அத்தியாயம் 17
அவளை இன்னொருவானொடு பார்த்த கணத்தில் நிரோஜனுக்குள் என்னவோ புசுபுசு என்று பொங்கிக்கொண்டு வந்தது. ஆனால் என்ன, அதை வெளியில் காட்ட முடியாதே. அவன் இதையெல்லாம் பெரிதாக எடுக்காத ஒருவனாயிற்றே.
ஆனால், அவன் கட்டுப்பாட்டையும் மீறி உள்ளே படர்ந்த இறுக்கம் முகத்தில் தெரிய, அவளையே பார்த்தான். அருகில் நின்ற மித்ரன் வேறு, “டேய், ஆர் அது யாமினிக்குப் பக்கத்தில?” என்று விசாரித்தான்.
“எனக்கென்ன தெரியும்? நானும் உங்களோடதானே வாறன்!” என்று சீறி விழுந்தான் அவன்.
“உன்னை பிரேக்கப் பண்ணிட்டு வேற செட் பண்ணிட்டாளாடா?” என்றவனை சரக்கென்று திரும்பிப் பார்த்து முறைத்தான்.
“இல்ல மச்சான், நீ வேற குடிச்சு, எங்களுக்கு முன்னால கைய ஓங்கி எண்டு பல சிறப்பான சம்பவங்களைச் செய்திருக்கிறாய். அதான்.” என்று இழுத்தான் அவன்.
“வாங்கடா விசாரிப்பம்.” என்றபடி எல்லோருமாக அவர்களை நோக்கிச் சென்றனர்.
“ஹாய் யாமினி!” என்றான் மித்ரன் ஆர்ப்பாட்டமாக.
“ஹாய்!” அவளுக்குக் குரல் எழும்பவே இல்லை. பார்வை தடுமாற்றத்துடன் நிரோஜனிடம் சென்று வந்தது. கைகால்களில் மெல்லிய நடுக்கம்.
“ஹாய் டூட்! நாங்க எல்லாரும் யாமினின்ர ஃபிரெண்ட்ஸ்.” என்று நரேனுக்குக் கையை நீட்டினான் மித்ரன்.
எழுந்து நின்று, புன்னகை முகமாகத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, ஒவ்வொருவருக்கும் கைலாகு கொடுத்தான் நரேன்.
நிரோஜன் மட்டும் நெருங்கிய நண்பர்கள் சத்தம் எழுப்பும் வண்ணம் கைகளை அடித்துக்கொண்டு குலுக்குவது போன்று செய்தான். நிச்சயம் அது நட்பின் வெளிப்பாடில்லை. கோபத்தின் வெளிப்பாடு. அது நரேனுக்குப் புரியாதபோதும் யாமினிக்குப் புரிந்தது.
நண்பர்கள் நால்வரும் இவர்கள் இருவரையும் சுற்றி அமர்ந்தார்கள்.
“ஓகே! உங்களைப் பற்றிச் சுருக்கமா சொல்லுங்க பாப்பம்.” என்றான் நவீன்.
“ஏற்கனவே சொன்னதுதான். நான் நரேன்.” என்று புன்னகைத்தான் நரேன்.
“இது கொஞ்சம் ஓவர் சுருக்கமா இருக்கே.”
புன்சிரிப்புடன் யாமினியைப் பார்த்தான் நரேன். திருமணத்திற்கு அவனை மறுத்துவிட்டாள் அவள். அப்படியிருக்க அவளிற்குப் பேசப்படும் வரன்தான் தான் என்று சொல்வது பொருந்தாது என்பதில் அவளே எதையாவது சொல்லட்டும் என்று நினைத்தான்.
அவளுக்குத் தொண்டைத் தண்ணீர் வற்றிப்போயிற்று. “அது… வீட்டில கலியாணம் பேசினம். அதான்… பாத்துக் கதைச்சிட்டுப் போக வந்தவர்…” தவிப்புடன் திக்கித் திணறினாள்.
“ஓ கலியாணம்! வாவ்! சொல்லவே இல்ல நீங்க. கங்கிராட்ஸ் யமி! அப்ப கெதியில(விரைவில்) எங்க எல்லாருக்கும் கலியாணச் சாப்பாடு இருக்கு. இதக் கொண்டாடோணுமே மச்சான்!” உற்சாகம் பொங்கச் சொல்வதுபோல் சொல்லிவிட்டு, அங்கே போன பணியாளரை அழைத்து, எல்லோருக்கும் பிடித்தவற்றைக் கொண்டுவரச் சொன்னான் நிரோஜன்.
யாமினி மிடறு விழுங்கினாள். முகம் மாறாமல் காக்க மிகவுமே சிரமப்பட்டாள். அப்போதுதான் அவனிடம் சொல்லாமல் வந்தது எங்கே வந்து நிற்கிறது என்று புரிந்தது.
வேண்டுமென்று சொல்லாமல் விடவில்லை. எப்படியும் மறுக்கப்போகிறோம் என்பதும், அவர்களுக்குள் இருந்த சண்டையும், வரும் வழி முழுக்க நரேனிடம் எதை, எப்படி நல்ல முறையில் சொல்லவேண்டும் என்று யோசித்துக்கொண்டு வந்ததும் சேர, சொல்லாமல் விட்டிருந்தாள்.
அது பார்த்தால் அவன் கண்ணிலேயே பட்டு, என்னவோ அவனுக்கு மறைத்து அவள் வந்தது போன்ற தோற்றத்தை உண்டாக்கி, அச்சத்தைக் கிளம்பிற்று. ஏற்கனவே அவர்களுக்குள் ஒன்றும் சரியில்லை. இதில் இது வேறு.
“பிறகு சொல்லுங்க. எப்ப மட்டில கலியாணம் வச்சிருக்கிறீங்க?” என்று கதை கேட்டான் அவன்.
“இல்ல இல்ல. அது பேச்சளவிலதான் இருக்கு.” நரேனையும் வைத்துக்கொண்டு அவனை மறுத்துவிட்டேன் என்று சொல்ல ஒரு மாதிரியாக இருந்ததில் தடுமாறினாள்.
நிரோஜனுக்கு உள்ளே புகைந்துகொண்டிருந்ததின் மேலே யாரோ பெட்ரோலை ஊற்றினார்கள். அவனைப் பார்த்த நவீன் குபீர் என்று வெடித்த சிரிப்பை அடக்கிக்கொண்டான்.
இதற்குள் அவர்கள் எல்லோருக்கும் ஐஸ் வந்தது. நவீன் கிண்டலாக அவனைப் பார்த்த கடுப்பில், “இந்த டைம்ல நீ ஐஸ் சாப்பிடக் கூடாது. வயித்தில இருக்கிற பிள்ளைக்குக் கூடாது.” என்றுவிட்டு இரண்டையும் தானே அருந்தினான்.
‘வயித்தில இருக்கிற பிள்ளையா?’ வாய் விட்டு அலற முடியாமல் அவர்களை மாறி மாறிப் பார்த்தான் நரேன்.
“அது அவன் ஏழு மாசம்!” என்றான் நிரோஜன் கடுப்புடன்.
நரேனின் விழிகள் இரண்டு வெளியே வந்துவிடும் போலாயிற்று. பார்வை வேறு நவீன் வயிற்றைத் தொட்டு வந்தது. யாமினியையும் கேள்வியாகப் பார்த்தான்.
அவளுக்கு ஒன்றும் செய்ய முடியா நிலை. சும்மா விளையாடுகிறான் என்று சொல்லவே பயந்தாள்.
“டேய் என்னடா, ரெண்டு நாளைக்கு முதல்தான் நாலு மாதம் எண்டு சொன்னாய்.” என்று நடுவில் வந்தான் மித்ரன்
“அது எங்கட பிள்ளை அசுர வேகத்தில வளந்துகொண்டு இருக்கு.”
“அப்ப என்ன இன்னும் ரெண்டு நாளில உன்ர கைல பிறந்த குழந்தை கைல இருக்குமாடா?” என்றான் மகேஷ்.
“எனக்கொரு மகன் பிறப்பான். அவன் என்னைப் போலவே இருப்பான்!” என்று பாடினான் மித்ரன்.
முதலில் அதிர்ந்தாலும் விளையாடுகிறார்கள் என்று புரிந்து விழுந்து விழுந்து சிரித்தான் நரேன். அந்தச் சிரிப்புடனேயே எழுந்து, தனக்கு நேரமாகிவிட்டதைச் சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.
அதற்கு முதல், “உங்கட பிரெண்ட்ஸ் எல்லாரும் இருக்கேக்க இதக் கேக்கிறது சரியா தெரியேல்ல. போயிடுவீங்களா? இல்லை, கொண்டுவந்து விட்டுட்டுப் போகவா?” என்று யாமினியிடம் கேட்டான்.
இதையெல்லாம் நிரோஜன் கவனித்துக்கொண்டிருக்கிறான் என்பதே அவளுள் பெரும் நிலநடுக்கத்தை உண்டாக்க, “இல்லை, நானே போயிடுவன். தேங்க்ஸ்.” என்றாள்.
அப்போதும் புறப்படாமல் எதிர்பார்ப்பாய் அவளையே பார்த்து நின்றான் நரேன். என்னவோ தனியாகப் பேச நினைக்கிறான். நிரோஜனை எண்ணி பயந்தாலும் அவளால் அவன் எதிர்பார்ப்பைப் புறக்கணிக்க முடியவில்லை.
அவளைப் பார்க்க என்றே வந்தவன் அவன். அவள் இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை என்று சொன்ன நேரத்தில் சரியாக நிரோஜன் குழு வந்திருந்தது. அதன் பிறகு அதை முழுவதுமாகப் பேசி முடிக்க அவர்களுக்கு அவகாசம் கிடைக்கவில்லை.
அதற்கு ஒரு முற்றுப்புள்ளியை முழுமையாக வைப்பதற்கு அவன் விரும்புகிறான் என்று விளங்க, “ஒரு நிமிசம்.” என்று நிரோஜனைப் பாராமல் சொல்லிவிட்டு எழுந்து, அவனோடு நடந்தாள்.
அவ்வளவுதான். அவ்வளவு நேரமாக இவள் என்ன செய்யப்போகிறான் என்று கவனித்துக்கொண்டிருந்த நிரோஜன், ஐஸ் அருந்திக்கொண்டிருந்த கரண்டியைத் தூக்கி எறிந்துவிட்டு, முகம் திருப்பித் தன் சினத்தை அடக்க முயன்றான்.
நவீனுக்கு நண்பனின் மனநிலை விளங்கிற்று. “டேய்! சும்மாவே உங்களுக்க ஒண்டும் சரியா இல்ல. திரும்பவும் அவசரப்பட்டு ஆத்திரப்பட்டு அண்டைக்கு மாதிரி எதையாவது செய்து வைக்காத. நிதானமா அவளோட கதை.” என்று எடுத்துச் சொல்லி, அவனை நிதானப்படுத்த முயன்றான்.
தள்ளிச் சென்று அவள் முகம் பார்த்து நின்றான் நரேன். யாமினிக்கு முள்ளின் மேல் நிற்கும் நிலை. நிரோஜன் மட்டுமே அவள் சிந்தை முழுவதையும் சிறை செய்திருந்தான்.
“முடிவில ஏதும் மாற்றம்?” என்று வினவினான் நரேன்.
இல்லை என்று மறுத்துத் தலையசைத்தாள் அவள்.
“ஓகே. நானே வேற பாக்கச் சொல்லி வீட்டில சொல்லுறன். ஆனா… உங்கட முடிவை, பிளான நீங்க உங்கட வீட்டில தெளிவா கதைக்கிறதுதான் நல்லம் எண்டு நினைக்கிறன். என்னை மாதிரி இன்னொருத்தனும் ஆர்வமா வந்து, ஏமாற வேண்டாமே.” என்றதும் அவள் முகம் கன்றிப்போயிற்று.
“சொறி. உங்களைக் குத்திக்காட்டச் சொல்லேல. இப்பிடி வாற ஒவ்வொருத்தரிட்டயா நீங்க சங்கடப்பட்டுப் பதில் சொல்லுறதுக்கு உங்கட வீட்டில ஒரேயோருக்கா கதைக்கிறது எவ்வளவோ நல்லமெல்லா?”
விளங்குகிறது என்பதுபோல் இப்போதும் தலையைத்தான் அசைத்தாள் அவள்.
“நான் சொன்னதில பிழை ஒண்டும் இல்லையே.”
‘கதைச்சது போதும் போடா. அங்க ஒருத்தன் சாமியாட பாத்துக்கொண்டிருக்கிறான்.’ என்று உள்ளம் அலறியதில் கசியப் பார்த்த விழிகளைச் சிமிட்டி அடக்கிக்கொண்டு, சின்ன முறுவலோடு இல்லை என்று தலையசைத்தாள் அவள்.
சில விநாடிகளுக்கு அவள் முகத்தையே பார்த்தான் நரேன். அழகான அருமையான பெண். மறுப்பைக் கூட இங்கிதமாகவும் இதமாகவும் அதே நேரம் தெளிவாகவும் சொன்னவள். உண்மையில் அவளைத் தவறவிடுவதைப் பெரும் இழப்பாகவே கருதினான். அதே நேரத்தில் விருப்பமில்லாத பெண்ணை வற்புறுத்துவது அவன் இயல்பும் இல்லை.
அதில் ஒரு பெருமூச்சுடன் அவளிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டான்.

