அவரில் அசைவு தெரிந்தது. ஆனாலும் கண்களைத் திறக்கவில்லை.
“லிசி எழுந்திரு! இங்கே பார் லிசி, தயவு செய்து என்னை மேலும் மேலும் குற்றவுணர்வுக்கு ஆளாக்கிவிடாதே!”
முழந்தாளிட்டிட்டு இருந்தவர் அப்படியே லிசியின் தலையை உயர்த்தி கன்னத்தில் தட்டிய வேகத்தில் நெஞ்சோடு அணைத்துக்கொண்டார்.
“நான்… நான் எக்காலத்திலும் இனி உன்னைத் தேடி வரமாட்டேன் லிசி. முடிந்ததைக் கதைக்க நான் இங்கு வரவில்லை. இருந்தாலும் உன்னோடு நான் பழகியது நீ சொன்னது போல் காமத்தில் இல்லை. அன்பும் நட்புமாக உன்னோடு பழகியதன் விளைவுதான் ஒலிவியா. உன்னில் நான் வைத்திருக்கும் மரியாதைக்கான பரிசுதான் அவள். அவள் கலங்கத்திலோ காமத்திலோ பிறந்தவளில்லை. இருந்தாலும் என் வாயால் அவளை, நம் மகள் என்றும் சொல்ல மாட்டேன். எனக்கு வாழ்க்கை தந்தவள் நீ! அதற்கு இதுவரை ஒரு நன்றி கூட நான் சொன்னதில்லை. என்னால் உன் குடும்பத்தில் சிறு சலசலப்பும் வர நான் அனுமதிக்க மாட்டேன். இது சத்தியம் லிசி! நீ எழுந்திரு ப்ளீஸ்!” என்றவர், கட்டுப்படுத்த இயலாமல் சத்தமாக அழுதேவிட்டார்.
ஆரோன் கதைத்ததைக் கேட்க முடிந்த லிசியால் விழிகளைத் திறந்து எழுந்து கொள்ள முடியவில்லை. பட்டுப்பட்டென்று வேகமாகத் துடித்த அந்த மனிதனின் இதயத் துடிப்பைக் கேட்டவர் நெஞ்சில் வலியெடுத்தது. விழிகள் சூடான நீரை வெளியேற்றியவண்ணம் இருந்தன. அப்படியே தொய்ந்து கிடந்தார், லிசி.
அந்தநேரம் அம்புலன்ஸ் வந்து நின்றது. அந்த அரவத்தில் துர்க்காவின் தாய் பதைபதைப்போடு ஓடிவந்தார்.
லிசிக்கு முதலுதவி நடந்த நேரம் ஆரோனை இனம் கண்டுகொண்ட துர்க்காவின் அன்னை, வியப்போடு தன்னை அறிமுகம் செய்து கதைத்தார்.
தான் லிசியின் நல்ல நண்பன் என்று அறிமுகம் செய்துகொண்டார், ஆரோன். இப்போதுதான் ஒலிவியாவின் அன்னை என்று தெரிந்து சந்திக்க வந்தாகச் சொல்லிச் சமாளித்தவர், டெனிஸுக்கு அழைக்க முயன்ற துர்க்காவின் அன்னையைத் தடுத்தார்.
“தயவு செய்து இப்போது நீங்கள் எதுவும் சொல்ல வேண்டாம். லிசி முதல் எழுந்திருக்கட்டும். நானே சொல்லிவிடுகிறேன்” கெஞ்சலாக வேண்டினார்.
“இப்போது தகவல் சொல்லியும் அவர்களால் வருவது என்பது இயலாத காரியம். மெல்பேனில் இருந்து சிட்னி வரவே ஒன்றரை மணித்தியாலம் ஆகும். அங்கிருந்து கடைசி விமானம் இப்போது புறப்பட்டு இருக்கும். காரில் வருவதும் சாத்தியம் இல்லை. நாளை காலை தான் வர முடியும்.” என்று ஆரோன் சொல்வதும் சரியே!
தன் கணவருக்கு அழைத்து விபரம் சொல்லி உடனே வரும்படி அழைத்தார், துர்க்காவின் அன்னை.
லிசிக்கு முதலுதவி செய்துவிட்டு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல ஆயத்தப்படுத்தினார்கள். இதயம் தடதடக்க ஆரோனும் கூடவே செல்ல முயன்றார்.
“என் காரில் போகலாம்.” என்ற துர்க்காவின் அன்னை, வீட்டைப் பூட்டிவிட்டு ஆம்புலன்ஸை பின்தொடர்ந்தார்.
“எனக்குத் தெரிய இதுவரைக்கும் லிசிக்குச் சின்னதாகக் கூட வருத்தம் வந்ததில்லை. நல்ல சுகதேகியான சுறுசுறுப்பான பெண்மணி அவர்.” கவலையோடு சொன்னார், துர்க்காவின் தாய்.
கலங்கிய கண்களோடு ஆரோன் இருந்த நிலை பெரும் பரிதாபமாக இருந்தது.
“பெரிதாக ஒன்றும் இராது. இதயம் சம்பந்தமான எந்த வருத்தம் என்றாலும் இப்போதான் உடனேயே இரத்தப் பரிசோதனையில் கண்டுபிடித்துச் சொல்லி விடுவார்களே! மருத்துவமும் செய்துவிடலாம். நீங்கள் யோசிக்க வேண்டாம்.” என்ற அவர், “என் மகள் துர்க்கா உங்களுக்கு மிகப்பெரிய ரசிகை! குடும்பத்தினர் கலந்துகொள்ளும் எபிசோட் என்று ஒலிவியா வீட்டினர் வெளிக்கிட, தானும் தொத்திக்கொண்டது அதனால் தான்.” பேச்சை மாற்றி அதையிதைக் கதைத்தார்.
வெற்றியாளரே ஒலிவியா என்று சொல்லவில்லை ஆரோன். சிறு தலையாட்டலோடு கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்தார்.
வைத்தியசாலையில் மருத்துவர் பார்த்துவிட்டு, ‘மைல்டு ஸ்ட்ரோக்’ என்றார். மேலும் மேலும் குற்றவாளி போலுணர்ந்தார், ஆரோன். அந்த நேரம் துர்க்காவின் பெற்றோர் மட்டும் இல்லையோ அவர் என்ன செய்திருப்பார் என்றே தெரியாது. அந்தளவுக்கு உடைந்து தளர்ந்து போனார். அங்கு கிடந்த கதிரை ஒன்றில் புதைந்தமர்ந்தவர் தான். புத்தி, அடுத்து என்ன என்ற சிந்தனாசக்தியின்றி இருக்க, இருளை வெறித்துக்கொண்டு அமர்ந்திருந்தார்.
“பயப்பட வேண்டாம் செஃப். மருத்துவரே பயப்படத்தேவையில்லை என்று விட்டார். லிசிக்கும் நன்றாக நினைவு திரும்பியாச்சு. எல்லா டெஸ்ட்டும் எடுத்துப் பார்த்துவிட்டுத்தான் வீட்டுக்கு விடுவார்கள். நீங்கள் இப்படியே இருக்கத் தேவையில்லை.” என்ற துர்க்காவின் அன்னைக்கு, இந்த இரவில் இவர் எங்கு போவார் என்றிருந்தது.
“நீங்கள் லிசியோடு கதைத்துவிட்டு, வீடு சென்றுவிட்டு நாளை வாங்களேன். இதோ வீட்டுத் திறப்பு.” லிசி வீட்டுத் திறப்பை நீட்டியவர், “இங்கு நான் பார்த்துக்கொள்கிறேன். என் கணவர் இப்போ வீடு செல்வார், அவரோடு செல்லலாம்.” என்றார், தொடர்ந்து.
‘இன்னுமொருமுறை லிசியைப் பார்ப்பதா? வேண்டாம் வேண்டவே வேண்டாம்.’ மனத்தில் அலறிவிட்டார், ஆரோன்.
“நான்…நான் கொஞ்ச நேரத்தில் சென்று கதைக்கிறேன் இண்ராணி. இங்கயே இருந்துவிட்டு, காலை முதல் விமானத்தில் சிட்னி செல்லலாம் என்று இருக்கிறேன்.” என்றார்.
“அது எப்பிடி? முதல் லிசி இதைக் கேட்டால் சம்மதிப்பாரா என்ன? தன்னுடைய நண்பரை நன்றாக உபசரிக்க முடியவில்லையே என்ற கவலை அவருக்கு இருக்கும். எனக்கு அவரை நன்றாகவே தெரியும்.” என்று, ஒரேபிடியாக நின்றவர்களோடு வாதாடி, ஒருவழியாக அவர்களை வீடு செல்ல உடன்பட வைத்தார், ஆரோன்.
அப்போதுதான் துர்க்காவின் அன்னைக்கு, லிசி, ஆரோன் பற்றி ஒரு வார்த்தை கேட்கவில்லையே என்றிருந்தது. ‘லிசி நன்றாகவே பயந்து போய் இருக்கிறார்.’ என்று தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டாலும் விடைபெறுகையில், “ஆரோன் இன்னமும் இங்குதான் நிற்கிறார் லிசி. நண்பர் வந்த நேரம் இப்படியாகிற்றே என்று உனக்குக் கவலையாக இருக்கும். வேண்டும் என்றால், அவர் இன்று இரவு எங்கள் வீட்டில் தங்கிக்கொள்ளலாம். இல்லை என்றால் உன் வீட்டுத் திறப்பையே குடுக்கலாம்.” என்று சொல்லிவிட்டுப் பதிலுக்காகக் காத்திருந்தார்.
லிசிக்கு உண்மையில் வார்த்தையே வரவில்லை. நிழல் கூடப் படக்கூடாது வெளியே போ என்றிருந்தாரே! உள்ளத்திலிருந்து வெறுப்போடு சொன்ன வார்த்தைகள் அவை! அப்படியிருக்க, இன்னமும் போகாமல் நின்று இப்படி அடுத்தவர் முன்னிலையில் எதைச் சாதிக்க நினைக்கிறான்? நான் இன்னும் உயிரோடு இருக்கிறேனா என்று பார்ப்பதற்காக நிற்கிறானோ!
அவருக்கு உடலும் மனமும் திகுதிகுவென்று எரிந்தது. எழுந்து சென்று கன்னம் கன்னமாக விளாச வேண்டும் போலவும் இருந்தது. துர்க்கா குடும்பத்துக்கு முன்னால் வைத்து நாடகம் ஒன்றை அரங்கேற்ற வேண்டுமா? சிந்தித்தார்.
முடிவில், “நீங்கள் போகும் பொழுது கூட்டிக்கொண்டு போய் எங்கள் வீட்டில் விட்டு விடுங்கள். இல்லை, அவருக்கு இங்கு தங்குமிடம் இருந்தால் அங்கு தங்கிக்கொள்ளலாம் தானே!” வெகு இயல்பாக முடித்துவிட்டார்.
“என்னுடைய கைப்பேசியை வீட்டில் விட்டு விட்டு வந்தாயிற்று. டென்னிஸுக்கு சொல்ல வேண்டும்.” என்றவர், “நீங்கள் சொல்லிவிடவில்லையே?” என்றதும், “இல்லை, ஆரோன் தான் வேண்டாம் என்றவர்” என்றார், துர்க்காவின் அன்னை.
பற்களை நறும்பி கோபத்தைக் கட்டுப்படுத்தினார், லிசி. “எனக்குத்தான் ஒன்றுமில்லையே. இரவில் அவர்களை ஏன் பயப்படுத்துவான். நாளைக்கு மதியம் போல வந்திருவார்கள்.” என்றபடி, துர்க்காவின் அன்னைக்கு விடை கொடுத்தார்.
“எல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீ ஒன்றையும் யோசியாமல் ரெஸ்ட் எடு லிசி. களைத்துத் தெரிகிறாய், தூங்கு!” என்று, துர்க்காவின் அன்னை வெளியேற உண்மையில் விழிகள் சொருகியது லிசிக்கு.
வெளியே வந்த இந்திராணி ஆரோனைத் தம்மோடு அழைத்தார். அவர் அசைய மறுத்து விட்டார்.
“சரி விடு, அவர் விருப்பப்படி செய்யட்டும்.” என்றார், துர்க்காவின் தந்தை.
“இங்கு ஆள் தேவையில்லை என்றுதான் வைத்தியர் சொல்கிறார். எதற்கும் லிசி வீட்டுத் திறப்பு இதோ. எங்கள் கார்த் திறப்பையும் வைத்துக் கொள்ளுங்கள். என்ன தேவை என்றாலும் நேரம் எல்லாம் பார்க்காது பெல் பண்ணுங்கள்.” என்றுவிட்டு, கைப்பேசி எண்களையும் கொடுத்துவிட்டு, கணவரோடு புறப்பட்டார் துர்காவின் அன்னை.
நடந்ததை இதுவரை வீட்டினருக்குச் சொல்லாதிருப்பது மிகப் பெரும்பிழை என்றது ஆரோன் மனம். வேர்த்துக்கு அழைத்தார்.
நடந்ததைச் சுருக்கமாகச் சொன்னவர், மறந்தும் ஒலிவியா இன்னார் என்று சொல்லவில்லை. தன் நல்ல நண்பியின் மகள் என்று தெரிந்ததும் பார்க்க வந்ததாகக் கூறி, ஒலிவியாவின் தந்தையிடம் விபரம் சொல்லும் பொறுப்பை அவனிடம் வழங்கினார்.
ஆரோன் யார் என்ற அறிமுகம் தேவையில்லையே! மிகவும் சந்தோசமாக, தன் ஓய்வறையைப் பாவித்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டார், மருத்துவர். இருந்த போதும், கொடுக்கப்பட்ட மருந்தில் அயர்ந்துறங்கும் லிசியை வாயிலில் நின்றே பார்த்துவிட்டு, ஆளரவம் இன்றிக் கிடந்த வைத்தியசாலையில், லிசி தங்கியிருந்த அறைக்கு வெளியே கிடந்த கதிரையில் சாய்ந்திருந்தார், ஆரோன்.
இதற்கிடையில் நாலைந்து தடவைகள் வேர்த் அழைத்துக் கதைத்தும் இருந்தான்.
எப்போது கண்ணயர்ந்தாரோ, அதிகாலை நாலரை போல், “செஃப்”என்ற குரலும் தொடுகையும் அவரைத் திடுக்கிட்டு எழ வைத்திருந்தது.

