அழகிய சவால் நீ 7 – 1

அத்தியாயம் 7

 

‘All you need is love. But a little chocolate now and then doesn’t hurt.’

Charles M. Schulz

 

அடுத்தடுத்து இம்யூன் சேலஞ், பிரஷர் டெஸ்ட் மற்றும் எலிமினேஷன் என்று, ஒவ்வொரு கிழமையும் ஒளிபரப்பாக வேண்டிய எபிசோட்ஸ், மிஸ்டரி பொக்ஸ் சேலஞ்ச், சேவீஸ் சேலஞ்ச், ரீக்ரியேஷன், டேஸ்ட் டெஸ்ட், சமயலறிவு பற்றிய போட்டிகள் என்று, தனித்தனியாகவும் குழுவாகவும் நடைபெற்றன.

 

ஒவ்வொரு வார இறுதியிலும் ஒருவர் கண்ணீரோடு கையாட்டிச் செல்ல செல்ல, ஆரம்பத்தை விடவும் அவர்கள் சிந்தையைப் போட்டி தன்னுள் இழுத்துப் பிடிக்க ஆரம்பித்திருந்தது, தன் கனத்தை உணர்த்தியது. கவனத்தை முழுமையாகக் குவித்து உழைக்க வேண்டிய கட்டாயத்தை நெற்றியில் அறைந்து சொன்னது.

 

போட்டியாளர்களிடையே சின்ன சின்ன சலசலப்புகள், முறுகல் நிலை என்பனவற்றையும் கடந்து ஒவ்வொருவரும் தம் பெஸ்ட் கொடுக்க இரவு பகலாக உழைத்தார்கள். போட்டிக்கான படப்பிடிப்புத் தவிர்ந்த பெரும்பாலான நேரங்களில் சமையல் புத்தகங்களோடும் சமையல் செய்து பார்ப்பதோடும் கழிந்தன.

 

எந்த விசயம் என்றாலும் முழுமனதோடு உழைப்பைப் போட்டால் மட்டுமே அதில் சிறக்க முடியும். அது, வாழ்க்கை என்றாலும் சரி, வேலை என்றாலும் அதேதான். அதை, நன்கு புரிந்து முயன்றவர்களால் மட்டுமே இந்தப் போட்டியிலும் நிலைத்து முன்னேற முடியும்.

 

இப்படியே, இறுதிப் பன்னிரெண்டு போட்டியாளர்கள் என்ற நிலை வந்திருக்க, அன்று, மூன்று குழுக்களாகப் பிரித்து இம்யூன் சேலஞ் நடந்தது.

 

ஒரே நேரத்தில், ஒரே வகையைச் சேர்ந்த பதார்த்தத்தைத் தயாரித்துப் பரிமாறுதல் தான் கொடுக்கப்பட்ட சேலஞ். மொத்தமாக நான்கு வகை உணவுகள், ஒவ்வொன்றிலும் ஒரு வெற்றியாளர்.

 

கடைசியில் எந்தக் குழு குறைவான வெற்றியோடு உள்ளார்களோ அதிலுள்ள நால்வரும் அடுத்து நடக்கப்போகும் பிரஷர் டெஸ்ட் பின் எலிமினேஷன் என்று முகம் கொடுப்பார்கள். அதுவும், இந்த வாரத்தில் இருவர் வெளியேற்றப்படுவார்கள், அதாவது ‘டொப் டென்’ தெரிவு நடக்கப்போகிறது என்று அறிவித்தபடிதான் போட்டியாளர்கள் வரவேற்கப்பட்டார்கள்.

 

அந்தக் கடைசிக் குழுவாக தாம் வந்து விடவே கூடாது என்ற எண்ணம் மூன்று குழுவினரின் உள்ளும். அதுவே, போட்டியில் முனைப்போடு பங்கு பெறச் செய்தது. எல்லோருக்குமே டொப் 10 போவதில் விருப்பம் இல்லாமல் இராதே!

 

முதல் போட்டி குளிர்பானம் தயாரிப்பு, அதுவும் பத்து நிமிடங்களில். சுவையோடு சேர்த்து ஆரோக்கியமும் கவனிக்கப்படும் என்று சொல்லியிருந்தார்கள். அடுத்து, ஸ்டார்ட்டர், மெயின் என நடந்த போட்டியில் ஒவ்வொரு குழுவும் ஒரு ஒரு வெற்றியைத் தமதாக்கி ஒருவருக்கு ஒருவர் சளைத்தவரில்லை என நிரூபித்து இருந்தார்கள்.

 

இப்போ டெசர்ட் செய்பவர்களுக்கு எக்கச்சக்க பொறுப்பு! இதில் வெல்லும் அணிக்கு முதல் இடமாச்சே! அதில், அதிக பிழைகளோடு உள்ள அணி, கடைசி இடம்.

 

தன் குழுவிற்காக டெசர்ட் தயாரிக்கவிருந்த ஒலிவியாவினுள் எக்கச்சமாகவே பதற்றம். வெளியில் காட்டிக்கொள்ளாது நிற்க பெரும் பிரயத்தனம் செய்தபடி இருந்தவள், “டைம் ஸ்டார்ட் நவ்” என்றதும் பம்பரமாகச் சுழன்று செயல்பட்டாள்.

 

அடுத்தடுத்து என்ன என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாகத் திட்டமிட்டிருந்தவள், தங்கு தடையின்றிச் செயல்பட்டாள். அவளைப் போலவே தான், மற்றைய இரு குழுவினரும். இவர்கள் மூவருக்குமே திட்டமிடலுக்கு நேரம் இருந்ததே!

 

மற்றைய ஒன்பது பேரினதும் கண்கள் இவர்களில் தான். கேன்ட்ரியில் (Gantry) நின்றிருந்தவர்கள், இடையிடை ஊக்க வார்த்தைகள், கேள்விகள், சின்ன சின்னதாக டிப்ஸ் என்று வழங்கிக்கொண்டிருக்க, செஃப் வேர்த் கூட அவர்களோடு சென்று நின்று கொண்டான்.

 

இந்தப் போட்டியின் நடுவர் அவன். நடுநிலை தவறுவது என்பது நடக்கவே கூடாது. தவறவும் மாட்டான். ஆனாலும், மனம் அவன் அதட்டலுக்குச் செவி சாய்க்காது காந்தத்தால் இழுபட்டுப் போவதைப் போல் சென்று அவளைப் பிரத்தியேகமாகக் கவனிக்கிறதே! அதுவும் அவள் செய்ய வெளிக்கிட்டிருப்பது இரு சீசன்களுக்கு முன்னர் ஒருவன் தயாரித்து மிகப் பிரபல்யம் ஆனது. ஹோம் குக்கிங் டெசர்ட் மன்னன் என்று அழைக்கப்படும் அவனுக்குக் கிரீடம் சூட்டிய டிஷ். அதுவே, வேர்த் மனதுள் பரபரப்பை உருவாக்கி விட்டிருந்தது.

 

ஒலிவியா மட்டுமல்ல, மற்றைய இருவரும் மிகச் சிறப்பாக டெசர்ட் செய்பவர்கள் என்று பெயர் எடுத்தவர்கள்தான். நடுவர்கள் மூவருக்குமே இதில் மாற்றுக்கருத்தில்லை. பிறகென்ன? போட்டி அனல் பறந்தது. கடக்கும் ஒவ்வொரு கணமும் தன்னை அத்தனை பெறுமதியாக உணர வைத்துக் கடந்தது.

 

கிறிஸ்டினாவும் ஆரோனும் இடையிடையே வந்து எட்டிப் பார்த்தார்கள். சின்ன சின்னதாகக் கேள்விகள் கேட்டார்கள். அதுவே போட்டியாளர்களுக்கு மறைமுகமாக டிப்ஸ் வழங்குவதாகவும் இருந்தது. போட்டியாளர்களின் சமையல் பாங்கு, வந்ததிலிருந்து இப்போ வரையிலான முன்னேற்றம் என்பவற்றையும் அவதானித்தபடி சென்றவர்கள், செய்யப்படும் பதார்த்தங்களை ஒவ்வொரு நிலையிலும் ருசி பார்க்கவும் தவறவில்லை.

 

ஒலிவியாவை நோக்கி வந்தார், செஃப் ஆரோன் டேல். அவளோ சொக்லட் மூஸ் தயாரிப்பின் இறுதிக்கட்டத்தில் இருந்தாள். முடித்துவிட்டால் அரைவட்டப் பாதிகளாக எடுக்க, அதற்கான சிலிகோன் மோல்ட்டுகளில் விட்டு ஃபிரீசரில் வைக்க வேண்டும்.

 

அவளையும் அவள் சமையல் மேடையையும் பார்த்தபடி, அங்கிருந்த தேக்கரண்டி ஒன்றை எடுத்த ஆரோன், மூஸ் சிறிது எடுத்து ருசி பார்க்க முனைந்தார். அதற்கு முதல், தான் ருசித்தாள், ஒலிவியா.

 

“ம்ம்ம் டூ குட்! டெலிசியஸ்!” விழிகளை மூடி தன்னைத்தானே பாராட்டிக்கொண்டாள்.

 

ஆரோனின் விழிகள் அவளை ஆச்சரியமாகப் பார்த்தன.

 

“ஓவர் கொன்ஃபிடென்ட்ஸ் இல்லையே ஒலிவியா?” விழிகள் நகைப்பில் சுருங்கக் கடித்தார். சில கணங்கள், மேலதிகமாக அவள் விழிகளையே கூர்ந்து பார்த்தார். அந்தப் பார்வையை, இவள், தன் இயல்பான சவாலோடு எதிர்கொண்டாள்.

 

“நோ நோ, உங்களுக்கும் கட்டாயமாகப் பிடிக்கும். நான் சொல்வதையே நீங்களும் சொல்வீங்க. டேஸ்ட் செய்து பாருங்க செஃப்!” பட்டென்று சொல்லிவிட்டு நாக்கைக் கடித்தவள் மறுநொடியே தவிப்போடு அவரைப் பார்த்தாள்.

 

பத்திரம் காட்டி, தலையில் மெல்லத் தட்டிவிட்டு ருசி பார்த்தவர் எதுவுமே சொல்லாது, தன்னையே ஆர்வமாகப் பார்த்து நின்றவளைப் பாராதே நகர்ந்துவிட்டார்.

 

“நான் நான்…” பகிடி போல் சொல்லிக்கொண்டு வந்த கிறிஸ்டினாவும் அவள் செய்திருந்தவற்றை ருசித்தார். அவரும் எதுவுமே சொல்லவில்லை. எதிர்பார்த்திருந்தவள், உதட்டைச் சுழித்தபடி வேலையில் கவனமானாள்.

 

கிறிஸ்டினா பார்வை கேன்ட்ரிக்கு சென்றது. வேர்த் விறுவிறுவென்று படிகளால் இறங்கி வந்தான்.

 

“அன் பீலிவபல்! நாக்கில் சுவை அப்பிடியே நிக்குது. ஷீ இஸ் சோ ஸ்மார்ட் ஓல்சோ!” அவனிடம் குசுகுசுத்துவிட்டு நான்காவதாக நின்ற சாம் நோக்கி நகர்ந்தார், கிறிஸ்டினா.

 

நீயும் சென்று சுவைத்துப் பாரேன் என்றபடி தளம்பி நின்ற மனத்துக்குக் கட்டுப்பாடு போட்டபடி, மீண்டும் கேன்ட்ரியில் சென்று நின்று கொண்டான், வேர்த்.

 

கம்பீரமாக, நடுவராக அவளைப் பார்த்தான். அங்குள்ளவர்களில் வயதில் இளையவளாக இருந்தாலும் போட்டி தொடங்கிய பின்னரான அவள் சமையல் கலையார்வம், அதற்கான அவளின் மினக்கெடல், புதுமையாகவும் சுத்தமாகவும் பார்த்ததும் வாயில் நீர் ஊறச் செய்யும் விதத்தில் கண்ணுக்கு விருந்தளிக்கும் விதமான ப்ரசண்டேஷன் என்று, தனிப்பட கவனிக்க வைத்து வருபவள் மீது எவருக்குமே இயல்பாக ஒரு அன்பும் மதிப்பும் உருவாகவே செய்யும். இப்படி எண்ணியவன் இதழ்கடையோரம் முறுவலில் துடித்தது.

 

‘சரிதான், நீ நடுவர் என்பதிலிருந்து ஒருகணமும் அப்பால் இப்பால் நழுவுவது இல்லைத்தான் வேர்த்!’ படுகேவலமான பார்வையோடு சீண்டியது அவன் உள்ளம்.

 

‘ஒஃப் கோர்ஸ்! என் மதிப்பீட்டில் எந்தவிதமான பிரத்தியேக உணர்வுகளுக்கும் இடமளிக்க மாட்டேன் என்கையில் நீ சொல்வது சரிதான்!’ தனக்குத்தான் சொல்லிக்கொண்டே, மூன்று போட்டியாளர்களையும் உன்னிப்பாகக் கவனித்து நின்றான், அவன்.

error: Alert: Content selection is disabled!!