அன்னையின் அழைப்பைத் துண்டித்துவிட்டுக் கொஞ்ச நேரம் அப்படியே அமர்ந்திருந்தாள். நிரோஜன் இதை எப்படி எடுப்பான், அவனிடம் இதை எப்படிச் சொல்வது என்று அது வேறு ஓடிற்று. சாதாரண நேரமாக இருந்தால் கூட வேறு. இப்போது அவர்களுக்குள் நிலவும் சீரற்ற உறவுநிலையில் என்னாகும் என்று யோசிக்கவே முடியவில்லை.
கடைசியில் மனத்தை ஒருநிலைப்படுத்திக்கொண்டு, சந்திக்கச் சம்மதம் என்று சொல்லி அவனுக்குத் தகவல் அனுப்பினாள்.
அவன் குறிப்பிட்ட இடம் அவளுக்கு நன்கு தெரிந்த இடம்தான். ஒரு நீண்ட பெருமூச்சுடன் எழுந்து புறப்பட்டாள்.
அது ஒரு ஐஸ்கஃபே. அங்கே எந்த இடையூறும் இல்லாமல் பேசுவதற்கு ஏற்ப, ஒதுக்குப்புறமான பனையோலைக் குடையின் கீழ் அமர்ந்திருந்தான் நரேன்.
அவளைக் கண்டதும் அவன் கண்களில் வந்தமர்ந்துகொண்ட ஆர்வத்தைக் கண்டு சங்கடப்பட்டுப்போனாள் யாமினி. அவளைச் சந்திக்க அவன் மிகுந்த உற்சாகத்துடன் காத்திருப்பது தெரிந்தது. அப்போதுதான் மறுக்காது அவள் ஒப்புக்கொண்டதை அவன் தனக்குச் சாதகமாக எடுத்துக்கொண்டானோ என்று தோன்றிற்று.
அவள் அருகில் சென்றதும் எழுந்து நின்று கை தந்து வரவேற்று அவளுக்கு இருக்கையைக் காட்டினான். அனாவசிய அலட்டல்கள் இல்லாது, அதே நேரத்தில் நீ எனக்கு விசேசமானவள் என்பதை அவளுக்கு உணர்த்தினான்.
அதில், “சொறி, கலியாணம் பேசுறது, நீங்க கொழும்புக்கு வந்தது எதுவும் எனக்குத் தெரியாது. அத்தான் சொல்லியிருப்பார், இப்ப கொஞ்சக் காலத்துக்கு முதல்தான் அப்பா மோசம் போனவர்(இறந்தவர்). அதால இப்ப கலியாணம் செய்ற எண்ணமே எனக்கு இல்லை. அத்தான் எடுத்துத் திடீர் எண்டு சொல்லவும் திகைச்சுப்போனன். சரி, சும்மா ஒருத்தரைப் பாத்துக்கொண்டு வாறதில என்ன இருக்கு எண்டுதான் வந்தனான்.”
இதை அவன் எப்படி எடுப்பானோ என்கிற பதற்றம் உள்ளே இருந்தாலும் எந்தவிதமான தவறான நம்பிக்கையையும் அவனுக்குக் கொடுத்துவிடக்கூடாது என்பதில் முதலிலேயே தன் மனத்தை அவனிடம் வெட்டவெளிச்சமாக்கினாள் அவள்.
அவனுக்கு முகம் இலேசாக வாடிற்று. ஆனாலும் வேகமாகச் சமாளித்துக்கொண்டு முறுவலித்தான். அவள் விருப்பத்தைக் கேட்டு அறிந்துகொண்டு ஆர்டர் கொடுத்தான்.
அதன் பிறகும் அவள் சொன்னதைக் குறித்து எதுவும் பேசாமல் தன்னைப் பற்றி இயல்பாகப் பகிர்ந்துகொண்டான். அந்நியன் ஒருவனிடம் பேசும் உணர்வைக் கொடுக்காமல், இலகுவாகப் பேச வைத்து, அவளைப் பற்றியும் அறிந்துகொண்டான்.
அவனுடைய அந்தக் குணம் அவளை ஈர்த்தது. அவன் மீதான மதிப்பு அவள் மனத்தில் உயர்ந்தது. ஆனாலும் கூட அவளது தோற்றத்திலும் பேச்சிலும் ஒருவிதமான ஈர்ப்பைக் கொண்டிருக்கிறான் என்று அவன் பார்வையை வைத்துக் கண்டுகொண்டதில் யாமினியால் அவன் முன்னே இலகுவாய் இருக்க முடியவில்லை.
ஆர்டர் கொடுத்த ஐஸ்கஃபே வந்தது. அதை அருந்தியபடி அவன் மெல்ல விசயத்திற்கு வந்தான்.
“யாமினி, இந்தக் கலியாணப் பேச்சு உங்களுக்குத் தெரியவே தெரியாது எண்டு எனக்குத் தெரியாது. இந்தக் கொழும்புப் பயணமும் திடீர் எண்டு அமஞ்சதுதான். என்ர வீட்டில கதைச்சு, இப்பவே பாக்கக் கேக்க பொம்பிளை வீட்டில என்ன சொல்லினமோ தெரியாது எண்டு சொன்ன அம்மாவச் சமாளிச்சு, உங்கட வீட்டில கதைச்சு எண்டு இண்டைக்கு முழுக்க ஃபோன் கதைக்கிறதிலேயே எனக்கு நாள் ஓடிட்டுது. இரவுக்கே நான் திரும்பவும் வேணும். அதுதான் கடைசி நேரத்தில உங்களிட்டச் சொல்லுற மாதிரி ஆயிட்டுது.” என்று, இந்தத் திடீர் ஏற்பாடு எப்படி நடந்தது என்று அவன் விவரித்தபோது அவளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
“அதே நேரம் இந்தக் கலியாணப் பேச்சே தெரியாம இருந்த உங்களிட்டஎன்னைப் பிடிச்சிருக்கா எண்டு எப்பிடிக் கேக்கிறது எண்டும் எனக்குத் தெரியேல்ல.” என்று சொன்னவனைக் கண்டு அவள் கட்டுப்பாட்டையும் மீறி அவளிடத்தில் முறுவல் உண்டாயிற்று.
அதைக் கணடவனிடத்திலும் விரிந்த புன்சிரிப்பு. “என்ன, எப்பிடிக் கேக்கிறது எண்டு கேட்டே கேட்டுட்டன் எண்டு நினைக்கிறீங்களா? என்ன செய்ய, எப்பிடியாவது கேக்கோணும்தானே?” என்றான் அவன்.
இப்போது தாராளமாகவே சிரித்தாள் அவள். அதனோடே,
“உண்மையைச் சொல்லோணும் எண்டா, இப்போதைக்கு எனக்கு இந்தக் கலியாணத்தில பெரிய ஆர்வம் இல்ல. இப்பவே ஒரு குடும்பப் பொறுப்ப ஏற்கிற மனப்பக்குவம் எனக்கு இருக்கா எண்டும் தெரியேல்ல. எனக்கு… இன்னும் ரெண்டு வருசமாவது போகோணும். ப்ளீஸ் இதை போய் வீட்டில சொல்லாதீங்கோ. அப்பாவும் இல்லாம, எனக்கு ஒரு நல்லதைச் செய்ய நினைக்கிற அத்தன் எப்பிடி எடுப்பார் எண்டு தெரியாது. அதால ப்ளீஸ் நீங்களே ஏதாவது சொல்லி சமாளிக்கிறீங்களா? உங்களுக்கும் கட்டாயமா என்னை விட நல்ல பிள்ளை கிடைப்பா.” என்று தன் மறுப்பைத் தெளிவாகச் சொன்னாள்.
அவனது முகத்தில் ஒரு மெல்லிய ஏமாற்றம் நிழலாடியது. “இது உறுதியான முடிவுதானா? இல்லை யோசிக்க டைம் வேணுமா?” என்று கேட்டான்.
“இல்ல, உறுதியான முடிவுதான்.” ஏமாற்றம் நிறைந்த அவன் பார்வையைச் சந்திப்பது பெரும் சவாலாக இருந்தபோதிலும் சொன்னாள்.
புரிகிறது என்பதுபோல் தலையை ஆட்டிவிட்டு சிறிது நேரம் அமைதியாகவே இருந்தான் அவன். அவளின் மறுப்பை உள்வாங்கிக்கொள்ள முயல்கிறான் என்று புரிந்து அவன்பால் அவளுக்குள் இரக்கம் சுரந்தது. ஆனால், அவளும் என்ன செய்வாள்?
அவள் இதயத்தைக் கொய்தவன் அவளின் அழகிய பொல்லாதவனாயிற்றே. அவனுக்கு ஆயுது நூறு போலும். அவள் நினைத்து முடிக்க முதலே அவன் நண்பர்கள் குலாத்துடன் எதிரில் வந்துகொண்டிருந்தான்.
அவனைப் பார்த்ததும் யாமினியின் இதயம் ஒரு கணம் நின்று துடித்தது.
அவளை இன்னொருவனோடு பார்த்துவிட்டு என்ன நினைப்பான்? தப்பாகப் புரிந்துகொண்டு கோபப்படுவானா? இந்த இடத்தில் வைத்து, இவன் முன்னால் ஏதாவது பேசி, அது அத்தானின் காதுக்குச் சென்று பிரச்சினையாக வெடித்துவிடுமோ என்று எண்ணிப் பயந்தாள்.
அங்கே அவனும் இவளைப் பார்த்திருந்தான். இப்படி இன்னொருவனோடு அவளைக் காண்போம் என்று அவனும் எதிர்பார்க்கவில்லை என்று, நடந்து வந்துகொண்டிருந்தவனின் நடை நின்றுபோனதிலேயே தெரிந்துபோயிற்று.

