அத்தியாயம் 20
விளையாட்டுத்தனமாக இவன் ஆடிப் பாடுவதையோ, மதுபானம் அருந்துவதையோ பார்த்துவிட்டு அவள் வீட்டினர் தவறாக எடுத்துக்கொண்டுவிடுவார்களோ என்கிற பயத்தில்தான் சொன்னாள். அதன் பொருள் அவன் எப்போதும் அப்படித்தான் என்பதில்லையே. கவனமாகப் போ என்பதன் பொருள் நீ விழுந்துவிடுவாய் என்பதா? விழுந்துவிடாமல் பார்த்துக்கொள் என்பதுதானே.
கோபப்படுவானோ என்று பயந்தாள்தான். இந்தளவில் கொதிப்பான் என்று எதிர்பார்க்கவில்லை. அதைவிட அவளைப் பற்றி அவன் சொன்னது? அன்றும் அப்படித்தானே சொன்னான்.
அப்படி எத்தனையைச் சொல்லி அவனைக் கட்டுப்படுத்தினாளாம்? அவளுக்குப் புரியவேயில்லை. இதற்குள் மாதங்கி அழைத்து எங்கே நிற்கிறாய் என்று கேட்டாள். ஆழ்ந்த மூச்சுகளை இழுத்துவிட்டுத் தன்னைச் சமாளித்துக்கொண்டு அவர்களிடம் சென்றாள்.
“எங்களுக்கு அஜந்தாவத் தவிர வேற ஆரையும் தெரியாது. நீயும் இப்பிடி விட்டுட்டுப் போனா நாங்க என்ன செய்றது?” என்று கேட்டாள் தமக்கை.
“அஜூவை பாக்க போனனான் அக்கா.”
“என்னவாம்?”
“அது… மேக்கப் இன்னும் முடியேல்ல.” என்று சமாளித்தாள். வந்ததும் தன்னிடம் வரச் சொல்லியிருந்தாள் அஜந்தா. இப்போது அவளிடம் செல்லும் தெம்பற்றவளாகக் கவிரனைத் தூக்கித் தன் மடியில் அமர்த்திக்கொண்டு, அன்னை அருகில் அமர்ந்துகொண்டாள்.
மனம் மட்டும் நிரோஜனின் கோபத்திலேயே சிக்குப்பட்டு நின்றது. ஏன் இப்போதெல்லாம் இந்தளவில் கோபப்படுகிறான் என்று அவளுக்குப் புரியவில்லை. அவன் சொல்வதுபோல் அவள் பக்கம்தான் தவறா, இல்லை, அவனால் அவளைப் புரிந்துகொள்ள இயலவில்லையா?
மண்டபம் முழுக்க ஆட்கள். கலகலப்புக்கு மகிழ்ச்சிக்கும் குறைவே இல்லை. அஜந்தாவின் வீட்டினர் வந்து கொஞ்ச நேரம் கதைத்துக்கொண்டு இருந்துவிட்டுப் போனார்கள்.
யாமினியின் விழிகள் மற்றவர்கள் அறியாமல் நிரோஜனை அந்த மண்டபம் முழுக்கத் தேடி தேடிச் சோர்ந்தன. அவனையும் காணவில்லை, அவன் நண்பர்களையும் காணவில்லை.
என்னாயிற்றோ? மனம் அந்தரித்தது.அவனுக்கு அழைக்கவோ குறுந்தகவல் அனுப்பவோ தைரியம் வரவில்லை.
*****
நிரோஜனின் மொத்த மனநிலையையும் கெட்டுப்போயிற்று. அதுவரை இருந்த உற்சாகம் முற்றிலும் வடிந்துவிட, அந்த இடத்தை எரிச்சலும் சினமும் ஆக்கிரமித்தன.
தலையைக் கோதப் போனவனுக்கு அவள் சொன்னவை காதில் எதிரொலித்தன. அதுதான் அவனுக்கு எங்கே எப்படி நடக்கவேண்டும் என்று தெரியாதே. பிறகு எதற்கு இதெல்லாம் என்று ஜெல்லில் படிந்து, அவள் சரி செய்துவிட்ட கேசத்தைக் கலைத்துவிட்டான். அணிந்திருந்த சேர்ட்டை இழுத்து வெளியில் விட்டுவிட்டு, கைகள் இரண்டையும் முழங்கை வரை மடித்துவிட்டான்.
இவனைத் தேடிக்கொண்டு வந்த நண்பர்களுக்கு அவன் நின்ற கோலத்தைக் கண்டு ஒன்றும் புரியவில்லை. “என்னடா?” என்றான் நவீன்.
அவன் இறுகிப்போய் அமர்ந்திருந்தான். அவன் கண்களில் தெறித்த கோபமும், முகத்தின் இறுக்கமும் மீண்டும் அவர்களுக்குள் சண்டை என்று சொல்லிற்று.
“டேய் என்ன?”
ஒன்றுமில்லை என்று இறுக்கமாகத் தலையசைத்தான்.
“இது கலியாண வீடு. சந்தோசமா இருக்க வேண்டிய இடம். நீ இப்பிடி இருந்து எங்கட மூடையும் கெடுப்பியா? வா மச்சான்!” என்று இழுத்துக்கொண்டு போனார்கள்.
அப்பாடி, வந்துவிட்டான் என்று ஆறுதல் கொள்ள முடியாமல் அவன் வந்த கோலம் கண்டு அதிர்ந்தாள் யாமினி.
யாரிடமும் ஒரு வார்த்தை கூடப் பேசாமல், கைகளைக் கட்டிக்கொண்டு விறைப்பாக நிற்பவனை அவன் நண்பர்கள் பேசிச் சிரித்து இலகுவாக்கிவிட முயல்வது அப்படியே தெரிந்தது.

