான்ர விருப்பம் என்ன எண்டு உனக்குத் தெரியாதா?”

 

ஒரு கணம் ஒன்றும் விளங்காமல் புருவம் சுருக்கியவளுக்கு அவன் என்ன சொல்கிறான் என்று நினைவு வந்ததும் முகம் சிவந்துபோயிற்று. நம்ப முடியாமல் அவனிடம் விழிகளை விரித்துவிட்டு அங்கிருந்து ஓடப்பார்த்தாள்.

 

அவளை விட வேகமாக அவள் கையைப் பற்றி நிறுத்தி, “உன்ர மாமா சொன்னதை மறந்திடாத. கெதியில திரும்பி வருவன். அம்மாவையும் பாத்துக்கொண்டு கவனமா இரு.” என்று அவள் முகத்தை ஆசையாகப் பார்த்துச் சொல்லிவிட்டுப் போனான் ஜீவன்.

 

அதுவரையில் அவள் மனது அவனிடம் சலனப்பட்டதேயில்லை. ஆனால் அதன்பிறகு? முற்றிலுமாக அவன் நிறைந்துபோனான்.

 

அவன் சொன்னது பற்றி யாரிடமும் அவள் பகிர்ந்துகொள்ளவில்லை. வெட்கமும் கூச்சமும். அதைவிட அதை அவனுக்கும் தனக்குமான பிரத்தியேக உரையாடலாக நெஞ்சுக்குள் பொத்தி வைத்துக்கொண்டாள்.

 

அந்த நாள்களில் அவளிடம் தனியாகக் கைப்பேசி இல்லை. அதனாலேயே தனியாக அவனோடு உரையாடியதும் இல்லை. மாதவி பேசிக்கொண்டிருக்கையில் இவளிடம் கொடுத்தாலும் ஒன்றிரண்டு வார்த்தைகளுக்கு மேல் அவளால் அவனோடு பேச முடிவதில்லை.

 

அதன் பிறகு அவளுக்கு உயர்தரப் பரீட்சை வந்ததில் படிப்பில் முழுமையாக மூழ்கினாள். அதை எழுதி முடித்து ஆசுவாசமாக மாதவி வீட்டுக்கு வந்தவளை, “இசை, நான் இஞ்ச நிக்கிறன்.” என்று, அவள் வீட்டு முற்றத்தில் கோகிலா, நளினியோடு அமர்ந்திருந்த மாதவி குரல் கொடுத்து அழைத்தார்.

 

“இண்டைல இருந்து நான் சுதந்திரப் பறவை மாமி. எக்ஸாம் முடிஞ்சு, படிப்பு முடிஞ்சு, எல்லாம் முடிஞ்சு. இனியும் ஆராவது நித்திரை கொள்ள விடாம என்னை எழுப்பிப் பாருங்க. இருக்கு சண்டை.” என்று உற்சாகமாகத் துள்ளிக்கொண்டு வந்தவளிடம் வாடியிருந்த முகத்துடன் கைப்பேசியை நீட்டினார் மாதவி.

 

அதிலே ஒரு புகைப்படம். ஜீவனும் இன்னொரு பெண்ணும் சோடியாக நின்றிருந்தனர்.

 

அதைப் பார்த்தவள் உள்ளத்தில் சின்னதாய் ஒரு நிலநடுக்கம். ஆனாலும் நம்பிக்கை இழக்காமல், “இது ஆரு சின்னப்புக்குப் பக்கத்தில?” என்று விசாரித்தாள்.

 

“பெயர் விதுசாவாம். அங்க பார்மஸில வேலை செய்றாவாம். இஞ்ச பிறந்து வளந்து 12 வயதில அங்க போயிருக்கிறா. அவவின்ர மாமா பொய் பிறப்புச் செர்டிபிக்கேட் செய்து, தன்ர மகள் எண்டு சொல்லி, இஞ்ச இருந்து கூட்டிக்கொண்டு போயிருக்கிறார். அங்க பார்மசி முடிச்சு மானேஜர் மாதிரி நல்ல வேலையும் சம்பளமாம்.”

 

நெஞ்சுக்குள் பெரும் பிரளயங்கள் நடக்க அவர் சொல்கிறவற்றைக் கேட்டுக்கொண்டிருந்தாள் யாழிசை.

 

“அம்மாச்சி, இந்த மாமியக் கோவிக்காத செல்லம். எனக்கும் உன்ர மாமாக்கும் வேற ஆசை இருந்தது. ஆனா அவன், இந்த விதுசாவ விரும்பிறானாம். அந்தப் பிள்ளையத்தான் கட்டப் போறானாம்.” என்று அவர் சொன்னபோது அவள் விழிகள் நிறைந்துபோயின.

 

ஒன்றுமே சொல்லவில்லை. கைப்பேசியில் தெரியும் புகைப்படத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

 

‘உன்ர மாமா சொன்னதை மறந்திடாத. கெதியில திரும்பி வருவன். அம்மாவையும் பாத்துக்கொண்டு கவனமா இரு’ என்ற அவன் வார்த்தைகள் காதில் எதிரொலித்தன.

 

பிறகு எதற்கு அதைச் சொன்னான்? சும்மா இருந்த அவள் மனத்தை ஏன் கெடுத்தான்? பிறகு எதற்கு இப்படி ஒரு ஏமாற்றத்தைத் தந்திருக்கிறான்?

error: Alert: Content selection is disabled!!