உயிரைத் திருடும் அழகியே 15

அத்தியாயம் 15

 

அடுத்தநாள் காலை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு காரில் வந்து இறங்கிய ஜேகேயைக் கண்டுவிட்டு முகம் மலரப் புன்னகைத்தாள் அனன்யா. அவன் மீதான அவளின் கோபமெல்லாம் எங்கோ ஓடிப்போயிருந்தது. என்னவோ பல மயில்களுக்கு அப்பால் இருந்த அவர்களின் உறவு நேற்றைய ஒரு நாளில் வெகு நெருக்கத்தில் வந்துவிட்ட சந்தோசம் அவளுக்குள்.

 

“குட் மார்னிங் ஜேகே!” உற்சாகமாக அவள் சொல்ல, அவனோ, அங்கே அவள் ஒருத்தியே இல்லாததுபோல் கடந்துபோனான்.

 

அப்படியே சுண்டிப் போயிற்று அவள் முகம். நேற்றும் இதையே தானே செய்தான்! இவனை விடக்கூடாது! விறுவிறு என்று எழுந்து சென்று அவனின் காரவனைத் திறந்துகொண்டு உள்ளே போனாள்.

 

ஆடை மாற்றுவதற்காக மேல் சட்டையைக் கழற்றிக்கொண்டு இருந்தவன் அவளைக் கண்டுவிட்டு மிக வேகமாக மீண்டும் போட்டுக்கொண்டான். கண்களில் ஒரு முறைப்பு வந்து அமர்ந்திருந்தது.

 

அங்கிருந்த விமலையும் அவனுடைய மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டையும் பார்த்து, “ஐஞ்சு நிமிசம் வெளில இருங்க!” என்றாள் அழுத்தமாக.

 

விமல் ஜேகேயைப் பார்த்தான். “அவரை முழுசாக் கறைபடாம உங்ககிட்டயே ஒப்படைக்கிறேன்; இறங்குங்க!” என்றாள் கடுப்புடன்.

 

கண்களில் சிரிப்புடன் விமல் செல்ல, மேக்கப் ஆர்டிஸ்ட்டும் இறங்கிக்கொண்டான். அடுத்த கணமே, “நீங்க எல்லாம் என்ன மனுசன்? ஒரு பொண்ணை இப்படியுமா கேவலப்படுத்துவீங்க? அப்படி என்னதான் செய்தேன் நான்? ஒரு ஹாய் ஹலோ கூட சொல்லக்கூடாத அளவுக்கு என்னோட தரம் எந்தப் பக்கத்துல தாழ்ந்து போயிருக்கு? எதுக்கு இவ்வளவு மோசமா நடக்கறீங்க? இத்தனை நாளும் இந்த உலகத்துல அதிகமா வெறுத்த ஒருத்தன் அந்த அர்ஜுன். ஆனா, இன்னைக்கு அவனை விட மோசமா உங்களை வெறுக்கறேன்.” என்றவளுக்கு, ஆத்திரத்திலும் சுயவிரக்கத்திலும் அழுகை வரும்போலிருந்து.

 

இன்னதுதான் என்று வரையறுத்துவிட முடியாத நெருக்கத்தை மனதில் விதைத்துக்கொண்டே தள்ளித் தள்ளிப் போகிறவனின் செய்கையை அவளால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

 

அவனோ அவளைக் கடந்துபோய் காரவன் கதவைத் திறந்தான்.

 

“விமல்! ஒரு ஐஸ்கிரீம் சொல்லு. ஸ்பெஷல் ஒன்னு வேணும். செம மூட்ல இருக்கேன் நான்!” என்று குரல் கொடுத்தான்.

 

அதிர்ச்சியில் அவள் விழிகள் தெறித்துவிடும் போலாயிற்று!

 

“நீங்க.. உங்களையெல்லாம்.. அப்படியே..” என்றவளுக்கு கைகள் இரண்டும் அவன் கழுத்தை நெரித்துவிடப் பரபரத்தது.

 

“நீங்கெல்லாம் ஒரு மனுசனே இல்ல. ச்சேய்!” என்றுவிட்டு, வந்த வேகத்திலேயே காரவனை விட்டு இறங்கிவிட்டாள்.

 

 

காட்சி முப்பத்தியேழு

 

அஜய்யிடம் ஒரு கேள்வி இருந்தது. அதற்கான பதில் பிருந்தாவிடம் இருந்தது. அந்தப்பதில் என்ன என்று அஜய்க்குத் தெரிந்தே இருந்தது. ஆனாலும், வாய் வார்த்தையாகச் சொல்லும்படி அவளைத் தூண்டிக்கொண்டிருந்தான்.

 

வெட்கம் நிறைந்திருந்த விழிகளால் அவனை விழுங்கினாலும், வார்த்தைகளை உதிர்க்கவில்லை அவள்.

 

“சொல்ல மாட்டியா?” அவனின் கெஞ்சலுக்கு அவளின் பதில், ‘மாட்டேன்!’ என்கிற செல்லத் தலையசைப்பாகவே இருந்தது.

 

உன் பார்வை பொய் தானா

பெண்ணென்றால் திரை தானா

பெண் நெஞ்சே சிறை தானா சரி தானா

பெண் நெஞ்சில் மோகம் உண்டு

அதில் பருவத்தாபம் உண்டு

பேராசை தீயும் உண்டு

ஏன் உன்னை ஒளித்தாய் இன்று

புதிர் போட்ட பெண்ணே நில் நில்

பதில் தோன்றவில்லை சொல் சொல்

கல்லொன்று தடை செய்த போதும்

புல்லொன்று புது வேர்கள் போடும்

நம் காதல் அது போல மீறும்

கல்லொன்று தடை செய்த போதும்

புல்லொன்று புது வேர்கள் போடும்

நம் காதல் அது போல மீறும்

கண்ணில் கண்ணில் கண்ணில் இன்ப

கண்ணீரே…

தேடித்தேடி தேய்ந்தேனே

மீண்டும் கண்முன் கண்டேனே

பெண்ணே பெண்ணே

பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே

கண்ணே கண்ணே காணாய் கண்ணே

கண்ணீரே….

 

அவனின் பாடல் வரிகள் ஒவ்வொன்றும் அவள் உயிரை மெழுகாக உருக வைத்துக்கொண்டிருந்தது.

 

இதைக் கவனித்துவிட்டு ராகவன் சொன்ன எந்தப் புத்திமதிகளும் அவளை எட்ட மறுத்தது. அவரும் விடவில்லை. அவளை வெளியே கொண்டுவர முயன்றுகொண்டே இருந்தார்.

 

அதை உணர்ந்துகொண்ட அஜய் அவள் மீது தன் கோபத்தைக் காட்டினான்.

 

“பிளீஸ்டா. அவர் என் நல்லதுக்குத்தான் சொல்லுறார். கோபப்படாத!” தகப்பனாய் பாசம் வைத்த மனிதர் மீது அவன் கோபத்தைக் காட்டுவதைத் தாங்க முடியாமல் அவள் சொன்னபோது,

 

“அவரைப் பத்தி பேசுறதா இருந்தா என் கூட பேசாத பிருந்தா. முதல்ல, அவர் யாரு உனக்கு? உன்னப் பெத்த அப்பாவா? ‘ஹலோ சார், எனக்கு என் வேலைய பாக்கத் தெரியும், நீங்க உங்க வேலைய பாருங்க’ என்று அவர்கிட்ட சொல்லுறதை விட்டுட்டு என்கிட்டே சொல்லாத.” என்றான், முகத்துக்கு நேராகவே.

 

பாசத்தை மட்டுமே காட்டும் அவரிடம் அவளால் அப்படிச் சொல்ல முடியவில்லை. அவன் சட்டையைப் பிடித்து அவமதித்ததைக்கூட பொறுத்துக்கொண்டு அவளுக்காகவே நிற்கும் அன்பானவரை நோகடிக்க முடியாதே.

 

மத்தளத்துக்கு இருபக்கமும் அடி என்பது போலாயிற்று அவள் நிலை. மனதளவிலும் உடலளவிலும் மிகவுமே சோர்ந்துபோனாள்.

 

அப்படியான பொழுதுகளில் அந்தக் குரலோன் மட்டுமே அவளைப் பற்றி, ஆறுதல் சொல்லி, தைரியமூட்டி, நிமிரச் செய்து அனுப்பி வைத்துக்கொண்டிருந்தான்.

 

இது ஒரு ரியாலிட்டி ஷோ. மனதின் திடம் பலமாக சோதிக்கப்படும். அதே நேரம் உடலின் பலத்தோடும் மோத வேண்டும். உறக்கம் உணவு எல்லாம் சரிவர அமையாது. இத்தனைக்கு மத்தியிலும் தெளிவாகச் சிந்தித்து காய் நகர்த்தல் என்பதே இந்த கேமுக்கான வெற்றியின் சூத்திரம்.

 

ஒரு பிரச்சனையைத் தெளிவாகத் தீர்க்க வேண்டுமானால், அதற்கு வெளியே நின்று பார்த்தால் போதும் என்பார்கள். அது இங்கே சாத்தியமில்லை. கலங்கிய குட்டைக்குள் நின்று கொண்டுதான் தீர்வைக் கண்டுபிடிக்க வேண்டும். வெளியே செல்ல முடியாது, சற்றேனும் அதிலிருந்து விலகி ஆசுவாசப்பட்டுக்கொள்ள முடியாது. முக்கியமாக உணர்வுகளுக்கு தீனி போடாமல் மூளைக்கு வேலை கொடுக்க வேண்டும். ஆரம்பத்தில் அப்படித்தான் இருந்தாள் அவளும்.

 

நாளாக நாளாக ராகவன் மீதும் அஜய் மீதும் கொண்ட பற்று, அவனோடு பேசினால் அவர் தவறாக நினைப்பாரோ என்கிற பரிதவிப்பு, அவரோடு கதைத்தால் அவன் முகத்தைத் திருப்புகிறானே என்கிற வேதனை எல்லாம் அவளைக் கொல்லாமல் கொன்றது.

 

பாசக்கயிறு போட்டு அவர் இழுக்க, நேசக் கயிறை வீசி அவன் இழுத்தான். அவர்களில் யார் பக்கம் போவது என்று தெரியாமல் போராடிக்கொண்டிருந்தவள் போட்டியை மறந்து போயிருந்தாள்.

 

மக்களும், வார இறுதிகளில் வரும் மக்களின் பிரதிநிதியும், சுற்றி இருப்போரும் எவ்வளவு சொன்னாலும் அவளால் வெளியே வர முடியாமல் போயிற்று!

 

அவள் வாழ்வதே இந்த பூமிப்பந்தில் இந்த மூன்று மாதங்களாக மட்டுமே என்பது போலும், வாழும் நாளிலிருந்து அவனை உள்ளும் புறமும் அறிந்துகொண்டவள் போன்றும் ஒரு மாயை அவளைச் சூழ்ந்திருந்தது.

 

ராகவன், “விலகி இருமா, இதெல்லாம் வேண்டாம்.” என்று, அவளை அவனிடமிருந்து பாதுகாக்க முயல, அவளின் வயது அஜய்யை மட்டுமே முதன்மைப் படுத்த முயன்றது. இளம் மனது அவனோடான பொழுதுகளையே மிகவும் விரும்பி ஏற்றது. அவனைப் பற்றி என்ன தெரியும்? இந்த மூன்று மாதங்களுக்குள் அப்படி என்ன அறிந்துகொண்டாள் என்கிற கேள்விகளே அவளுக்குள் வரவில்லை.

 

மெல்ல மெல்ல ராகவனிடமிருந்து விலகத் தொடங்கினாள் பிருந்தா. அவ்வளவு ஆழமாக அஜய் மீதான நேசம் வேரூன்றிப் போயிருந்தது. அதுவே, மக்களிடம் அவளுக்கு கெட்ட பெயரை உருவாக்கித்தருகிறது என்பதை உணரும் நிலையிலேயே அவள் இல்லை.

 

குடும்ப உறவுகளை முதன்மையாகக் கொண்டாடும் நம் சமூகம் தந்தையின் இடத்திலிருந்து பாதுகாக்க முனையும் அன்பான மனிதரை அவமதிக்கிறாள் என்கிற குற்றச் சாட்டின் பெயரில் அவளைத் தூற்றத் தொடங்கியிருந்தது.

 

இது எதுவும் அறியாத அடைபட்ட வீட்டுக்குள் அஜய்யின் கூண்டுக்கிளியாக மாறிப்போயிருந்தவளுக்கு ஒவ்வொரு நாளும் சொர்க்க சுகமாகக் கழிந்துகொண்டிருந்தது.

 

பலரோடு ஆரம்பித்திருந்த அந்த கேம் ஷோ, கடைசி வாரத்தில் பிருந்தா, அஜய், ரதன், ராகவன், தாரா என்று ஐவராகச் சுருங்கியிருந்தது.

 

இப்படி அன்றைய காட்சி நிறைவுற்றிந்த தருணத்தில், இரசனை மிகுந்த காதலனாகப் பாத்திரமேற்ற ஜேகேயின் மிகப்பெரிய ரசிகையாகிப்போயிருந்தாள் அனன்யா. அவ்வளவுக்கு நடிப்பில் கலக்கினான். மனம் திறந்து சொல்ல வேண்டுமானால் அவன் அற்புதமான நடிகன். அதனாலோ என்னவோ அவன் மீதான கோபங்களை இப்போதெல்லாம் அவளால் இழுத்துப் பிடித்து வைத்திருக்கவே முடிவதில்லை.

 

எதையாவது செய்து அவனைத் தன்னுடன் கதைக்க வைத்துவிட மாட்டோமா என்று முயன்றுகொண்டே இருந்தாள்.

error: Alert: Content selection is disabled!!