உயிரைத் திருடும் அழகியே 21 – 1

அத்தியாயம் 21

 

 

பெற்றவர்களோடு யாழ்ப்பாணம் வந்திருந்தாள் அனன்யா. அவள் பிறந்து, வளர்ந்து, பள்ளிக்கூடம் சென்று என்று வாழ்ந்த மண்! மீண்டும் கால் வைத்தபோது தேகமெங்கும் சிலிர்த்துப்போயிற்று! மனமெங்கும் ஒரு உற்சாகம்; சந்தோசம்; மகிழ்ச்சி! அதுவே அவளை இன்னுமின்னும் அழகாகக் காட்டியது!

 

சின்ன வீடுதான். அப்போதெல்லாம் மூன்று பெண்களும் அம்மாவும் ஒன்றாகத்தான் உறங்குவார்கள். அப்பாவும் மகனும் மற்ற அறையில்.

 

வந்த அன்று, அப்போது போலவே அவர்களோடு ஒட்டிக்கொண்டு படுத்தபோதுதான், அந்தத் தொடு உணர்ச்சி அவள் கண்ணீர் சுரப்பிகளைத் திறக்கப் பார்த்தது. ஒரு பக்கம் திரும்பினால் அம்மா. மற்றப்பக்கம் திரும்பினால் சின்னத் தங்கை. இதில் அடுத்ததாகப் படுத்து இருந்தவள் வேறு தலைக்குக் கையை முட்டுக் கொடுத்தபடி படுத்திருந்து, “அக்கா, அங்க இந்தியால தனியாத்தான் இருந்திருப்ப என்ன?” என்று வேறு கேட்டு அவள் விழிகளைக் கரிக்கச் செய்தாள்.

 

“ம்ம். உங்கள எல்லாம் நினைச்சுக்கொண்டு தனியாப் படுத்திருப்பன்.” என்றாள் தொண்டை அடைக்க.

 

“எங்களுக்கும் உன்னப் பாக்க ஆசைதான். உடனே நீ நடிச்ச ஏதாவது படத்த எடுத்துப் பாப்பம். கொஞ்ச நேரத்தில பாத்தா சத்தமில்லாம அப்பாவும் வந்து இருப்பார்.” என்றபோது, என்ன அடக்கியும் முடியாமல் இரு சொட்டுக் கண்ணீர் துளிகள் தரையில் சிந்தின.

 

மகளின் மனத்தை உணர்ந்துகொண்ட சுபாகரி, “பழசையெல்லாம் ஏனம்மா கதைக்கிறீங்கள்? அக்கா வந்திட்டாள். அதே போதும். பேசாமப் படுங்கோ! நீயும் கண்டதையும் நினைக்காமப் படு ராசாத்தி!” என்றார் பாசத்தோடு.

 

அவள் தாயின் புறமாகத் திரும்பி அவரை அணைத்துக்கொள்ள, “அம்மாவைப் பாத்தியாடி சின்னக்கா. மூத்த மகளைக் கண்டதும் எங்கள வெட்டி விட்டுட்டா. எப்பவும் அவவுக்கு அக்காதான் பெருசு!” என்றவர்களின் பேச்சில் கண்களை மூடிக்கொண்டு சிரித்தாள் அவர்களின் ஓவியப்பெண்!

 

சுந்தரேஸ்வர் மகளுக்குப் பிடித்த கோழி இறைச்சி, இறால், நண்டு என்று வாங்கி வாங்கிப் போட்டார். சுபாகரி பரிமாறுகையில் அருகிருந்து, “நல்லா சாப்பிடு பிள்ளை. தனியா இருந்து என்னத்தச் சாப்பிட்டியோ…” என்று, அவளுக்குத் தானே பரிமாறி, அவள் சாப்பிடுவதை கண்கள் கலங்க அருகிருந்து பார்த்து மகிழ்ந்தார்.

 

அடிக்கடி, “அப்பாவில கோபம் இல்லையேம்மா?” என்கிற வார்த்தை அவர் வாயிலிருந்து தழுதழுத்து வந்துகொண்டே இருந்தது.

 

“உன்னப் பாக்க வரவேணும் மாதிரி இருக்கும். ஆனா, எந்த முகத்தை வச்சுக்கொண்டு வருவன் சொல்லு? உனக்குப் பக்கபலமா நிண்டிருக்க வேண்டிய நேரத்தில நீ என்ர பிள்ளையே இல்லை எண்டு சொல்லிப்போட்டு, நல்லா இருக்கிற எண்டு தெரிஞ்சபிறகு வந்தா, திரும்பியும் பாக்காம அனுப்பிப்போடுவியோ எண்டு பயம். எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும் எண்டு நினைச்சுக்கொண்டு காலத்தக் கடத்தினன் பிள்ளை. ஆனா, உன்னைக் காணாமப் போய்ச் சேர்ந்திருந்தா இந்தக் கட்டை வெந்தே இருக்காது மோனம்மா!” தழுதழுத்த குரலில் அவர் சொன்னபோது முற்றிலும் உடைந்திருந்தாள் அவரின் மோனலிசா.

 

“என்னப்பா கதை இதெல்லாம்? என்னால தானேப்பா இதெல்லாம் நடந்தது. நான் எப்படிப்பா உங்களோட கதைக்காம இருப்பன் சொல்லுங்கோ? எனக்கு என்ர அப்பாதான் எல்லாமே! அவர் நம்பி அனுப்ப அந்த நம்பிக்கையைக் காப்பாத்தாமப் போய்ட்டனே எண்டுதான் நான் வரேல்ல. என்னை நம்பின அப்பாட்ட இதுக்கெல்லாம் என்ன காரணம் சொல்ல முடியும் எண்டுதான் வரேல்ல.” என்று அழுதாள் அவரின் பெண்.

 

அவருக்கும் கண்கள் கலங்கிற்று! அவர் இப்படி நினைத்து வருந்த அவள் அப்படி நினைத்து வருந்தியிருக்கிறாள். எத்தனை முட்டாள் தனம். அவராவது வருவது வரட்டும் என்று சென்று பார்த்துவிட்டு வந்திருக்கலாம். ஒரு கோபம், அதிலெடுக்கும் முடிவுகள் எங்குவரை நம் வாழ்க்கையைத் தள்ளிவிடுகிறது? மனத்தைத் தேற்றிக்கொண்டு, “இதெல்லாம் நடக்கவேணும் எண்டு இருந்திருக்குப் போல! நீ அழாத!” என்று அவளையும் தேற்றினார்.

 

அப்பாவுக்கும் மகளுக்கும் நடுவில் வராமல் கண்களில் கண்ணீர் வழிய ஒரு பக்கமாக நின்று பார்த்திருந்தார் சுபாகரி. அவர்கள் அழுவது வேதனையாக இருந்தாலும் அவர்கள் இருவருக்குமேயான அந்தப் பாசப்பிணைப்புக்குள் உருவாகியிருந்த பிளவை இந்த அழுகை சரிசெய்யும் என்று நம்பினார்.

 

“இனிமேலும் இப்படியெல்லாம் கதைக்காதீங்கோ அப்பா. நீங்க இன்னும் நிறைய வருசம் இருக்கவேணும். உங்களை நான் நல்லா வச்சுப் பாக்கவேணும். நான் உங்கட மகளப்பா. பிழை செய்திட்டன் தான். அதுக்காக கூடாதவள் இல்லையப்பா. உங்கட வளப்புத் தவறான பாதைல போகவிடாது. ஒருக்கா நடந்ததை வச்சு இனியும் அப்படி நடக்குமென்று நினைச்சு என்னை வெறுத்துப்போடாதீங்கோ அப்பா.” என்று அவள் அழுதபோது மொத்தமாக உடைந்துபோனார் சுந்தரேஸ்வர்.

 

வந்தால் வெட்டுவேன் என்று சொன்ன நாட்களில் கூட அவளைப் பிரிந்திருக்கும் துயரை எண்ணி மனதுக்குள் அழுத்தவராயிற்றே!

 

“இல்லையம்மா! இனி எந்தக் காலத்திலையும் என்ர பிள்ளையை நான் வெறுக்கமாட்டன். ஒருக்காச் செய்து பட்டதே போதும். அழாத குஞ்சு! சுபாகரி, பிள்ளைக்குத் தண்ணி கொண்டுவா!” என்று மனைவியையும் ஏவி, கனத்த அந்தச் சூழ்நிலையை ஒருவாறாக நேராக்கினார் அவர்.

 

இன்னுமின்னும் அவளின் நாட்கள் அழகாயிற்று! ஒவ்வொரு துளிப் பொழுதையும் இரசித்து வாழ்ந்தாள். அவளின் தமயன், துருவனும் வந்து பார்த்தான். அவன் முகத்தில் நிறைந்த சங்கடம்!

 

பேசாத வார்த்தைகளுக்கு நாம் எஜமானர். பேசிய வார்த்தைகள் நமக்கு எஜமானர்கள் அல்லவா?

 

அதை உணர்ந்தும் அப்படியே புறம் தள்ளிவிட்டு, “உன்ர ரெண்டுபேரும் நல்ல துடிதுடிப்பு என்ன அண்ணா!” என்று பிள்ளைகளைப்பற்றிப் பேசி அவனது வாய்ப்பூட்டைக் கழற்றினாள்.

 

“என்ன பிள்ளை எண்டு சொன்னவையா அண்ணி? நோர்மல் டெலிவரி தானே?” என்று, அண்ணியாரிடமும் நலன் விசாரித்துக்கொண்டாள்.

 

அக்கம் பக்கத்தினர் எல்லோரும் கேள்விப்பட்டுக் கேள்விப்பட்டு ஓடிவந்து சுகம் விசாரித்தனர். அவளின் நடிப்பை ஆகா ஓகோ என்று புகழ்ந்தனர். “உன்ர படம் வந்தா மட்டும் தான் தியேட்டர்ல போய் பாப்பம்.” என்றனர்.

 

“அவளின்ர வடிவுக்கு அவள் இப்படி வருவாள் எண்டு எனக்கு எப்பவோ தெரியும்..” இன்னொரு பெண்ணிடம் சொல்லிக்கொண்டிருந்தார் பக்கத்து வீட்டு ஆச்சி.

 

“அக்கா, இந்தக் கிழவியை நம்பாத. இவதான் அவள் ஓடிப்போயிட்டாளோ எண்டு அப்பாட்டக் கேட்டது. பொல்லாத கிழவி இப்ப நடிக்குது!” என்று அவரை முறைத்த தங்கையை, வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு அதட்டி அடக்கினாள் அனன்யா.

 

இன்னுமே மோனலிசா ஓவியம் அவர்கள் வீட்டில் பெரிதாக தொங்கிக்கொண்டு இருந்தது. அருகிலேயே அவளின் ஓவியமும்! தத்ரூபமாய் வரைந்திருந்தார் சுந்தரேஸ்வர்.

 

“உன்னட்ட வரமுதல் அப்பா தானம்மா வரைஞ்சு கொழுவினவர்.” சுபாகரி சொன்னார்.

 

அவரின் மனமாற்றத்தை தெளிவாகக் காட்டியது அந்த ஓவியம்.

 

அந்த மோனலிசா ஓவியம் போல அழகாவும், அற்புதமாவும் நேர்த்தியாவும் அவள் வாழ்க்கை இருக்க வேண்டும் என்று, ‘மோனலிசா’ எனப் பெயர் சூட்டியவர்.

 

ஆனால், அந்த ஓவியத்தில் இருப்பது போலவே மென் சோகம் ஒன்று அவள் வாழ்விலும் வந்து கடந்து போயிற்று.

 

நாட்கள் மிக நிம்மதியாக நகர்ந்தன. அம்மாவைக் கொண்டு விருப்பமானதைச் சமைத்துச் சாப்பிட்டாள். தங்கைகளோடு சைக்கிளில் ஊர் சுற்றினாள். அவளை இனம் கண்டவர்கள் ஆரவாரமாக வந்து கதைத்து செல்பி எடுத்துக்கொண்டதில் அவள் மகிழ்ந்தாளோ இல்லையோ தங்கைகள் நன்றாகவே அனுபவித்தனர்.

 

அவர்களும் ‘செலிபிரிட்டி’ லிஸ்ட்டில் வந்துவிட்டதால் அத்தனை பெருமை. “அக்கா, என்ர பிரெண்ட் உன்னட்ட ஒரு ஆட்டோகிராப் கேட்டவள். ஐஸ் ஒண்டு வாங்கித் தந்தபிறகுதான் ஓம் எண்டு சொன்னனான்.” என்று, அவர்களின் கொண்டாட்டத்துக்கு அளவேயில்லை.

 

அவர்களின் முகங்களில் தெரிந்த மகிழ்ச்சில் மனம் நிறைந்துபோயிற்று அவளுக்கு. இதைப் பார்க்க முடியாமல் தானே அவளின் நாட்கள் வெறுமையாகக் கழிந்துகொண்டிருந்தது. இன்று நிறைவாய் உணர்ந்தாள்.

 

ஒருநாள் மாலை, எல்லோரும் வீட்டில் சும்மா அமர்ந்திருந்தபோது, கணவரின் கண்ணசைவில், “இப்படியே எவ்வளவு காலத்துக்கம்மா இருக்கப் போறாய்? உனக்கு ஒரு கல்யாணத்தைச் செய்து வச்சாத்தானே, தங்கச்சியாக்களுக்கும் ஏதேனும் செய்யலாம். அப்பா உனக்குச் செய்யாம தான்யாக்குப் பாக்க மாட்டன் எண்டுபோட்டார். அவளும் அக்கா கட்டாமக் கட்டமாட்டன் எண்டு போட்டாள்.” என்றார் சுபாகரி.

 

ஒன்றும் சொல்லாமல் நகங்களை ஆராய்ந்தபடி கேட்டுக்கொண்டிருந்தாள் அனன்யா.

 

அது நம்பிக்கையைக் கொடுக்க, “உனக்கும் இருபத்தியொன்பது வயசாகுது பிள்ளை. இப்பவே லேட். இனியும் தள்ளிப் போடக்கூடாது!” என்று எடுத்துரைத்தார் அன்னை.

 

“நான் சைன் பண்ணினது எல்லாம் முடிச்சுக் குடுக்காமக் கல்யாணத்தைப் பற்றி யோசிக்க ஏலாது அம்மா. ஒரு நாலு வருசம் போகவேணும்.” என்று மெல்லச் சொன்ன மகளை அதிர்வோடு பார்த்தனர் பெற்றவர்கள்.

 

அதை உணர்ந்தவள் போன்று, “கட்டாயம் நான் செய்யிறன். ஆனா, எனக்காகத் தான்யாவை வச்சிருக்க வேணாம். அவளுக்கு முதல் முடிப்பம். பிறகு சின்னவளுக்கும் பாக்கலாம்..” என்று தங்கைகளுக்காகப் பேசினாள் தமக்கை.

 

“அது என்னெண்டு? சரியில்லை எல்லோ?” என்ற சுபாகரியிடம், “சைன் பண்ணினதை அவளும் விடேலாது தானே? அவள்தான் கட்டுறன் எண்டு சொல்லுறாளே. அப்ப நாங்க மாப்பிள்ளையைப் பாத்து யாருக்கும் தெரியாம ரெஜிஸ்ட்ரேசன் மட்டும் முடிப்பம். பிறகு எல்லாருக்கும் சொல்லிக் கல்யாணத்தை வைக்கலாம்.” என்றார் சுந்தரேஸ்வர்.

 

இப்போது வேண்டுமா என்றுதான் இருந்தது அவளுக்கு. சுமையே இல்லாமல் சுகமாக இப்போதுதான் வாழ்கிறாள். அதற்குள் ஒரு திருமண பந்தத்துக்குள் சொல்லவேண்டுமா என்று நினைத்தாள். ஆனால், பெற்றவர்களிடம் அதைச் சொல்லி, அவர்கள் மனத்தை நோகடிக்க வேண்டாம் என்று அவள் அமைதியாக இருக்க, “அந்தப் பெடியன் ஷியாம் என்ன மாதிரியம்மா?” என்று விசாரித்தார் தகப்பன்.

 

“அவனுக்கு என்னப்பா?” இந்தப் பேச்சுக்குள் அவன் எதற்கு என்று விளங்காமல் கேட்டாள் அனன்யா.

 

“இல்ல.. அவனைப் பேசலாம் எண்டு விக்ரமன் சேர் சொன்னார். நல்ல பெடியனாம். சிங்கப்பூர்ல இருந்தாலும், அவன்ர அடியும் இலங்கையாம்.”

 

‘அவனும் இலங்கையாம்…’ என்று அப்பா சேர்த்துச் சொன்னதில் அவளுக்குச் சிரிப்பு வரும் போலிருந்தது. இன்னும் இதிலிருந்தெல்லாம் அப்பா மாறவில்லை. காலம் காலமாய் சமூகம் வளர்த்துவிட்டிருக்கும் ஒருவித கட்டுப்பாடுகளுக்குள் மாத்திரமே வாழப் பழகிப்போன அந்தக்காலத்து மனிதரில் ஒருவராகத் தெரிந்த தந்தையைக் கனிவுடன் நோக்கினாள் பெண். விக்ரமனும், அவரை உணர்ந்தவராகத்தான், அதையும் சேர்த்துச் சொல்லியிருக்க வேண்டும்.

 

“அவர் எதுக்கப்பா எனக்குப் பாக்கவேணும்? அதைவிட, அவன் எனக்கு நல்ல பிரெண்ட். அவ்வளவுதான்!” என்றாள் அவள். அதோடு, ‘இதுதான் அவர் அவனைக் கூப்பிட்ட காரணம்’ என்று உணர்ந்து தனக்குள் சிரித்துக்கொண்டாள்.

 

இயக்குனர் மூளை அல்லவா? பலவிதமாகவும் சிந்தித்துக் காய் நகர்த்தியிருக்கிறது.

 

“அப்ப இங்க யாரையாவது பாக்கட்டா பிள்ள?” அவர் முகத்திலும் மெல்லிய குழப்பம். இங்கிருப்பவர்கள் அவளைப் புரிந்துகொள்வார்களா? அவளின் தொழிலோடு அவளை ஏற்றுக்கொள்வார்களா? இன்று, சம்மதித்துவிட்டு, நாளை நீ ஒரு நடிகை தானே, கண்டவனோடும் நடித்தாய்தானே என்று கேட்டுவிட்டால் அவளின் வாழ்க்கை நரகமாகிவிடாதா?

error: Alert: Content selection is disabled!!