நீ வந்து தங்கிய நெஞ்சில் 17.2

யாமினிக்கு இங்கே திரும்பி வரவே கால்கள் பின்னின. மனத்தைத் திடப்படுத்திக்கொண்டு வந்தாள்.

அவள் வருவதைக் கவனித்துவிட்டு, “நிதானமா கதை மச்சான். கோபப்படாத.” என்று அவன் தோளில் தட்டிச் சொல்லிவிட்டு மற்றவர்களோடு விலகிப்போனான் நவீன்.

நடுக்கத்துடன் வந்து அமர்ந்தாள் யாமினி. அவனைப் பார்க்கவே பயந்தாள். அவனும் நிமிராவே இல்லை. பௌலில் இருந்த ஐஸினை அருந்துவதையே முக்கிய வேலையாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.

அந்தக் கனமான அமைதி இரும்புச் சட்டங்கள் இரண்டு மோதிக்கொள்வது போன்ற பிரமையை யாமினிக்குக் கொடுத்தது. சில கணங்களுக்கு மேல் அதைத் தாக்குப் பிடிக்க முடியாமல், “நி…ரோ” என்றாள் தவிப்புடன்.

“நிரோ!”

“சொல்லு!” என்றான் நிமிர்ந்து பார்த்து.

புருவச் சுளிப்பும் அவன் பார்வையில் தெரிந்த கடுமையும் அவள் வாயை அடைத்தன.

“சந்தேகப்படுறீங்களா?” மெல்லிய குரலில் வினவினாள்.

“சந்தேக…” பல்லைக் கடித்து முகம் திருப்பித் தன்னை நிலைப்படுத்த முயன்றான்.

ஒரு முடிவுடன் திரும்பி, “இதப் பற்றி ஏன் என்னட்ட நீ சொல்லேல்ல?” என்று கேட்டான்.

உன் மீதிருந்த மனத்தாங்கலும் கோபமும் சொல்ல விடவில்லை என்று சொல்ல முடியாமல், திடீரென்று ஆதவன் அழைத்து நரேனைப் பற்றிச் சொன்னதை, அவள் அன்னையிடம் கோபப்பட்டதை, வேறு வழியற்று வந்ததை, வந்த நிமிடமே தான் இந்தத் திருமணத்திற்குத் தயாரில்லை என்று நரேனிடம் சொன்னதை எல்லாம் சொன்னாள்.

“வீட்டில உனக்கு அவனைப் பேசினதோ, அவனப் பாக்க நீ இஞ்ச வந்ததோ எனக்குப் பிரச்சினை இல்ல. இப்ப சொன்னதை எல்லாம் ஏன் நீ எனக்கு முதல் சொல்லேல்ல?” என்று திரும்பவும் அதே கேள்வியில் வந்து நின்றான் அவன்.

என்னவோ அவள் புரிந்தது குற்றம்தான் என்பதுபோல் விடாமல் அவன் அதையே கேட்டபோது அவளுள் இருந்த ஏதோ ஒன்று நிமிர்ந்தது. அவளிடம் எப்படி நடந்தான், அவளைப் பார்த்து என்னவெல்லாம் கேட்டான்? அதற்கு ஒரு விளக்கம் தந்தானா? இல்லை அவளைச் சமாதானம்தான் செய்தானா?

இப்போது அவள் ஒன்றைச் செய்ததும் எப்படி எல்லாம் கேட்கிறான்?

“நான் ஏன் சொல்லேல்ல எண்டு உங்களுக்கு தெரியாதா?” என்று திருப்பிக் கேட்டாள் அவள்.

“கேட்ட கேள்விக்கு ஒழுங்கா பதிலைச் சொல்லு யாமினி. விருப்பமில்லாட்டி ஃபோன் கோலிலேயே இந்த விசயத்தை நீ முடிச்சிருக்கலாம். நேர்ல பாக்க வந்திருக்கிறாய், அவனோட சேந்து ஐஸ் குடிச்சிருக்கிறாய், அவன்ர கண் பாத்து நடக்கிறாய். இதையெல்லாம் என்ன எண்டு நான் எடுக்கிறது?” என்று அடக்கப்பட்ட குரலில் ஆத்திரப்பட்டான் அவன்.

அவன் கண் பார்த்து நடந்தாளா? என்ன அர்த்தத்தில் சொல்கிறான்? அவளுக்கும் கோபம் வந்தது. “பதில் சொல்லாட்டி எப்பிடி எடுப்பீங்க நிரோ? என்னவோ நான் ஆசைப்பட்டு வந்த மாதிரியும், சந்தோசமா சிரிச்சுக் கதைச்ச மாதிரியும் சொல்லுறீங்க. நாங்க கதைச்சு முடிக்க முதல் நீங்க வந்திட்டீங்க. அதுதான் கடைசியா என்ர முடிவு என்ன எண்டு கேக்கிறதுக்குத்தான் பாத்தவர். நானும் போய் அதைத்தான் சொல்லிப்போட்டு வந்தனான். அதுக்கு கண் பாத்து நடக்கிறன் எண்டு சொல்லுவீங்களா?” என்றவளுக்கு அப்படி அவன் சொன்னதைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

கண் பார்த்து நடப்பதும், அவன் சொல்லாமலேயே ஒன்றைப் புரிந்துகொள்வதும் அவள் அவனோடு பிரத்தியேகமாகச் செய்பவை. அதைப்போய் இன்னொருவனோடு செய்ததாகச் சொல்கிறானே. அவள் நெஞ்சு குமுறிற்று.

“இத நீ முதலே என்னட்ட சொல்லியிருந்தா இந்தப் பிரச்சினையே வந்திருக்காது.”

“சரி, சொல்லாம விட்டது பிழையாவே இருக்கட்டும். அதுக்கெண்டு இப்பிடித்தான் கேப்பீங்களா? உங்களுக்குச் சந்தேகம். அதுதான் அத மறைச்சு இப்பிடி எல்லாம் கதைக்கிறீங்க.” என்று கோபப்பட்டாள் அவள்.

“லூசாடி நீ?” என்றவனுக்குத் தன் மனத்தை உணர்த்தும் வகை தெரியவில்லை. “இன்னொருத்தனோட உன்னை பாக்கவும் லைட்டா…” என்றவனால் மேலே அதைச் சொல்ல முடியவில்லை.

‘எரியுதடி மாலா’வா? உள்ளே குளுகுளுவென்று இருந்தது அவளுக்கு.

“இப்ப என்னவாம்?” என்றான் அவளைப் பாராமல்.

‘அத என்ர முகம் பாத்துக் கேக்க மாட்டானாமா?’ மனம் உள்ளே முறுக்கினாலும் போகும்போது நரேன் சொல்லிவிட்டுப் போனதைச் சொன்னாள்.

“என்ன செய்யப்போறாய்?”

“கலியாணம் வேண்டாம் எண்டு மொட்டையா சொல்லேலாது. அப்பா எண்டா வேற. இது அத்தான். அம்மாவும் அத்தான் முன்னுக்கு நிண்டு செய்ய நினைக்கிற இந்த நேரமே என்ர கலியாணத்தை முடிக்க நினைக்கிறா.”

அவள் சொன்னவற்றை உள்வாங்கிக்கொள்கிறவன் போல் அமைதியாக இருந்தான் அவன்.

அவனைக் கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு, “நான் என்ன செய்ய?” என்று கேட்டாள் யாமினி.

நிமிர்ந்து அவளைப் பார்த்தான் நிரோஜன். இருவரிடத்திலும் இணக்கம் கொஞ்சமும் இல்லை. விலகளும் இறுக்கமும் அப்படியே இருந்தன. ஆனாலும், எதிர்காலத்தில் ஒன்றாக வாழத் திட்டமிட்டவர்கள் அவர்கள். அதில் அவர்களுக்குள் இருக்கும் பிரச்சனையைத் தள்ளி வைத்துவிட்டுத் தற்போதைய பிரச்சனை குறித்து சேர்ந்தே யோசித்தனர்.

“நரேன் சொல்லுறார் ரெண்டு வருஷம் கழிச்சுப் பாருங்கோ எண்டு வீட்டில சொல்லட்டாம் எண்டு. அப்பிடி மட்டுமே சொன்னா அம்மா கேக்க மாட்டா. அத்தானும் காரணம் கேப்பார். இப்ப கலியாணத்தில ஆர்வம் இல்லை எண்டு நரேனிட்ட சொன்னதை அவேட்ட சொல்லேலாது. அதையெல்லாம் ஒரு காரணமா எடுக்காயினம். எங்களைப் பற்றிச் சொன்னா ரெண்டு விஷயம் நடக்கும். ஒண்டு, அத்தான் உடனேயே உங்கட வீட்டில கதைக்க நிப்பார். எப்பிடியும் எங்கட கலியாணம் நடக்க இன்னும் ரெண்டு வருடமாவது அக்காவும் எண்டேக்க என்னை வேலையை மாத்திக்கொண்டோ விட்டுட்டோ அங்க வரச் சொல்லுவினம். விசயம் தெரிஞ்சு ஆரும் ஏதும் கதைக்கிற மாதிரி இருக்கக்கூடாது எண்டு அம்மா நினைப்பா. நான் என்ன செய்ய?” என்றாள் திரும்பவும்.

தங்கையின் திருமணம் முடிந்த பிறகு தம்மைப் பற்றி வீட்டில் சொன்னால் அத்தனையும் சுமூகமாகப் போகும் என்று எண்ணியிருந்தான். அதற்கென்று அவசியம் வருகையில் முதலே பேசாமல் இருக்க முடியாது.

“இப்போதைக்கு நீயும் நரேனைப் பிடிக்கேல்ல எண்டு மட்டும் சொல்லு. வேற சம்மந்தப் பேச்சு வந்தா சொல்லு, ரெண்டு வீட்டிலயும் கதைப்பம்.” என்றான் அவன்.

சரி என்று தலையாட்டிக் கேட்டுக்கொண்டாள் அவள்.

அவ்வளவுதான். அதைத் தாண்டி வேறு பேச வராமல் இருவருமே தடுமாறினர். என்னதான் இருவருமாகச் சேர்ந்து ஒரு முடிவை எடுத்திருந்தாலும் இருவர் உள்ளத்திலும் மற்றவர் பால் இருந்த மனத்தாங்கல் அப்படியேதான் இருந்தது.

ஒரு நெடிய மூச்சை இழுத்துவிட யாமினி, பணியாளரை அழைத்து பில் கொண்டுவரச் சொன்னாள்.

“எல்லாம் சேர்த்தா?”

அவள் ஆம் என்று சொல்வதற்கிடையில் அங்கே ஒரு மேசை தள்ளி அமர்ந்திருந்த நவீன், “இல்லையில்ல. நாங்க தனித்தனியாகவே பே பண்ணுறம்.” என்றான் வேகமாகச் சொல்லவும் யாமினியின் முகம் கன்றி சிவந்து போயிற்று.

ஆக, கண்டபாட்டுக்கு மற்றவர்களுக்காய்ச்ச செலவழிக்காதே என்று அவனிடம் சொன்னது நவீனுக்குத் தெரிந்திருக்கிறது. அவள் சொன்னதை அவனிடம் சொல்லியிருக்கிறான். இப்போது அவன் நண்பர்கள் முன்னேயும் அவள் மோசமானவளா? அன்று போன மானம் காணாது என்று இதுவும் சேர்ந்துகொண்டிருக்கிறது. அவளைப் பற்றி என்ன நினைப்பார்கள்?

தொண்டைக்குழி ஏறி இறங்க, கலங்கிச் சிவந்துவிட்ட விழிகளோடு ஒரு நொடி இமைக்காது நிரோஜனையே பார்த்தவள் ஒரு முடிவுடன் நிமிர்ந்து, “நானும் என்னோட வந்தவரும் சாப்பிட்ட பில் மட்டும் கொண்டு வாங்க” என்று சொல்லி, அதற்கு மட்டும் பணம் செலுத்திவிட்டுப் புறப்பட்டாள்.

தலையைப் பற்றிக்கொண்டு அமர்ந்துவிட்டான் நிரோஜன்.

எல்லோரும் நல்ல நண்பர்கள் என்றாலும் நவீனும் நிரோஜனும் நெருங்கிய நண்பர்கள். அன்று பார்ட்டியில் நடந்த பிரச்சனைகளால் தனியாகக் கேட்ட நவீனிடம் எதையும் மறைக்காமல் சொல்லியிருந்தான் நிரோஜன். அவனுக்கும் ஆறுதலும் ஒரு தெளிவும் தேவையாய் இருந்தன. உற்ற நண்பனிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்வான்.

யாமினி சொல்வதில் இருக்கிற நியாயம் நவீனுக்குப் புரியாமல் இல்லை. அதே நேரத்தில் எல்லாவற்றுக்கும் அவனே முன்னின்று செலவழித்து, அதுவே அவர்கள் எல்லோருக்கும் பழகியிருந்தது. அதில் அது ஒரு விடயமாகக் கருத்தில் பதிந்ததில்லை.

அந்த லோன் நவீனுக்குத்தான் எடுத்துத் தந்திருந்தான்.

அவனுக்கு ஏற்கனவே ஒரு லோன் இருந்ததில் தமக்கையின் மகளுக்கு கண்ணில் சத்திரசிகிச்சை ஒன்று செய்யவேண்டும், பணத்திற்கு வழியில்லை என்றதும் எதைப் பற்றியும் யோசிக்காமல் எடுத்துக் கொடுத்திருந்தான் நிரோஜன்.

அதை முடிந்தவரை விரைவாகத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும், இனிக் கவனமாக இருந்து, எல்லோரும் செலவழிப்பதுபோல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அவன் நினைத்திருந்தான்.

கூடவே சரி தவறுகளைத் தாண்டி நண்பர்கள் அவர்களுக்கு நடுவில் அவள் மூக்கை நுழைகிறாள் என்று தோன்றுவதை அவனால் தவிர்க்க முடியாமல் போயிற்று.

அதுதான் இன்று அவசரமாக வெளிவந்திருந்தது. அதுவே தனக்கு அவர்களுக்குள் நடந்தவை தெரியும் என்று காட்டிக்கொடுத்துவிட்டதை அவனும் பிறகுதான் உணர்ந்தாள்.

“சொறி மச்சான்!” என்றான் சங்கடத்துடன்.

“ஆனா ஒண்டடா. ஆளாளுக்கு என்னை வச்சு நல்லா செய்றீங்க.” என்றுவிட்டு எழுந்து அவளிடம் விரைந்தான் நிரோஜன்.

அங்கே அவள் பெருந்திற்காகக் காத்திராமல் மனத்தின் வேதனைகள் மட்டுப்படுவதற்காக விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்திருந்தாள்.

வேகமாக பைக்கை கொண்டுபோய் அவள் முன்னே நிறுத்தி, “ஏறு!” என்றான் அவன்.

வேண்டாம் என்பதுபோல் மறுத்துவிட்டு அவள் தொடர்ந்து நடந்தாள். அப்போதுதான் அன்று தான் கேப்பிலேயே போ என்று சொன்னது அவனுக்கு நினைவு வந்தது. “அப்ப என்ன இனி என்ர பைக்ல ஏறவே மாட்டியா நீ?” என்றான் அவன் நின்ற இடத்தை விட்டு பைக்கை சிறிதும் அசைக்காமல்.

அப்படியே நின்றாள் யாமினி. ஒவ்வொரு முறையும் வார்த்தைகளால் அடிக்கிறான். ஒரு கணம் விழிகளை மூடி திறந்துவிட்டு திரும்பி வந்து ஏறிக்கொண்டாள்.

எப்போதும் அவன் தோள் பற்றிக்கொண்டு அமர்கிறவள் இன்று அளவுக்கதிகமான இடைவெளியில் அமர்ந்து பைக்கையே பிடித்துக்கொண்டாள்.

அதையெல்லாம் அவன் கவனிக்காமல் இல்லை. கடுப்புடன் பைக்காகி விரட்டினான்.

பயணம் முழுக்க இருவரும் பேசிக்கொள்ளவில்லை. அவள் வீட்டு வாசலில் கொண்டுபோய் அவன் நிறுத்தினான். “தேங்க்ஸ்!” என்று முணுமுணுத்தபடி இறங்கினாள்.

“நீயும் எங்களுக்க நடந்த சண்டையை அஜந்தாட்ட சொல்லியிருப்பாய்தானே?” என்றான் அவன் சினத்துடன்.
அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டுப் பேசாமல் நடந்தாள் அவள்.

error: Alert: Content selection is disabled!!