அத்தியாயம் 20
நிரோஜனை, அவன் நண்பர்களை அவள் வீட்டினருக்குப் புகைப்படங்களின் வாயிலாக மட்டும்தான் தெரியும். ஆனால் இன்று, தன் குடும்பத்தினருக்கு அவனை நேரில் அறிமுகப்படுத்த நினைத்திருந்தாள்.
அப்படியிருக்கையில் அவனைப் பற்றித் தவறான ஒரு பிம்பம் தன் வீட்டினரின் மனத்தில் பதிந்துவிடக் கூடாது என்று எண்ணினாள். அப்போதுதான் நாளை திருமணத்தைப் பற்றிப் பேசும்போது எல்லாமே சுமுகமாக நடக்கும்.
விளையாட்டுத்தனமாக இவன் ஆடிப் பாடுவதையோ, மதுபானம் அருந்துவதையோ பார்த்துவிட்டு அவர்கள் தவறாக எடுத்துக்கொள்வார்களோ என்று பயம். அதுதான் சொன்னாள். அதன் பொருள் அவன் அப்படித்தான் எப்போதும் நடப்பான் என்பது இல்லையே. மறந்தும் கூட இன்றைக்கு அப்படி நடந்துவிடாதே என்பதுதான். கவனமாகப் போ என்பதன் பொருள் நீ விழுந்துவிடுவாய் என்பதா? விழுந்துவிடாமல் பார்த்துக்கொள் என்பதுதானே.
கோபப்படுவானோ என்று பயந்தாள்தான். இந்தளவில் கொதிப்பான் என்று எதிர்பார்க்கவில்லை. அதைவிட அவளைப் பற்றி அவன் சொன்னது? அன்றும் அப்படித்தானே சொன்னான். அவன் அவள் நினைத்ததை மட்டும்தான் செய்ய வேண்டுமாம். அவளுக்கு என்ன சொன்னாலும் புரியாதாம். அப்படித்தானா அவள்? அவள் மனம் பொசுங்கிற்று.
அப்படி எத்தனையைச் சொல்லி அவனைக் கட்டுப்படுத்தினாளாம்? அவளுக்குப் புரியவேயில்லை. இதற்குள் மாதங்கி அழைத்து எங்கே நிற்கிறாய் என்று கேட்டாள். ஆழ்ந்த மூச்சுகளை இழுத்துவிட்டுத் தன்னைச் சமாளித்துக்கொண்டு அவர்களிடம் சென்றாள்.
“எங்களுக்கு அஜந்தாவத் தவிர வேற ஆரையும் தெரியாது. நீயும் இப்பிடி விட்டுட்டுப் போனா நாங்க என்ன செய்றது?” என்று கேட்டாள் தமக்கை.
“அஜூவை பாக்க போனனான் அக்கா.”
“என்னவாம்?”
“அது… மேக்கப் இன்னும் முடியேல்ல.” என்று சமாளித்தாள். வந்ததும் தன்னிடம் வரச் சொல்லியிருந்தாள் அஜந்தா. இப்போது அவளிடம் செல்லும் தெம்பற்றவளாகக் கவிரனைத் தூக்கித் தன் மடியில் அமர்த்திக்கொண்டு, அன்னை அருகில் அமர்ந்துகொண்டாள்.
மனம் மட்டும் நிரோஜனின் கோபத்திலேயே சிக்குப்பட்டு நின்றது. ஏன் இப்போதெல்லாம் இந்தளவில் கோபப்படுகிறான் என்று அவளுக்குப் புரியவில்லை. அவன் சொல்வதுபோல் அவள் பக்கம்தான் தவறா, இல்லை, அவனால் அவளைப் புரிந்துகொள்ள இயலவில்லையா?
மண்டபம் முழுக்க ஆட்கள். கலகலப்புக்கு மகிழ்ச்சிக்கும் குறைவே இல்லை. அஜந்தாவின் வீட்டினர் வந்து கொஞ்ச நேரம் கதைத்துக்கொண்டு இருந்துவிட்டுப் போனார்கள்.
யாமினியின் விழிகள் மற்றவர்கள் அறியாமல் நிரோஜனை அந்த மண்டபம் முழுக்கத் தேடி தேடிச் சோர்ந்தன. அவனையும் காணவில்லை, அவன் நண்பர்களையும் காணவில்லை.
என்னாயிற்றோ? மனம் அந்தரித்தது.அவனுக்கு அழைக்கவோ குறுந்தகவல் அனுப்பவோ தைரியம் வரவில்லை.
*****
நிரோஜனின் மொத்த மனநிலையையும் கெட்டுப்போயிற்று. அதுவரை இருந்த உற்சாகம் முற்றிலும் வடிந்திருக்க அந்த இடத்தை எரிச்சலும் சினமும் ஆக்கிரமித்தன. அவன் என்ன எப்போதடா சந்தர்ப்பம் கிடைக்கும் என்று பார்த்திருந்து குடிக்கிறவனா? எப்போதாவது. அதுவும் ஒரு பியருக்கு மேலே போக மாட்டான். அவன் இரண்டு பியர்கள் அருந்தியதே அவளோடு சண்டை பிடித்த அன்றுதான். அப்படியிருக்க என்ன சொல்லிவிட்டாள்? அவள் சொல்லி அவன் கவனமாக இருக்கிற அளவுக்கு அவன் என்ன… மேலே யோசிக்க முடியாமல் தலையைக் கோதிவிட்டான்.
அப்போதுதான் அவன் கேசத்தைச் சரி செய்தபடி அவள் சொன்னவை காதில் எதிரொலித்தன. முகம் கடினமுற சேர்ட்டை இழுத்து வெளியில் விட்டான். கைகள் இரண்டையும் விறுவிறு என்று முழங்கை வரை மடித்துவிட்டான். ஜெல்லில் படிந்து, அவள் சரி செய்துவிட்ட கேசத்தைக் கலைத்துவிட்டான்.
இவனைத் தேடிக்கொண்டு வந்த நண்பர்களுக்கு அவன் நின்ற கோலத்தைக் கண்டு ஒன்றும் புரியவில்லை. நெருங்கி வந்து, “என்னடா?” என்றான் நவீன்.
அவன் இறுகிப்போய் அமர்ந்திருந்தான். அவன் கண்களில் தெறித்த கோபமும், முகத்தின் இறுக்கமும் மீண்டும் அவர்களுக்குள் சண்டை என்று சொல்லிற்று.
“டேய் என்ன?”
ஒன்றுமில்லை என்று அப்போதும் அவர்களைப் பாராமல் தலையசைத்தான்.
“ஒண்டுமில்லாமத்தான் இப்பிடி இஞ்சி திண்ட மங்கி மாதிரி இருக்கிறியா? இப்ப என்ன சண்டை உங்களுக்க?”
“…”
“இது கலியாண வீடு. சந்தோசமா இருக்க வேண்டிய இடம். நீ இப்பிடி இருந்து எங்கட மூடையும் கெடுப்பியா? வா மச்சான்!” என்று இழுத்துக்கொண்டு போனார்கள்.
அப்பாடி, வந்துவிட்டான் என்று ஆறுதல் கொள்ள முடியாமல் அவன் வந்த கோலம் கண்டு அதிர்ந்தாள் யாமினி. அதைவிட அவன் முகத்தில் இருந்த இறுக்கமும், கண்களில் தெரிந்த கோபமும் அவளுக்கு அச்சமூட்டின.
யாரிடமும் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் கைகளைக் கட்டிக்கொண்டு விறைப்பாக அமர்ந்திருந்தான். அவன் நண்பர்கள் அவனோடு பேசிச் சிரித்து இலகுவாக்கிவிட முயல்வது அப்படியே தெரிந்தது.
சற்ற நேரத்தில் அஜந்தா அழைத்தாள். அங்கே மணப்பெண்ணின் அறையில் அஜந்தாவைக் கண்டவளுக்குத் தன் மனச் சஞ்சலங்கள் அத்தனையும் மறந்துபோயிற்று.
“அடியேய் இண்டைக்குத் தலை குப்புற விழுற திவாகர் அண்ணா வாழ்க்கைல கடைசிவரைக்கும் எழும்ப மாட்டார், பார்!” என்றாள் உற்சாகமாக.
“உண்மையாவாடி? ஓவர் மேக்கப்பா இல்லையா?” தன்னைத்தானே கண்ணாடியில் பார்த்தபடி கேட்டவள் முகத்தில் தெரிந்த பூரிப்பு, ஆனந்தம் பார்க்க பார்க்கத் தெவிட்டவில்லை.
“என்னடி கேள்வி இது? பேரழகியடி நீ!” என்று அவளுக்கு நெட்டி முறித்தாள். அப்படியே அவள் கைப்பேசியில் சில புகைப்படங்களைக் கடகடவென்று கிளிக்கி, “அண்ணாக்கு அனுப்பு!” என்று கொடுத்தாள்.
முகம் மலர அதை அவனுக்கு அனுப்பிவிட்டுக் காத்திருந்தாள் அஜந்தா. அடுத்த நொடியே அழைத்தான் திவாகர். புரிந்துகொண்டு, மாடியில் அமைந்திருந்த அந்த மணமகள் அறையின் பால்கனியில் வந்து நின்றாள் யாமினி.

