கடன் அன்பை முறிக்கும் 22 – 1

அத்தியாயம் 22

 

 

அவனுடைய அழைப்பைத் துண்டித்த பிறகும் யாழிசையின் இதயத்தின் துடிப்பு சீராக்குவதாக இல்லை.

 

இத்தனை காலமும் அவன் பொல்லாதவன், அவளைக் கண்டாலே வெறுப்புடன் ஒதுக்கித் தள்ளுவான், இல்லையா ஒற்றைப் பார்வையால், சின்ன செய்கையால் அவமானப்படுத்தித் துரத்தியடிப்பான், அதனால் அவன் இருக்கும் திசைக்கே போகக் கூடாது என்று ஒதுங்கி இருப்பாள்.

 

ஆனால், இப்போதோ வேறு ஏதோ ஒரு பயம் நெஞ்சைக் கவ்வியது. அவள் ஒன்றும் சிறுமியோ, அறியாப் பருவத்தில் இருப்பவளோ இல்லை. 24 வயது நிரம்பிய பெண்.

 

யார், எங்கே வருகிறார்கள் என்று புரியாமல் இருக்குமா என்ன?

 

அவளுக்கு ஆபத்து இருக்கிறது என்று தேடி வந்து எச்சரித்ததும், பிறகு அவனே வந்து பயப்பிடாதே என்றதைக் கூட அவன் தங்கைக்கு உதவியதால் செய்தான் என்று விட்டாலும் அவளைத் தேடி தேடி வந்து கதைப்பது ஏன்? இது போதாது என்று இசையரசி என்கிறான். அவளோடு கதைக்க வேண்டும்போல், அவள் குரலைக் கேட்க வேண்டும்போல் இருந்ததாம்.

 

அதை நினைக்கையில் இப்போதும் அவள் நெஞ்சு படபடவென்று அடித்துக்கொண்டது.

 

ஆனால், அவன் நோக்கம் அதுதான் என்று முடிவு கட்டவும் முடியவில்லை. அவனெல்லாம் அவளைப் பார்ப்பானா என்கிற கேள்வி அவளைக் குழப்பியடித்தது.

 

இன்னும் இரண்டு மாதங்களில் அவளுக்குக் கடைசிப் பரீட்சைகள் வந்துவிடும். அதனாலேயே இனி வீட்டிலேயே இருந்து படித்துவிட்டு பரீட்சை நேரம் வரலாம் என்று எண்ணியிருந்தாள்.

 

இப்போது வவுனியா போகவே யோசித்தாள். அங்கே ஏதோ ஒரு ஆபத்துத் தனக்கு இருப்பதுபோல் உள்ளம் அச்சம் கொண்டது.

 

வாங்கிய பெயர்களும் கேட்ட வசவுகளும் காணாதா என்ன? இதே இவன்தான் சில வருடங்களுக்கு முன் வார்த்தைகளாலேயே அவளை வதைத்தான். இப்போது அவளோடு கதைக்க வேண்டும் போல் இருக்கிறதாம்.

 

என்ன ஆனாலும் சரி, இனியும் அவன் இழுவைக்கு இழுபடுவதில்லை என்று முடிவு கட்டித்தான் அவனைக் கைப்பேசியில் தடை செய்தாள்.

 

இதன் எதிர்வினை என்னவாக இருக்குமோ என்று அதுவேறு அச்சமாக இருந்தது.

 

*****

 

கருணாகரனின் நிம்மதி மொத்தமாகக் கெட்டுப்போயிருந்தது. அதட்டி அடக்கும் வயதைத் தாண்டியவன் அவர் மகன். இன்னுமே சொல்லப்போனால் அப்படி அவர் நடக்க முயன்றால் திமிறிக்கொண்டு போகக் கூடியவன். அவனைப் பாசக்கயிறால் மட்டும்தான் கட்டிவைக்க முடியும்.

 

அதனால்தான் துளசிபோல்தான் யாழிசையும் உனக்கு என்று மறைமுகமாகச் சொல்லி, மார்க்கண்டேயரையும் திட்டம் போட்டு இழுத்துவிட்டார்.

 

ஆனால், இதுவரையில் அப்படியும் இருக்குமோ என்று இருந்த அவர் சந்தேகம், இன்று உறுதியான நிலைக்கு வந்திருந்தது.

 

யாழிசைக்குப் பார்த்திருக்கும் பெடியனை விசாரி என்று சொன்னபோது, ‘அவளுக்கெல்லாம் நான் விசாரிக்கிறதா அப்பா?’ என்று அவன் கோபப்பட்டிருந்தாலோ, இல்லை பார்க்கிறேன் எப்பா என்று சொல்லியிருந்தாலோ அவர் மனம் ஆறியிருக்கும்.

 

அதை விட்டுவிட்டுச் சூழ்நிலையைச் சமாளிக்கத் தெரியாமல் திகைத்து நின்றவனின் தோற்றம், அவரின் அடி மடியிலேயே யாரோ கையை வைத்ததுபோல் அவரைத்தான் பதற வைத்திருந்தது.

 

இனியும் காத்திருந்தால் அவர்தான் ஏமாந்து நிப்பார். மனம் அடித்துச் சொல்ல, முடிந்தவரையில் வேகமாக அடுத்து வந்த நல்ல நாளிலேயே குரு துளசி திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்தார்.

 

*****

 

துளசி என்றைக்கு ஒரு இளம் பெண்ணாக அவன் மனத்தையும் கண்களையும் கவர ஆரம்பித்தாள் என்று குருவுக்குச் சரியாக நினைவில் இல்லை.

 

ஆனால், நண்பனின் தங்கையைத் தான் அப்படிப் பார்க்கலாமா என்கிற தயக்கமும், யாருமே இல்லாமல் நிற்கும் நான் எப்படி அவளைக் கேட்பது, எனக்கெல்லாம் பெண் தருவார்களா என்கிற கேள்விகளும்தான் அவன் வாயை அடைத்திருந்தன.

 

தூயவன் அப்படி இல்லை என்றாலும் கருணாகரன் தராதரம் பார்ப்பார் என்றும் அவனுக்கு மிக நன்றாகவே தெரியும்.

 

எல்லாக் காதல்களும் திருமணத்தில் முடிவதில்லையே என்றுதான் தன் ஆசையைத் தனக்குள்ளேயே புதைத்திருந்தான்.

 

அவளுக்குத் திருமணமாகி, மகன் பிறந்து, கணவன் வெளிநாடு சென்று என்று அவள் வாழ்வு அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்துகொண்டிருந்தாலும் அவன் உள்ளம் இன்னொரு பெண்ணில் சாயவே இல்லை.

 

அவனும் தேடிப் பார்த்து, முடியாமல் சோர்ந்து, நடக்கிறபோது நடக்கட்டும் என்று விட்டுவிட்டான்.

 

இப்படி இருக்கையில்தான் அவள் வாழ்வில் நடக்கக் கூடாதவை எல்லாம் நடந்து முடிந்திருந்தன. தூயவன் தன் மனத்தை எப்படிக் கண்டுபிடித்தான் என்று குருவுக்குத் தெரியாது. ஆனால், அவன் கேட்டபோது கடைசியாகக் கிடைத்திருக்கும் சந்தர்ப்பம் இது என்று நன்றாகவே தெரிந்தது.

 

அதில்தான் எந்த யோசனையும் இல்லாமல் சம்மதித்தான்.

 

திருமணத்திற்குச் சம்மதித்ததிலிருந்து தூயவனின் வீட்டுக்குப் போவதை நிறுத்திக்கொண்டான். இத்தனை நாள்களும் நண்பனாகவோ, அவர்களிடம் வேலை செய்கிறவனாகவோ போய் வந்தது வேறு. இனி அவர்கள் வீட்டுப் பெண்ணை மணக்கப் போகிறான். அதற்கான இடத்தில் நிற்பதுதான் சரி என்று நினைத்தான்.

 

கூடவே, அவன்தான் ஆசைப்பட்ட பெண்ணை மணக்கப்போகிறான். அவள் ஏற்கனவே திருமணமானவள் என்பதோ, ஒரு குழந்தையுடன் இருக்கிறாள் என்பதோ அவனுக்கு ஒரு பொருட்டே இல்லை. அவள், அவன் துளசி. அவ்வளவுதான்.

 

ஆனால், அந்த அவள் முழு மனத்துடன் திருமணத்திற்குச் சம்மதிக்கவில்லை என்றும், அவள் மனம் மாறுகிறவரைக்கும் கொஞ்சம் கவனமாகப் பார்த்துக்கொள் என்றும் சொன்ன தூயவன், தங்கையின் நிலையை எடுத்துச் சொல்லியிருந்தான்.

அப்படியானவள் இத்தனை நாள்களும் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தவன் ஏன் வரவில்லை என்று யோசிக்கட்டும் என்றும் எண்ணினான். ஏதோ ஒரு வகையில் தன் பற்றிய சிந்தனையை அவளுக்குள் தூண்டிவிட ஆசைப்பட்டான்.

 

இந்த நாள்களில் தன் வீட்டைக் கொஞ்சம் கொஞ்சமாகத் துளசிக்கு ஏற்ப மாற்றவும் ஆரம்பித்திருந்தான். ஒரு குடும்பம் வாழ முடியாத நிலையில் அவன் வீடு இல்லை.

 

ஆனால், அத்தனை வசதிகளோடும் வாழ்ந்த துளசி, தன் முதல் வாழ்க்கை தோல்வியில் முடிந்ததால்தான் இப்படி அடிப்படை வசதிகளோடு இருக்கும் அவன் வீட்டில் வாழும் நிலைக்கு வந்திருக்கிறோம் என்று என்றுமே நினைத்துவிடக் கூடாது என்று நினைத்தான்.

 

*****

 

யாழிசை வவுனியா வந்து சேர்ந்த அன்றே தூயவனின் காதுக்குச் செய்தி வந்து சேர்ந்திருந்தது. அவனுக்குத்தான் அவன் கேட்காமலேயே உதவி செய்ய மாதவி இருக்கிறாரே.

 

அவர் ஜீவனிடம் சொல்லிக்கொண்டிருக்கையில் கேட்டுவிட்டான். அந்த நிமிடமே தேடிப்போய்ப் பார்க்கலாமா என்றுதான் ஓடியது. ஆனாலும் அதைச் செயலாற்றவில்லை.

 

முதலில் துளசியின் திருமணம் முடியட்டும் என்றெண்ணி அந்த வேலைகளைப் பார்த்தான்.

 

குருவுக்கு நெருங்கிய உறவுகள் என்று யாருமில்லாததால் அயலட்டைச் சனத்தினருடன் சேர்ந்து தூயவன்தான் அவனுக்கானவற்றையும் கவனிக்கவேண்டியிருந்தது.

 

கூடவே, இதையெல்லாம் பார்த்துக் கேட்டுச் செய்ய எனக்கென்று யாரும் இல்லையே என்று குரு நினைத்துவிடக் கூடாது என்பதில் அவனுடனேயே இருந்தான்.

 

அன்று நண்பர்கள் இருவரும் கடைகளுக்குப் போய்விட்டு வெளியே வருகையில் எதிர்ப்பட்டாள் யாழிசை.

 

அவன் பேசிக்கொண்டு இருக்கையில் பட்டென்று அழைப்பைத் துண்டித்து, அவனைத் தடையும் செய்து வைத்திருந்தவள் மீது கண்மண் தெரியாத கோபத்தில்தான் இருந்தான் தூயவன். ஆனால், அவளைக் கண்ட கணத்தில் குளிர்சாதனப் பெட்டிக்குள் இருந்த நீரைத் தொண்டைக்குள் அப்படியே கவிழ்த்ததுபோல் சில்லிட்டுக்கொண்டு அவனுக்குள் இறங்கினாள் அவள்.

 

அவள் முகத்தில் எப்போதும்போல அவனைக் கண்ட பதற்றம். கூடவே, அவனைத் திரும்பிப் பார்த்துவிடவே கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு, குருவிடம் மட்டும் சின்ன சிரிப்பைக் கொடுத்துவிட்டு அவள் ஓடிவிட முயல, “யாழிசை!” என்று அழைத்து நிறுத்தினான் குரு.

 

“எனக்கு நாளண்டைக்கு கலியாணம்மா. பெருசா செய்யேல்ல. கோயில்ல வச்சுத்தான் தாலி கட்டப்போறன். அதால இப்பிடி ரோட்டில வச்சுச் சொல்லுறன் எண்டு குறை நினைக்காம கலியாணத்துக்கு வாங்கோ என்ன.” என்று அழைத்து, நேரத்தையும் சொன்னான்.

 

“சந்தோசம் அண்ணா. ஆரு பொம்பிளை? எங்கட ஊர்தானா?” கெட்டித்தனமாக வருவாளா இல்லையா என்று சொல்லாமல் விசாரித்தாள்.

 

“ஓம், இவன்ர தங்கச்சி துளசி.” என்றதும் விளக்குப் போட்டதுபோல் அவள் முகம் மலர்ந்து போனது.

 

“துளசி அக்காவா? உண்மையா நல்ல சந்தோசம் அண்ணா. அக்காக்கும் நான் வாழ்த்துச் சொன்னேனாம் எண்டு சொல்லி விடுங்கோ.” என்றாள் இதழ்கள் புன்னகையில் மின்ன.

 

அவ்வளவு நேரமாக, ‘என்னப் பாக்கவே மாட்டியோ?’ என்று கண்களில் சிரிப்புடன் வேண்டுமென்றே அவளையே பார்த்திருந்த தூயவன் தடுமாறிப்போனான்.

 

அந்த இதழ்களில் படிந்த பார்வையை வேகமாக அகற்றிக்கொண்டவனுக்கு மூச்சடைக்கும் உணர்வு. கொஞ்ச நேரத்துக்கு அவள் பக்கம் அவன் திரும்பவே இல்லை.

 

அவ்வளவு நேரமாக அவன் பக்கம் திரும்பாவிட்டாலும் அவன் செய்கைகள் எல்லாமே அவளின் கடைக்கண் பார்வையில் விழுந்துகொண்டுதான் இருந்தன. காரணம் புரியாதபோதும் அவன் பார்வை மாற்றமும் தடுமாற்றமும் தெரிந்துவிட இவளுக்குப் பதறியது.

 

“சரி அண்ணா. வாறன் போயிற்று.” என்றவளை இடையிட்டுக்கொண்டு, “ஏன் மச்சான், நீ சாப்பிடுற சோத்தில உப்பிருக்கா?” என்றான் தூயவன்.

 

அவள் முகம் மாற ஆரம்பிக்க, ‘நீ என்ன லூசாடா?’ என்று பார்த்தான் குரு.

 

அவன் தாடையைப் பற்றி வருடிவிட்டுக்கொண்டே, “நேற்று மச்சான். ஒரு கடைக்கு டீ குடிக்க போனனா? அங்க ஒருத்தன்டா. ஒரு டீயும் ரெண்டு கறி பணிசும் வாங்கிக் குடுத்ததுக்கு 1000 ரூபா தந்திட்டுப் போறான்டா.” என்று கதை சொன்னான் தூயவன்.

 

“அவன் என்ன லூசாடா?”

 

“லூசு கீசு எண்டாய் கொன்டுடுவன் உன்ன!” சட்டென்று பாய்ந்தான் தூயவன்.

 

“அவனைச் சொன்னா உனக்கு ஏன்டா வலிக்குது?”

 

“வலிக்குதேதே… என்னடா செய்ய நான்?” தன் நெஞ்சை நீவி விட்டபடி சொன்னான் தூயவன்.

 

அவனை வித்தியாசமாகப் பார்த்தான் குரு.

 

யாழிசை அவனைக் கோபத்துடன் முறைத்தாள். அதற்குமேல் அங்கு நிற்க முடியாமல், “வாறன் அண்ணா!” என்றுவிட்டு விறுவிறுவென்று நடந்துபோனாள்.

 

போகிறவளையே தூயவன் சிரிப்புடன் பார்த்திருக்க, “என்னடா நடக்குது இஞ்ச?” என்றான் குரு.

 

“உன்ர தொங்கச்சிதான் நடக்கிறாள்.” என்றான் இன்னுமே பார்வையைத் திருப்பாமல்.

error: Alert: Content selection is disabled!!