கடன் அன்பை முறிக்கும் 18 – 2

தூயவன் மட்டுமில்லை துளசி சொல்லியும் அவன் கேட்பதாக இல்லை என்றதும் யாழிசையைக் கேள்வியாகப் பார்த்தான் தூயவன்.

 

முகத்தில் இன்னும் கொஞ்சம் முதிர்ச்சி வந்திருந்தது. தலைமுடி வெட்டியிருந்தாள். காதுகள் ஹெல்மெட்டுக்குள் மறைந்திருந்தன. கழுத்தில் எதுவும் இல்லை.

 

‘இன்னும் இந்தக் கழுத்துக்கு ஒரு செயினை போடாம என்ன செய்றாள் இவள்?’ உள்ளே சுறு சுறு என்று ஏதோ ஏறியது அவனுக்கு.

 

தங்கைக்கு நடந்த பிரச்சனையையும் தாண்டிக்கொண்டு அவன் கவனம் அவளிடம் சிதறியது.

 

அவன் பார்வையில் அவளுக்குள் ஒரு நடுக்கம் பிறந்தது. இப்படி, அவன் பார்வையில் இருப்பதையே அவள் விரும்பவில்லை. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகு பார்க்கிறாள். ஆனாலும் அவன் அண்மையில் உண்டாகிற அந்தப் பதற்றம் அகலேன் என்றது. அங்கிருந்து ஓடிவிடத் துடித்தாள்.

 

சின்னவன் விட வேண்டுமே.

 

“தம்பிய கொண்டு வந்து விட்டுட்டுப் போறியா?” என்றான் தூயவன்.

 

“நீங்க முன்னால போங்க அக்கா. நான் பின்னால வாறன்.” துளசியிடம் திரும்பிப் பதில் சொன்னாள் அவள்.

 

‘கேட்டது நான். பதில் அங்க!’ அவளை முறைத்துவிட்டுப் போய் வேனில் ஏறியவன், மற்ற இருவரும் ஏறியதும் சரக் சரக்கென்று முன்னும் பின்னுமாக எடுத்து, அந்த வீதியிலேயே தன் வாகனத்தைத் திருப்பினான்.

 

அப்படி அவன் திரும்புகையில் ஒரு முறை மயிரளவு இடைவெளி மட்டுமே அவன் வாகனத்துக்கும் அவள் ஸ்கூட்டிக்கும் இருந்ததில் நொடியில் பதறிப்போனாள் யாழிசை.

 

திரும்பவும் இடித்தால் அவள் அண்ணி அவளை உண்டில்லை என்று ஆக்கிவிட மாட்டாளா என்கிற பயத்துடன் நிமிர்ந்து அவனைப் பார்க்க, அவனும் அவளைத்தான் பார்வையால் எரித்துக்கொண்டிருந்தான்.

 

இதில், எப்போதும்போல் இணைந்து கிடக்கும் அவன் புருவங்கள், இந்த முறை சுளித்துக் கிடந்து இன்னுமே அவள் நெஞ்சைச் சில்லிட வைத்தன.

 

“ஏன்டா இவ்வளவு வேகம் உனக்கு?” என்ற குருவின் அதட்டலைக் கூடப் பொருட்படுத்தவில்லை அவன்.

 

விமல் மீதான கோபத்தில் இருக்கிறான் என்று மற்றவர்கள் நினைக்க, அந்தக் கோவம் யார் மீது என்று உரியவளுக்கு நன்றாகவே புரிந்தது.

 

யாழிசை பின்னால் வருகிறாளா என்று பார்த்துவிட்டு, “உனக்கு என்ன அவ்வளவு பயம்? எங்கட ஊர், ஆள் நடமாட்டம் இருக்கிற இடம். தைரியமா இருக்கிறேல்லையா. இனி அவன் இத வச்சே உன்ன இன்னும் வெருட்ட பாப்பான்.” என்று துளசியை அதட்டினான் குரு.

 

“இப்ப விளங்குது. அப்ப பயமா போச்சு.” என்று முணுமுணுத்தாள் துளசி.

 

யாழிசை வந்தபடியால் தப்பித்தாள். இல்லை என்றால்? அவளே இதையெல்லாம் சமாளிக்கும் அளவுக்குத் திடமாவது தானே நிரந்தரத் தீர்வு.

 

“அவனைத் திரும்பவும் ரெண்டு தட்டுத் தட்டினா என்ன மச்சான்?” கோபம் அடங்காமல் கேட்டான் குரு.

 

துளசியையும் வைத்துக்கொண்டு எதுவும் சொல்லப்போகவில்லை அவன்.

 

அவனுக்கு அவளின் பழைய வாழ்க்கை மனிதர்களோடு பிரச்சனைப்பட்டு, திரும்ப திரும்ப அவர்களை அவளுக்கு நினைவூட்டுவதில் விருப்பம் இல்லை. அவள் அதிலிருந்து முற்றிலும் வெளிவந்து, இன்னொரு வாழ்க்கைக்குள் போகட்டும். அதன் பிறகு விமலுக்கு கச்சேரியை வைக்கலாம் என்று நினைத்தான்.

 

அவன் பார்வை, பின்னால் இவர்களைத் தொடர்கிறவளையும் தொட்டு தொட்டு மீண்டது. மிதிலன் என்னவோ சொன்னான். அதற்கு அவளும் சின்ன சிரிப்புடன் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள்.

 

‘என்னட்ட மட்டும்தான் பயந்தவள் மாதிரி நடிக்கிறது.’

 

ஒரு வழியாக வீட்டுக்குள் கொண்டுபோய் அவன் வாகனத்தை நிறுத்த, பின்னால் வந்தவள் கேட் வாசலிலேயே ஸ்கூட்டியை நிறுத்தினாள்.

 

அனுமதி இல்லாமலேயே மாதவியோடு அவள் வந்ததும், தூயவன் ஒற்றை விரலால் அவளை விரட்டியடித்த காட்சியும் கண்முன்னே வந்து போக, இன்றும் அவள் முகம் கன்றிச் சிவந்தது.

 

அதைக் காட்டிக்கொள்ளாமல், “மிதுக்குட்டின்ர வீடு வந்திட்டே.” என்றபடி அவனை இறக்கிவிட்டாள்.

 

இதற்குள் அவசரமாக இறங்கி வந்த துளசி, “நீங்களும் உள்ளுக்கு வாங்கோ இசை. ஒரு தேத்தண்ணி குடிச்சிட்டுப் போகலாம்.” என்று அழைத்தாள். “சித்தி பாத்தாலும் சந்தோசப்படுவா.”

 

“இல்லை அக்கா. எனக்கு நேரம் போயிற்று. அம்மா தேடப்போறா.”

 

“அண்ணா கூப்பிடுங்களன். எவ்வளவு பெரிய உதவி செய்தவாவா வாசலோடையே அனுப்புறதா?” என்றாள் துளசி தமையனிடம்.

 

“அதான் கூப்பிடுறாளே. வந்திட்டுப் போ.” என்றான் அவனும்.

 

“இல்லை அக்கா. உண்மையா எனக்கு நேரம் போயிற்று. மிதுக்குட்டி பாய்!” என்றவள் குருவுக்கும் சின்ன தலையசைப்பைக் கொடுத்துவிட்டுப் புறப்பட்டிருந்தாள்.

 

எல்லோரும் உள்ளே நகர, கேட்டினை பூட்டுவதுபோல் பின் தங்கியவனின் பார்வை, அவள் சென்று மறைந்த திசையிலேயே இருந்தது.

 

அதைவிட, இதே இடத்தில் வைத்து அவளை விரட்டியதும் நினைவில் வந்தது. அதனால்தான் உள்ளே வராமல் போகிறாள் என்று தெரிந்ததால் வேகமாக அவளுக்கு அழைத்தான்.

 

அன்னைதான் தேடி அழைக்கிறார் போலும் என்றெண்ணி, ஸ்கூட்டியை ஒதுக்கி நிறுத்திவிட்டுக் கைப்பேசியை எடுத்துக் பார்த்தவள் புருவங்கள் சுருங்கின. புது நம்பர். தயக்கத்துடன் ஏற்றுக் காதுக்குக் கொடுத்து, “ஹலோ!” என்றாள்

 

“நான் தூயவன்.”

 

அவளுக்கு ஒருமுறை திக் என்று இருந்தது. கைப்பேசியை எடுத்துப் பார்த்துவிட்டுத் திரும்பவும் காதுக்குக் கொடுத்தான்.

 

“இசை? கதைக்கிறது கேக்கேல்லையா?”

 

நெஞ்சு படார் படார் என்று அடித்துக்கொள்ள வேகமாக அழைப்பைத் துண்டித்துவிட்டு, எதிலிருந்தோ தப்பிக்கிறவள் போல் ஸ்கூட்டியை விரட்டினாள்.

 

அப்படி அவள் அழைப்பைத் துண்டித்ததும் சுர் என்று ஏறிப்போயிற்று அவனுக்கு. திரும்பவும் கேட்டை திறந்து விட்டுவிட்டு ஓடி வந்து பைக்கை எடுத்துக்கொண்டு அவளை விரட்டிப் பிடித்தான்.

 

பயந்துபோன யாழிசை ஸ்கூட்டியை நிறுத்தியே இருந்தாள்

 

“ஃபோன கட் பண்ணுறாய் என்ன? கோயிலுக்கு வா உன்னோட கதைக்கோணும்!” என்று அதட்டிவிட்டு அவன் பைக்கை முன்னால் செலுத்,த இரண்டு வினாடிகள் அப்படியே நின்று மூச்சை ஆழ இழுத்துவிட்டவள் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் பறந்திருந்தாள்.

 

‘இவளை!’ என்று பல்லைக் கடித்த தூயவன் பின்னால் அவளைத் துரத்தப் போகவில்லை. திரும்ப அவளுக்கு அழைத்தான். அவள் எடுக்கவில்லை என்றதும் திரும்பவும் பெரும் சினம் வந்தது.

 

புலனத்துக்குப் போய், “ஏய் லூசு! கூப்பிட்டு வச்சுக் கொஞ்சுறதுக்கு உன்னக் கோயிலுக்குக் கூப்பிடேல்ல. அவன் விமல் என்ன பிளான்ல இருக்கிறான் எண்டு தெரியேல்ல. நீ துளசியக் கூட்டிக்கொண்டு வந்ததால அவன்ர கோபம் உன்னிலயும் திரும்பலாம். அதால கொஞ்சம் கவனமா இரு எண்டு சொல்லத்தான் ஃபோன் பண்ணினான். அதுக்குத்தான் உன்னத் துரத்திக்கொண்டும் வந்தனான். அதுக்கு என்னையே சுத்திப்போட்டுப் போறாய் என்ன? எப்பயாவது மாட்டுவாய் தானே. அப்ப இருக்கு உனக்கு.” என்று அனுப்பிவிட்டவனுக்கு மனம் கேட்கவில்லை.

 

“தப்பித்தவறி அவன் எங்கயாவது வச்சு சேட்டை விட்டான் எண்டா எனக்கு கோல் பண்ண யோசிக்காத. இதுதான் என்ர நம்பர். கவனமா இரு என்ன?” என்று அனுப்பியவனின் குரல், அந்தக் ‘கவனமா இரு என்ன’ என்றதில் வெகுவாகத் தணிந்து தன்மையாய் ஒலித்தது.

error: Alert: Content selection is disabled!!