கடன் அன்பை முறிக்கும் 20 – 1

அத்தியாயம் 20

 

 

அருள் குடும்பம் பெரிய வசதி இல்லாத போதிலும் படித்த பண்பான குடும்பம். அவன் தகப்பன் அரச உத்தியோகத்தில் இருப்பவர். அருளும் அந்த நேரம் தனியார் நிறுவனத்தில் நல்ல வேலையில் இருந்தவன்தான்.

 

ஆறு மாதங்களுக்கும் மேலாக அவனைக் கண்காணித்து, எந்தக் கெட்ட பழக்கங்களும் இல்லாத, பொறுப்பான நல்லவன் என்று தெரிந்த பிறகுதான் மகளுக்கு அவனை மணமுடித்து வைத்தார் கருணாகரன்.

 

சொத்துப் பத்துடன் இருக்கும் ஒருவன் வந்து, அவர் வீட்டில் தான் என்று நிற்பதை விடவும் இப்படியான ஒருவன் அவர்களுக்கு ஏற்ப இருப்பான் என்று எண்ணினார் கருணாகரன்.

 

இங்கிருக்கும் வரையில் அவனும் அப்படித்தான் இருந்தான். தங்கையைச் சந்தோசமாக வைத்திருந்த அவன் மீது தூயவனுக்கும் மதிப்பும் மரியாதையும் இருந்திருக்கின்றன.

 

கடல் தாண்டித் தனியாகப் போனதும் தனிமை வாழ்க்கையும் எல்லாவற்றையும் மாற்றிப்போட்டிருந்தன. அவனுக்கு ஒரு முடிவு கட்டியாயிற்று என்று நிமிர்ந்தால் அவன் தம்பி இப்போது ஆரம்பிக்கிறான்.

 

அவனுக்கும் ஒரு முடிவு கட்ட வேண்டும்.

 

இரண்டு நாள்கள் கடந்த நிலையில் விமலின் பைக் காணாமல் போனது. ஒரு வாரம் கடந்த நிலையில் அது தூயவனின் தென்னந்தோப்பில் கிடப்பதாக அவன் காதுக்கு வந்து சேர்ந்தது.

 

அவ்வளவு நாள்களாக யாரோ திருடிவிட்டார்கள் என்று காவல் நிலையத்திலும் சொல்லித் தேடிக்கொண்டிருந்த விமல், அப்படியே அமர்ந்துவிட்டான். அவனுக்குத் தூயவனைத் தேடித் போவதை நினைக்கவே உடம்பெல்லாம் நடுங்கியது.

 

அவனுக்கு அவர்கள் மீது கோபமும் வன்மமும் இருப்பது உண்மை. ஆனால், திட்டம் போட்டு எதையும் செய்ய நினைக்கவில்லை. உறவுகள், அறிந்தவர்கள், தெரிந்தவர்கள், நண்பர்கள் என்று எல்லோர் முன்னாலும் அவர்கள் மூவரும் மிகுந்த அவமானத்துக்கும் தலைகுனிவுக்கும் ஆளாகியிருந்தார்கள்.

 

அவனுக்குப் பேசியிருந்த பெண் வீட்டினர் வேறு, அண்ணாவைப் போல் தம்பி இருக்கமாட்டான் என்று என்ன நிச்சயம் என்று கேட்டு, முற்றாக்கியிருந்த திருமணப் பேச்சை முறித்துக்கொண்டதில் மிகவுமே அசிங்கப்பட்டுப்போனான்.

 

இதில் அங்கே பிரான்சில் தன் பெயரிலிருந்து அத்தனை அடையாளங்களையும் மாற்றி, அதற்கேற்ப பிறப்புச் சான்றிதழ் முதற்கொண்டு அத்தனை ஆவணங்களையும் பொய்யாக எடுத்து, அதன் மூலம் அந்தப் பெண்ணை மணந்து விசாவும் எடுத்துக்கொண்டிருக்கிறான் என்று தெரிந்துகொண்ட அந்தப் பெண் வேறு இவர்களுக்கு அழைத்து, கேட்கக் கூடாத கேள்விகளை எல்லாம் கேட்டிருந்தாள்.

 

அதில் மிகவுமே அசிங்கப்பட்டுப்போனவன் தாங்க முடியாத மனவுளைச்சலிலும் மன அழுத்தத்திலும் இருந்தான். அதுதான் துளசியைக் கண்டதும் பாய்ந்திருந்தது.

 

அதன் பலனை இனி அனுபவிக்கப் போகிறான். வாழ்க்கையை நினைக்கவே ஒருவிதச் சலிப்பும் வெறுப்பும் உண்டாயிற்று. இப்படி ஒரு வாழ்க்கையை வாழத்தான் வேண்டுமா என்று தோன்றிற்று.

 

அவனாக எந்தப் பெரிய தவறுகளையும் செய்ததில்லை. ஆனாலும் பொய் வழக்கில் சிறை சென்று, அங்குக் கேவலமான பேச்சுகளைக் கேட்டு, வெளியில் வந்த பிறகும் யாரையும் நிமிர்ந்து பார்த்துப் பேச முடியாமல், இப்போது அவன் பார்த்த முட்டாள் தனத்தினால் இன்னும் அசிங்கப்படப் போகிறான்.

 

என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும் என்றெண்ணிக்கொண்டு தூயவனைத் தேடிக்கொண்டு போனான். ஆனால், தூயவனைப் பார்க்கக் கிடைக்கவில்லை. அன்று மட்டுமில்லை. அடுத்து வந்த வாரம் முழுமைக்கும் அவன் வீடு வரைக்கும் கூடப் போய்ப் பார்த்துவிட்டான். தூயவனைப் பார்க்க முடியவில்லை.

 

கடைசியில் முடியாமல், “அண்ணா, நான் செய்தது பிழைதான். அதால என்னை வேணுமெண்டு அலைய வைக்கிறீங்க எண்டு நல்லாவே தெரியுது. உங்கட பக்கம் நிச்சயமா நியாயம் இருக்கு. உங்கட கோபமும் சரிதான். ஆனா, அதால அநியாயமா அவமானப்பட்டு, கேவலப்பட்டு, அசிங்கப்பட்டு நிக்கிறவன் நான். அந்தக் கோவத்துல அப்பிடி நடந்திட்டன். அது பிழை எண்டு இப்ப விளங்குது. எப்ப பைக்கை திருப்பித் தரோணும் எண்டு நினைக்கிறீர்களோ அப்ப சொல்லுங்க, வாறன்.” என்று புலனத்தில் பேசி அனுப்பிவிட்டான்.

 

வேறு என்னதான் செய்வது?

 

அதைக் கேட்ட தூயவன் கண்களை மூடிக்கொண்டு நெற்றியை அழுத்தித் தேய்த்துவிட்டான். அவனுக்குப் பாடம் படிப்பிக்க நினைத்துத்தான் அத்தனையையும் செய்தான். உன்னைச் சும்மா இருக்க விட்டால்தானே இப்படி நடக்க நேரம் கிடைக்கும் என்று நினைத்துத்தான் அலையவிட்டான். இப்போது அவன் சொன்னதைக் கேட்டபிறகு கருமப்பிறப்பாகத் தெரிந்தான்.

 

அதன் பிறகு நிறைய யோசிக்கவில்லை அவன். உடனேயே விமலுக்கு அழைத்து, வந்து வண்டியை எடுத்துக்கொண்டு போகச் சொன்னான்.

 

அப்போதும், “எனக்கு உன்னில சரியான கோபம் இருக்கு. அதே நேரம் உன்ர நிலமயும் விளங்குது. அதாலதான் பைக்கை திருப்பித் தாறன். இனியும் சேட்டை விட்டியோ பிறகு பைக்கெல்லாம் காணாமப் போகாது. உன்ர அண்ணா மாதிரி நீயும் காணாம போயிடுவாய்!” என்று எச்சரித்தே அனுப்பி வைத்தான்.

 

இத்தனையும் கருணாகரனுக்குத் தெரிந்தே நடந்தது. ஆனால், வேறு ஒன்று கருணாகரனின் கவனத்துக்கு வராமல் போயிற்று.

 

தூயவனின் எண்ணெய் ஆலையின் மெஷின் ஒன்று பழுதாகியிருந்தது. அதைக் கொழும்பில்தான் திருத்தலாம் என்பதில் இங்கிருந்து கொழும்பு போகிற பஸ்ஸில் அதை ஏற்றி அனுப்பியிருந்தான் தூயவன். அங்கு அவர்கள் அதை எடுத்துக்கொண்டு போய், பழுது பார்த்துவிட்டு, வவுனியா வருகிற பஸ்ஸில் திருப்பி அனுப்பியிருந்தார்கள்.

 

அந்த பஸ் அதிகாலையில் வருவதால் அன்று அதை எடுத்துக்கொண்டு போவதற்கு குருவோடு வேனில் வந்திருந்தான் தூயவன்.

 

அங்கே, அனுராதபுரம் புறப்படத் தயாராக இருந்த பஸ்ஸில் அமர்ந்திருந்த தங்கையையும், வெளியே நின்று ஜன்னலால் அவளிடம் என்னவோ சொல்லிக்கொண்டிருந்த தமையனையும் அவன் எதிர்பார்க்கவில்லை.

 

அதைவிடவும் தன்னைக் கண்டுவிட்டு அவள் முகத்தில் சட்டென்று வந்தமர்ந்த பயமும் பதட்டமும் அவன் உதட்டினில் மெல்லிய சிரிப்பை வரவைக்க, “டேய், கொழும்பில இருந்து வந்த பஸ் அங்க நிக்குது பார். யாரையாவது பிடிச்சு மெஷினை வேனுக்கு ஏத்து. இந்தா வாறன்.” என்று குருவை அனுப்பிவிட்டு இவர்களை நோக்கி நடந்துவந்தான்.

 

நேசன் அவனுக்கு முதுகு காட்டி நின்றபடியால் அவன் இவனைக் கவனிக்கவில்லை. அவளுக்கோ கைகால்கள் உதறுவது போலிருக்க, “சரி அண்ணா, நீங்க வெளிக்கிடுங்கோ. நானும் போயிட்டு வாறன்.” என்று தமையனை அனுப்ப முயன்றாள்.

 

பஸ்ஸும் நகரத்தொடங்கியதில் நேசனும் பிழையாக நினைக்கவில்லை. “சரி, கவனமாப் போயிட்டு வா. போனதும் மெசேஜ் பண்ணு.” என்றுவிட்டு அவன் பைக் நிறுத்தியிருந்த இடம் நோக்கிப் போக, மெல்ல மெல்ல நகர்ந்துகொண்டிருந்த பஸ்ஸில் ஓடி வந்து தொற்றிக்கொண்டான் தூயவன்.

 

நடத்துனரிடம் டிக்கட்டை எடுத்துக்கொண்டு நேராக இவளை நோக்கித்தான் வந்தான். தூரத்தில் கண்டாலே அவளுக்கு நடுங்கும். இப்படிப் பக்கத்திலேயே வந்தால்? அவளுக்கு இதயம் வாயில் வந்து துடித்தது. மிடறு விழுங்கியபடி அவனையே பார்த்தாள்.

 

வந்தவன் வேறு அவள் பக்கத்திலேயே அமர்ந்துகொண்டான். அவள் விழிகள் இரண்டும் வெளியே வந்துவிடும் போல் விரிந்து போயின. யாராவது தம்மைப் பார்க்கிறார்களா என்று பயத்துடன் விழிகளைச் சுழற்றினாள்.

 

இப்படிச் செய்வான் என்று தெரிந்திருக்க தமையனோடே திரும்பிப் போயிருப்பாள்.

 

இதில், பக்கத்து இருக்கையில் யாரும் இல்லையே என்று அவளின் முதுகுப் பையை அதில் வைத்திருந்தாள். அதை வேறு எடுத்து அவன் தன் மடியில் வைத்துக்கொள்ளவும் அவளுக்கு மூச்சு நின்றுவிடும் போலிருந்தது.

 

சரியாக அந்த நேரம் அவன் கைப்பேசி சத்தமிட்டது. எடுத்துக் காதில் வைத்தான்.

 

“எங்க மச்சான் நிக்கிறாய்? மெஷினை ஏத்திட்டன்.” அந்தப் பக்கமிருந்து சொன்னான் குரு.

 

“ஏன்டா அறிவு கெட்டவனே, ஃபோன் எடுத்தா கதைக்க மாட்டியோ? அவ்வளவு திமிர் உனக்கு! இன்னொருக்கா நான் எடுக்கேக்க இப்பிடிச் செய்து பார். அதுக்குப் பிறகு தெரியுமடி உனக்கு?” என்றவனின் பேச்சில் இங்கே இவளுக்குத் தூக்கிப் போட்டது என்றால் அங்கே அவன், “லூசாடா நீ? நான் எப்ப உன்ர ஃபோன எடுக்காம இருந்தனான்? நீ முதல் இப்ப எங்க நிக்கிறாய்?” என்று கேட்டுக்கொண்டிருந்தான்.

 

“மெசேஜ் போட்டா பதில் இல்ல. பாத்தா பயந்து ஓடுறது. ஏன் மச்சான், என்னைப் பற்றி நீ என்ன நினைச்சுக்கொண்டு இருக்கிறாய்? வில்லன் எண்டா? நான் நல்லவன்டா. நம்புடா மச்சான். உன்ர அண்ணா வேற ஆர் கத்தியத் தூக்கினாலும் வெட்டுமாம், ஆரின்ர சங்க வேணுமெண்டாலும் அறுக்குமாம் எண்டுறார். அதைக் கேட்டுப் பயந்துபோய் பத்து நாள் ஹொஸ்பிட்டல்ல இருந்தனான் எண்டா பாரன், நான் எப்பிடியான ஆள் எண்டு.” என்றவனின் பேச்சில் குழம்பி, “டேய் மச்சான், உனக்கு என்னடா நடந்தது? நான் குருவடா!” என்று அந்தப் பக்கமிருந்து அலறினான் குரு.

 

அதைக் காதில் விழுத்தாமல் அழைப்பைத் துண்டித்துவிட்டு அவளைத் திரும்பிப் பார்த்தான். கலங்கிச் சிவந்துவிட்ட முகமும் கண்களில் கோர்த்திருந்த கண்ணீருமாக அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் அவள்.

 

அவனுக்கே ஒரு மாதிரியாகிற்று. “ஏய் லூசு! அது சும்மா ஒரு விளையாட்டுக்குக் கதைச்சது. அதுக்கு இப்பிடித்தான் அழுவியா?” என்று அதட்டினான்.

 

அவளுக்கு அதற்கும் அழுகைதான் வந்தது. அவன் வீட்டினருக்கோ அவள் வீட்டினருக்கோ இவன் இப்படி வந்து அவளிடம் பேசுவது தெரிய வந்தால் என்னாகும் என்று நினைத்துப்பார்க்கவே நடுங்கியது.

 

“ப்ச்! அந்த விமல நினைச்சுப் பயப்பிடாத. இனி அவன் ஒண்டும் செய்யமாட்டான். அதைச் சொல்லத்தான் வந்தனான்.” என்றான் அவன்.

 

error: Alert: Content selection is disabled!!