அத்தியாயம் 7
யாரிடமும் இந்த உண்மையைச் சொல்லாமலேயே அகத்தியனுக்கும் அவளுக்குமான திருமணத்தைத் தவமலர் பேசி முடித்தபோது சவீதா பயந்து நடுங்கினாள்தான். இதெல்லாம் வேண்டவே வேண்டாம் என்று மறுக்கவும் செய்தாள். ‘நீ பேசாம இரு. நான் என்ன செய்றன் எண்டு எனக்குத் தெரியும்!’ என்று அவர் அதட்டியபோது, அவளும் அமைதியாகிவிட்டாள்.
திருமணம் ஆகாமலே போய்விடுமோ என்கிற பயம் அடி நெஞ்சில் இருந்தது ஒரு காரணமென்றால் பெரும் காரணமாக அமைந்தவன் அகத்தியன். அவன் தோற்றமும் குணமும் வெகுவாகவே ஈர்த்தது. அவளை அவன் பார்க்கும் பார்வையில் இருந்த மையல், அவளை மொத்தமாகச் சுருட்டி இழுத்திருந்தது.
திருமணம், அதன்பிறகான இனிய வாழ்க்கை என்று அவன் மீது பித்தாகிப்போனாள். அதுவும், அவள் மீது உயிரையே வைத்திருக்கும் அவன், அவளின் விருப்பு வெறுப்புக்கெல்லாம் வளைந்து கொடுக்கும் அவன், பிள்ளை பிறக்காது என்பதைப் பெரிதாக எடுக்கமாட்டான் என்று நம்பினாள். அந்த நம்பிக்கை இருந்தாலும், உயிரும் உடலுமாக வாழ்ந்தாலும் அடித்தளம் பொய்யில் அமைக்கப்பட்டது என்கிற உண்மை, நெஞ்சை உறுத்திக்கொண்டே இருந்ததில் உள்ளூர ஒரு பயம் இருந்துகொண்டேதான் இருந்தது.
அவள் பயந்தது போலவே அனைத்தும் நடக்கவும் பதறிப் போனாள். இத்தனை நாள்களாக நீதான் உலகம் என்று வாழ்ந்தவன் ஒரு பிள்ளைக்காக அவளை வெறுப்பானா? அன்னை வீட்டுக்குப் போகும் அந்த நான்கு நாள்களில் கூட, ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லிக்கொண்டு வந்து, அவளைக் கொஞ்சிவிட்டுப் போகிறவன் அவள் முகமே பாராமல் இருப்பானா? அப்படி, அவனால் இருக்க முடிகிறதா? பொருளற்ற ஆத்திரம் வந்தது. நெஞ்சு பதறியது. ஒருவிதப் பதற்றம் அவளைப் பற்றி ஆட்டியது. தன் கைப்பொருள் களவு போய்விடுமோ என்று பயந்தாள். எதையாவது செய்து அவனைத் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க அவசரப்பட்டாள்.
அதற்கு மாறாக, முழு நாளையும் வெளியிலேயே செலவிட்டான் அகத்தியன். கடையே கதியென்று கிடந்தான். நேரம் சென்றுதான் வீடு வந்தான். அப்படி வந்தாலும் குளித்து, உடையை மாற்றிக்கொண்டு கண்ணை மூடிப் படுத்துவிடுவான். அவள் முகம் பார்க்க மறுத்தான். சாப்பிடுவதுகூட இல்லை.
பொறுத்து பொறுத்துப் பார்த்தவளால் நான்கு நாள்களுக்கு மேல் முடியவில்லை. அவளைப் பற்றி என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறான்? இப்படியே விலகி விலகி முற்றிலுமாக விலகப் போகிறானா? அப்படி நினைத்ததும் பயமும் பதற்றமும் கூடிப்போனது. அதற்கு விடக் கூடாது. விடவே கூடாது!
“என்ன, என்னவோ வாழ்க்கையே அழிஞ்சவன் மாதிரி நாடகமாடுறீங்க. பிள்ளைதானே இல்ல. நான் இருக்கிறன் தானே? நான் என்ன தொடக்கூடாத அளவுக்குக் கெட்டுப் போனவளா? முகமே பாக்கிறீங்க இல்ல. ஒரு நாள் கூட உன்ன விட்டு விலகியிருக்கேலாது எண்டு சொல்லுவீங்க. எல்லாம் நடிப்புப் போல. இல்ல, புதுசா பிள்ளை தரக்கூடிய எவளையாவது தேடிட்டீங்களா?” என்றாள் அகங்காரம் கொண்டு.
நடந்தவற்றைக் கடந்து வரத் தனக்குள் மிகவும் போராடிக்கொண்டிருந்தவன், திரும்ப திரும்பத் தரமற்றுப் பேசும் அவள் பேச்சை ஜீரணிக்க முடியாமல் விழிகளை இறுக்கி மூடினான். ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்டுத் தன்னைச் சற்று நிதானப்படுத்திக்கொண்டு, விழிகளைத் திறந்து அவளைப் பார்த்தான்.
“இவ்வளவு மோசமாக் கதைக்கிற உனக்கு, நீ செய்தது எவ்வளவு பெரிய துரோகம் எண்டு விளங்கவே இல்லையா?” மிகுந்த நிதானத்தோடு வினவினான்.
“அப்ப உங்களுக்குப் பிள்ளைதான் முக்கியம். பிள்ளை இல்லாட்டி என்னோட வாழமாட்டீங்க?” என்று திருப்பிக் கேட்டாள் அவள்.
“நான் பிள்ளையைப் பற்றிக் கதைக்கவே இல்ல. நீ ஏன் இதைப் பற்றி முதலே சொல்லேல்ல எண்டு கேக்கிறன். கலியாணத்துக்குப் பிறகாவது சொல்லி இருக்கலாமே. இந்த மாதம் பிள்ளை வந்திடும், அடுத்த மாதம் பிள்ளை வந்திடும் எண்டு நம்பிக்கொண்டு இருந்த என்னைப் பாக்க உனக்கு எப்பிடித் தெரிஞ்சது? அடி முட்டாள் மாதிரியா?” அவன் பேச்சில் மெல்லிய சூடேறிற்று.
அவளுக்கு முகம் கன்றிச் சிவந்தது. நெஞ்சு படபடவென்று அடித்துக்கொண்டது. என்றாலும், “இப்பவே இப்பிடி நடக்கிற நீங்க, சொல்லி இருந்தா கட்டி இருப்பீங்களா? அதுதான் சொல்லேல்ல.” என்றாள் தன் தப்பை ஒப்புக்கொள்ளாமல்.
“இப்பிடி இன்னும் எவ்வளவு காலத்துக்கு மறைக்கலாம் எண்டு அம்மாவும் மகளுமா பிளான் போட்டிருந்தீங்க? காலம் முழுதுக்குமா?”
“என்னைப் பற்றி மட்டும் கதைங்க. என்ர அம்மாவை இங்க இழுக்க வேண்டாம்!” முகம் கோபத்தில் சிவக்க அறிவித்தாள்.
அது அவனைச் சீற்றம் கொள்ள வைத்தது. பொறுமையும் பறக்க, “அந்தப் பொம்பிளைய இழுக்காம வேற ஆர இழுக்கச் சொல்லுறாய்? அவாவும் நீயுமாச் சேந்துதானே என்னை முட்டாளாக்கி இருக்கிறீங்க.” என்றான் கண்களில் அனல் பறக்க.
“இப்ப என்ன எண்டுறீங்க அதுக்கு?”
அவளின் அந்தத் திமிர் அவனை உசுப்பிப் பார்த்தது. “என்னவோ? எவ்வளவு திமிர் உனக்கு? எனக்கு ஏதும் வரக்கூடாத வியாதி வந்திருந்து, அதைச் சொல்லாம உன்னைக் கட்டி இருந்தாலும் இப்பிடித்தான் நிப்பியா நீ?” என்றான் சினத்தோடு.
ஒருமுறை அவளுக்குத் திக் என்று இருந்தது. வேகமாகத் தன்னைச் சமாளித்துக்கொண்டு, “இப்ப என்னத்துக்குத் தேவையில்லாமக் கதைக்கிறீங்க? இப்பிடியே இன்னும் எத்தின நாளைக்கு முகத்தைத் திருப்பிக்கொண்டு இருக்கப் போறீங்க? அதைச் சொல்லுங்க.” என்று தன் விசயத்துக்கு வந்தாள்.
“ஆருக்குத் தெரியும்? மனதுக்க விசத்தை வச்சுக்கொண்டு வெளில பல்லைக் காட்டி இழைய நான் என்ன நீயா?” என்றான் அவன் வெறுப்புடன்.
ஒரு கணம் விக்கித்து நின்றாள் சவீதா. உண்மை சுட்டது. அடுத்த நொடியே அதற்கும் சேர்த்து ஆத்திரம் கொண்டு, “அப்பிடியென்ன பெரிய கேவலமான வேல செய்தனான்? நீங்க இருக்க இன்னொருத்தனைத் தேடிப் போனேனா? இல்ல, உங்களுக்கு நல்ல மனுசியா இருக்கேல்லையா? சரி சொல்லுங்க, இப்ப என்ன செய்யப் போறீங்க அதுக்கு?” என்றாள் மீண்டும்.
அது தெரியாமல்தானே அவனும் தவிக்கிறான். இந்தப் பிரச்சனைகளுக்கெல்லாம் என்ன முடிவு? யோசிக்க யோசிக்கப் பைத்தியம் பிடிக்கும் போலிருந்தது. தலையைப் பற்றிக்கொண்டு அமர்ந்திருந்தான்.
“உங்கட பிளான் என்ன எண்டு தெரியாது எண்டு நினைச்சீங்களா? கொஞ்சக் காலத்துக்கு இப்பிடியே இருந்துபோட்டு, பிள்ளை பிறக்காது, ஏமாத்திட்டாள் எண்டுறதையே சாட்டா வச்சு, என்னை விட்டுட்டு இன்னொருத்தியக் கட்டிப் பிள்ளையப் பெறத்தானே யோசிக்கிறீங்க. அப்பிடி ஏதும் பிளான் போட்டீங்க எண்டு வைங்க, என்ர கைய நானே அறுத்துப்போட்டு, நீங்க அடிச்சுக் கொடுமை செய்றீங்க எண்டு ஊருக்கே சொல்லுவன்!” கண்களில் நெருப்புப் பறக்க மிரட்டினாள் அவள்.
ஒருமுறை விழிகளை மூடித் திறந்துவிட்டு இழுத்து மூச்சை விட்டான் அகத்தியன். அதுசரி! ஏமாற்றிக் கட்டியவள். வாழ்ந்த வாழ்க்கையைக் கூடப் பொய்யாக வாழ்ந்தவள். அவளுக்கு இப்படித்தானே ஓடும். வெறுப்புடன் அவளை வெறித்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் அங்கிருந்து எழுந்து போனான்.
அப்படியே நின்றுவிட்டாள் சவீதா. அவன் பார்த்த பார்வை அவளை நிலைகுலையைச் செய்தது. அதிலிருந்த வெறுப்பையும் விலகலையும் கண்டு பயந்தாள். பெரிதாகக் கோபப்படக்கூட மாட்டான். அதுவும், அவள் என்று வந்துவிட்டால் குழைவதும் கொஞ்சுவதும் மட்டும்தான். அப்படியானவன் பார்த்த பார்வை? தன் நிம்மதியை இழந்தாள் சவீதா. அந்தப் பார்வையை ஏற்றுக்கொள்ள முடியாமல் துடித்தாள். மீண்டும் பழையபடி அவனைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர என்ன வழி என்று யோசித்தாள்.
அப்படி யோசித்து அவள் எடுத்த முயற்சிகளால், அவளை அறியாமலேயே அவனுக்கு நரகத்தைக் காட்டினாள்.
வீடு வரக் கொஞ்சம் பிந்தினாலும் கடைக்கு வந்து சண்டையிட்டாள். தான் நினைத்தபடிதான் அவன் நடக்க வேண்டும் என்றாள். தமக்கை தாயைப் பார்க்கப் போக விடவில்லை. அவர்கள் இங்கே வந்தாலும் சண்டை பிடித்தாள். வார்த்தைகளால் அவனைக் குத்திக் குதறினாள். எப்போது கதைக்கப் போனாலும் அது பெரும் சண்டையில் மாத்திரமே முடிந்தது.
அத்தனை நாள்களும் கடையின் கணக்கு வழக்கிலிருந்து அனைத்தும் அவள் பொறுப்பில் இருந்ததில் இன்னும் நன்றாகவே மாட்டிக்கொண்டான் அகத்தியன். அவளிடம் கொடுத்து வைத்த பணத்தை எல்லாம் தேவைக்குத் தரமாட்டேன் என்றாள். ஒரு ரூபாய் கொடுப்பதற்கும் ஆயிரம் காரணம் கேட்டாள். அதன் பிறகான வியாபாரப் பணத்தை அவனே வைத்துக்கொள்ள, அதற்கும் ஒரு சண்டை.
“என்ர மனுசி எண்டு உன்ன நம்பினதுக்கு நல்லாப் படிப்பிக்கிறாய் பாடம்!” கசப்புடன் சொல்லிவிட்டுப் போனான் அவன்.
ஒழுங்கான உணவில்லை, உறக்கமில்லை, ஓய்வில்லை, நிம்மதி இல்லை. அகத்தியன் ஒரு பைத்தியக்காரனைப் போல் மாறிப்போனான். தாய் தமக்கையிடம் கூட மனம் விட்டு எதையும் சொல்ல முடியவில்லை. சும்மாவே என்ன செய்கிறார்களோ, எப்படி இருக்கிறார்களோ என்று அஞ்சி நடுங்கும் அவர்களிடம் எதையென்று சொல்லுவான்? முதல், இதையெல்லாம் யாரிடமும் சொல்லப் பிடிக்கவில்லை. அவமானம் அவனைக் கொஞ்சம் கொஞ்சமாய்த் தின்றது.
தன் திருமண வாழ்க்கை, இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைந்துகொண்டு போவதை எண்ணி, மனத்துக்குள் அழுதான்.
வீட்டுக்குப் போனால்தானே சண்டைக்கு வருவாள் என்று கடைக்குப்போன இந்திராவும் சிந்தாமணியும் அவன் கோலத்தைக் கண்டு திகைத்துப் போயினர். சந்தோசமாக வாழ வேண்டும் என்று செய்துவைத்த திருமணம், அவனை எப்படியாக்கி வைத்திருக்கிறது என்று துடித்தனர்.
கஜேந்திரனிடம் சொன்னபோது, என் தங்கையா என்று அவன் நம்ப மறுத்தான். அவன் மூலம் தவமலர், கதிரேசன், சவீதா என்று எல்லோரையும் ஒன்றாக அமர்த்திவைத்து இதற்கு என்ன தீர்வு என்று பேசினார்கள்.
இரு பக்கமும் மாறி மாறிக் கதைவழிப்பட்டனர். தம் பக்க நியாயத்தை ஆளாளுக்கு எடுத்து வைத்தனர். வீட்டுக்கு வருவதில்லை, அவளோடு கதைப்பதில்லை, அவளுக்குத் தேவையானவற்றைப் பார்ப்பதில்லை, அவளோடு இணக்கமாக இருப்பதில்லை, அவன் போக்குக் கொஞ்சமும் சரியில்லை என்று தன் பக்கக் குறைகளை எல்லாம் கண்ணீருடன் அடுக்கினாள் சவீதா.
வாயைத் திறக்காமல் இறுகிப்போய் அமர்ந்திருந்தான் அகத்தியன்.
தவமலருக்கு மகள் சொன்னவற்றைக் கேட்டுத் தாங்கவில்லை. “என்ன நினைச்சுக்கொண்டு இருக்கிறார் உங்கட மகன்? நான் நினைச்சிருந்தா உங்கட மகளை வாழவிடாமையே செய்திருப்பன். தங்கச்சிக்கு இப்பிடி ஒரு பிரச்சினை தம்பி, அவளுக்கு ஒரு கலியாணத்தைச் செய்து வச்சுப்போட்டு நீ கட்டு எண்டு ஒரு வார்த்த சொல்லி இருந்தா போதும். காலம் முழுக்க உங்கட மகள் உங்கட வீட்டிலேயே இருந்திருப்பா. உங்கட மகளும் வாழட்டும், என்ர மகளும் வாழட்டும் எண்டு நினைச்சு ஒண்டு செய்தா, இப்பிடித்தான் நடப்பீங்களா? குடும்பம், குழந்தை எண்டு உங்கட வீட்டுப் பிள்ளை சந்தோசமா இருக்கிறாதானே எண்டுற நினைப்பு இப்பிடியெல்லாம் செய்ய வைக்குதா? பிள்ளை பிறக்க வழி இல்லை எண்டதும் என்ன பாடெல்லாம் படுத்திறீங்க? சேச்சே! நீங்களும் பொம்பிளைகள்தானே? இப்பிடித்தான் இன்னொரு பொம்பிளைப் பிள்ளையின்ர குறையச் சாட்டா வச்சு அவளின்ர வாழ்க்கையோட விளையாடுவீங்களா?” என்றதும் வாயடைத்துப் போயிற்று.
பேச்சின் திசையையே திருப்பிவிட்டாரே!
ஆனாலும் அமைதியாகப் போக முடியாமல், “பிள்ளை பிறக்காது எண்டுறது இங்க விசயம் இல்ல மாமி. சவீதா ஏன் இப்பிடி அவனைப் பாடாய்ப் படுத்திறாள்? அவனுக்கு வீட்டில நிம்மதி வேண்டாமா? அவன் என்ன பிழை செய்தவன் எண்டு தினம் ஒரு சண்டை பிடிக்கிறாள்? அவள் சொல்லுறதை மட்டும் கேக்கிற நீங்க, அவன்ர பக்கம் இருக்கிற நியாயத்தைப் பாக்கவே மாட்டீங்களா? பிழையையும் செய்துபோட்டு எப்ப பாத்தாலும் சண்டை சண்டை எண்டா அவனும் என்ன செய்வான்?” என்று, அவருக்கு அவர் மகளை விளங்கவைக்க முயன்றாள் இந்திரா.
“பின்ன, அவள் பயப்பிடுவாள் தானே? இதச் சாட்டா வச்சு உங்கட தம்பி அவளை விட்டுட்டுப் போறதில குறியா இருந்தா விடுவாளா? நடந்தது என்னவா இருக்கட்டும். கலியாணம் முடிஞ்சு இத்தனை காலம் வாழ்ந்தவருக்கு இப்ப கசக்குதாமோ? அப்ப அவள் நாலு கேள்வி கேப்பாள்தானே?” என்றதும் அங்கிருக்க முடியாமல் விருட்டென்று எழுந்து போனான் அகத்தியன்.
அவன் போவதைப் பார்த்திருந்துவிட்டு, “இப்ப என்ன? நீங்க உங்கட மகளைச் சந்தோசமா வாழ வச்சுக்கொண்டு என்ர மகளை வேண்டாம் எண்டு அனுப்பப் போறீங்களா?” என்று கேட்டார் தவமலர்.
அப்படித்தான் என்று எப்படிச் சொல்லுவார்கள்? என்ன நடந்திருந்தாலும் ஒரு பெண்ணை அப்படி அனுப்ப முடியுமா? அதுவும் குழந்தை பிறக்க வழியில்லை என்பதற்காக?

