வெளிச்சக்கீற்று 11 – 2

“ப்ச்! கலியாணத்தைப் பற்றியே நான் யோசிக்கேல்ல. இதில பிள்ளைகளைப் பற்றி எங்க?” அலுத்த குரலில் சொன்னவனுக்கு, அன்றைக்கு அவளின் ஸ்கூட்டியில் முன்னும் பின்னும் அமர்ந்திருந்த இருவரும் நினைவில் வந்து போயினர். சிந்தூரியின் வெட்கத்தையும், தூரிகாவின் அகத்தியன் மாமாவையும் பிடிக்காமல் இருக்குமா? அருமையான குழந்தைகள். அதற்கென்று…

 

“கொஞ்சம் யோசி தம்பி. சின்ன பிள்ளை மாதிரிப் பிடிவாதம் பிடிக்காத. உனக்கும் வயசு போகுது. எங்களால உன்ன இப்பிடியே விட்டுட்டுப் பாத்துக்கொண்டு இருக்கேலாதடா.” என்றாள் இந்திரா கண்ணீரும் கவலையுமாக.

 

அப்போதும் எதுவும் சொல்லாத அகத்தியனுக்கு அவளுக்குத் திருமணத்தைப் பிடிக்கவில்லையா, அல்லது, தன்னைப் பிடிக்கவில்லையா என்கிற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியாமல் போயிற்று.

 

*****

 

அன்று, ஒரு வேலையாக வெளியே சென்றுவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தான் அகத்தியன். எதிர்த்திசையில் மகளோடு வந்துகொண்டிருந்தாள் யசோதினி.

 

அவளும் இவனைப் பார்த்துவிட்டாள். இருவர் பார்வையும் சந்தித்துக்கொண்டன. சிறு தலையசைப்பைக் கொடுப்பதா வேண்டாமா என்று யசோவுக்கு மெல்லிய சங்கடம். இன்னுமே சந்தர்ப்பம் கிடைக்கிற பொழுதுகளில் எல்லாம் அவளைக் கரைக்க முயன்றுகொண்டிருந்த சுசீலாவின் பேச்சுகள், அவனைச் சாதாரணமாக எதிர்கொள்ள விடாமல் தடுத்தன.

 

அவளைப் போன்ற

எந்தத் தயக்கங்களும் தூரிகாவுக்கு இல்லை. அவனைக் கண்டுவிட்டு, “அகத்தியன் மாமா!” என்று சத்தமாகக் குரல் கொடுத்தபடி, முகம் முழுக்க நிறைந்த சிரிப்புடன் கையை ஆட்டினாள்.

 

அவன் முகமும் தானாக மலர்ந்தது. பதிலுக்குத் தானும் கையை அசைத்தான். பிறந்தநாள் அன்று, அவள் தன் பொம்மையை வீட்டில் விட்டுவிட்டுப் போனதும், அது அவன் கடையில் இருப்பதும் நினைவு வந்தது.

 

பைக்கை திருப்பிக்கொண்டு வந்தான். இந்தமுறை, தன்னைப் பின்தொடரும் அவனைக் கண்ட யசோதினிக்குள் மெல்லிய பதற்றம். இவன் ஏன் வருகிறான், திருமணத்தைப் பற்றி ஏதும் கதைக்கப் போகிறானோ என்று தடுமாறினாள்.

 

அவனோ அவள் புறம் திரும்பக்கூட இல்லை. “உங்கட பொம்மை கடைலதான் இருக்கு. வாறீங்களா, எடுத்துத் தாறன்.” என்று தூரிகாவிடம் கேட்டான்.

 

“பிறகு நீங்களே கொண்டுவந்து விடுவீங்களா மாமா? அம்மாவால வரேலாது, வேல இருக்கும்.” என்று அவள் சொன்னதும் பெரியவர்கள் இருவர் முகத்திலும் தவிர்க்க முடியாமல் சின்னதாய்ச் சிரிப்பு அரும்பிற்று.

 

“சரி, இந்தப் பெரிய மனுசிய நானே கொண்டுவந்து விடுறன். வாங்கோ!” என்று பைக்கை திருப்ப, அவளும் ஓடிச் சென்று அவன் பின்னால் ஏறி அமர்ந்துகொண்டாள்.

 

யசோதினிக்கு மகள் இன்னும் சாப்பிடவில்லையே என்று ஓடியது.

 

பசியோடு இருப்பாளே. அதைச் சொன்னால், மறைமுகமாக உணவு வாங்கிக்கொடு என்று சொல்வது போலாகாதா? என்ன செய்ய என்று தெரியாமல் அவனைப் பார்த்தாள்.

 

கேள்வியாகப் புருவங்களைச் சுருக்கினான் அவன்.

 

“அது… தூரி இன்னும் சாப்பிடேல்லை. கொஞ்சம் கெதியாக் கொண்டுவந்து…” என்று சொல்லிக்கொண்டு வந்தவள், அவன் முகம் கடுப்பதைக் கண்டு, “இல்ல, சாப்பாடு இங்க இருக்கு. நீங்க கொஞ்சம் கெதியாக் கொண்டுவந்து விட்டீங்க எண்டாலே போதும்.” என்றாள் அவசரமாக.

 

அதாவது, தூரிகாவுக்குச் சாப்பாடு கொடுப்பான் என்கிற நம்பிக்கை அவளுக்கில்லை. பதில் சொல்லாமல் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு, பைக்கை உசுப்பிக் கிளப்பிக்கொண்டு போனான் அவன்.

 

அவளுக்கு நெஞ்சு ஒரு முறை சில்லிட்டது. அப்படி என்ன தவறாகச் சொன்னாளாம்? முதல், அதென்ன அப்படி ஒரு மிரட்டும் பார்வை?

 

*****

 

கடைக்கு வந்ததுமே அன்னை கொடுத்துவிட்டிருந்த சாப்பாட்டை இருவருக்கும் போட்டுக்கொண்டு வந்தான் அகத்தியன்.

 

மறக்காமல் கை கழுவி, மேசையில் அவன் முன்னே அமர்ந்து, சிந்தாமல், விளையாடாமல் நேர்த்தியாக உண்டவளைக் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை.

 

“தாமினியைக் கூட்டிக்கொண்டு வரேல்லையா மாமா?” உணவுக்கிடையில் வினவினாள் தூரிகா.

 

“இண்டைக்கு அவாவை அவான்ர அப்பா கூட்டிக்கொண்டு போய்ட்டார். ஏன், அவா இல்லாட்டி நீங்க மாமாவைப் பாக்க வரமாட்டீங்களா?”

 

“வருவனே. இண்டைக்கு வந்திருக்கிறனே.”

 

அவள் தட்டில் இறைச்சி குறைந்துவிட்டதைக் கவனித்து, பாத்திரத்துக்குள் இருந்து குழம்பை வடித்து இறைச்சியை மட்டும் எடுத்துப்போட்டான். ஒரு முறுவலை அவனுக்குப் பரிசளித்துவிட்டு எடுத்து உண்டாள் அவள்.

 

அவள் அணிந்திருந்த வெள்ளைச் சீருடையின் மார்பில் குத்தியிருந்த கைக்குட்டையில், ‘கே’ மற்றும் ‘டீ’ ஆங்கில எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்ததைக் கவனித்து, “அதென்ன கே, டீ?” என்றான் தெரியாதவன் போன்று.

 

“கே ஃபோர் கிசோர். அப்பான்ர பெயர். டீ ஃபோர் தூரிகா. என்ர பெயர்.” அழகாகப் பதில் சொன்னாள் தூரிகா.

 

“உங்கட அப்பான்ர பெயர் கிசோரா? பிள்ளைக்கு அப்பாவைப் பிடிக்குமா?” ஏன் என்று தெரியவில்லை. அந்தக் கேள்வி அவன் வாயில் வந்திருந்தது.

 

“பிடிக்குமே? எனக்கு என்ர அப்பாவத் தெரியும், தெரியுமா உங்களுக்கு? சிந்தூரிதான் அப்பாவைப் பாக்கவே இல்ல. அம்மா ஃபோட்டோலதான் காட்டினவா.”

 

அரிதாகப் பார்க்கக் கிடைக்கும் ஒருவரைப் பார்த்த குதூகலக் குரலில் அவள் பகிர, கேட்டிருந்த அவன்தான் எப்படி உணர்கிறோம் என்று தெரியாமல் அமர்ந்திருந்தான்.

 

வேகமாகத் தன்னைச் சமாளித்துக்கொண்டு, “ஏதாவது பிழை செய்தா அம்மா அடிப்பாவா?” என்று பேச்சை மாற்றினான்.

 

“இல்லையே. ஆனா பேசுவா. இப்பிடிக் கண்ண உருட்டி உருட்டிப் படிக்க மாட்டியா, ஹோம்வேக் செய்ய மாட்டியா எண்டு கேட்டு வெருட்டுவா.” என்றவள், அன்னையைப் போலவே தலையை ஆட்டி, கண்களை உருட்டிக் காட்டியதில் புரையேறச் சிரித்தான் அகத்தியன்.

 

தன் தலையில் தானே அவன் தட்ட, வேகமாகத் தண்ணீரை எடுத்துவந்து கொடுத்தாள் தூரிகா. அவன் அருந்த, அவள் அவன் தலையைத் தடவிவிட்டாள். தடுக்கவே முடியாமல் அவன் விழிகளினோரம் கோடாய்க் கண்ணீர் அரும்பியே போயிற்று. ஒற்றைக் கையால் அவளை அணைத்து நெற்றியோடு நெற்றியை முட்டினான்.

 

“தேங்க்ஸ் செல்லம்.”

 

“என்னத்துக்கு?”

 

“தண்ணி தந்ததுக்கு.”

 

“தண்ணி தந்ததுக்கா?” ஒற்றைக் கையால் வாயைப் பொத்திக்கொண்டு கிளுக் என்று சிரித்தாள் தூரிகா.

 

அவன் உதட்டோரமும் முறுவல் அரும்பிற்று.

 

இன்னும் கொஞ்ச நேரம் தன்னுடனேயே வைத்திருந்துவிட்டு, அவள் பொம்மையோடு அவளைக் கொண்டுபோய் விட்டான்.

 

அவள் கையில் இருந்த சிறிய பையைப் பார்த்துவிட்டுக் கண்ணாலேயே அதட்டினாள் யசோ.

 

உடனேயே, “அது எனக்கில்லை அம்மா. அகத்தியன் மாமா சிந்தூரிக்குக் கட்டித் தந்தவர். கடையில வாங்கேல்ல. சிந்தாமணி அம்மம்மா செய்த பலகாரமாம். நான் கேட்டுத்தான் வாங்கினான்.” என்று அவசரமாகப் பதில் சொன்னாள் சின்னவள்.

 

இதுதானா அந்த உருட்டுக் கண் என்று நினைத்ததுமே அவன் உதட்டினில் மெல்லிய சிரிப்பு. அதைக் கவனித்துவிட்டவள் அவனை நோக்கிப் புருவங்களைச் சுருக்கினாள்.

 

சின்னவள் அன்னையின் பார்வையிலிருந்து தப்பியதே போதும் என்று, “பாய் மாமா!” என்றுவிட்டு உள்ளே ஓடிவிட, “எப்பிடியும் என்னட்ட வந்த கதையைப் பெரியவா போய்ச் சின்னவாட்டச் சொல்லுவா. அது அவாக்குக் கவலையா இருக்கும் எல்லா. அதுதான்… மற்றது நானும் பிள்ளைகளைப் பட்டினி போடுற அளவுக்கு மோசமானவன் இல்ல.” என்றுவிட்டுப் போனவனை மலைப்புடன் பார்த்திருந்தாள் அவள்.

 

அவள் அன்னையாய்ச் சொன்ன ஒன்றை எப்படி எடுத்துக்கொண்டிருக்கிறான்?

error: Alert: Content selection is disabled!!