எண்ணமெல்லாம் நீ 10 – 2

“என்னை மதிக்காத, என்னில மதிப்பில்லாத ஒருத்தர் எனக்கு வாழ்க்கைத் துணையா வேண்டாம். இண்டைக்கு மனதப் பறி குடுத்திட்டனே எண்டு உங்களையே கட்டி, காலம் முழுக்க அழ என்னால ஏலாது. என்னை விட்டுடுங்க.” என்று சொல்லிவிட்டு அவள் போக முயல, அதற்கு விடாமல் நிதானமாக எழுந்து அவள் முன்னே வந்து நின்றான் உதயன்.

 

“நான் கதைச்சது உன்ன எந்தளவுக்குக் காயப்படுத்தி இருக்கு எண்டு எனக்கு விளங்குது. அதே நேரம், அதுக்காக எல்லாம் உன்ன விடேலாது. கொஞ்ச நேரத்துக்கு முதல் சொன்னியே நடந்தது எல்லாம் நல்லதுக்குத்தான் எண்டு. அதையேதான் நானும் சொல்லுறன். நடந்தது எல்லாம் நல்லதுக்குத்தான்.” என்றவனைப் புருவம் சுருக்கிப் பார்த்தாள் அவள்.

 

“நீ விருப்பம் சொன்ன பிறகுதான் எனக்கும் உன்னப் பிடிக்க ஆரம்பிச்சது. ஆனாலும் ஒரு தயக்கம் இருந்ததும் உண்மைதான். நான் ஒண்டும் இருவது வயதுப் பெடியன் இல்ல. ஒருத்தியப் பிடிச்சிருக்கு எண்டதும் வேற எதைப் பற்றியும் யோசிக்காம காதல் எண்டு அவளுக்குப் பின்னால திரிய. வயதான அம்மா அப்பா, மனுசன் இல்லாத ஒரு அக்கா, அவான்ர ரெண்டு பிள்ளைகள் எண்டு எனக்கு நிறையப் பொறுப்புகள் இருக்கு அபி. அது எல்லாத்துக்கும் நீ உடன் பட்டு வருவியா, உன்ர அம்மா என்ன சொல்லுவா எண்டு எல்லாம் யோசிக்க வேண்டி இருந்தது. அதே மாதிரி உன்னப் பற்றி இருந்த பிழையான எண்ணங்களும் நான் ஓம் எண்டு சொல்ல யோசிச்சதுக்கு ஒரு காரணம்தான். ஆனா, நான் கோவப்பட்டு, வார்த்தைகள விட்டு, அதால நீ என்னை விட்டுத் தள்ளி இருந்து, இன்னொரு கலியாணத்துக்கு ரெடியாகிட்டியாம் எண்டு அறிஞ்ச நேரம்தான் நீ எனக்கு எவ்வளவு முக்கியம், நீ கிடைக்காமப் போனா நான் என்ன ஆவன் எண்டுறது எல்லாம் எனக்கும் நல்லா விளங்கினது. அதாலதான் சொல்லுறன், நடந்தது எல்லாம் நல்லதுக்குத்தான்.” என்று சொல்லிக்கொண்டு வந்தவன், “எனக்கு நீ வேணும் அபி. உண்மையாவே நீ இல்லாட்டி நான் வாழுறதிலேயே அர்த்தம் இல்லையடி.” என்றான் தன் ஆழ்ந்த குரலில்.

 

அவ்வளவு நேரமாக நிமிர்ந்து நின்றவள் அந்தக் கணத்தில் உடைந்தாள். இப்படி ஒரு வார்த்தையை அவன் சொல்லிவிட மாட்டானா என்று தவமிருந்த நாள்கள் கண் முன்னால் வந்து நின்றன. அன்று அவன் இப்படிச் சொல்லியிருந்தால் இந்த உலகத்திலேயே மகிழ்ச்சியான ஒருத்தியாகத் தன்னைத்தான் உணர்ந்திருப்பாள்.

 

ஆனால் இன்று?

 

அழுகையும் ஆத்திரமும் சேர்ந்து வந்தது. அவனிடம் எதையும் பேச முடியாதவளாய் முகம் திருப்பி நின்றாள்.

 

“அபி ப்ளீஸ்!” என்று அவள் கரம் பற்றப் போனான். இப்போதும் விடாமல் கையைப் பின்னால் இழுத்துக்கொண்டவள் நிமிர்ந்து நேராக அவனைப் பார்த்தாள். விழிகள் கலங்கிச் சிவந்திருந்தாலும் வார்த்தைகள் தெளிவாகவும் தீர்க்கமாகவும் வந்தன.

 

“பிறந்ததில இருந்தே சரியான செல்லம் நான். வசதி வேற. ஒரேயொரு பொம்பிளைப் பிள்ளை. அதால நான் இப்பிடியா இருக்கலாம். ஆனா, இதுதான் நான். இதுதான் என்ர இயல்பு. இந்த என்னைக் கட்ட விருப்பம் இருந்தா வந்து வீட்டில கதைங்க. இல்லையா எனக்குப் பாக்கிற பெடியனைக் கட்டிக்கொண்டு போயிடுவன். கட்டினா உங்களைத்தான் கட்டுவன் எண்டு சொல்லுற அளவுக்கெல்லாம் நீங்க பெறுமதியே இல்ல!” என்றுவிட்டு நடந்தவளைச் சிரிப்புடன் முறைத்தான் அவன்.

 

“சரியான திமிரடி உனக்கு!” வாய்க்குள் முணுமுணுத்தவனுக்கு அவள் மீது கோபம் மருந்துக்கும் இல்லை.

 

ஆனால், வீட்டில் வந்து பேசு என்று சொன்னது ஒரு ஆறுதல் என்றாலும் பழைய அந்த அபி, அவனிடம் உரிமை எடுத்து, அவனோடு மல்லுக்கு நிற்கும் அந்த அபிக்காக அவன் உள்ளம் ஏங்கிற்று.

 

என்ன செய்து அவள் மனத்தின் காயத்தை ஆற்றலாம் என்று எண்ணியபடி அவன் அமர்ந்திருக்க, அந்தப் பக்கத்தால் நடந்து போய்க்கொண்டிருந்த மாதவன் கண்ணில் பட்டான். இவன் எங்கே இங்கே? அவன் புருவங்கள் சுருங்கின.

 

அதுவும் சில கணங்களுக்குத்தான். உடனேயே எல்லாம் பிடிபட்டது. சீற்றம் ஒன்று உச்சி மண்டைக்கே ஏற, விறுவிறு என்று மாதவனைத் தேடிக்கொண்டு போனான்.

 

அவன், அவன் அலுவலக அறையில் அமர்ந்திருந்தான்.

 

“ஹேய் உதயன்! வாங்க வாங்க. என்ன இங்கயே வந்திருக்கிறீங்க? எப்ப கொழும்பில இருந்து வந்தனீங்க?” கதவைப் படார் என்று திறந்துகொண்டு வந்தவனைக் கண்டு வியந்து, உற்சாகமாக வரவேற்றான் மாதவன்.

 

“அண்டைக்கு என்ன நடந்தது?” அவன் மேசைக்கு முன்னால் வந்து நின்று கிட்டத்தட்ட உறுமினான் உதயன்.

 

“எண்டைக்கு?” என்று புருவம் சுருக்கும்போதே அவன் முகத்தில் பதற்றம். மெல்லிய வியர்வையும் அரும்ப, “அதுதான் அண்டைக்கே சொல்லி மன்னிப்பும் கேட்டேனே உதயன்.” என்றான் நல்ல பிள்ளையாக.

 

“நடிக்காத நீ. உண்மையா அண்டைக்கு என்ன நடந்தது?”

 

“உதயன்!”

 

“சொல்லடா! அவளிட்ட என்ன சேட்டை எல்லாம் விட்டனி?” என்று எட்டி அவன் கழுத்துச் சட்டையைப் பற்றி இழுத்து எழுப்பினான்.

 

இதற்குள், உன்னைப் பார்க்க வந்தவன் மாதவனின் அறைக்குக் கோபமாகப் போயிருக்கிறான் என்று, சக அலுவலகத் தோழி சொன்னதைக் கேட்டு ஓடி வந்த அபிராமி, அவர்கள் இருவரும் நின்ற நிலை கண்டு அதிர்ந்துபோனாள்.

 

“என்ன செய்றீங்க? விடுங்க அவர.” என்று ஓடி வந்து உதயனை அகற்ற முயன்றாள்.

 

“அண்டைக்கு என்ன நடந்தது?” மாதவனைத் தன் பிடியிலேயே வைத்தபடி திரும்பி அவளிடம் வினவினான் உதயன்.

 

ஏதோ யோசித்துப் பிடித்திருக்கிறான் என்று விளங்க, அவளுக்குத் திரும்பவும் கோபம் வரும்போல் இருந்தது. “இத நீங்க அண்டைக்குக் கேட்டிருக்கோணும் உதயன்!” என்றாள் நிதானமாக.

 

“உண்மைதான். இவனை நல்லவன் எண்டு நம்பி உன்னட்டக் கோவப்பட்டுட்டன். அதுக்கு சொறி!”

 

மாதவனுக்கு முன்னாலேயே அப்படி மன்னிப்புக் கேட்டதில் இவளுக்குத்தான் ஒருமாதிரி ஆகிப்போனது. பிடிக்கவும் இல்லை.

 

“ப்ச் உதயன், இப்ப நீங்க இவரை விட்டுட்டு வாங்க!” என்று அவன் கரம்பற்றி இழுத்தாள்.

 

அவன் அப்போதும் விடவில்லை. “சொல்லு, என்ன செய்தவன்? எனக்கு இப்ப தெரியோணும்.” என்று நின்றான்.

 

அதைச் சொன்னால் ஏதும் அசம்பாவிதம் நடந்துவிடுமோ என்று பயந்தாள் அபி. அந்தளவில் மூர்க்கனாய் நின்றான் உதயன். அதைவிட இன்னும் ஒரு வாரம்தான் அவளுக்கு இங்கே வேலையும். நல்லமாதிரியே அங்கிருந்து வெளியேற ஆசைப்பட்டவள், “முதல் அவரை விட்டுட்டு வாங்க. இது ஒபீஸ். இங்க பிரச்சினை வேண்டாம். பிறகு என்ர பெயரும் சேர்ந்து அடிபடும்.” என்று பிடிவாதமாக அவனை அவள் இழுக்க, அவனும் விட்டான்.

 

கசங்கி கிடந்த மாதவனின் சட்டையை நேர் செய்து, “உன்ர வீடு, உன்ர அம்மா அப்பா, மனுசி பிள்ளைகளைப் பற்றிச் சயந்தனக் கேட்டா எல்லாம் தெரிய வரும். சோ, நீ ஓடவும் ஏலாது, ஒழியவும் ஏலாது. உன்ன நான் விடவும் மாட்டன். உன்ர வீட்டுக்கு வந்தே கதைக்கிறன்.” என்று சொன்னவன், “இவாக்கு இண்டைக்கு லீவு. நீயே ஏற்பாடு செய்துவிடு.” என்றுவிட்டு கையோடு அவளை இழுத்துக்கொண்டு போனான்.

error: Alert: Content selection is disabled!!