நீ வந்து தங்கிய நெஞ்சில் 18.1

அத்தியாயம் 18

ஐஸ் கஃபேயில் வைத்துக் கடைசியாகக் கலங்கிய விழிகளோடு அவள் பார்த்த பார்வையும், அவள் வீட்டு வாசலில் வைத்து அவனைப் பார்த்துவிட்டுப் போன பார்வையும் நிரோஜனை மிகவுமே தொந்தரவு செய்தன.

அதற்கு முதலுமே அவள் எண்ணியதுபோல் அவள் மீதான கோபத்தில் மாத்திரமே அவன் இருக்கவில்லை. தினமும் அவள் குரல் கேட்டு, ஆசையாக அவளோடு இரண்டு வார்த்தை பேசி, அவளைச் சீண்டி, விளையாடி, வாரத்தில் குறைந்தது நான்கு நாள்களாவது அவள் கையால் சாப்பிட்டு, அவளைத் தன் அணைப்பினுள் வைத்திருந்து என்று, அவளுக்குப் பழக்கப்பட்டவன் அவன்.

அப்படியிருக்க சிறு குறுந்தகவல் கூட இல்லாது இருக்கையில் அவன் உடலில் இருந்து முக்கிய பாகம் ஒன்றை இழந்துவிட்டது போலவே நடமாடிக்கொண்டிருந்தான்.

இப்போது அவள் பார்த்துவிட்டுப் போன பார்வைகள் இன்னும் அதிகமாய் அவனை அவளை நோக்கித் துரத்தின. என்ன செய்யலாம் என்று யோசித்துவிட்டுக் காவியாவுக்கு அழைத்தான்.

அஜந்தாவின் திருமணத்தை ஒட்டி வீட்டுக்கு வரப்போவதைச் சொல்லி, கொழும்பிலிருந்து அவளுக்கு ஏதாவது வேண்டுமானால் யாமினியிடம் சொல்லும்படி சொல்லிவிட்டு வைத்தான்.

காவியா திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறவள். எதிர்காலக் கணவனோடு காணொளி அழைப்பில், நேரம் அமைந்தால் நேரில், ஃபோனில் என்று பேசுகிறவள். திருமணத்திற்கு முன்னான இந்தக் காலப்பகுதியில் தன்னை மிக மிக அழகாய் வைத்துக்கொள்ள ஆசைப்படுபவள். அப்படியானவளுக்கா தேவைகள் இருக்காது?

யாமினிக்கு அழைத்து, “அக்கா, உங்களுக்கு ஆக அரியண்டம்(தொல்லை) தாறனோ தெரியா. ஆனா எனக்குக் கொஞ்சம் உடுப்புகள் தேவையா இருக்கு. கௌரி விரதம் வேற வருது. வாங்கித் தருவீங்களா? அண்ணாதான் உங்களக் கேக்கச் சொன்னவர். அவருக்கு இதெல்லாம் பாத்து எடுக்கத் தெரியாதாம்.” என்றாள் நயமாக.

அவனுக்கா தெரியாது? அவளுக்கு எப்படிப் பார்த்து பார்த்து எடுத்துத் தருவான்?

ஆனால், காவியாவின் வேண்டுகோள் அவளுக்குச் சுமையாகத் தெரியவில்லை. மாறாக, காவியாவிற்குத் தான்தான் அண்ணி என்கிற உணர்வெழுந்து, அக்கறையோடு அவள் கேட்பதைச் செய்துகொடுக்கும் ஆவல்தான் உண்டாயிற்று. அவள் தமையானால் காயப்பட்டிருந்த மனதும் ஏதோ ஒரு வகையில் சின்னதாய் ஆறுதலும் கொண்டது.

காவ்யா அழைப்பைத் துண்டித்த இரண்டாவது நிமிடம் நிரோஜன் அழைத்தான். இத்தனை நாள்களும் அவளைக் கண்டுகொள்ளாமல் இருந்தவனின் இன்றைய அழைப்பு மெல்லிய வலியாய் அவள் உள்ளத்தினுள் ஊடுருவியது.

அழைப்பை ஏற்று, “ஹலோ!” என்றாள் தயக்கமான குரலில்.

அவனுக்கும் பேசுவது இலகுவாய் இல்லை போலும். குரலைச் செருமிவிட்டு, “காவியா கோல் பண்ணினவளா?” என்று கேட்டான்.

“ஓம். இப்பதான் கதச்சுப்போட்டு வச்சவா.” என்று சொன்னபோது, அவள் குரலில் இருந்த அந்த மென்மையான நடுக்கத்தை அவன் உணர்ந்தான்.

ஒரு கணம் அமைதி காத்துவிட்டு, “என்னவாம்?” என்று பேச்சுக் கொடுத்தான்.

அவள் ஏன் அழைத்தாள் என்று இவனுக்குத் தெரியாதா? இவன் ஏற்பாட்டில்தானே அழைத்தாள். தன்னைப் பேச வைக்கவும் தன்னோடு பேசுவதற்கும் இதை அவன் பயன்படுத்த முயல்கிறான் என்று தெரிந்தும் காவியா சொன்னவற்றைச் சொன்னாள்.

“எப்ப உனக்கு டைம் இருக்கும்?”

“நான் இப்பவும் ஃப்ரீதான்.”

“ஒபீஸ் இல்லையா?”

“மீட்டிங் மட்டும்தான். முடிஞ்சுது.”

“அப்ப நான் வரவா?”

அவள் தயங்கினாள். அவன் தங்கைக்கு என்பதால் அவனை எதிர்பார்க்கிறாள் என்று நினைத்துவிட மாட்டானா? தன் பணத்தை செலவழிக்காமல் அவனே வந்து செலவும் செய்யட்டும் என்று அவள் நினைப்பதாக அவன் எண்ணிவிட்டால்? இன்றைய நிரோஜன் எதற்கு என்ன நினைப்பான் என்று அவளால் கணிக்க முடியவிலை.

அதில், “கட்டாயம் இல்ல. நானே போயும் வாங்குவன்.” என்றாள்.

“இப்ப என்ன, என்னை வர வேண்டாம் எண்டுறியா?”

“இல்ல. உங்களுக்கு வேலை இருந்தா…” என்று அவள் தடுமாறினாள்.

“அப்பிடி வேலை இருந்திருந்தா இன்னொரு நாளைக்குப் போகலாம் எண்டு சொல்லியிருப்பன்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தவன் சரியாக அரை மணி நேரத்தில் வந்து நின்றான்.

அவளும் தயாராகிக் கீழே இறங்கி வந்தாள். அவனைப் பார்த்த மாத்திரத்திலேயே அழுகை வந்து தொண்டையை அடைத்தது. இயல்பாக அவன் பார்வையைச் சந்தித்துப் பேச முடியவில்லை. பேசாமல் சென்று அவன் பைக்கில் ஏறி அமர்ந்தாள்.

எப்போதும் அவர்கள் போகும் புடவைக்கடைக்கே விட்டான் அவன். கடைசியாக இங்கேதான் அழைத்து வந்து, அஜந்தாவின் திருமணத்திற்குச் சேலை எடுத்துத் தந்தான். அன்று அவர்களுக்குள் இருந்த நெருக்கமும் உரிமையும் இன்று எங்கோ தொலைந்த நிலை.

ஜீன்ஸ், அதற்குத் தோதான மேற்சட்டைகள், சில சுடிதார் செட்ஸ், சேலை என்று பார்த்தாலும் அவளால் அவற்றை முடிவாகத் தெரிவு செய்ய முடியவில்லை. தான் பார்க்கும் விலையில் எடுக்கலாமா, இல்லை மலிவு பார்த்து எடுக்கிறாள் என்றுவிடுவானா என்று தடுமாறினாள்.

ஒரு கட்டத்துக்குமேல் முடியாமல் “என்ன மாதிரி விலைல பாக்க?” என்று அவனிடமே கேட்டாள்.

அவ்வளவு நேரமாக அவள் நடவடிக்கைகளை அவனும்தானே கவனித்துக்கொண்டிருந்தான். அவளை இழுத்துக்கொண்டு தனியாக வந்து, “என்ன பிரச்சினை உனக்கு?” என்றான் இறுக்கமான குரலில்.

உன் சம்மந்தப்பட்ட ஒன்றை முன்னர் போன்று உரிமையாகச் செய்ய முடியாமல் நிற்கிறேன் என்று எப்படிச் சொல்லுவாள்? தொண்டையை அடைத்துக்கொண்டு அழுகை வந்தது. உதட்டைப் பற்றி, பார்வையை அவனிடமிருந்து அகற்றிக்கொண்டு நின்றாள்.

“யமி.”

அவள் இதழ்கள் நடுங்க ஆரம்பிக்க, தொண்டைக்குழி ஏறி இறங்கிற்று.

நிரோஜனும் அவளை அப்படிப் பார்க்க முடியாமல் முகம் திருப்பித் தலை கோதினான்.

“காவியாக்கு எதெல்லாம் நல்லாருக்கும் எண்டு நினைக்கிறியோ அதை எடு. சும்மா கண்டதையும் யோசிச்சு மனதைப் போட்டுக் குழப்பாத.” என்றான் அவன் சமாதானக் குரலில்.

அதாவது அன்று அவன் விட்ட வார்த்தைகளை எல்லாம் மறந்துவிட்டு எடு என்கிறான். அது எப்படி என்று மனம் முணுமுணுத்தாலும் மறுத்து எதுவும் சொல்லவில்லை அவள். தனக்குத் தெரிந்த வகையில் தெரிவு செய்தாள்.

காவியாவிற்கு அளவாக இருக்குமா என்கிற சந்தேகம் வந்த ஒரு உடையை அவனிடமும் கேட்டுப் பார்க்கலாம் என்று அவன் புறம் திரும்பியவள் அவன் பார்வை பெண்களின் உள்ளாடைகள் கொழுவி இருந்த பக்கம் போய்வரவும் பயங்கரமாக முறைத்தாள்.

அவன் பயந்துபோனான். “அடியேய்! பிழையா எல்லாம் பாக்கேல்லை. எதேற்சையா கண்ணில பட்டுட்டுது.” என்றான் அவசரமாக.

நொடியில் அவர்களுக்குள் இருந்த பிணக்குகள் எல்லாம் மறந்துவிட, அவன் கண்களில் தெரிந்த உண்மையான பதற்றம் அவளுக்குச் சிரிப்பு மூட்டிற்று. கேட்க வந்ததைக் கேளாமல் மீண்டும் தன் முன்னே பரப்பட்டிருந்த உடைகள் மீது அவள் கவனம் பாதிக்க, “தேவை எண்டா தாராளமா எடுக்கலாம். நான் பே பண்ணுறன்.” என்று அவள் காதோரம் சொல்லிவிட்டு ஓடிவிட்டான் அவன்.

error: Alert: Content selection is disabled!!