வெளிச்சக்கீற்று 10 – 2

“ஏற்கனவே இந்திரா அக்கா சாப்பாடும் பலகாரமும் கட்டித் தந்திட்டா.” மெல்லிய சங்கடத்துடன் சொன்னாள் யசோ. என்னவோ, அவளே எல்லாவற்றையும் வாரிச் சுருட்டிக்கொண்டு போவது போலிருந்தது.

 

“அத உங்கட அக்கா வீட்டுக்குக் குடுங்கோ. இது நான் தாறது. பிள்ளைகளுக்கு.” என்று அவளிடம் சொன்னவன், “மாமாட்ட வாங்க மாட்டீங்களா?” என்றான் சிந்தூரியிடம். அவள் சிரிப்புடன் கையை நீட்டி வாங்கிக்கொள்ள, அவன் முகம் மலர்ந்தது.

 

அதற்குமேல் தாமதிக்காமல் ஸ்கூட்டியை உருட்டினாள் யசோ.

 

“இப்பிடிக் கூட்டிக்கொண்டு போறது பயமில்லையா?” அவள் கைகளுக்குள் நின்றிருந்த சிந்தூரியைக் கண்களால் காட்டி வினவினான்.

 

“இல்ல, பழக்கம்தான்.”

 

“அண்டைக்கே பாத்தனான்தான். எண்டாலும் கவனம். இருட்டப்போகுது.”

 

“அதுக்கு முதலே போயிடுவம்.” அதற்குமேல் தாமதிக்காமல் ஒற்றைத் தலையசைப்புடன் புறப்பட்டாள்.

 

போகிறவர்களையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தவனின் பின்னிருந்து, “ஒண்டுக்கு ரெண்டு கண்டா(கன்று) இருக்கிற மாட்டப் பிடிச்சாச்சுப் போல!” என்ற சவீதாவின் குரல் கேட்டது.

 

இவள் இன்னும் மாறவில்லை. முகத்தைச் சுளித்தபடி திரும்பிய அகத்தியனின் பார்வை, அவளை அற்பமாய் நோக்கிற்று. “ரெண்டு பிள்ளைகளின்ர தாய் அவா. அவாவை இப்பிடிக் கதைக்க மனம் கூசேல்லையோ உனக்கு?” என்றான் எரிச்சலுடன்.

 

“கூசுற அளவுக்கு நான் என்ன சொல்லீட்டன்? என்னவோ அவாதான் வீட்டுப்பொம்பிளை மாதிரி எல்லாம் செய்றா. நீங்க மினக்கெட்டுச் சாப்பாடெல்லாம் கொண்டுவந்து குடுக்கிறீங்க. வாசல்ல நிண்டு கதை வேற நடக்குது. அதைத்தான் என்ன எண்டு கேக்கிறன்.”

 

“அதெல்லாம் உனக்கு விளங்காது. மனுசன் இல்லாட்டியும் பொய் புரட்டு இல்லாம, தானே உழைச்சு, தானே பிள்ளைகளை வளத்து, கௌரவமா வாழுறா அவா. அவாவைப் பற்றி நீ கதைப்பியா? முதல், இதையெல்லாம் கேக்க நீ ஆரு? அத்தானாலதான் உன்னை எல்லாம் வீட்டுக்க எடுக்கவேண்டி இருக்கு. அதுக்காக என்ன வேணுமெண்டாலும் கதைக்கலாம் எண்டு நினைக்காத. வந்தமா போனமா எண்டு இருக்கப் பார்.” என்று எச்சரித்துவிட்டுப் போனான் அவன்.

 

சவீதாவுக்கு எரிச்சல்தான் மண்டியது. தன் மீது உயிராக இருந்த கணவன், குழந்தை பிறக்காது என்ற ஒன்றுக்காக மொத்தமாக விலகிப்போவான் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை. போலீஸ் வரை போனதுகூட அவனுக்கு ஒரு பாடம் படிப்பிக்க எண்ணித்தான். என்ன செய்தாலும் தமக்கையின் வாழ்க்கைக்காக அடங்கிப்போவான் என்றுதான் கணக்குப் போட்டிருந்தாள்.

 

ஆனால், அவளின் அத்தனை கணக்குகளையும் பொய்யாக்கிக்கொண்டு விவாகரத்தையே வாங்கியிருந்தான் அவன். அது பெரும் அடி என்றால், இன்னொரு திருமணத்திற்கு அன்னை அலையோ அலையென்று அலைந்தும் ஒன்றுகூடச் சரிவராமல் போனது அடுத்த அடி.

 

இப்படி இருக்கையில்தான் இந்திரா கருவுற்றதும், அதையொட்டி அவள் இங்கு வந்துபோக ஆரம்பித்ததும். அப்படி வந்து அவனைப் பார்த்தது அவளுக்குள் பெரும் பாதிப்பை உண்டாக்கிற்று. அவனோடான திருமணம், வாழ்ந்த வாழ்க்கை, அவன் தன்னைக் கொண்டாடியது என்று அனைத்தும் நினைவில் வந்து, இழந்த சொர்க்கத்தின் அளவை உணர்த்தின.

 

இந்திரா திருமணத்திற்குப் பார்த்தும் அவன் சம்மதிக்கவில்லை என்கிற செய்தி இனிப்பாக இறங்க, மீண்டும் அவனோடு சேர்ந்துவிட முடியாதா என்கிற ஆசை அவளுக்குள் வளர ஆரம்பித்திருந்தது.

 

இப்படி இருக்கையில்தான் இடையில் வந்து நிற்கிறாள், இரண்டு பிள்ளைகளோடு ஒருத்தி. அவளைப் பற்றிச் சொன்னாலே அவனுக்கு இவ்வளவு கோபம் வருகிறதே!

 

மீண்டும் அவனை இழந்துவிடாதே என்று மனம் அறிவுறுத்த, என்ன செய்யலாம் என்று யோசித்தபடி வீட்டுக்கு நடந்தாள்.

 

*****

 

இங்கே, உறக்கத்துக்குச் சிணுங்கிய மகளைத் தூக்கிக்கொண்டு கஜேந்திரன் அறைக்குள் சென்ற பிறகு, “அகத்தியன் இப்பிடியே இருக்கப் போறாரோமா?” என்று, மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தார் தவமலர்.

 

“அவன் இன்னொரு கலியாணம் எண்டாலே ஓடுறான் மாமி.” அதற்குக் காரணமே நீங்கள்தான் என்று சொல்வதுபோல் இருந்தது இந்திரா சொன்ன விதம்.

 

அவர் முகம் மெலிதாகக் கன்றிற்று. “ஒரேயொரு பொம்பிளைப் பிள்ளை. அவளின்ர வாழ்க்கை அப்பிடியே போயிடுமோ எண்டுற பயத்தில செய்ததம்மா. அது இப்பிடி வந்து நிக்கும் எண்டு யோசிச்சுக்கூடப் பாக்கேல்லை.” என்றவர் பேச்சில் எரிச்சல் உண்டாயிற்று இந்திராவுக்கு.

 

அப்போ, அவளின் தம்பி பாவமில்லையா? அவன் வாழ்க்கையோடு இவர் விளையாடுவாரா? சுடுவதுபோல் கேட்டுவிடலாமா என்று மனம் உந்தினாலும் வாயை இறுக்கி மூடிக்கொண்டாள்.

 

முதல் விசயம், எப்போதோ நடந்தவற்றைத் திரும்ப திரும்பப் பேசுவது கஜேந்திரனுக்குப் பிடிக்காது. அடுத்தது, ஏற்கனவே கோபத்தில் இருக்கும் அகத்தியனின் காதில் இந்தப் பேச்செல்லாம் விழுந்து, பிரச்சனை பெருசாகுவதில் உடன்பாடில்லை. எல்லாவற்றையும் விட, இதைப் பற்றி அவரோடு பேச அவளுக்கு விருப்பமில்லை.

 

அதில், “விடுங்க மாமி. எல்லாமே முடிஞ்சுது. ஒற்றையாவே நிக்கவேணும் எண்டு அவன்ர தலைல எழுதியிருக்குப் போல.” என்று முடிக்க நினைத்தாள்.

 

அதற்கு விடாமல், “அப்பிடித் தனியா இருக்கிறதுக்குச் சவீதாவோடயே வாழ்ந்திருக்கலாமேம்மா. இப்ப பாருங்கோ, ரெண்டு பேரின்ர வாழ்க்கையும் அநியாயமாப் போகுது.” என்றார் அவர்.

 

என்னது? மீண்டும் அவளோடா? அன்னை, மகள் இருவர் பார்வையும் திகைப்புடன் சந்தித்து மீண்டன. உள்ளே, ஆபத்து மணி உரத்து அடித்தது. அதைக் காட்டிக்கொள்ளாமல், “மனம் ஒப்பாம வாழவும் ஏலாதெல்லோ.” என்ற சிந்தாமணி, “நடந்து முடிஞ்சதுகளைப் பற்றிக் கதைக்கிறதில என்ன கிடக்குச் சொல்லுங்கோ. இனி அவேயவேன்ர தலைல என்ன எழுதி இருக்கோ அதுப்படிதான் நடக்கும்.” என்று அந்தப் பேச்சை முடிக்க நினைத்தார்.

 

தவமலர் இதைப் பேச என்றே அன்று முழுக்கக் காத்திருந்தவராயிற்றே!

 

“பேசாம ரெண்டு பேருக்கும் திரும்பவும் ஒரு கலியாணத்தைச் செய்து வைப்பமா?” என்றார்.

 

அன்னை, மகள் இருவருக்குமே சுறுசுறு என்று கோபம் பொங்கிக்கொண்டு வந்தது. இந்திரா சவீதாவைத் திரும்பிப் பார்த்தாள். ஒன்றுமே அறியாத அப்பாவி போன்று அமைதியாக அமர்ந்திருந்தாள் அவள். அப்போதுதான், இதைக் கதைப்பதற்காகவே கதிரேசனை முதலே அனுப்பிவிட்டு, கஜேந்திரன் உறங்கச் செல்லும் வரை காத்திருந்து இந்தப் பேச்சை எடுத்திருக்கிறார்கள் என்று விளங்கிற்று.

 

இவ்வளவு பட்டும் திட்டமிட்டு ஏமாற்றி, மற்றவர்களைத் தம் வலைக்குள் விழுத்தும் இந்தக் குணம் இவர்களுக்குப் போகவே இல்லையே என்று மனம் கசந்தது அவளுக்கு.

 

அவள் ஏதும் கோபமாகச் சொல்லி, அதுவே அவள் வாழ்க்கையிலும் பிரச்சனையைக் கொண்டுவந்து விடுமோ என்று பயந்த சிந்தாமணி, “சொல்லுறன் எண்டு குறை நினைக்காதீங்கோ. இதுக்கு நாங்க பதில் சொல்லேலாது. தம்பியைத்தான் கேக்கவேணும். அவன்ர முடிவு தெரியாம எங்களால ஒண்டுமே கதைக்கேலாது.” என்றார் அவசரமாக.

 

இன்றைக்கு அவர்களிடம் இந்தப் பேச்சை எடுத்துவிட்டதே போதும் என்று நினைத்த தவமலரும், “சரி, அப்ப அகத்தியனோட கதைங்கோ. கதைச்சுப்போட்டுச் சொல்லுங்கோவன்.” என்றுவிட்டுச் சவீதாவோடு புறப்பட்டார்.

 

அதன்பிறகும் கூட, அவர் பேச்சினால் உண்டான பாதிப்பிலிருந்து, அவர்களால் வெளிவர முடியவில்லை.

 

அங்கேயே ஒரு பக்கமாகப் பாயை விரித்துச் சரிந்திருந்த சுசீலா, அவர்களின் குடும்ப விசயத்துக்குள் தலையிடவில்லையே தவிர, எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டுதான் இருந்தார்.

 

அதில், “விடுங்க அக்கா. சிலபேர் இப்பிடித்தான். தங்கட காரியத்தில மட்டுமே கண்ணா இருப்பினம். மற்றவையப் பற்றி யோசிக்கிறதே இல்ல. என்ன செய்றது?” என்றவர், “ஏதோ குறிப்பு வந்தது, பொருந்தி இருக்கு எண்டு சொன்னீங்க. பிறகு என்ன நடந்தது?” என்று விசாரித்தார்.

 

அவர்களும் நடந்ததைச் சொல்ல, ஒன்றும் சொல்லாமல் அவர்களைப் பார்த்தார் சுசீலா.

 

“என்ன பிள்ளை?” அவர் பார்வையின் பொருள் விளங்காமல் வினவினார் சிந்தாமணி.

 

“அக்கா, கேக்கிறன் எண்டு குறை நினைக்காதீங்கோ. உண்மையாவே யசோ வேண்டாமா உங்களுக்கு?”

 

பதில் சொல்லாமல் மகளைப் பார்த்தார் சிந்தாமணி.

 

“உண்மையாவே அவாவை வேண்டாம் எண்டு சொல்லுறது எங்களுக்குத்தான் இழப்பு. ஆனா, ரெண்டு பொம்பிளைப் பிள்ளைகள் இருக்கே அக்கா. அவே ரெண்டு பேரையும் வளக்க வேணும், படிப்பிக்க வேணும், நல்ல இடமாப் பாத்துக் கட்டிவைக்க வேணும். சீதனம், அது இது எண்டு எவ்வளவு இருக்குச் சொல்லுங்கோ? காலம் முழுக்கப் பொதி மூட்டையைச் சுமக்கிற மாதிரிச் சுமக்கச் சொல்லுறீங்களா?” என்றாள் இந்திரா.

 

“என்னம்மா இது? நாளைக்கு என்ன நடக்கும் எண்டே தெரியாது. இதில நீங்க, வாழ்க்கை முழுதுக்கும் யோசிக்கிறீங்க. நீங்க சொல்லுறதெல்லாம் இன்னும் பத்துப் பதினைஞ்சு வருசம் கழிச்சு நடக்கப்போறது. அந்த நேரம் அந்தப் பிள்ளைகளே ஆளுக்கொரு உத்தியோகத்தைக் கைல வச்சிருக்கப் போயினம். தங்களுக்கான வாழ்க்கையைத் தாங்களே தேடிக்கொள்ளுவினம். அதைவிட, அகத்தியனுக்கு 35 ஆகப்போகுது. இன்னும் ஒண்டு ரெண்டு வருசம் போச்சுதோ, பிறகு அவனைக் கட்ட ஒருத்தரும் வராயினம். அடுத்தது, புரோக்கர் சொன்ன மாதிரி சவீதா பக்கத்திலேயே இருக்கிற விசயத்த எல்லாரும்தான் யோசிப்பீனம்.”

 

அது என்னவோ உண்மைதான் என்று ஓடிற்று மற்ற இருவருக்கும்.

 

“அவள் இருந்தா இருக்கட்டும், எனக்குத் தெரியும் என்ர வாழ்க்கையைப் பாக்க எண்டு நினைக்க ஒரு பக்குவம் வேணும். அது யசோக்கு இருக்கு. நான் அவவைப் பற்றியே திரும்ப திரும்பக் கதைக்கிறன் எண்டு நினைக்காதீங்க. இனி வாறவளும் எப்பிடி இருப்பாளோ எண்டு பயப்பிடாம, துணிஞ்சு கட்டி வைக்கிற அளவுக்கு அவாவை எனக்குத் தெரியும். அதாலதான் இவ்வளவு சொல்லுறன். அண்ணா வீடு எண்டு நினைச்சுக்கூடச் சவீதா ஒரு துரும்பையும் கிள்ளிப் போடேல்ல. ஆனா யசோ, எவ்வளவு பொறுப்பா எல்லாரையும் கவனிச்சவா எண்டு பாத்தனீங்க தானே? பொறுப்பு, பக்குவம், நாலு பேருக்கு முன்னால எப்பிடி நடக்கோணும் எண்டுறது எல்லாம் இயல்பா அமைய வேண்டியதுகள். அதெல்லாம் யசோட்ட இருக்கு.” என்றவரின் பேச்சில் இருந்த உண்மையில் இருவருமே அமைதியாகக் கேட்டுக்கொண்டனர்.

 

“இப்ப அவாவே ஓம் எண்டு சொல்லுவாவா எண்டுறது சந்தேகம்தான். அண்டைக்கே சொல்லிட்டா, பிள்ளைகள் வளந்துகொண்டு வருகினம், இனி அந்த எண்ணம் எனக்கு இல்லை எண்டு.” என்றவருக்கும் அகத்தியனை எண்ணிக் கவலையே!

error: Alert: Content selection is disabled!!